Sunday, September 28, 2008

சக்கரக்கட்டி - சல்பேட்டாக் கட்டி...

இது வரைக்கும் நான் சில நல்ல, மனச பாதிச்ச படங்களுக்கு மட்டும் தான் விமர்சனம் பண்ணிருக்கேன். எந்த ஒரு படத்துக்கும் தரக்குறைவான விமர்சனம் பண்ணினதே கிடையாது. சில பதிவர்கள் ஒரு சில படங்கள பாத்துட்டு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவோ,ஏதோ சுயபச்சாதாபம் காரணமாகவோ கொலவெறி பதிவுகள் போட்டு பாத்ருக்கேன். ஆனா முதன்முறையா இந்தப் படத்துக்கு ஒரு கேவலமான விமர்சனம் பண்றேன். ஒரே ஒரு காரணம் தான். கடந்த 2 மாசமா, ஒரு நாள் விடாம கேட்டு கேட்டு,என்னெனவோ கற்பணை பண்ணி வச்சிருந்த ஏ.ஆர்.ரஹ்மானோட 5 முத்தான பாடல்கள் நாசாமாக்கப் பட்ருக்குன்னு ஒரு கொலவெறில இந்த பதிவ போடுறேன்.


கொலைவெறி காரணம் #1:
முதல்ல படத்தோட ஹீரோ மற்றும் அவரோட நண்பர்களோட கதாப்பாத்திரம். எல்லா காலேஜ்லயும், எல்லா கம்பெனிலயும் சில பீட்டர் கேரக்டர்கள் இருக்கும், நம்ம வாழ்நாள்ல இவன் கூடல்லாம் சேந்துரவே கூடாதுனு நமக்கு நாமே சுய சத்தியம் பண்ணி வைராக்கியத்தோட வாழுவோம் பாருங்க. அப்படிப்பட்ட நாலு பேரோட கதைதான் இது . "Hey Dude, Life is a COLA da.. She is a MALA da" அப்படினு எப்பவுமே 'தமிழ்னா இன்னாது?' அப்படினு சீன் போட்டு கடுப்ப கிளப்புற கூட்டத்தோட கதை.

கொலைவெறி காரணம் #2:
இத வாசிக்குற உங்களுக்கு ஒரு கேள்வி.. ஒரு ஐந்து நண்பர்கள் ஒண்ணா உக்காந்து பேசிக்கிட்டு இருக்கீங்க. ஒரு நண்பர் உங்கள பயங்கரமா கிண்டல் பண்றாரு. உங்களோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்."இவரு பெரிய --------" கோடிட்ட இடத்துல அவங்கவங்க தகுந்தாப்ல ஏதோ ஒண்ணு நிரப்பிக்கோங்க. கிட்டத்தட்ட இந்த மாதிரிதான ஏதாவது சொல்லுவீங்க. இந்தப் படத்துலயும் அப்படி ஒரு காட்சி. படத்தோட ஹீரோ சாந்தணுவ அவரு நண்பர்கள் ஓட்டுற மாதிரி ஒரு காட்சி. அதுல கடுப்பாகுற சாந்தனு பேசுற டைலாக் என்ன தெரியுமா?
"Hey Man, If anyymore words, I am sure, I gonna Kill youuu..."
கொலைவெறி காரணம் #3:
படம் முழுக்க முழுக்க சாந்தணு தமிழத் தவிர எல்லா மொழிலயும் பேசுறாரு. அது மட்டுமில்லாம, அவரு பேசுறதுல பல ஆங்கில வார்த்தைகள் GRE, TOEFL, BEC எழுதுனவங்குளுக்கே புரியாததா இருக்கு. படத்துல லட்டு லட்டா 2 நாயகிகள். ஆனா 2 பேருமே "என்னா ஜொல்ழுற... முத்தும் ஹேக்குற... உங்கி வீடி எங்கிருக்கா"னு தமிழ நாரசப்படுத்தீருக்காங்க.இது தவிரவும் படத்துல வர்ற எல்லாக் கதாப்பாத்திரங்களுமே பூமி இல்லாத ஒரு அந்நிய கிரகத்துல வாழுற மாதிரியே நடிச்சுருக்காங்க. அதுலயும் ஹீரோவோட நண்பர்களா வர்ற நாலு பேருல ஒருத்தன் கெடச்சிருந்தா கூட தியேட்டர்ல கல்லாலயே அடிச்சு துரத்திருப்பாங்க.

கொலைவெறி காரணம் #4:
சரி நடிப்பு, வசனம்தான் இப்படி மொக்கையா இருக்கு, திரைக்கதைல ஏதாவது பண்ணீருப்பாங்கணு பாத்தா படம் மொத்தமுமே எதார்த்ததுக்கும், இயல்புக்கும் அப்பாற்பட்டதாவே இருக்கு. ஹீரோ ஹீரோயினுக்கு காதல சொன்ன காட்சியாகட்டும், அவரு வேதிகா வீட்டுக்கு போற மாதிரி கனவு காணுற காட்சியாகட்டும், இல்ல இதுல தான் எல்லாமே இருக்குனு அவங்களே சொல்லிக்குற கிளைமாக்ஸ் காட்சியாகட்டும், எதுலயுமே எதுவுமே சத்தியமா புரியல. அப்பாகிட்ட காசிருக்குன்ற ஒரேயொரு காரணத்துக்காகவே டைரக்டர் ஆகிட்டியா கலாபிரபு. கொஞ்சம் சினிமான்னா என்ன, கதை திரைக்கதைன்னா என்னனுலாம் தெரிஞ்சுகிட்டு வந்தீங்கன்னா, நல்லா இருக்கும்.

கொலைவெறி மிக முக்கிய காரணம் #5:
மருதாணி, சின்னம்மா சிலகம்மா, நான் எப்போது பெண் ஆனேன், இந்த மூணு பாட்டுமே காலத்துகும் நின்னுருக்க வேண்டிய ரஹ்மானோட மெலடி மெட்டுக்கள். ஆனா தேவையே இல்லாம கிராபிக்ஸ் லாம் புகுத்தி பாட்டெல்லாம் படு மோசமா எடுத்துருக்காங்க. "டாக்சி டாக்சி". என்ன கொடுமை சார் இது. நண்பர்கள்ன்ற பேர்ல நடிச்சிருக்கிற நாலு லூசு பசங்களுக்காகவா ரஹ்மானோட இவ்வளவு உழைப்பும், நாசமா போச்சு.

வெள்ளித்திரை படத்துல பிரகாஷ்ராஜ் ஒரு வசனம் பேசுவாரு, இந்தப்படத்துக்கு மிகவும் பொருத்தமான வசனம்... "தமிழனுக்கு தமிழ்ல படம் எடுங்கடா, டேய்".

எங்க ஊர் திருநெல்வேலிங்க. எங்க ஊர்ப்பக்கமெல்லாம் இந்தப்படத்துக்கு இப்படி தான் கமென்ட் இருந்திருக்கும் "ஏலேய் ! என்னதிது.. இந்த பயபுள்ளக்கி என்ன இங்க்லீஷ் தொரன்னு நெனப்பா? தியேட்டர்காரனுவளா, வெளிய சக்கரக்கட்டினு தமிழ் பட போஸ்டர் ஒட்டிகிட்டு இங்கிட்டு என்னா, இங்கிலீஷு படத்தப் போடுதீயளா?"

இந்தப்படத்துல, ஒரெயொரு ஆறுதலான விஷயம்.
....................
...................
...................
...................

அப்படினு ஏதாவது ஒண்ணு சொல்லலாம்னு என் மூளைய பயங்கரமா கசக்கி யோசிச்சு பாத்தேன். தயவு செய்து தப்பா நெனக்காதீங்க. அப்படி எதுவுமே இல்ல.

அலை, தூண்டில், மச்சக்காரன், பழனி, திருப்பதி, வல்லவன், 'சாம் ஆண்டர்சனின்' யாரோ யாரோ ... இந்த மாதிரி படங்கள்லாம் விரும்பி பாக்குற மனசு உங்களோடதா? தயவு செய்து இந்தப் படத்தையும் கண்டிப்பா போய் பாருங்க.

Saturday, July 12, 2008

சுப்ரமணியபுரம் !!! இயல்பியலின் உச்சகட்டம்....

சுப்ரமணியபுரம் !!! இயல்பியலின் உச்சகட்டம்....

1980 - நான் பிறப்பதற்கு 5 ஆண்டுகள் முன்னால். எப்படி இருந்தது என்று நானறியேன்.. அந்த காலகட்டத்தின் இயல்பான வாழ்க்கை முறையை விவரித்துக் கூறும் திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அந்தக்காலத்தில் வந்த பெரும்பாலான திரைப்படங்கள் கிளப் கலாசாரத்தையும், கடத்தல்காரர்களின் வாழ்க்கையையுமே படம்பிடித்துக் காட்டின. அப்படி அல்லாமல் எடுக்கப்பட்ட ஆறிலிருந்து அறுபது வரை, மூன்றாம் பிறை போன்ற திரைப்படங்கள் ஒரீருவரின் வாழ்க்கையை சுற்றியே எடுக்கப்பட்டவை. பெரும் மாறுதலாய் இந்தப் படத்தில் ஒரு கிராமத்து இளைஞர் கூட்டத்தின் வாழ்க்கைமுறையை உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார்கள். "ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்" என்னும் வைரமுத்துவின் புதினத்தில் நான் படித்து உணர்ந்த ஒரு இளைஞர் பட்டாளத்தின் வாழ்க்கைமுறை.காதல், கோபம்,துரோகம்,பயம்,வெறி என்று ஒவ்வொரு உணர்ச்சியும் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டப்பட்டிருக்கும் மிகச்சில திரைப்படங்களுல் தனக்கும் ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டது சுப்ரமணியபுரம். படத்தின் முதல் பாதியில் வரும் காதல் காட்சிகள் அனைத்துமே கவிதை ரகம். "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" இன்னும் இரண்டு மாதங்களுக்காவது தமிழக இளைஞர்களுக்கு தனிமையின் தேசிய கீதம் இதுதான். ஜேம்ஸ் வசந்தனின் மிக நீண்டகாலத்து இசை ரசனை அருமை. பிண்ணனி இசையிலும் கூட தனித்துவம் காட்டியிருக்கிறார்.இரண்டாம் பாதியில் வரும் கோபக்காட்சிகளோ வன்முறை வார்ப்பு.இப்படிப்பட்ட கதைக்களத்தில் இவனா? என்ற கேள்வியோடு வந்த அத்துணை பேருக்கும் முதல் பாதியின் வெகுளிச்சிரிப்பும் இரண்டாம் பாதியின் ஆக்ரோஷமுமாய் திறமையை நிரூபித்து இருக்கிறார் .சென்னை - 28ன் சாக்லேட் பையன் ஜெய்". "எனக்கு சாவு பயத்தக் காட்டிடான்டா" என்று கதறி அழும் இடத்திலாகட்டும், தன் காதலியே தன் சாவிற்கு அழைப்பு விடுத்து இருக்கிறாள் என்று தெரிந்து முகத்தில் உணர்ச்சியே காட்டாமல் செத்து மடியும் இடத்தில் ஆகட்டும், நடிப்புக்கு புதுசு என்று தெரியாத அளவுக்கு கச்சிதம் காட்டியிருக்கிறார் ஜெய். கூடவே வரும் நண்பர் பாத்திரத்தில் படத்தின் இயக்குனர் சசிகுமார். பின்னியெடுத்திருக்கிறார். வேலைவெட்டி எதற்கும் செல்லாமல் அடிதடியில் மகிழ்ச்சி கண்டு திளைக்கும் நாயகன் மற்றும் கூட்டாளிகளுக்கு தலைவர் கதாப்பாதிரம்.
படத்தின் பல காட்சிகளில் அவர் திரையில் இருந்து காட்டும் நடிப்புத்திறமையை விட அவர் இயல்பின் உச்சத்தை எட்டுவதற்காக ஒரு இயக்குநராய் மெனக்கெட்டிருப்பது பளிச்சிடுகிறது.ஒரு குடும்பத்தின் அண்ணன் தம்பி மூண்று பேரும் சந்தர்ப்பவாத்தின் வில்லன் கதாப்பாத்திரங்களாய் காட்டப்படுவது தமிழ்படங்களுக்கு கொஞ்சம் பழைய பஞ்சாங்கம்தான். இருப்பினும் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கும் விதம் அருமை. துரோகம் என்ற ஒரு வார்த்தையில் அடங்காதவாறு விஷமப்புத்தியோடு அந்தக் குடும்பத்தின் 'கனகு' கதாப்பாத்திரம் செய்யும் அனைத்துமே பிரமாதமான வில்லத்தனம். மேலும் அந்த ஜெயில் சிநேகமாய் வரும் ரவி கதாப்பாத்திரம் கூட நல்ல பாத்திரப்படைப்பு. "கஞ்சா கருப்பு" தமிழ் சினிமாவில் இனி எப்பொழுதும் படத்தின் மைய மாற்றத்தை உள்ளடக்கிய இப்படி ஒரு கதாப்பாதிரம் கிடைக்குமா என்பது சந்தகேமே. இது தவிர முதல் பாதியில் வரும் மொக்கைசாமி, ராசாத்தி, சித்தன் ஆகிய கதாப்பாத்திரங்கள் கிராமத்து நையாண்டிக்கு நன்றே உதவியிருக்கின்றன.

கொலைக்காட்சிகளையும் சண்டைக்காட்சிகளும் கூட இயல்பின் எல்லை மீறாமல் எடுக்கப்பட்டிருக்கும் விதம் புல்லரிப்பு. படத்தின் நடுவில் இருக்கும் சில காட்சிகளின் முடிச்சுகளை கடைசி சில காட்சிகளில் அவிழ்த்திருப்பது ரசிக்கத்தகுந்த கூர்மை.அமீரின் இணை இயக்குநராய் இருந்ததாலோ என்னவோ படத்தின் சில இடங்களில் பருத்திவீரன் வாசனை. ஆனாலும் அது ஒரு குறையாய் உறுத்தவில்லை. படத்தின் ஒளிப்பதிவு முதல் பல இடங்களில் தெளிந்த நீரோடையாய்,ஆயினும் சிற்சில இடங்களில் குழம்பிய குட்டையாய்.படத்தின் அனைத்து கதாப்பாத்திரங்களையும் அறிமுகம் செய்யும் முதல் பத்து நிமிடம் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மிக அருமை. அறிமுக இயக்குநராய் இருந்தும் திரைத்துறையில் தனெக்கென ஒரு சுயவிலாசத்தை இந்தப்படம் மூலம் தேடிக் கொண்டார் சசிகுமார். என் இத்யத்தில் சிறு அதிர்வை ஏற்படுத்தி ஒரீரு இரவுகள் தூக்கத்தை தன்க்காய் எடுத்துக் கொண்ட காதல், பருத்திவீரன்,அஞ்சாதே,கற்றது தமிழ் திரைபடங்களின் வரிசையில் இத்திரைப்படமும் தன்னை இணைத்துக் கொண்டது
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.