Friday, January 8, 2010

வலியும் வாழ்வும்...


இது உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்ட கவிதை....


வலியும் வாழ்வும்...


தூசி படிந்த நினைவை துடைத்துப் பார்க்கிறேன்…

மர்மப்பிரேதசங்களில் மங்கலாய்த் தெரிகிறது...அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு...

நீ ஒன்பதாம் வகுப்பு... !!

புதுசா வந்துருக்க டியூசன் சார் பொண்ணு -

நம் தெருவில் உன் பெயர்.

புதுசா வந்துருக்க பூப்போட்ட பாவாடை -

என் நினைவில் உன் பெயர்.

உனக்கும் எனக்குமாய் பார்வையில் மட்டுமே பல்லாயிரம் கதைகள்.


நீ உன் தங்கையிடமும் நான் என் தோழனிடமும்

சத்தமாய் பேசி கொண்டது நமக்கான சங்கேத பாஷைகள்...

உன் தங்கை என்னை “அண்ணா” என்று அழைத்த நாளில்

"மாமான்னு சொல்லுடி" என்று நீ அவளைக் குட்டியது

இன்றும் வலிக்கிறது என் உச்சந்தலையில்.


"உனக்கு என்ன வேணும்"

ஊர்கோடித் திருவிழாவில் -

உன்னிடம் நான் பேசிய முழுமுதல் வார்த்தை...

நீ கேட்டு நான் வாங்கி பாதி கடித்து உனக்குக் கொடுத்த

பழம்பரியின் சுவை இன்றும் என் அடி நாவில்...

அப்படியே மாறாமல்...


அதன் பிறகு அதிக நாள் பிடிக்கவில்லை

நாம் காதல் பழகிக் கொள்ள அல்லது

நமக்கான காதலை பழக்கிக் கொள்ள...


குமரண்ணன் கொய்யாத்தோப்பில்,

நாம் பேசிய காதல் பேச்சுக்கள்

காமத்துப்பால் கடந்த காதல்பால் அவை...


உன் சிரிப்பில் நானும் என் பேச்சில் நீயுமாய்

விழுந்து எழுந்து மீண்டும் விழுந்து மீண்டும் தொலைந்த

தூய நாட்கள் அவை...


நான் மிடுக்காய் கல்லூரி செல்வதை

ஓரக்கண்ணால் நீ பார்த்த பெருமிதப் பார்வைகளில்

கிடைத்த அந்த சந்தோஷம்

இன்று பேரறிஞர் எனக்கே எனக்காய் வாசிக்கும்

எந்த வாழ்த்துரையிலும் கிடைக்கவில்லை...


அன்னமாய்ப் பறந்த நம் காதலின்

நெஞ்சில் தைத்தது ஒரு அம்பு...

எய்தது உன் தந்தை..

உனது மாமவின் மரணம் அது...

குடும்பப்பகை குறைக்க அவர் மகனுக்கு நீ என்று

உன் தந்தை கொடுத்த மரணப்படுக்கை வாக்கு

நம் காதலுக்கு அவர்கள் விதித்த தூக்கு...


நான் கல்லூரி முதலாண்டு...

நீ பள்ளியின் இறுதி ஆண்டு...

எங்கே போவது... எப்படி போரடுவது...

மானுடம் என்பதைத் தாண்டி - நீ கிறித்தவள்... நான் இந்து...

என்ன செய்வாய் நீயும்...

என்ன செய்திருக்க முடியும் நானும்...


நம் அம்மாக்கள் ஒன்றும் ஊசி போட்டுக் கொண்டு

கையில் தேநீரோடு

இடுப்புக்கு கீழே வலி தெரியாமல்

பெற்றெடுக்கவில்லையே நம்மை...


தாய்க்கும் வலி கொடுத்து நாமும் வலி பொறுத்து...

வலியோடு வாழத் தொடங்கிய

சராசரி இந்தியக் குழந்தைகள்தானே நாம்...

வலி நம் பழக்கம்... வலி நம் மரபு... வலி நம் வாழ்வு...

பொறுத்துக் கொண்டு பிரிந்து விட்டோம்...


நாம் நீயாகவும் நானாகவும்,

உன் குடும்பமாகவும் என் குடும்பமாகவும்...

சமூகத்தில் தான் எத்தனை எத்தனை சட்ட சிக்கல்...


வெளிப்பார்வைக்கு நன்றாகத்தான் இருந்தாய் நீயும்...

ஏன் நானும் தான்...

நான் விஞ்ஞானி... நீ ஆதர்ச குடும்பத்தலைவி...

நீ உன் கணவன் உன் மகள்... நான் என் மனைவி என் மகன்...


மாற்றங்கள் மாறி மாறி மாற்றங்களாய் மாறிப் போக...


நீ - உன் கணவன் - உன் மகள் - உன் மருமகன் - உன் பேரன்...

நான் - என் மனைவி - என் மகன் - என் மருமகள் - என் பேத்தி...

உன் பேரனும் என் பேத்தியும் ஒரே கல்லூரிதானாமே...

என் மனைவி என்றோ சொன்னாள்...


என்னவெல்லாம் பார்த்து விட்டோம்...

எல்லாமே கடந்து வந்தோம்...


பூமி சுற்றாத நாள் ஒன்றிரண்டு இருந்திருக்கக் கூடும்...

நிலவும் சூரியனும் அருகாமையில் - நிகழ்ந்திருக்கக் கூடும்...

நீ என்னையும் நான் உன்னையும் நினைக்காத நாள் -

இன்றைத் தவிர இன்னொன்று இருந்திருக்க வாய்ப்பே இல்லை...


அன்று நீ இல்லை - எனக்கு மட்டும்...

இன்று நீ இல்லை - எல்லோர்க்குமே...


அழுதபடி உன் கணவன்... உன் மகள்... பேத்தி...

உற்றார்.. உறவினர்...

நான் அழவில்லை... நான் அழவில்லை...
"கடைசியாய் முகம் பார்ப்பவர்கள்... முத்தமிடுபவர்கள்... செய்யலாம்..."

பாதிரியார் சொல்லச்சொல்ல....


என்னால் முடியாது...

உன்னை... உன் பெண்மையை... உன் தாய்மையை..

கலங்கப்படுத்தி என்னால் முத்தமிட முடியாது...

யாரும் பார்க்காமல் கண்ணீர் காட்டாமல்...


அடி காதலீ...

இங்கே தவணை முறையில் உருகிக் கொண்டிருப்பது

வர்த்தியின் மெழுகு மட்டுமல்ல

என் உயிரும்தான்...


என் செய்வேன் நான்...

வலி நம் பழக்கம்... வலி நம் மரபு... வலி நம் வாழ்வு...23 பேர் சொன்னது என்னான்னா..:

சரண் said...

பல ஆயிரக்கணக்கான இதயங்களின் மனதில் இருக்கும் வலியை உணரச்செய்த கவிதை.

அவனி அரவிந்தன் said...

//வலியோடு வாழத் தொடங்கிய

சரசரி இந்தியக் குழந்தைகள்தானே நாம்...

வலி நம் பழக்கம்... வலி நம் மரபு... வலி நம் வாழ்வு...

பொறுத்துக் கொண்டு பிரிந்து விட்டோம்... // இந்தப் பகுதி மிகவும் கவர்ந்தது. பெரிய கதையே இந்தக் கவிதையில் சுருங்கிக் கிடக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் ராம் !

கண்ணா.. said...

காதல் கரு , வார்த்தைகள் மிக அருமை..

ஆனால் கவிதைக்காக அங்கங்கே எண்டர் தட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

:)

அக்பர் said...

வெற்றி பெற வாழ்த்துகள்.

Valarmathi said...

Really Nice ....

padma said...

manathu valikirathu
valiyodu ethanai ullangal
enna soolla endru theriyavillai
vaazhthukkal
padma

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி சரண்... வந்தமைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும்....

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி அவனி அரவிந்தன்... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்....

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி கண்ணா... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்.... முடிந்தளவு என்டர் தட்டிருக்கேன்... பாக்கலாம்...

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி அக்பர் மற்றும் வளர்மதி... வந்தமைக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும்....

ராம்குமார் - அமுதன் said...

வாங்க பத்மா... முதல் தடவையா நம்ம வலைப்பக்கத்துக்கு வந்துருக்கீங்க.... ரொம்ப நன்றீ...வலி தெரிய வேண்டும் என்ற கவிதையின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது... மகிழ்ச்சியே...

சக்தியின் மனம் said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

சக்தியின் மனம் said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்

ராம்குமார் - அமுதன் said...

ரொம்ப நன்றி சக்தியின் மனம்....

rakesh said...

வலிதான் வாழ்வு.
வாழ்வுதான் வலி..
நிதர்சன வலிகள்..
கவி வரிகளில்........

Chandra said...

Kavithi Nallairukuthu.

Chandra, Austin, TX

cheena (சீனா) said...

அன்பின் ராம்குமார் - அருமையான கவிதை - மன வலியினை விவரிக்கும் கவிதை - அத்தனை வரிகளுமே படிக்கும் பொழுது தங்களின் உணர்வினைக் காட்டுகின்றன - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா

கே.ஆர்.பி.செந்தில் said...

Great...

ராம்குமார் - அமுதன் said...

வ‌ந்த‌மைக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி செந்தில் ம‌ற்றும் சீனா...

Karthika said...

ரொம்ப நல்ல இருந்தது!! எதார்த்தமான நடையில ஒரு சிறந்த கருத்தாழமிக்க கவிதை !

ராம்குமார் - அமுதன் said...

மிக்க நன்றி கார்த்திகா... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்....

பெனிட் said...

உண்மையில் நல்ல கவிதை. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது

Anonymous said...

Good stuff Ram, keep up the good work...unga kitta irundhu inum nerya edhirpaakkuren..;)

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.