Saturday, July 12, 2008

சுப்ரமணியபுரம் !!! இயல்பியலின் உச்சகட்டம்....

சுப்ரமணியபுரம் !!! இயல்பியலின் உச்சகட்டம்....

1980 - நான் பிறப்பதற்கு 5 ஆண்டுகள் முன்னால். எப்படி இருந்தது என்று நானறியேன்.. அந்த காலகட்டத்தின் இயல்பான வாழ்க்கை முறையை விவரித்துக் கூறும் திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. அந்தக்காலத்தில் வந்த பெரும்பாலான திரைப்படங்கள் கிளப் கலாசாரத்தையும், கடத்தல்காரர்களின் வாழ்க்கையையுமே படம்பிடித்துக் காட்டின. அப்படி அல்லாமல் எடுக்கப்பட்ட ஆறிலிருந்து அறுபது வரை, மூன்றாம் பிறை போன்ற திரைப்படங்கள் ஒரீருவரின் வாழ்க்கையை சுற்றியே எடுக்கப்பட்டவை. பெரும் மாறுதலாய் இந்தப் படத்தில் ஒரு கிராமத்து இளைஞர் கூட்டத்தின் வாழ்க்கைமுறையை உள்ளது உள்ளபடியே காட்டியிருக்கிறார்கள். "ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்" என்னும் வைரமுத்துவின் புதினத்தில் நான் படித்து உணர்ந்த ஒரு இளைஞர் பட்டாளத்தின் வாழ்க்கைமுறை.காதல், கோபம்,துரோகம்,பயம்,வெறி என்று ஒவ்வொரு உணர்ச்சியும் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டப்பட்டிருக்கும் மிகச்சில திரைப்படங்களுல் தனக்கும் ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டது சுப்ரமணியபுரம். படத்தின் முதல் பாதியில் வரும் காதல் காட்சிகள் அனைத்துமே கவிதை ரகம். "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" இன்னும் இரண்டு மாதங்களுக்காவது தமிழக இளைஞர்களுக்கு தனிமையின் தேசிய கீதம் இதுதான். ஜேம்ஸ் வசந்தனின் மிக நீண்டகாலத்து இசை ரசனை அருமை. பிண்ணனி இசையிலும் கூட தனித்துவம் காட்டியிருக்கிறார்.இரண்டாம் பாதியில் வரும் கோபக்காட்சிகளோ வன்முறை வார்ப்பு.இப்படிப்பட்ட கதைக்களத்தில் இவனா? என்ற கேள்வியோடு வந்த அத்துணை பேருக்கும் முதல் பாதியின் வெகுளிச்சிரிப்பும் இரண்டாம் பாதியின் ஆக்ரோஷமுமாய் திறமையை நிரூபித்து இருக்கிறார் .சென்னை - 28ன் சாக்லேட் பையன் ஜெய்". "எனக்கு சாவு பயத்தக் காட்டிடான்டா" என்று கதறி அழும் இடத்திலாகட்டும், தன் காதலியே தன் சாவிற்கு அழைப்பு விடுத்து இருக்கிறாள் என்று தெரிந்து முகத்தில் உணர்ச்சியே காட்டாமல் செத்து மடியும் இடத்தில் ஆகட்டும், நடிப்புக்கு புதுசு என்று தெரியாத அளவுக்கு கச்சிதம் காட்டியிருக்கிறார் ஜெய். கூடவே வரும் நண்பர் பாத்திரத்தில் படத்தின் இயக்குனர் சசிகுமார். பின்னியெடுத்திருக்கிறார். வேலைவெட்டி எதற்கும் செல்லாமல் அடிதடியில் மகிழ்ச்சி கண்டு திளைக்கும் நாயகன் மற்றும் கூட்டாளிகளுக்கு தலைவர் கதாப்பாதிரம்.
படத்தின் பல காட்சிகளில் அவர் திரையில் இருந்து காட்டும் நடிப்புத்திறமையை விட அவர் இயல்பின் உச்சத்தை எட்டுவதற்காக ஒரு இயக்குநராய் மெனக்கெட்டிருப்பது பளிச்சிடுகிறது.ஒரு குடும்பத்தின் அண்ணன் தம்பி மூண்று பேரும் சந்தர்ப்பவாத்தின் வில்லன் கதாப்பாத்திரங்களாய் காட்டப்படுவது தமிழ்படங்களுக்கு கொஞ்சம் பழைய பஞ்சாங்கம்தான். இருப்பினும் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கும் விதம் அருமை. துரோகம் என்ற ஒரு வார்த்தையில் அடங்காதவாறு விஷமப்புத்தியோடு அந்தக் குடும்பத்தின் 'கனகு' கதாப்பாத்திரம் செய்யும் அனைத்துமே பிரமாதமான வில்லத்தனம். மேலும் அந்த ஜெயில் சிநேகமாய் வரும் ரவி கதாப்பாத்திரம் கூட நல்ல பாத்திரப்படைப்பு. "கஞ்சா கருப்பு" தமிழ் சினிமாவில் இனி எப்பொழுதும் படத்தின் மைய மாற்றத்தை உள்ளடக்கிய இப்படி ஒரு கதாப்பாதிரம் கிடைக்குமா என்பது சந்தகேமே. இது தவிர முதல் பாதியில் வரும் மொக்கைசாமி, ராசாத்தி, சித்தன் ஆகிய கதாப்பாத்திரங்கள் கிராமத்து நையாண்டிக்கு நன்றே உதவியிருக்கின்றன.

கொலைக்காட்சிகளையும் சண்டைக்காட்சிகளும் கூட இயல்பின் எல்லை மீறாமல் எடுக்கப்பட்டிருக்கும் விதம் புல்லரிப்பு. படத்தின் நடுவில் இருக்கும் சில காட்சிகளின் முடிச்சுகளை கடைசி சில காட்சிகளில் அவிழ்த்திருப்பது ரசிக்கத்தகுந்த கூர்மை.அமீரின் இணை இயக்குநராய் இருந்ததாலோ என்னவோ படத்தின் சில இடங்களில் பருத்திவீரன் வாசனை. ஆனாலும் அது ஒரு குறையாய் உறுத்தவில்லை. படத்தின் ஒளிப்பதிவு முதல் பல இடங்களில் தெளிந்த நீரோடையாய்,ஆயினும் சிற்சில இடங்களில் குழம்பிய குட்டையாய்.படத்தின் அனைத்து கதாப்பாத்திரங்களையும் அறிமுகம் செய்யும் முதல் பத்து நிமிடம் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மிக அருமை. அறிமுக இயக்குநராய் இருந்தும் திரைத்துறையில் தனெக்கென ஒரு சுயவிலாசத்தை இந்தப்படம் மூலம் தேடிக் கொண்டார் சசிகுமார். என் இத்யத்தில் சிறு அதிர்வை ஏற்படுத்தி ஒரீரு இரவுகள் தூக்கத்தை தன்க்காய் எடுத்துக் கொண்ட காதல், பருத்திவீரன்,அஞ்சாதே,கற்றது தமிழ் திரைபடங்களின் வரிசையில் இத்திரைப்படமும் தன்னை இணைத்துக் கொண்டது
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.