Thursday, December 15, 2011

இசைராஜாங்கத்தில் இனியவை பத்து...

இசைராஜாவோட.... அதாங்க நம்ம இளையராஜாவோட நிகழ்ச்சி ஜெயா டி.வில வரப்போகுதுல்ல... அதுக்காக நமக்குப் பிடிச்ச சிறந்த பத்து ராஜா பாடல்கள தொகுத்து அனுப்புனா, அதுல சிறந்தத தேர்ந்தெடுத்து இளையராஜா நமக்காகப் பாடுவார்னு சொன்னாங்க.


சொன்னவய்ங்க முழுசாச் சொல்லல, எதுல பத்துன்னு. காதல் பாட்டுல சிறந்த பத்தா, தத்துவப் பாட்டுல சிறந்த பத்தா. காதல் தோல்வி பாட்டுல பத்தா, அம்மா-தங்கச்சி-அண்ணன்-தம்பி-குடும்பப் பாட்டுல சிறந்த பத்தா, நாட்டுப்புறப்பாட்டுல சிறந்த பத்தா, கடவுள்-பக்தி-சாமி பாட்டுல சிறந்த பத்தா, வயலின்லயா, புல்லாங்குழல்யா, கிடார்லயா, கர்னாடக சங்கீதத்துலயா இல்லேன்னா பிண்ணனி இசையிலயா எதுலய்யா சிறந்த பத்துன்னு கேட்டா உடனே கீழ உள்ள வீடியோவப் பாருன்னாய்ங்க..அதப்ப்பாத்தா மொத்தத்துலயே வெறும் பத்தே பத்துதான் தேர்தெடுக்கனும்னு சொல்லிடாய்ங்க.

பத்தே பத்துதானா? - பத்து பத்தாதேடானு படித்துற பாண்டி ஸ்டைல்ல சொல்லிகிட்டே ShortList பண்ண ஆரம்பிச்சா முதல் இடத்துக்கு மட்டும் ஒரு 20 பாட்டு மண்டைக்குள்ள போட்டி போடுது. இந்தா அந்தான்னு அழுத்திப் பிடிச்சா கடைசில எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச இசை ராஜாங்கத்தோட மிகச் சிறந்த பத்துப் பாடல்களின் வரிசை இது.


ஒரு வழியா ஒண்ணுல இருந்து ஒன்பது பாட்டு வரைக்கும் கொண்டு வந்துட்டேன். ஆனா பத்தாவது எடத்துக்கு மட்டும், திரும்பவும் ஒரு 20 பாட்டு, இத விடாத... அத விடாதன்னு ரொம்ப ரொம்ப அன்புத்தொல்லை படுத்தி எடுத்துருச்சு. எல்லாத்தையும் முந்தி எனக்குப் பிடிச்சதுல முதல் இடத்துல இருக்கது கோபுர வாசலிலே படத்துல வர்ற காதல் கவிதைகள் படித்திடும் நேரம் பாட்டுதேன். அந்தப் பாட்ட பிட்டு பிட்டு எத்தன தடவ கேட்டாலும் எந்த இடத்துலயும் கொஞ்சம் கூட சோர்வே தராத பாட்டு. "Melody with mild beats" ஸ்டைல்ல ராஜாவோட மாஸ்டர்பீஸ் இந்தப்பாட்டு. ஒவ்வொருதடவ கேட்கும் போது ஈர்ப்பு கொஞ்சமா கொஞ்சமா அதிகரிச்சுகிட்டே போறது தான் இளையராஜா பாட்டோட சிறப்பே. அந்த வகைல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஈர்த்த மொத்தப் பத்துப் பாட்டு வரிசை கீழே.


1) காதல் கவிதைகள் படித்திடும் நேரம்... (கோபுர வாசலிலே)
2) பூவே செம்பூவே...(சொல்லத் துடிக்குது மனசு)

3) பனிவிழும் மலர்வனம் (நினைவெல்லாம் நித்யா)

4) ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்... (புன்னகை மன்னன்)
5) அந்தி மழை பொழிகிறது (ராஜபார்வை)
6) கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை)
7) தென்மதுரை வைகை நதி... (தர்மத்தி்ன் தலைவன்)

8) பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்... (இன்று நீ நாளை நான்)
9) பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்.. (அடுத்த வாரிசு)10) கற்பூர பொம்மை ஒன்று (கேளடி கண்மணி)

இந்தப் பத்த
irjayatv@gmail.comன்ற மின்னஞ்சல்முகவரிக்கு அனுப்பிச்சு வச்சாச்சு. பாப்போம் என்ன நடக்குதுன்னு.


இந்தப்பத்துல இருந்து தவிர்க்கவே கொஞ்சங்கூட மனசில்லாம ரூல்ஸ மீற முடியாம வேற வழியில்லாம ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு நான் வெளிய வச்ச மீதிப் பத்துப்பாட்டுகள் இதோ...

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க...(குணா)

என்னைத் தாலாட்ட வருவாளோ...(காதலுக்கு மரியாதை)


அடி ஆத்தாடி இளமனசொண்ணு ரெக்க கட்டி பறக்குது சரிதானா...(கடலோர கவிதைகள்)


தூங்காத விழிகள் ரெண்டு...(அக்னி நட்சத்திரம்).


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா... (கோபுர வாசலிலே)


இந்த மான் உந்தன் சொந்த மான் (கரகாட்டக்காரன்)


சின்னத்தாயவள் தந்த ராசாவே(தளபதி)


ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு (வைதேகி காத்திருந்தாள்)


நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (ஹேராம்)


வெள்ளைப்புறா ஒன்று (புதுக்கவிதை)


ஐநூறு பாட்டு பிடிச்சதா தேர்ந்தெடுக்கச் சொன்னாலும் இசைராஜாங்கத்துல எத விடுறது எதத் தொடுறதுன்னு தெரியாம தெவங்கித்தான் போவோம். ம்ம்ம்ம்....
ராஜஸ்பரிசம்னா சும்மாவா...


இசையின்றி அமையாது உலகு... இளையராஜா இன்றி அமையாது இசை...

Friday, November 25, 2011

மயக்கம் என்ன - க்ளாஸ் & க்ளாசிக்.
Plagiarism. இந்த வார்த்தைக்கான சரியான தமிழ் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?
நம்ம ஐ.டி வார்த்தைகளிலேயே சொல்றேன். நீங்க வேல பாத்துகிட்டு இருக்க ப்ராஜக்ட்ல ஒரு பிரச்சனை(Issue). சரியே பண்ண முடியல... என்னென்னவோ முயற்சி பண்ணி பாக்குறீங்க. முடியல. கம்பெனில உள்ள அத்தணை Subject Matter Expertsம் வந்து நோண்டி பாக்குறாங்க. ம்ம்ஹூம்... ஆணியே புடுங்க முடியல. எல்லாம் கைய விரிச்சுட்டு வீட்டுக்குப் போறாங்க. கிளையண்டுக்கும் மேனேஜ்மென்டுக்கும் சரியான டென்ஷன். தலைவலி. யாராவது இத சரி பண்ணா, கையெடுத்து கோடி முறை கும்பிடலாம்னு ஒரு நிலைமை. ஒண்ணும் முடியல. ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு டீய போட்டு வந்து உக்காற்றீங்க. கூகிள்ல தேடி எதை எதையோ நோண்டி ஒரு 4 மணிக்கு சரி ஆகிடுது. Issue Resolved . அக்கடான்னு ரூம்க்கு போய் தூங்கி எந்திரிச்சு காலைல வந்து பாத்தா நீங்க ரிஸால்வ் பண்ணதுக்கு வேற எவனோ மெயில் அனுப்பிச்சு விட்டான். கம்பெனியே அவன தலைல தூக்கி வச்சு கொண்டாடிகிட்டு இருக்கு. அவன் உங்களுக்கு ஒரு வகைல சீனியர். உங்களால ஒண்ணுமே செய்ய முடியலை. உங்களுக்கு எப்படி இருக்கும் அந்த சூழ்நிலை. அப்படியே பொத்துகிட்டு வரும்ல. எனக்கு வாழ்க்கைல ஒரு 2 தடவ இது மாதிரி நடந்துருக்கு. கிட்டத்தட்ட இந்த மாதிரி ஒரு சூழ்நிலைதான் மயக்கம் என்ன படத்தோட கதைக்கரு.

காதல் கொண்டேன், புதுப்பேட்டைக்குப் பிறகு அண்ணன் செல்வாவும் தம்பி தணுஷும் இணையும் திரைப்படம் என்பதால் எங்கெங்கிலும் இமாலய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்த திரைப்படம். பாடல்கள் ஏற்கனவே தேவையான மயக்கத்தையும் கிறக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடே ஏன் உலக உருண்டையே தனுஷ் கொலைவெறி பைத்தியம் பிடித்து திரியும் இந்த வாரத்தில் இன்று படம் ரீலீஸ். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் படம் "CLASS". ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு மீண்டும் 7G மாதிரி, காதல் கொண்டேன் மாதிரி ஒரு செல்வா Genere திரைப்பட்ம். Tragedy கிளைமேக்ஸ் இல்லாதது வித்தியாசம்.


படத்தில் Wild Life போட்டோகிராபராக தனுஷ். "கோ" படத்தின் பெயர் போடும் ஸ்லைடுகளிலேயே இது வரை வித்தியாசமாக எடுக்கப்பட்ட நிறைய "Media Style Photographs" போட்டு அசத்தியிருப்பார் கே.வி.ஆனந்த். இந்தப்படம் பாருங்கள் "Wild Life PhotoGraphy"ன் மிகப் பிரமாதமான பரிமாணங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார் செல்வா. முதல் பாதியில் ஒரு சீன் இருக்கிறது. தனுஷ் பறவைகளை படம்பிடிப்பதற்காக ஒரு இரவு முழுவதும் காட்டுக்குள் சென்று காத்திருந்து படம்பிடிப்பார். அந்த மொத்த சீக்வன்சும் ஜி.வி.பிராகாசின் "BGM"மோடு சேர்ந்து பார்க்கும் தருணத்தில் கிடைத்ததே ஒரு உணர்ச்சிக்குவியல். சத்தியமா, சொல்லவும் முடியல. எழுதவும் முடியல. "Hats Off" செல்வா && ஜி.வி.பிரகாஷ். You both form an Ultimate Combo.முதல் பாதி முழுவதுமே படம் அருமை. போனதே தெரியல. செம ஸ்பீட். வசனங்களில் அதிகமாக கவனம் ஈர்க்கிறார் செல்வராகவன்.


"நீ ஒரு இங்கிலீஷ் தெரிஞ்ச *&@*@&&@"


"தம்பி.. இதுவரைக்கும் என் பொண்டாட்டிய நா அழகா பாத்ததே இல்லப்பா"


"நானும் ஆபிஸ்ல எவ்வளவோ வேலைல தப்பு வந்துருக்கு. ஆனா அதுக்காக அழுகைலாம் வந்ததே இல்ல"


இந்த ஒவ்வொரு டையலாக்கும் வர்ற டைமிங்கும் Screen Prescence ம் உண்மையிலேயே பிரமாதம். சூப்பர் செல்வா. இந்தப்படத்தோட பிண்ணனி இசை மற்றும் பாடல்களைக் கேட்கும் பொழுதே தெரிகின்றது. Watch my words, One day or Other... ஜி.வி.பிரகாஷ் தொடப் போகும் உயரம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராததாய் இருக்கும். பாடல்கள் Visual ஆக எடுக்கப்பட்டிருக்கும் விதமும் மிகவும் அருமை. ஓட ஓட பாட்டோட மேக்கிங்கும் அந்த கார்ட்டூண் ஐடியாவும் செம. காதல் என் காதல் வழக்கமான செல்வா டைப் கோரியோகிராபி. தனுஷ் நடிப்பில் அடுத்த கட்டத்தைத் தொட்டிருப்பதற்கான சத்தியமான சான்று இந்தப் படம். பிரமாதமான ஆக்டிங். படத்துல ஒரு சீன். அதுல தன்னுடைய உழைப்பு நிரகரிக்கப்படும் ஒரு பொழுதில், தன்னுடைய கிரியேட்டிவிட்டி அவமானப்படுத்தப்படும் ஒரு பொழுதில் ஒரு முகபாவம். கட் பண்ணினால் பீச்சில் இருந்து வந்து ஒரு டீக்கடையில் தம் பற்ற வைக்கும் ஒரு சீன். Thatzzzzzzz it. தனுஷுக்கு ஏற்கனவே தேசிய விருது கிடைத்து விட்டதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமே இல்லை. கதாநாயகி ரிச்சா. "என்னா கண்ணுடா" வகையறா பொண்ணு. இந்தப் பாத்திரத்துக்கான சரியான பொருத்தம். முதல் படத்திலேயே பெர்பார்மன்ஸ் பிச்சு உதறிருக்கா. சூப்பர்.
இரண்டாம் பாதி ஆரம்பம் முதல் நன்றாகவே செல்கிறது. நடுவில் கொஞ்சமே கொஞ்சூண்டு தொய்வு. ஆனால் கிளைமேக்ஸ நோக்கி மீண்டும் எழும்பி முடிகிறது. நான் சொன்னதும் மழை வந்துச்சா, பிறைதேடும் நிலவிலே... இரண்டும் நல்ல மாண்டேஜ் பிட். படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு சீன். தனுஷையும் அவர் நண்பரையும் சமாதனப்படுத்துவதற்காக நண்பரின் அப்பா அவர்களுக்கு ஒரு சரக்கு ஊற்றிய க்ளாஸை நீட்டிக் கொண்டே இருப்பார். செல்வாவின் "Darker side cinematic sense"யையும் தாண்டி அவருடைய "Sense of Humour" பளிச்சிடும் இடம் அது. மனித மனங்களின் உள்ளுணர்வு இயல்புகளை அழகாய் படம்பிடித்துக் காட்டும் நிறைய காட்சிகள். ரிச்சா தனுஷின் நண்பரிடம் "சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ. என் புருஷன பைத்தியம்னு எப்பவுமே சொல்லாத. அவன் ஜீனியஸ். அது எனக்குத் தெரியும்". இந்த ஒரு வசனம். இந்த ஒரு காட்சி அதற்கு சரியான எடுத்துக்காட்டு.


இந்தப் படத்துக்கு இந்தக் கதைக்களத்துக்கு ஒரு கேமராமேனின் பணியும் பங்கும் மிக மிக அதிகம். அதனை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார் ராம்ஜி. படம் நெடுகவே ஏகப்பட்ட க்ளோஸ் அப் ஸாட்ஸ். ரசனையான கேமரா கோணங்கள் பல இடங்களில். படத்துல பெரிய பலம் கொண்ட வில்லன் இல்ல. ஏன் சண்டையே இல்ல. கிளைமேக்ஸ்லாம் முடிஞ்சு Name Scroll Marquee லாம் ஓட ஆரம்பிச்சதுக்கு அப்புறமா தனுஷ் ஒரு தேங்க்ஸ் சொல்வாரு. அதுதான் ஒரு மிகப் பெரிய அடி,பழிவாங்கல். அல்டிமேட்.

நான் சின்னப்பையனா இருக்கேல எங்க ஏரியால உள்ள காலேஜ் பசங்க கூடல்லாம் படத்துக்குப் போவேன். தளபதி, அஞ்சலி படங்கள்லாம் பாக்கேலே அவங்கள்லாம் ஒவ்வொரு சீன்லயும் சிலாகிச்சு சிலாகிச்சு "மணிரத்னம் டச்" "மணிரத்னம் டச்" என்று சொல்லுவார்கள். இந்தத் தலைமுறையில் அது பொருத்தமாய் சொல்ல வேண்டுமானால் இந்தப் படத்தின் ஏகப்பட்ட இடங்களில் "செல்வராகவன் டச்".படத்துல முதல் பாதில தனுஷ் அடிக்கடி சொல்ற வசனம் "ஏதோ தப்பா இருக்கே". ஆனால் "மயக்கம் என்ன..." எதுவுமே பெருசா தப்பா இல்ல... எல்லாமே சரியாத்தன் இருக்கு. க்ளாசிக் சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம்.

Wednesday, November 2, 2011

அண்ணா நூலகம் - ஆன்மா சாந்தியடையட்டும்.

புத்தகத்தில் உலகத்தைப் படிப்போம்...
உலகத்தையே புத்தகமாய் படிப்போம்
-அறிஞர் அண்ணா.

நான் வேலை நிமித்தமாக இரண்டு மாதங்களுக்கு முன்னால் மும்பை போயிருந்த பொழுது ஒரு உணவு வேளையில் அங்கிருந்த நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். சென்னையா, மும்பையா என்று வாக்குவாதம் சுவாரசியப்பட்ட போது மும்பைவாலா ஒருவர் சொன்னார், "இங்கே மும்பையில் இருப்பவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம். சென்னையைப் போல் ஒன்றும் கிடையாது." நான் அதனைக் கடுமையாக எதிர்த்து வாதிட்டேன். எனக்கே புத்தகம் படிக்கும் பழக்கம் மிக அதிகம் எனவும், தமிழகத்தில் பலருக்கும் அது அதிகமாக உண்டு எனவும் வாதிட்ட போது, எங்கள் ஊர் டவுண் ஹால் நூலகம் போன்றதொரு நூலகம் அங்கே உண்டா என்று கேட்டார்.நான் நமது அண்ணா நூலகத்தையும், அதன் தன்மைகளையும், உலகத்தரமான சிறுவர் நூலகம் இருப்பதையும், முழுதுமாய் குளிரூட்டப்பட்டதையும், ஆசியாவின் இரண்டாம் மிகப்பெரிய நூலகம் இது எனவும் சிலாகித்து சொன்ன பொழுதில் அவரால் அதனை நம்பவே முடியவில்லை. பின்னர் நூலகத்தின் விக்கி பக்கத்தை வைத்து அவருக்கு உண்மைகளை விவரித்த பொழுது அவருக்கு வியப்பு மாளவில்லை. இங்கே உள்ளே போவதற்கு அதிக கட்டணமா? என்று கேட்டார். முற்றிலும் இலவசம் என்று சொன்னபொழுது அதிசயித்துதான் போனார். மும்பையிலெல்லாம் பல நூலகங்கள், சென்று அமர்ந்து படிப்பதற்கே காசாம்.தான் சென்னை வருகின்ற ஒரு பொழுதில் கண்டிப்பாக அங்கே அழைத்துச் செல்ல வேண்டும் என்று உறுதியும் வாங்கிக் கொண்டார்.இன்று அவருக்குக் அலைபேசியில் அழைத்துச் சொன்னேன். "வருவதாக இருந்தால் ஒரு வாரத்திற்குள் வாருங்கள். அந்த நூலகத்தை மூடப் போகிறார்கள்". அவர் என்ன சொல்கிறய் என்று ஒரு அதிர்ச்சியாகக் கேட்டார். "ஆம்... அது கலைஞர் கட்டிய நூலகமாதலால் இந்த ஆட்சியில் அதனை மாற்றி மருத்துவமனையாக ஆக்கப் போகிறார்கள் என்று சொன்னேன். " Arey yaar, koyi paagal ho gaya aur kya" (பைத்தியமா பிடித்து விட்டது) என்று கேட்டார்.
நீ அந்த நூலகத்தைப் பற்றி சொல்லக் கேட்ட எனக்கே மிக மிக வருத்தமாக இருக்கிறது. அதனைப் பார்த்த, அங்கேயே அமர்ந்து படித்த உனக்கு மிகவும் கஷ்டமாய்தான் இருக்கும் என்று ஆறுதல் சொல்லி விட்டு வைத்தார்.


பைத்தியம் என்பதைத் தாண்டிய ஒரு வக்கிரமான மனநிலையையே இது காட்டுகின்றது. யார் என்ன செய்வது. நாம் தமிழகத்தில் தானே வாழ்கிறோம். இதனை முன்னிட்டு ஒன்றுமே செய்ய முடியாது என்ற கையாலாகாததனத்தை நினைக்கும் ஒரு பொழுதில், அதிகம் வேண்டுமானால் அழலாம். இப்படி பதிவு போடலாம், முகப்புத்தகத்தில் எழுதலாம். வேறென்ன செய்வது?

அந்த மும்பைவாலாவது பெரியவர். அவருக்கு அரசியல் சூதுவாதுகள் புரிந்து போகலாம். நான் எனது மூன்று வயது அக்கா மகளிடம், "பப்பு லைப்ரரிய மூடப் போறாங்கடா குட்டி" என்று சொன்னால் அவளுக்கு அரசியல் புரியாத ஒரு வருத்தம் தான் ஏற்படும். பிள்ளைகளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து விடுகிறோம் என்று இதுவரை அங்கே அழைத்து வந்த பெற்றோர்கள் இனிமேல் கொஞ்சம் அல்ல ரொம்பவே சிரமப்படத்தான் போகிறார்கள். அந்த சிறியவர் நூலகப் பகுதியின் "Attractive Ambience" குழந்தைகளுக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு அழகிய பாதிப்பு அவ்வாறானது. அவர்களாவது பரவாயில்லை. 1000, 2000 குடுத்தாவது புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து விடலாம். அங்கே அக்கம்பக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் பல நேரங்களில் வந்து கணிப்பொறி கற்றுக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள்தான் உண்மையிலேயே பாவம். இந்த மாற்றம் ஒரு மூளையில்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படியாகவே தோன்றுகிறது.யாராவது ஏதாவது அதிசயம் செய்து இந்த நிகழ்வு மட்டும் நிறுத்தப்பட்டால் உண்மையிலேயே மகிழ்ச்சியுறும் பற்பல ஜீவன்களில் நானும் பப்புவும் உண்டு.

இதுவரை நாங்கள் ஒருமுறை கூட அங்கு சென்று பார்த்ததில்லை என்பவர்கள் தயவு செய்து மூடப்படுவதற்குள் ஒருமுறை சென்று வாருங்கள். தாஜ்மகாலைப் பார்க்காத ஒரு இந்தியனின் வாழ்க்கை முழுமையடையாது என்று சொல்லப்படுவதைப் போல, இந்த நூலகத்தைப் பார்க்காமல் தமிழகத்தின் சென்னைவாசியாக உங்கள் வாழ்வும் முழுமையடையாது.

Wednesday, October 26, 2011

வேலாயுதம் வெற்றி முகம்...

வேலாயுதம் வெற்றி முகம்...

இந்த Anti Vijay Group, , விஜய் ஒழிப்போர் சங்கம்லாம் அப்படியே ஓடிப் போயிரு.. ராசா உள்ள வந்துராதீங்க...வேலாயுதம் வெறித்தனம்... வேலாயுதம் வெற்றி முகம்.... இந்த ரெண்டுல எதை தலைப்பா வைக்கிறதுன்னு யோசிச்சேன். எதுக்கும் To be on the Safer side வேலாயுதம் வெற்றி முகம்ன்னே வச்சுக்கலாம்.

திரைக்கதை மற்றும் ஜெயம் ராஜாவோட எக்ஸிகியூஷன்ல படம் சூப்பர். படத்தோட முதல் பாதி முழுசும் காமெடிதான். செம சிரிப்பு. லாஜிக் மட்டும் பாக்கலேனா முழுசுமே மாஜிக் தான். மூணு பாட்டு முதல் பாதில. மூணுமே சரியான இடத்துல பர்பெக்ட் பிட். விஜய் மட்டும் எப்படி படத்துக்கு படம் இவ்ளோ இளமையாகிட்டே போறார்னு தெரியல. 39 வயசுன்னா நம்பவா முடியுது? சந்தானம் வழக்கம் போல செம டைமிங்க். கிராமத்துல வர்ற விஜய் அண்ணன் சரண்யா மோகன் தங்கச்சி சீன்லாம் போரடிக்ககல. அங்கங்க காமெடி துணுக்ஸ். கடைநிலை ரசிகர்களுக்காக ஹன்சிகா. யப்ப்ப்ப்பா, கண்ணக் கட்டுது. இன்டெலெக்சுவல் ரசிகர்களுக்காக லூசுப்பொண்ணு ஜெனிலியா. மொத்தத்துல முதல் பாதி ஒரு கலவையா சூப்பர். 95/100.அப்புறமாதான் இந்த சூப்பர் ஹீரோ கேரக்டர் ஸ்டார்ட் ஆவுது. விஜய் பறக்கிறார். விஜய் அடிக்கிறார். விஜய் கொல்கிறர். விஜய் பறக்கிறார். விஜய் அடிக்கிறார். விஜய் கொல்கிறர். விஜய் பறக்கிறார். விஜய் அடிக்கிறார். விஜய் கொல்கிறர். ஆனா ஒரு டைரக்டரோட ஹீரோவா அந்தக் கேரக்டரும் பர்பெக்ட்தான். சொன்னதைச் செய்திருக்கிறார் விஜய். ஸ்பைடர்மேன் அடிக்கையில் பேட்மேன் பறக்கையில் விஜய்யும் பறக்கலாம் அடிக்கலாம், நாங்கள் ரசிப்போம். வழக்கமான விஜய் படங்களின் பெரிய மைனஸ் வில்லன், கிளை வில்லன், குட்டி வில்லன் என ஏகப்பட்ட வில்லன்களை படம் நெடுக கொல்ல வேண்டியதிருக்கும். இந்த முறை இர(ற)ண்டு பேரோடு முடிந்தது. "மொளச்சு மூணு எலையே விடல" சாங்க் நல்ல மேக்கிங்க்.தங்கச்சி சென்டிமெண்ட் தாய்குலங்களுக்காக வைக்கப்பட வேண்டி வைக்கப்பட்டு இருக்கலாம். கலாம். லாம். ஆனாலும் ஓ.கே கிளைமேக்ஸ் சீக்வன்ஸ் முழுதுமாகவே எடிட்டிங்க்ல பர பரன்னு கொண்டு போயிருக்காங்க. கிளைமேக்ஸ்ல ஒரு நீளமான டயலாக் சீன். சோசியல் மெசேஜ் சொல்றதுக்காக. அதுல சொசைட்டிக்கு சொல்ற மாதிரி ஒரு டையலாக்...


"கோபப்படுங்க. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ கோபப்பட்டீங்கன்னா
ஆட்சியே மாறுதுல்ல. அப்பப்ப கோபப்பட்டா அரசியலே மாறும்."

ஆனா அதெல்லாம் நமக்குத் தேவை இல்ல தலைவா. திரைத்துறைலயே "நல்ல நடிகரா" "Darling of the masses" ன்னு போக வேண்டிய தூரம் நெறைய இருக்கு. வா அப்படியே ஜாலியா போவோம்.


Velayutham – 100% treat for Vijay Audience. 70% Treat for Neutral Audience.

Saturday, September 24, 2011

எங்கேயும் எப்போதும்

"மச்சி... நம்ம கூட நைன்த் வரைக்கும் படிச்ச ******** நேத்து நைட் கோவில்பட்டி பக்கத்துல பைக் ஆக்ஸிடென்ட்ல போய்ட்டான்டா"

"டேய்... நம்ம *****ஓட தம்பி பெங்களூர் ஹைவேல கார் ஆக்ஸிடென்ட்ல ஸ்பாட் அவுட் டா"

"மச்சி... நம்ம டவுண் ப்ரெண்டு ****** நாகர்கோவில் ஹைவேல கார் அப்டவுன் ஆகி ஹெட் இஞ்சுரி... நேத்து போய்ட்டான்டா"


இந்த மாதிரி வாழ்க்கைல இதுவரைக்கும் கேட்ட எல்லா செய்திகளும் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் இன்னும் இன்னும்.

நீங்கள் இதுவரைக்கும் நெருங்குன சொந்தத்துல, நண்பர்கள்ல யாரையாவுது விபத்துல பலி கொடுத்திருந்தீங்கன்னா, ஆஸ்பத்திரி ஐ.சி.யு ல வச்சு நாள் கணக்கா காத்து கிடந்து பாத்திருந்தீங்கன்னா, இந்தப் படம் உங்களுக்குள்ள ஏற்படுத்துற வீச்சு கொஞ்சம் அதிகமானதாகவே இருக்கும்.படம் உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு. Non Linear ஸ்டைல் Screenplayல தமிழ்ல வந்துருக்குற இன்னுமொரு பிரமாதமான படம். அஞ்சலி, அனன்யா, ஜெய், அந்த்ப் புதுப்பையன் நாலு பேருமே செம பெர்பாமன்ஸ். அஞ்சலி, ஜெய் கேரக்டர் ரெண்டுமே பிரமாதமான மேக்கிங். பஸ்ல பயணம் பண்ற மாதிரி காமிச்ச ஒவ்வொரு காரெக்டரையும் கிளைமாக்ஸ்ல அதே லீட் கொடுத்து முடித்திருப்பது அப்படியே மனச என்னமோ பண்ணுது.

படத்துல ஜெய் செத்ததுக்கு பின்னாடி அவங்க குடும்பத்துல ஒவ்வொருத்தரும் ஒண்ணொன்னா நெனச்சு பாக்குற மாதிரி வர்ற சீன்ல, நம்மள வச்சுப் பார்த்து நம்ம ஒருவேளை இல்லாம போனா, நமக்கு நெருக்காமனவங்க என்ன பேசுவாங்க, யோசிப்பாங்கன்னு நெனச்சுப் பார்க்க வச்சுருக்குறது தான் டைரக்டோரட மிகப் பெரிய வெற்றி. ஏ.ஆர்.முருகதாஸ் இந்தக் கதைய தயாரிக்க ஒத்துக்கிட்டு தயாரிச்சது மிகப்பெரிய விஷயம். அதற்கு ஒரு பூங்கொத்து.படத்துக்கு வந்துருந்த நெறைய பொண்ணுங்க படம் முடிஞ்சு வெளிய போகலே அவங்கவங்க கூட வந்துருந்த புருஷனோ, லவ்வரோ கைய கட்டியா புடிச்சுக்குறது இல்லேன்னா தோள்ல சாஞ்சு கண்ணக் கசக்குறது இந்த மாதிரி பலதரப்பட்ட ரியாக்ஷன்ஸ் கொடுத்துகிட்டு இருந்தாங்க. கிளைமேக்ஸ் எபெக்ட்.

யாரோ ஒரு ஹிப்பி முடி வைத்த பீட்டர்ஸ்பர்க் பீட்டர் தேங்கா மண்டையன் "Machi...F**king Sentimental Movie daa... Head Ache " என்று யாரிடமோ மொபைலில் சொல்லிக் கொண்டு போனான்.


நான் தியேட்டரில் இருந்து என் அம்மவைக் கூட்டிக் கொண்டு வண்டியில் கிளம்பினேன். சத்தியபாமா காலேஜ் தாண்டும் பொழுது என்னுடைய சிங்கக்குட்டி Apache சீறிக் கொண்டு 90 KM/Hல் வந்தது. ஹெல்மெட்டிலேயே அம்மா கையால் இரண்டு கொட்டு விழுந்தது. "இப்பதான படத்துல பாத்துட்டு வர்றோம். மெதுவா போ லூசு லூசு..."

குறைத்து குறைத்து 40 KM/H லயே வீடு வந்து சேர்ந்தேன்.. இன்னும் ரெண்டு நாளைக்கு தூங்குறது கொஞ்சம் கஷ்டம் தான்.

எங்கேயும் எப்போதும்.. - Am desperately in need of some sleep. But not possible, I guess :(

Friday, July 15, 2011

தெய்வத்திருமகள் - கொள்ளை அழகு !!!


விக்ரம உங்களுக்கு பிடிக்குமா? இந்தப் படம் பாருங்க, உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். விக்ரம உங்களுக்கு பிடிக்காதா? இந்தப் படம் கண்டிப்பா பாருங்க. கண்டிப்பா படமும் பிடிக்கும், இனிமேல் விக்ரமும் பிடிக்கும். அருமையான நடிப்பு, பிரமாதமான் எக்ஸ்பிரஷன்ஸ். கொஞ்சம் கூட ஓவர் ஆக்டிங் பண்ணல. செம நடிப்பு. கிருஷ்ணா, அவளாஞ்சி, சாக்லேட், நிலா - இந்த நாலு வார்த்தைய விக்ரம் எத்தன தடவ சொன்னாலும் போரடிக்கல. நிறைவான நடிப்பு. முழு நிறைவான நடிப்பு.அழகு என்பது பெண்பால் தான். அதுவும் அமலா பால் தான். 4 சீன்க்கு தான் வந்தாலும் செம ப்ரெஷ். செம ப்ரெசன்ஸ். அனுஷ்கா, தமிழ்ல இது ஒரு லைவ்லி கேரக்டர். கொள்ளை அழகு ம்ற்றும் மெச்சூர்டான நடிப்பு. சூப்பர் அனுஷ்கா.


யாருப்பா அது விக்ரம் குழந்தையா நடிச்சுருக்கது? அநியாயத்துக்கு க்யூட் அந்தப் பொண்ணு. என்னா ஆக்டிங், என்ன அழகு, என்ன முகபாவனை. ஒரு 2 மாசத்துக்கு அந்தப் பொண்ணுக்கு டெய்லி சுத்திப் போடணும். போட்டாலும் போதாது. அவ்ளோ கண்ணுபடும். தேசிய விருதுக்கு கதவுகளை தட்டட்டும். அது அக்குழந்தைக்கு கிட்டட்டும்.

இந்த மாதிரி ஒரு கனமான கதைல சந்தானம் காமெடி கச்சிதமா அமஞ்சது சூப்பர். செம டைமிங். செம கல கல. இது போக நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அந்த கூத்துப்பட்டறைகார்(மதராஸப்பட்டினத்துல எ,ஏ.. பி,பீ சொல்லுவாரே) எல்லாருமே பிரமாதமான நடிப்பு.


யாருப்பா அது விக்ரம் குழந்தையா நடிச்சுருக்கது? அநியாயத்துக்கு க்யூட் அந்தப் பொண்ணு. என்னா ஆக்டிங், என்ன அழகு, என்ன முகபாவனை. ஒரு 2 மாசத்துக்கு அந்தப் பொண்ணுக்கு டெய்லி சுத்திப் போடணும். போட்டாலும் போதாது. அவ்ளோ கண்ணுபடும். தேசிய விருதுக்கு கதவுகளை தட்டட்டும். அது அக்குழந்தைக்கு கிட்டட்டும்.
இந்த மாதிரி ஒரு கனமான கதைல சந்தானம் காமெடி கச்சிதமா அமஞ்சது சூப்பர். செம டைமிங். செம கல கல. இது போக நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அந்த கூத்துப்பட்டறைகார்(மதராஸப்பட்டினத்துல எ,ஏ.. பி,பீ சொல்லுவாரே) எல்லாருமே பிரமாதமான நடிப்பு.படத்தோட முதல் பாதில வர்ற ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு ப்ரேமும் கவிதை. ஒரு சீன் கூட, ஒரு ஷாட் கூட மிகைப்படுத்தலா எதுவுமே இல்ல. விஜயோட அழகியலும், ரசனையும் ஒவ்வொரு சீன்லயும் மிக அழகா வெளிப்பட்டுருக்கு. பின் பாதி விறு விறுன்னு, செமயா இருக்கு. எந்தக் குறையுமே சொல்ல முடியாது இந்தப் படத்துல.

யாராச்சும் பீட்டர் மாமாக்கள் இது "Seane’s I am Sam" ஓட காப்பி. அப்படி இப்படி ஏதாச்சும் சொல்றதா இருந்தா, தனியா போய் சொல்லிக்கோங்க. அதே மாதிரி படத்துல் க்ளிஷே நெறைய இருக்கு. விக்ரம் மருந்து வாங்கித் தர்ற சீன், கிளைமாக்ஸ்க்கு முன்னாடி கோர்ட்ல வர்ற அப்பா மக சீன் லாம் க்ளிஷேன்னு சொல்றவங்க, கொஞ்சம் ஓரமா போய்ருங்க... இந்த டெம்ப்ளேட் க்ளிஷேக்கள் எங்களுக்கு தேவை. அந்த ரசனையும், சென்டிமென்டும் எங்களுக்கு தேவை.

அத்தனை பாட்டும் சூப்பர், செம சூப்பர். BGM சூப்பர், சூப்பரோ சூப்பர் .கதை சூப்பர், திரைக்கதை சூப்பரோ சூப்பர்.
வசனங்கள். இந்த படத்துக்கான முழு அர்த்தத்தை கொண்டு வந்ததே டயலாக்ஸ்தான். அப்பா, பொண்ணுக்குள்ள பேசிக்கிற மாதிரி இருக்க அத்தன வசனமுமே அருமை.
ஒரு மதராஸபட்டினம், ஒரு பொய் சொல்லப் போறோம் மாதிரி விஜய்க்கு இது இன்னும் ஒரு மைல்கல். விஜய் இயக்குனரா இன்னும் ஒரு 4 படம். அதுக்கு அப்புறம் அவர் தொடப் போகும் உயரமே வேற. இது விக்ரம் படம்தான், ஆனா ஒவ்வொரு சீன்லயும் விஜயோட "taste and touch” classical. Hats off Vijay. Hats Off.


எப்ப வேணாலும் பாக்கலாம்யா. லேப்டாப்ல போட்டு வச்சு 200 தடவ வேணாலும் பாக்கலாம்யானு சொல்லக்கூடிய இந்தப் படம். பார்த்தே தீர வேண்டிய தமிழ்ப்படம்.


தெய்வத்திருமகள் – Classic, Fabulous, Awesome Movie attempt. A Feeel good and Must watch Genere.


வசனங்கள். இந்த படத்துக்கான முழு அர்த்தத்தை கொண்டு வந்ததே டயலாக்ஸ்தான். அப்பா, பொண்ணுக்குள்ள பேசிக்கிற மாதிரி இருக்க அத்தன வசனமுமே அருமை.

ஒரு மதராஸபட்டினம், ஒரு பொய் சொல்லப் போறோம் மாதிரி விஜய்க்கு இது இன்னும் ஒரு மைல்கல். விஜய் இயக்குனரா இன்னும் ஒரு 4 படம். அதுக்கு அப்புறம் அவர் தொடப் போகும் உயரமே வேற. இது விக்ரம் படம்தான், ஆனா ஒவ்வொரு சீன்லயும் விஜயோட "taste and touch” classical. Hats off Vijay. Hats Off.எப்ப வேணாலும் பாக்கலாம்யா. லேப்டாப்ல போட்டு வச்சு 200 தடவ வேணாலும் பாக்கலாம்யானு சொல்லக்கூடிய இந்தப் படம். பார்த்தே தீர வேண்டிய தமிழ்ப்படம்.

தெய்வத்திருமகள் Classic, Fabulous, Awesome Movie attempt. A Feeel good and Must watch Genere.

Thursday, July 14, 2011

வைரத்தின் வரிகள்.. ஒரு ரசிகன் குரல்...

இன்று கவிஞர் வைரமுத்துவின் மூத்த மகன் "என்னமோ ஏதோ" புகழ் மதன் கார்கி கூகிள் பஸ்ஸில் ஒரு கேள்வியை முன் வைத்திருந்தார். "Which one do you think is your most favourite line penned by my father? "... அதற்குப் பதிலாக இதோ...

எனக்கு கவிஞரை ஒரு பாடலாசிரியர் என்பதைத் தாண்டி ஒரு படைப்பாளி என்ற பரிமாணத்தில்
தான் மிகவும் பிடிக்கும்..

நான் அவருடைய பாடல்களை ரசித்ததை விட அதிகமாய் அவருடைய புத்தகங்களின் அடிமை. அவருடைய புத்தகங்களில் அவர் கையாளும் உவமைகளின் மீதான ஆளுமை அபாரமான ஒன்று. எப்படி இவரால் மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது என்று மீண்டும் மீண்டும் வியக்க வைக்கும் உவமைகள். உவமை அணியும், தற்குறிப்பேற்ற அணியும் இவருக்கு விரலிடுக்கிலேயே வாய்க்கப் பெற்றவை.இருப்பினும் எனக்கு மிக மிக மிகப் பிடித்த கவிஞரின் பாடல் வரிகளின் தொகுப்பாக இதோ...

-----------------------------------------------------------------------------------------------
ஒரு காதலன், தான் எந்த அளவுக்கு அந்தக் காதலால் முழ்கிக் கிடக்கிறான் என்பதைச் சொல்லும் விதமாய் டூயட் படத்தில், அஞ்சலி அஞ்சலி பாடலில் அமைந்த வரிகள்...


"கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி...
காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி.."


-------------------------------------------------------------------------------------------------


மீண்டும் ஒரு காதலனின் காதல் வலியை வலிமையாய் உணர்த்திய வரிகள் உயிரே பாடலில் இருந்து....

"காற்றின் அலை வரிசை கேட்கின்றதா...
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா...நெஞ்சு நனைகின்றதா...
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா,
காற்றில் கண்ணீரை ஏற்றி,
கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்"
-------------------------------------------------------------------------------------------------

ஒரு பார்வையற்றவனின் காதல் உணர்வை மிக அழகாய்ச் சொன்ன வரிகள், ராஜபார்வை படத்திலிருந்து...
அந்தி மழை பொழிகிறது பாடலில்…

"கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது..
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது..
"
-------------------------------------------------------------------------------------------------


கருமையின் அழகை, கருப்பு நிறத்தின் தன்மையை இதை விட வேறு யாராலும் இத்துணை ரசனையாய் சொல்வது முடியவே முடியாது...

அலைபாயுதே படத்தில் வந்த வரிகள்...

"இரவின் நிறமே இரவின் நிறமே..
கார்காலத்தின் மொத்த நிறமே..
காக்கைச் சிறகில் காணும் நிறமே..

பெண்மை எழுதும் கண்மை நிறமே..
வெயிலில் பாடும் குயிலின் நிறமே..

எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே..
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே.."


-------------------------------------------------------------------------------------------------

காதலி வார்த்தைகளின் காதல் முரணை மிக அழகாக கட்டியங்கூறும் புன்னகை மன்னன் வரிகள்...
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடலில்...

"நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்…
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்…"

-------------------------------------------------------------------------------------------------

மகன்களுக்கு மட்டுமே தந்தையாகிப் போனாலும், ஒரு மகளிடம் கொண்டிருக்கும் தந்தைநேசத்தை தனதாக்கி எழுதிய தங்க வரிகள்...

"தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா...
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே.."

"பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே,
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்... "

பாற்கடல் புத்தகத்திலே "நீங்கள் சமீபத்தில் அழுத தருணம் எது?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த பாடல் எழுதி முடித்து விட்டு மகள் என்றொரு பெண்பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்தில் அழுததாய் கவிஞர் கூறியிருந்தார்.
-------------------------------------------------------------------------------------------------


வைர வரிகளை சின்னக்குயில் சித்ரா தனது குரலால் மிகச்சிறந்த உணர்வுகளை உணரச் செய்யும் பாடல்...

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்திலிருந்து... எங்கே எனது கவிதை பாடலில்...

"பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லி இருந்தேன்...
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் நுழைந்து விட்டாய்..."


எனது பெங்களூரின் தனிமையான கடுங்குளிர் நள்ளிரவுகளில், இந்தப் பாடல் ஏற்படுத்திய ஏகாந்தம், ம்ம்ம்...

------------------------------------------------------------------------------------------------


அவருடைய சுயசரிதமான “இதுவரையில் நான்” ஐ மதன் கார்க்கியின் பிறப்போடு, தனது முதல் குழந்தையை பார்த்த முதல் பார்வையோடு முடித்திருப்பார் கவிஞர். அதுதான் அவர் முதல் பாடல் பிரசவித்த மாலையும் கூட. அதிலே பாரதிராஜாவும், இளையராஜவும் உச்சி முகர்ந்து பாராட்டியதாய் அவர் கூறும் அந்த இரண்டு வரிகள். அவருடைய மனைவி பொன்மணியின் பெயரோடு தொடங்க வேண்டும் என்று, எழுதப்பட்ட "பொன்மாலைப் பொழுது" பாடலில் வரும் இரண்டு வரிகள்..

"வானம் எனக்கொரு போதிமரம்...
நாளும் எனக்கது சேதி தரும்.."


------------------------------------------------------------------------------------------------

திரைப்பாடல் இலக்கியம் ஆகுமா? என்ற கேள்விக்கு சில பாடல்களின் மூலம் "ஆம்" என்ற பதிலை ஆணித்தரமாக கூறியவர் கவிஞர்...

அதிலே இந்த வரிகள்.. இளைய நிலா பொழிகிறது என்ற பாடலில் வரும் வரிகள்... எனக்கு மிக மிக பிடித்த வரிகள்.

"முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ"


மேகங்கள் முகவரியைத் தொலைத்து விட்டு அலைந்து திரிந்து அழுகின்றதால் வருகிற கண்ணீர்தான் மழையா ? என்று தன் குறிப்பை ஏற்றி, தற்குறிப்பேற்ற அணியை அசாதாரணமாய் கையாண்டிருப்பார் கவிஞர்.


------------------------------------------------------------------------------------------------

பிறந்த இடம் பெயர்ந்து வேறு இடம் செல்லும் ஒருவனது, ஒரு சமூகத்தினது வார்த்தைகளை இதைவிட வலிமையாய் சொல்லவே முடியாது, என்று கண்ணீர் வரவழைத்த வரிகள்...
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் விடை கொடு எங்கள் நாடே பாட்டில் வரும் வரிகள்...

"கந்தல் ஆனாலும் தாய் மடிபோல் ஒரு சுகம் வருமா வருமா ???
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா வருமா ???
கண் திறந்த தேசம் அங்கே...
கண் மூடும் தேசம் எங்கே..."

------------------------------------------------------------------------------------------------
கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி...
அவர் கூறியதைப் போலவே, கவிப்பேரரசின் வரிகளுள் எந்த வரி பிடிக்கும், என்று பிரித்து பார்ப்பது மிக மிகக் கடினம்.


சிறிது தாமதமாக உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்ளுகின்றேன்... வாழ்க பல்லாண்டு...

----


விரைவிலேயே ஆனந்த விகடனில் கவிஞர் எழுதப் போகும் தொடருக்காக அல்ல, வரிகளுக்காக அல்ல, ஒவ்வொரு வார்த்தைக்குமாக காத்திருக்கும் ஒரு கடைநிலை ரசிகன்....

Monday, February 14, 2011

பயணத்தில் பாதித்த பாஸ்கர்...

பயணம்... மிக அருமையான திரைப்படம். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் நடிகர் தேர்வும் கனகச்சிதம்... ஆனால் அதில் ஒரு நடிகர் அவர் நடிப்பு என்னை மிகவும் பாதித்தது என்றே சொல்ல வேண்டும்.

எம்.எஸ். பாஸ்கர்.ஒரு காது பட்டாபியா சீரியல்ல வந்த அக்கவுண்டன்ட் பாஸ்கர தமிழ்த் திரையுலகம் இது வரைக்கும் அழைச்சுகிட்டு வந்துருக்கது பெரிய விஷயம்.

மொழி படம் பாக்கேல பாஸ்கரோட நடிப்ப பாத்து ஆச்சரியப்பட்டது உண்மை. "Watch my words... ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள்.... " இந்த டயலாக்
படம் ரிலீஸ் ஆகி ரொம்ப நாளைக்கு அப்புறம் வரைக்கும், ஏன் இப்பவும் கூட நான் பேசேல என் பேச்சுல வர்ற வசனம். அந்தப் படத்துல ஜோதிகா காரெக்டருக்கு சமமா என்னைய பாஸ்கரோட புரபொசர் கதாப்பாத்திரமும் பாதித்திருந்தது.ஆனல் இந்த பயணம் படம் அவரோட நடிப்புல இன்னோரு பரிமாணம் காமிச்சுருக்கது உண்மையிலேயே பிரமாதம்.பயணம் படத்தில் பாஸ்கர் பண்ணிருக்க பாதிரியார் அல்போன்ஸ் கதாப்பாத்திரம் நிச்சயமா இன்னுமொரு உயர்ந்த மைல்கல்.

"இங்க இருக்க எல்லாருக்கும் குடும்பம் இருக்கு,கடமை இருக்கு. எனக்குன்னு தேவன் ஒருத்தனே. ஊழியம்தான் என் கடமை. அதனால் அடுத்து யாரையாவது கொல்லணும்னா என்னையக் கொல்லுங்க.. சரியா?" இந்த வசனத்த பேசேல பாஸ்கரோட அந்த உணர்ச்சியும் எக்ஸ்பிரஸன்சும் ஒரு வார்த்தைல சொல்லணும்னா "மார்வெலஸ்". எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பில் கதாப்பாத்திரத்தில் வசனங்களில் செயல்களில் உள்ளார்ந்த திறமை சாத்தியமாய் வெளிப்பட்டு இருக்கிறது. அதுலயும் அந்த பிளைட்ல இளைஞன் சாகும் போது பிரேயர் பண்றதாகட்டும்... செத்துப் போன தீவிரவாதிகள் பக்கத்துல பிரேயர் பண்ர சீனாகட்டும் - ஹேட்ஸ் ஆப் ராதா மோகன் சார்.
இனிமேலாவது பேரரசு மாதிரி இயக்குநர்கள் பாஸ்கரை நடிக்க அழைக்காமல் இருப்பது உசிதம் என்றே படுகிறது. பல இயக்குனர்கள் அவர காமெடிக்கு மட்டும் பயன்படுதுறத நிறுத்திகிட்டு அவரோட திறமைக்கு தகுந்த கதபாத்திரங்கள பிரத்யோகமாய் உருவாக்குனா அவரால் தொடப்படக்கூடிய உயரம் அளக்க முடியாததாய் இருக்கும் என்பது சத்தியம்.
கடைசியாக செவிவழிச் செய்தியாய் கேட்ட ஒன்று... "பாஸ்கர்லாம் பயங்கர திறமைசாலி. பாஸ்கர் உங்களுக்கு இந்தப் படத்துல இந்த காரெக்டர். நீங்க இந்த ஸ்லாங்க்ல பேசணும்னு சொன்னா கரெக்ட்டா 15 நிமிஷத்துல பொறந்ததுலர்ந்தே அந்த ஸ்லாங் பேசுன ஆள் மாதிரி மாறி வந்து நிக்கிற ஆளுய்யா. எனக்கே சமயத்துல ஆச்சர்யமா இருக்கும்"

சொன்னதாய் அறியப்படுபவர் நமது உலக நாயகன் கமல்.
Saturday, January 15, 2011

காவலன்... காப்பாத்திட்டான்....

காவலன்... காப்பாத்திட்டான்....ஸ்ஸ்ஸ் அப்பாடா என்று பெருமூச்சு விட்ட பெரிய ரசிகர் கூட்டத்துக்கு நடுவில் நின்ற பொழுது வந்த பூரிப்பு... படம் நல்லாருக்கா? என்று தியேட்டர் வாசலில் நின்று கேட்டவர்களிடம் படம் நல்லாருக்குண்ணா, சூப்பர்ணா... என்று தயங்காமல் சொல்ல முடிந்த போது வந்த சந்தோஷம்.... போதும்... தாரளாமா போதும்...ரசிகர்கள் எல்லாருமே போக்கிரிக்கு அப்புறமாவே விஜய்கிட்ட இருந்து இதத்தான் எதிர்பாத்துட்டு இருந்தோம். கொஞ்சம் டிலே... ஆனாப் பரவால்ல...

படத்தோட பெரிய ப்ளஸ்... கண்டிப்பா விஜய்... அப்புறமா அசின்...கதை ஓகே... கிளைமாக்ஸ் டபுள் ஓகே... மூணு பாட்டு சூப்பர்... வடிவேல் காமெடி செம செம...

ட்ரெய்லர்ல போட்டது மட்டும் இல்ல... படம் உண்மையிலேயெ சம்திங்க் டிபரெண்ட் தான்...

படத்துல விஜய்க்கு லவ் மூட் ஆரம்பிக்குறப்ப அசின் ஒரு டயலாக் சொல்லுவா... "பாலைவன பூமில லேசா தூறல் விழ ஆரம்பிச்சுருக்கு. இனிமேல் அட மழைதான்."

அது விஜய பத்தி அவ சொன்ன டயலாக்கா எனக்கு படல... விஜய் ரசிகர்கள்ன்ற பாலைவன பூமில காவலன் தூறலா விழுந்துருக்கு... இனி மறுபடியும் அட மழைதான்... கண்டிப்பா விஜய்கிட்ட இருந்து வெளிய போன ரசிகர்கள் பல பேர் திரும்ப வர்ற காலகட்டம் ரொம்ப துரத்துல இல்ல....

படம் இங்க திருநெல்வேலில இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்குதான் பெட்டி வந்துச்சு... ஏகப்பட்ட பிரச்சனை... இப்போ வரைக்கும் மூணு ஷோவும் ஹவுஸ்புல்லா தான் போய்ட்டு இருக்கு... அதுவும் ரெண்டு தியேட்டர்ல...என்ன ஒண்ணு... ஒரு மீடியாவும் இந்த படத்த பெருசா கண்டுக்கல்ல. இன்னைக்கு எல்லா டிவில்லயும் எத்தனையோ புது பாட்டு நிகழ்ச்சி வந்துச்சு... ஒண்ணுலயுமே காவலன்ல இருந்து ஒரு பாட்டு கூட போடல... பாக்கலாம்... என்ன ஆனாலும் இளைய தளபதி... தளபதிதான்....
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.