Sunday, June 28, 2009

மெய்ப்பொருள் . . .

உரையாடல் போட்டிக்காக எழுதப்பட்டது...

"தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பெதென்று மெய்த்தேடல் தொடங்கியதே..." - வைரமுத்து.

கதவு #1 :

"டேய் கிரீஷ்... இன்டெர்நெட் கனெக்ட் ஆகுதா டா ?" கேட்டபடியே அந்த
சீப்ரோஸ் அப்பார்ட்மென்ட்டின் ஏழாவது
மாடி கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான் சந்தோஷ்...

"இல்ல மச்சி... நான் நாலு தடவ கால் பண்ணிட்டேன்... இன்னும் வந்து சரி
பண்ணல.." -
கிரீஷ்.

"டாமிட்.. என்னடா இது... 3 நாள் ளா நெட் வேல செய்யலேனா எப்படி டா?
நான் ஆர்குட் பண்ணி, சேட் பண்ணி 3 நாளாச்சு டா... என்ன வெளையாடுறாங்களா? வரட்டும்... விட்டு கிழிக்கிறேன்...""ஹ்ம்ம்ம்... டென்ஷன் ஆகாத டா... வரட்டும், பாத்துக்கலாம்..."

"ம்ம்ம்..ம்ம்ம்... பயங்கரமா பசிக்குதுடா... சாப்பிட எதாவாது ஆர்டர்
பண்ணீங்களா, இல்லையா..."

"அபி அங்க மூணாவது ரூம்ல இருக்கான் பாரு.. அவன் தான் பீட்ஷா
ஆர்டர் பண்ணிருக்கேன்னு சொன்னான்... கேளு என்னாச்சுனு..."

"அபி... டேய் அபி..." -
இது சந்தோஷ்

"சொல்டா சந்தோஷ்..." - உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தான் அபி...

"பீட்ஷா சொன்னியா, இல்லையா டா? சொல்லி எவ்ளோ நேரம் ஆச்சு?"

"அப்பவே சொல்லிட்டேன் டா... அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சு..."

"அரை மணி நேரம் ஆச்சா? என்ன உலகம் டா இது? சீப்ப்ரோஸ் அப்பார்ட்மென்ட்ல 18,000 ரென்ட்க்கு இருக்கோம்னு தான் பேரு... 3 நாள்ளா நெட் ஒர்க் ஆகல.. பீட்சா சொல்லி அர மணி நேரம் ஆனாலும் வர மாடேங்குது... நம்ம லாம் எதுக்கு தான் உயிரோட இருக்கோமோ தெரியல.."

"பொலம்பாத டா... வரும் வரும்.. கொஞ்சம் பொறுமையா இரு..." -
கிரீஷ்

"ஹ்ம்ம்.. என்னவோ போங்க... டேய் அபி மண்டையா... உள்ள என்னடா பேன் பாத்துட்டு இருக்கியா... இங்க வாயேன்டா..." - கத்தினான் சந்தோஷ்.

"எதுக்குடா கத்துற... இந்தா வர்றேன்... சொல்லுடா என்ன.."

"சும்மா தான் கூப்பிட்டேன்... ஹோண்டா ஜாஸ் ஆட் பாத்தியா, செமையா
இருக்குல்ல..."

"ம்ம்.. சூப்பரா இருக்கு, ஆனா வண்டிதான் கொஞ்சம் சொதப்பல்லாமா..."

"சொன்னாங்க சொன்னாங்க... நீ உங்க வீட்டுக்கு சுவிப்ட் தான வாங்கி
கொடுத்துருக்க.."

"ம்ம்ம்... ஆமாடா..."

"அத ஏன்டா இவ்ளோ சோகமா சொல்ற? மைலேஜ் எதாவது சரி இல்லையா?"

"நீ வேற போடா... என் நெலம தெரியாம நீ பேசிட்டு இருக்க..."

"ஏன்டா, என்ன ஆச்சு?"

"அத ஏன் கேக்குற.. எங்க மேனஜர் கிட்ட போய் வீட்ல அவசரமா காசு
தேவப்படுது... அதுனால உடனே ஆன்சைட் அரேஞ் பண்ண முடியுமான்னு கேட்டேன்... அவரு இப்பத்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி 7 மந்த்ஸ் ஆன்சைட் முடிச்சுட்டு வந்த... அதுக்குள்ள, திரும்ப ஏற்பாடு பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாரு..."

"அய்யோ.. ஏன்டா அப்படி சொன்னாரு... ஆனாலும் நீதான் போன தடவ
வர்றப்பவே 8 லட்ச ரூபாகிட்ட கொண்டு வந்தியே டா? அது என்ன ஆச்சு?
இப்போ என்ன அவசர செலவு உனக்கு?"

"அதுக்குதான் அப்படியே ஹாட் கேஷா கொடுத்து கார் வாங்கிட்டோம்ல...
இப்போ என்னடான்னா, வீட்ல பர்னிச்சர்லாம் பழசாயிடுச்சு... அதெல்லாம்
டீக்ல மாத்திட்டு மார்டனைஸ்டு கிச்சன் போடனுமாமா.. இன்வெர்ட்டர் வேற வாங்கணும்னு சொல்றாங்க... எல்லாம் சேத்தா எப்படியும் ஒரு 5 லட்ச ரூபாகிட்ட செலவாகும்... அதான் என்ன பண்றதுனே புரியல... இந்த மாதிரி கஷ்டெமெல்லாம் வேற யாருக்குமே வரக்கூடாது டா "

"ம்.. புரியுது புரியுது...கஷ்டந்தாண்டா.. நீ வேணும்னா உன் மேனஜர்கிட்ட திரும்ப பேசிப்பாரு...."

"பேசணும்... பேசணும்... ஒரு 2 வாரம் கழிச்சு பேசணும்..

"கவலப்படாத டா அபி... கடவுள்னு ஒருத்தர் இருக்காருல... அவரு பாத்துப்பாரு... பீட்ஷா வந்துருச்சுன்னு நெனக்கிறேன்... வா, போய் சாப்பிடலம்..."

கதவு #2 :

"என்னய்யா சண்முகம், ரெண்டு நாளா ஆளக்காணோம்?" கேட்டபடியே
பத்ரப்பட்டியின் பஸ்ஸ்டான்டு டீக்கடை ஓலைத்தட்டிக்கதவை தள்ளி வைத்தவாறே கேட்டார் சேதுராமன்..


"சும்மா திருப்பத்தூர்ல இருக்க மகன் வீட்டுக்கு ஒரு எட்டு போய்ட்டு
வ்ந்தேன்.." டீக்கடை பெஞ்சில் இருந்து பேப்பரை புரட்டியபடியே சொன்னார் சண்முகம்..

"ஓஹோ.. யோவ் என்னய்யா பேப்பர பாக்குற... நாந்தான் சொன்னேன்ல,
ஸ்டாலினுக்கு துணை முதல்வர் கொடுத்துருவாங்கண்ணு... நீங்கதான் இல்லன்னு சொன்னீங்க" -
கேட்டார் சேதுராமன்..

"அட !!! ஆமா அண்ணச்சி.. நீங்க சொன்ன மாதிரியே தான் ஆயிடுச்சு...
நாங்க தான் கலைஞர் இருக்குற வரைக்கும் யாருக்கும் முதல்வர் பதவில பங்கு வராதுன்னு நெனச்சோம்... ஆனா, தலைவரே கொடுத்துட்டாரே"

"எனக்கு முன்னாடியே தெரியும்யா.. ஏதோ.. தலைவருக்கு கொஞ்சம் தல பாரம் கொறஞ்சா சரிதான்.. சரி... சரி... நம்ம சகாக்கள்லாம் எங்கய்யா? யாரையுமே காணோம் " -
சேதுராமன்....

"குமரேசன், ஏதோ நெலத்தகராறு விஷயமா வெளியூர் போயிருக்கார் போல... தங்கவேல் அண்ணண் வருவாருன்னு நெனக்கிறேன்..."

"நான் யாரையுமே 2 நாளா பாக்கவே இல்ல... ஊருக்கு கீருக்கு போனா சொல்லிட்டு போங்கப்பா.."

"ம்ம்ம்...ம்ம்ம்... இனிமேல் பாத்துகிடலாம்"

"சரி.. சரி... யப்பா மாஸ்டர்... சக்கர கம்மியா... அர சக்கர போட்டு 2 காபி போடுப்பா.. இந்தா தங்கவேலும் வந்துட்டாருல்ல... மாஸ்டர், காபி மூணா போடுப்பா"

'எனக்கும் சேத்து நீங்களே காபி சொல்லீட்டீங்களா.." கேட்டபடியே உள்ளே வந்தார் தங்கவேல்...

"என்ன தங்கா... 2 - 3 நாளா ஆளேக்காணோம்... ?" - இது சேதுராமன்.

"நீங்களும் எதாவாது வெளியூர் பிரயாணமோ? " - கேட்டார் குமரேசன்...

"தங்கச்சி வீட்ல ஒரு சங்கதி ஆகி போச்சு அண்ணாச்சி... அதான் உசிலம்பட்டி வரைக்கும் போய்ட்டு வந்தேன்..." கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார் தங்கவேல்...

"என்னாச்சு தங்கா... எதாவது பிரச்சனையா? " கேட்டார் சேதுராமன்..

"ஆமா அண்ணாச்சி... தங்கச்சி மாப்பிளைக்கு ஊர் நடுவுல மெயின் ஆன எடத்துல ஜவுளி கடை... கடையோட சேந்தா மாதிரி வீடு.... கட நல்லா தான் போய்ட்டு இருக்கு... மூணு பிள்ளைங்க படிப்பு, வீட்டு செலவு எல்லாம் கட வருமானத்துல தான்... "

"சரி... அதுல இப்போ என்ன பிரச்சனை ? ? " - சேதுராமன்..

"அதான் அண்ணாச்சி.. ஊருக்குள்ள ரவுடித்தனம் பண்ணி அடாவடியா சுத்திட்டு இருக்க பய ஒருத்தன் உண்டு... பேரு உம்ருமணி... அவனுக்கு இப்ப திடீர்னு இந்தக்கடை மேல ஒரு கண்ணூ... நாலு அரசியல் ஆளுங்க,ரெண்டு பொறுக்கி பசஙகளோட வந்து கடைய உடனடியா காலி பண்ணி பேரு மாத்தித் தர சொல்லி ஒரே தகராறமா... அஞ்சு காசு கூட தர மாட்டோம்னு வேற சொல்லிட்டான் போல இருக்கு... தங்கச்சி போன் போட்டு ஒரே அழுகை... அதான் என்ன ஏதுன்னு பாப்போம்னு போக வேண்டியதா போச்சு..."

"இது என்ன தங்கா இது, பகல் கொள்ளயாவுல்ல இருக்கு ?" - இது சேதுராமன்.

"நான் போயும் ஒன்னும் பண்ண முடியல அண்ணாச்சி... அவைங்க ரொம்பவே கறாரா இருக்கானுக... 10 நாள் டைம் மட்டுந்தான் வாங்க முடிஞ்சுது... போலீஸ், வக்கீல் கோர்ட்டுன்னு அலையவும் திராணி இல்ல... தங்கச்சியும், மாப்பிள்ளையும் தெகச்சி போய் இருக்காங்க... 3 ல 2 பொட்டப்புள்ளங்க வேற... ரொம்ப சங்கடமா இருக்கு... "

"உயிர எடுக்குறதும் ஒண்ணுதான்... பொழப்ப எடுக்குறதும் ஒண்ணுதான்... நாசமா போற பசங்க... இப்போ 10 நாளைக்குள்ள என்னதான் ப்ண்றதா உத்தேசம்.. ?" - கேட்டார் சேதுராமன்.

"அந்த எடுவட்ட பயலுக்கு மனசு மாறுதான்னு பாக்கணும்... 2 லட்ச ரூபா பெறுமானமுள்ள கடைக்கு எதாவது ஒரு 40000, 50000 கிட்ட கொடுத்தானாக்கா கூட எதவது பெட்டிக் கட, பீடிக் கட வச்சு பொழைக்க சொல்ல வேண்டியது தான்... நம்ம இருக்க நெலமைக்கு நம்ம காசு பணமா கொடுக்க முடியும் ? வர்ற வரைக்கும் வாழ்க்க... விதி வந்தா சாவுன்னு போக வேண்டியதுதான் அண்ணாச்சி... இந்த மாதிரி ஒரு அப்பனுக்கு பொறக்காததெல்லாம் நம்ம எதுக்கவா முடியும்?" - சொல்லிமுடிக்கையில் தங்கவேல் கண்கள் குளம் கட்டியிருந்தன...

"கவலப்படாதீங்க தங்கா... கடவுள்னு ஒருத்தர் இருக்காருல... அவரு பாத்துகிடட்டும்... காபியக் குடிங்க..." கனத்த மனத்தோடு சொன்னார் சேதுராமன்...

கதவு #3 :

"ஐயா.. ஐயா.. யாராவது இருக்கீங்களா?" முனகியபடியே அந்த மருந்து கடையின் கண்ணாடிக்கதவை தள்ளினான் சேகர்...

"டேய்.. யாருடா அது,, பிச்சக்கார பயல உள்ள விடுறது...ஓடுறா... கதவை ஓங்கி அடைத்தான் கடை முதலாளி...

மூக்குச்சில்லு உடைந்து பொல பொலவென்று ரத்தம் கொட்ட, "யக்காஆஆஆ" என்று அலறிக்கொண்டு தெருவில் விழுந்தான் சேகர்...

"டேய்.. ஏன்டா இந்தக்கடக்காரங்கிட்ட போய் வம்பு இழுக்குற... அவனே என்று அரற்றியபடியே சேகரைத் தூக்கி விட்டார் ஏட்டு ராமநாதன்.

"சார்... நா ஒன்னியும் வம்பு வளக்கல சார்... மருந்து வாங்க தான் கதவ தட்னேன்..."

"மருந்து வாங்கவா? யாருக்குடா மருந்து, காசு வச்சுருக்கியா?" - அதட்டல் தொனியில் கேட்டார் ஏட்டு...

"சாந்தி அக்காவுக்கு... காசு 100 ரூபா இருக்கு சார்.." - ரத்தத்தை வழித்து விட்டபடியே சொன்னான் சேகர்...


"பாத்தா அனாதப் பய பிச்சக்காரன் மாதிரி இருக்க... யாருடா சாந்தி அக்கா ? ஒரு நிமிஷம் இரு.. எப்படி ரெத்தம் வருது பாரு... " என்றபடியே சோடாவும் வாட்டர் பாக்கெட்டும் வாங்கி கொண்டு கொடுத்தார் ஏட்டு.."

யாருன்னா என்னத்த சொல்றது... எனக்கு அப்பனாத்தா அத்தனையுமே அதான் சார்.. அந்த சேரியாண்ட உள்ள குப்பத்தொட்டில என்ன 10 நாப்புள்ளையா கண்டுகினு இட்டாந்துருக்கு,... வெவரந்தெளிஞ்ச வயசுலேர்ந்து அது கால தான் சுத்தி வந்துனுருக்கேன்.. அதுக்கு இல்லாட்டி கூட என் வயித்த எப்டியாவது ரொப்பி விட்ரும்... அதுக்கு தான் இப்ப உடம்பு முடியல.. அதான் மருந்து வாங்க அந்தா இவன் வாய ஒடச்சு வுட்டான்.. கம்னாட்டி.."

"ரெண்டு அனாதையா... என்னடா செய்து உங்க அக்காளுக்கு ?" - எகத்தாளமாக கேட்டார் ஏட்டு..

"என்னெனமோ செய்யுது சார்.. அந்த குப்ப மேடான்ட தான் சார் எங்க வூடு... அது பக்கமே எங்க வூட்டாண்ட பீப் ஸ்டால் வச்சுகினு வந்தவன் ஒருத்தங்கிட்ட எனக்கு பழக்கம் வந்துச்சு.. வீட்டுக்கு வரப்போக அக்காவுக்கும் அவனாண்ட இஷ்டமாயி போச்சு... அதுங்களும் அப்புறம் ஒண்ணு மண்ணா கட்டிகிச்சுங்கோ... நா கடப்பக்கம் பசங்க வூடாண்ட குடியாந்துட்டேன்... திடீர்னு ஒரு நாள் நம்ம தோச்துப்பய அக்கா புருஷன் பொணத்த கொளத்தாங்கரைல கண்டுகினு இட்டாந்தான்.. போய் பாத்தா அக்கா மூளி கெணக்கா ஒக்காந்துனுருக்கு... பாத்தாஅந்த நாதாரி டெஜன் கணக்கா பொம்பளகிட்ட போயி நோய் கட்டிகினான் போல இருக்கு... திடீர்ன்னு நெஞ்சு சளிக்கு டெஸ்ட் எடுக்க போய் நோய் தெரிஞ்சுருக்கு... எனக்கு பயந்துகினு கல்ல கட்ட்டி ொளத்துல வுழுந்து போய்ட்டான்.. சரின்னு காரியத்த முடிச்சுகினு வந்து அக்காவ
தேத்தலாம்னு பாத்தா நிமிஷத்துக்கு 2 தபா மயங்கிகினே கெடந்துச்சு... இன்னா ஏது ஆஸ்பித்திரியாண்ட தூக்கினு போனா அக்கா மாசமாகீதுன்னாங்க... சர்ரி, ஆணோ.. பொண்ணோ அதுக்கு தொணைக்கு ஒரு புள்ள ஆச்சுனு கொஞ்சம் மூச்செரைக்க செல்லோ சொன்னாய்ங்க... அதுக்கும் நோய் வுட்டுகிச்சுன்னு.. நெஞ்சு வுட்டு போச்சு சார்..."

"அடப்பாவி சண்டாளா.. இப்படியுமா வுட்டு போவும்.. " - இரக்கமாய் கேட்டார் ஏட்டு..

"ஆனா கொளந்தைக்கி நோய் வராம ஊசி போட்டுக்கலாம்னு டாக்டருங்கோ சொன்னாங்கோ... சரின்னு போட்டுனுருக்கோம்.. அக்காதான் பேசுறதியே நிறுத்திகிச்சு.. ஒரு சிரிப்பில்ல.. கலகலப்பில்ல... நெதம் எழவு வூடு கெணக்காவே இருக்கு..."
"ஒரு பொம்பளைக்கு இத்தன கஷ்டம்னா எப்படிடா சிரிப்பா ?" - பெருமூச்செரிந்தார் ராமநாதன்.

"கொளந்த பொறந்து 4- 5 மாசத்துல அக்காவும் போயிரும்னு டாக்டருக்ங்கோ சொல்லிகினாங்கோ... சரி அதுக்கப்புறம் இந்த அனாதெக்கி சாந்தி அக்கா மாதிரி அந்த அனாதைக்கி எல்லாமே நாமாதனுக்கிட்டு தான் காலத்த நவுத்திகினு இருக்கேன்" - வானத்தை வெறித்தபடி சொன்னான் சேகர்..

"கவலப்படாதடா... கடவுள்னு ஒருத்தன் இருக்கான்ல... அவன் பாத்துக்கிட்டு தான் இருப்பான்... மரம் வச்வன் தண்ணி ஊத்துவான்... வா மருந்து வாங்கித் தர்றேன்... எடுத்துகிட்டு வீட்டுக்கு போ" என்று அவனை கூட்டிக் கொண்டு போனார் ஏட்டு ராமநாதன்..

3 பேர் சொன்னது என்னான்னா..:

Cable Sankar said...

நைஸ்.. வாழ்த்துக்கள்.

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி சங்கர்.. வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்...

கமால் -அன்பின் உச்சம் said...

Nice....!!!! Continue pannunga, ippo varusham 2012 aachu...!

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.