Monday, January 11, 2010

நெல்லைப் பதிவர்கள் சந்திப்பு - அறிவிப்பு


எடே சொக்கமேன்னாலும், நம்ம ஊரு மாரி வருமாடே.... நம்ம ஊரு சூப்பர்லா...


அல்வா, இருட்டுக்கடை, தாமிரபரணி, நெல்லையப்பர், வ.ஊ.சி, பாம்பே தியேட்டர், குற்றாலம், பாபநாசம், இளங்கோ-ருசி-எழில்(புரோட்டா) - இதிலெல்லாம் பொத்தம்பொதுவாய் பிரியம் கொண்டிருக்கும் நெல்லையின் பதிவுப் பறவைகளே... வரும் தை பொங்கல் விடுமுறையில் ஒரு நாள் நெல்லையில் ஒரு சிறு பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று விரும்புகிறோம் .

இடம் : திருநெல்வேலி, வ.ஊ.சி மைதானம். (இதுதான் நெல்லையில் பொதுவாக எல்லா கெட்டூகேதர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் இடம்)

நாள் : 16 - 01 - 2010

நேரம் : 5 மணிக்கு மேல்...

இது நெல்லை மண்ணின் பதிவு மைந்தர்களை ஒன்று சேர்க்கும் முதற்சிறிய முயற்சி...
புது நெல்லை நட்புகளுக்கு பாலம் அமைக்கும் ஒரு புதிய முயற்சி...

நெல்லை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருக்கும் பதிவர்கள் கண்டிப்பாக வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. உங்களுடைய வருகையின் உறுதியை இங்கே தொடர்பு எண்ணுடன் பின்னூட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்...

தொடர்புக்கு :

ராம்குமார் அமுதன் - 09916729879 (இது பெண்களூராகிய பெங்களூரு நம்பர்.. அதுனால 0 போட்டே அடிங்க :( )
மீன்துள்ளியான் செந்தில் - 9894700676

Friday, January 8, 2010

வலியும் வாழ்வும்...


இது உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை....


வலியும் வாழ்வும்...


தூசி படிந்த நினைவை துடைத்துப் பார்க்கிறேன்…

மர்மப்பிரேதசங்களில் மங்கலாய்த் தெரிகிறது...அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு...

நீ ஒன்பதாம் வகுப்பு... !!

புதுசா வந்துருக்க டியூசன் சார் பொண்ணு -

நம் தெருவில் உன் பெயர்.

புதுசா வந்துருக்க பூப்போட்ட பாவாடை -

என் நினைவில் உன் பெயர்.

உனக்கும் எனக்குமாய் பார்வையில் மட்டுமே பல்லாயிரம் கதைகள்.


நீ உன் தங்கையிடமும் நான் என் தோழனிடமும்

சத்தமாய் பேசி கொண்டது நமக்கான சங்கேத பாஷைகள்...

உன் தங்கை என்னை “அண்ணா” என்று அழைத்த நாளில்

"மாமான்னு சொல்லுடி" என்று நீ அவளைக் குட்டியது

இன்றும் வலிக்கிறது என் உச்சந்தலையில்.


"உனக்கு என்ன வேணும்"

ஊர்கோடித் திருவிழாவில் -

உன்னிடம் நான் பேசிய முழுமுதல் வார்த்தை...

நீ கேட்டு நான் வாங்கி பாதி கடித்து உனக்குக் கொடுத்த

பழம்பரியின் சுவை இன்றும் என் அடி நாவில்...

அப்படியே மாறாமல்...


அதன் பிறகு அதிக நாள் பிடிக்கவில்லை

நாம் காதல் பழகிக் கொள்ள அல்லது

நமக்கான காதலை பழக்கிக் கொள்ள...


குமரண்ணன் கொய்யாத்தோப்பில்,

நாம் பேசிய காதல் பேச்சுக்கள்

காமத்துப்பால் கடந்த காதல்பால் அவை...


உன் சிரிப்பில் நானும் என் பேச்சில் நீயுமாய்

விழுந்து எழுந்து மீண்டும் விழுந்து மீண்டும் தொலைந்த

தூய நாட்கள் அவை...


நான் மிடுக்காய் கல்லூரி செல்வதை

ஓரக்கண்ணால் நீ பார்த்த பெருமிதப் பார்வைகளில்

கிடைத்த அந்த சந்தோஷம்

இன்று பேரறிஞர் எனக்கே எனக்காய் வாசிக்கும்

எந்த வாழ்த்துரையிலும் கிடைக்கவில்லை...


அன்னமாய்ப் பறந்த நம் காதலின்

நெஞ்சில் தைத்தது ஒரு அம்பு...

எய்தது உன் தந்தை..

உனது மாமவின் மரணம் அது...

குடும்பப்பகை குறைக்க அவர் மகனுக்கு நீ என்று

உன் தந்தை கொடுத்த மரணப்படுக்கை வாக்கு

நம் காதலுக்கு அவர்கள் விதித்த தூக்கு...


நான் கல்லூரி முதலாண்டு...

நீ பள்ளியின் இறுதி ஆண்டு...

எங்கே போவது... எப்படி போரடுவது...

மானுடம் என்பதைத் தாண்டி - நீ கிறித்தவள்... நான் இந்து...

என்ன செய்வாய் நீயும்...

என்ன செய்திருக்க முடியும் நானும்...


நம் அம்மாக்கள் ஒன்றும் ஊசி போட்டுக் கொண்டு

கையில் தேநீரோடு

இடுப்புக்கு கீழே வலி தெரியாமல்

பெற்றெடுக்கவில்லையே நம்மை...


தாய்க்கும் வலி கொடுத்து நாமும் வலி பொறுத்து...

வலியோடு வாழத் தொடங்கிய

சராசரி இந்தியக் குழந்தைகள்தானே நாம்...

வலி நம் பழக்கம்... வலி நம் மரபு... வலி நம் வாழ்வு...

பொறுத்துக் கொண்டு பிரிந்து விட்டோம்...


நாம் நீயாகவும் நானாகவும்,

உன் குடும்பமாகவும் என் குடும்பமாகவும்...

சமூகத்தில் தான் எத்தனை எத்தனை சட்ட சிக்கல்...


வெளிப்பார்வைக்கு நன்றாகத்தான் இருந்தாய் நீயும்...

ஏன் நானும் தான்...

நான் விஞ்ஞானி... நீ ஆதர்ச குடும்பத்தலைவி...

நீ உன் கணவன் உன் மகள்... நான் என் மனைவி என் மகன்...


மாற்றங்கள் மாறி மாறி மாற்றங்களாய் மாறிப் போக...


நீ - உன் கணவன் - உன் மகள் - உன் மருமகன் - உன் பேரன்...

நான் - என் மனைவி - என் மகன் - என் மருமகள் - என் பேத்தி...

உன் பேரனும் என் பேத்தியும் ஒரே கல்லூரிதானாமே...

என் மனைவி என்றோ சொன்னாள்...


என்னவெல்லாம் பார்த்து விட்டோம்...

எல்லாமே கடந்து வந்தோம்...


பூமி சுற்றாத நாள் ஒன்றிரண்டு இருந்திருக்கக் கூடும்...

நிலவும் சூரியனும் அருகாமையில் - நிகழ்ந்திருக்கக் கூடும்...

நீ என்னையும் நான் உன்னையும் நினைக்காத நாள் -

இன்றைத் தவிர இன்னொன்று இருந்திருக்க வாய்ப்பே இல்லை...


அன்று நீ இல்லை - எனக்கு மட்டும்...

இன்று நீ இல்லை - எல்லோர்க்குமே...


அழுதபடி உன் கணவன்... உன் மகள்... பேத்தி...

உற்றார்.. உறவினர்...

நான் அழவில்லை... நான் அழவில்லை...
"கடைசியாய் முகம் பார்ப்பவர்கள்... முத்தமிடுபவர்கள்... செய்யலாம்..."

பாதிரியார் சொல்லச்சொல்ல....


என்னால் முடியாது...

உன்னை... உன் பெண்மையை... உன் தாய்மையை..

கலங்கப்படுத்தி என்னால் முத்தமிட முடியாது...

யாரும் பார்க்காமல் கண்ணீர் காட்டாமல்...


அடி காதலீ...

இங்கே தவணை முறையில் உருகிக் கொண்டிருப்பது

வர்த்தியின் மெழுகு மட்டுமல்ல

என் உயிரும்தான்...


என் செய்வேன் நான்...

வலி நம் பழக்கம்... வலி நம் மரபு... வலி நம் வாழ்வு... 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.