Thursday, July 14, 2011

வைரத்தின் வரிகள்.. ஒரு ரசிகன் குரல்...

இன்று கவிஞர் வைரமுத்துவின் மூத்த மகன் "என்னமோ ஏதோ" புகழ் மதன் கார்கி கூகிள் பஸ்ஸில் ஒரு கேள்வியை முன் வைத்திருந்தார். "Which one do you think is your most favourite line penned by my father? "... அதற்குப் பதிலாக இதோ...

எனக்கு கவிஞரை ஒரு பாடலாசிரியர் என்பதைத் தாண்டி ஒரு படைப்பாளி என்ற பரிமாணத்தில்
தான் மிகவும் பிடிக்கும்..

நான் அவருடைய பாடல்களை ரசித்ததை விட அதிகமாய் அவருடைய புத்தகங்களின் அடிமை. அவருடைய புத்தகங்களில் அவர் கையாளும் உவமைகளின் மீதான ஆளுமை அபாரமான ஒன்று. எப்படி இவரால் மட்டும் இப்படி யோசிக்க முடிகிறது என்று மீண்டும் மீண்டும் வியக்க வைக்கும் உவமைகள். உவமை அணியும், தற்குறிப்பேற்ற அணியும் இவருக்கு விரலிடுக்கிலேயே வாய்க்கப் பெற்றவை.இருப்பினும் எனக்கு மிக மிக மிகப் பிடித்த கவிஞரின் பாடல் வரிகளின் தொகுப்பாக இதோ...

-----------------------------------------------------------------------------------------------
ஒரு காதலன், தான் எந்த அளவுக்கு அந்தக் காதலால் முழ்கிக் கிடக்கிறான் என்பதைச் சொல்லும் விதமாய் டூயட் படத்தில், அஞ்சலி அஞ்சலி பாடலில் அமைந்த வரிகள்...


"கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி...
காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி.."


-------------------------------------------------------------------------------------------------


மீண்டும் ஒரு காதலனின் காதல் வலியை வலிமையாய் உணர்த்திய வரிகள் உயிரே பாடலில் இருந்து....

"காற்றின் அலை வரிசை கேட்கின்றதா...
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா...நெஞ்சு நனைகின்றதா...
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா,
காற்றில் கண்ணீரை ஏற்றி,
கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்"
-------------------------------------------------------------------------------------------------

ஒரு பார்வையற்றவனின் காதல் உணர்வை மிக அழகாய்ச் சொன்ன வரிகள், ராஜபார்வை படத்திலிருந்து...
அந்தி மழை பொழிகிறது பாடலில்…

"கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது..
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது..
"
-------------------------------------------------------------------------------------------------


கருமையின் அழகை, கருப்பு நிறத்தின் தன்மையை இதை விட வேறு யாராலும் இத்துணை ரசனையாய் சொல்வது முடியவே முடியாது...

அலைபாயுதே படத்தில் வந்த வரிகள்...

"இரவின் நிறமே இரவின் நிறமே..
கார்காலத்தின் மொத்த நிறமே..
காக்கைச் சிறகில் காணும் நிறமே..

பெண்மை எழுதும் கண்மை நிறமே..
வெயிலில் பாடும் குயிலின் நிறமே..

எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே..
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே.."


-------------------------------------------------------------------------------------------------

காதலி வார்த்தைகளின் காதல் முரணை மிக அழகாக கட்டியங்கூறும் புன்னகை மன்னன் வரிகள்...
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடலில்...

"நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்…
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்…"

-------------------------------------------------------------------------------------------------

மகன்களுக்கு மட்டுமே தந்தையாகிப் போனாலும், ஒரு மகளிடம் கொண்டிருக்கும் தந்தைநேசத்தை தனதாக்கி எழுதிய தங்க வரிகள்...

"தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா...
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே.."

"பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே,
ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்... "

பாற்கடல் புத்தகத்திலே "நீங்கள் சமீபத்தில் அழுத தருணம் எது?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த பாடல் எழுதி முடித்து விட்டு மகள் என்றொரு பெண்பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்தில் அழுததாய் கவிஞர் கூறியிருந்தார்.
-------------------------------------------------------------------------------------------------


வைர வரிகளை சின்னக்குயில் சித்ரா தனது குரலால் மிகச்சிறந்த உணர்வுகளை உணரச் செய்யும் பாடல்...

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்திலிருந்து... எங்கே எனது கவிதை பாடலில்...

"பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லி இருந்தேன்...
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் நுழைந்து விட்டாய்..."


எனது பெங்களூரின் தனிமையான கடுங்குளிர் நள்ளிரவுகளில், இந்தப் பாடல் ஏற்படுத்திய ஏகாந்தம், ம்ம்ம்...

------------------------------------------------------------------------------------------------


அவருடைய சுயசரிதமான “இதுவரையில் நான்” ஐ மதன் கார்க்கியின் பிறப்போடு, தனது முதல் குழந்தையை பார்த்த முதல் பார்வையோடு முடித்திருப்பார் கவிஞர். அதுதான் அவர் முதல் பாடல் பிரசவித்த மாலையும் கூட. அதிலே பாரதிராஜாவும், இளையராஜவும் உச்சி முகர்ந்து பாராட்டியதாய் அவர் கூறும் அந்த இரண்டு வரிகள். அவருடைய மனைவி பொன்மணியின் பெயரோடு தொடங்க வேண்டும் என்று, எழுதப்பட்ட "பொன்மாலைப் பொழுது" பாடலில் வரும் இரண்டு வரிகள்..

"வானம் எனக்கொரு போதிமரம்...
நாளும் எனக்கது சேதி தரும்.."


------------------------------------------------------------------------------------------------

திரைப்பாடல் இலக்கியம் ஆகுமா? என்ற கேள்விக்கு சில பாடல்களின் மூலம் "ஆம்" என்ற பதிலை ஆணித்தரமாக கூறியவர் கவிஞர்...

அதிலே இந்த வரிகள்.. இளைய நிலா பொழிகிறது என்ற பாடலில் வரும் வரிகள்... எனக்கு மிக மிக பிடித்த வரிகள்.

"முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ"


மேகங்கள் முகவரியைத் தொலைத்து விட்டு அலைந்து திரிந்து அழுகின்றதால் வருகிற கண்ணீர்தான் மழையா ? என்று தன் குறிப்பை ஏற்றி, தற்குறிப்பேற்ற அணியை அசாதாரணமாய் கையாண்டிருப்பார் கவிஞர்.


------------------------------------------------------------------------------------------------

பிறந்த இடம் பெயர்ந்து வேறு இடம் செல்லும் ஒருவனது, ஒரு சமூகத்தினது வார்த்தைகளை இதைவிட வலிமையாய் சொல்லவே முடியாது, என்று கண்ணீர் வரவழைத்த வரிகள்...
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் விடை கொடு எங்கள் நாடே பாட்டில் வரும் வரிகள்...

"கந்தல் ஆனாலும் தாய் மடிபோல் ஒரு சுகம் வருமா வருமா ???
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா வருமா ???
கண் திறந்த தேசம் அங்கே...
கண் மூடும் தேசம் எங்கே..."

------------------------------------------------------------------------------------------------
கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத்துளி...
அவர் கூறியதைப் போலவே, கவிப்பேரரசின் வரிகளுள் எந்த வரி பிடிக்கும், என்று பிரித்து பார்ப்பது மிக மிகக் கடினம்.


சிறிது தாமதமாக உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்ளுகின்றேன்... வாழ்க பல்லாண்டு...

----


விரைவிலேயே ஆனந்த விகடனில் கவிஞர் எழுதப் போகும் தொடருக்காக அல்ல, வரிகளுக்காக அல்ல, ஒவ்வொரு வார்த்தைக்குமாக காத்திருக்கும் ஒரு கடைநிலை ரசிகன்....

2 பேர் சொன்னது என்னான்னா..:

wq said...

Nice.Inum niraya quote panirukalam. Apdi paatha etha vidrathu, ethu eluthrathunu solla mudiyathu:)

ராம்குமார் - அமுதன் said...

Correct !!! Apdi paaatha Aayiram padalgak Book ah vida perusaaa Blog podanum :))

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.