Friday, November 25, 2011

மயக்கம் என்ன - க்ளாஸ் & க்ளாசிக்.
Plagiarism. இந்த வார்த்தைக்கான சரியான தமிழ் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?
நம்ம ஐ.டி வார்த்தைகளிலேயே சொல்றேன். நீங்க வேல பாத்துகிட்டு இருக்க ப்ராஜக்ட்ல ஒரு பிரச்சனை(Issue). சரியே பண்ண முடியல... என்னென்னவோ முயற்சி பண்ணி பாக்குறீங்க. முடியல. கம்பெனில உள்ள அத்தணை Subject Matter Expertsம் வந்து நோண்டி பாக்குறாங்க. ம்ம்ஹூம்... ஆணியே புடுங்க முடியல. எல்லாம் கைய விரிச்சுட்டு வீட்டுக்குப் போறாங்க. கிளையண்டுக்கும் மேனேஜ்மென்டுக்கும் சரியான டென்ஷன். தலைவலி. யாராவது இத சரி பண்ணா, கையெடுத்து கோடி முறை கும்பிடலாம்னு ஒரு நிலைமை. ஒண்ணும் முடியல. ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு டீய போட்டு வந்து உக்காற்றீங்க. கூகிள்ல தேடி எதை எதையோ நோண்டி ஒரு 4 மணிக்கு சரி ஆகிடுது. Issue Resolved . அக்கடான்னு ரூம்க்கு போய் தூங்கி எந்திரிச்சு காலைல வந்து பாத்தா நீங்க ரிஸால்வ் பண்ணதுக்கு வேற எவனோ மெயில் அனுப்பிச்சு விட்டான். கம்பெனியே அவன தலைல தூக்கி வச்சு கொண்டாடிகிட்டு இருக்கு. அவன் உங்களுக்கு ஒரு வகைல சீனியர். உங்களால ஒண்ணுமே செய்ய முடியலை. உங்களுக்கு எப்படி இருக்கும் அந்த சூழ்நிலை. அப்படியே பொத்துகிட்டு வரும்ல. எனக்கு வாழ்க்கைல ஒரு 2 தடவ இது மாதிரி நடந்துருக்கு. கிட்டத்தட்ட இந்த மாதிரி ஒரு சூழ்நிலைதான் மயக்கம் என்ன படத்தோட கதைக்கரு.

காதல் கொண்டேன், புதுப்பேட்டைக்குப் பிறகு அண்ணன் செல்வாவும் தம்பி தணுஷும் இணையும் திரைப்படம் என்பதால் எங்கெங்கிலும் இமாலய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்த திரைப்படம். பாடல்கள் ஏற்கனவே தேவையான மயக்கத்தையும் கிறக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தமிழ்நாடே ஏன் உலக உருண்டையே தனுஷ் கொலைவெறி பைத்தியம் பிடித்து திரியும் இந்த வாரத்தில் இன்று படம் ரீலீஸ். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் படம் "CLASS". ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு மீண்டும் 7G மாதிரி, காதல் கொண்டேன் மாதிரி ஒரு செல்வா Genere திரைப்பட்ம். Tragedy கிளைமேக்ஸ் இல்லாதது வித்தியாசம்.


படத்தில் Wild Life போட்டோகிராபராக தனுஷ். "கோ" படத்தின் பெயர் போடும் ஸ்லைடுகளிலேயே இது வரை வித்தியாசமாக எடுக்கப்பட்ட நிறைய "Media Style Photographs" போட்டு அசத்தியிருப்பார் கே.வி.ஆனந்த். இந்தப்படம் பாருங்கள் "Wild Life PhotoGraphy"ன் மிகப் பிரமாதமான பரிமாணங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார் செல்வா. முதல் பாதியில் ஒரு சீன் இருக்கிறது. தனுஷ் பறவைகளை படம்பிடிப்பதற்காக ஒரு இரவு முழுவதும் காட்டுக்குள் சென்று காத்திருந்து படம்பிடிப்பார். அந்த மொத்த சீக்வன்சும் ஜி.வி.பிராகாசின் "BGM"மோடு சேர்ந்து பார்க்கும் தருணத்தில் கிடைத்ததே ஒரு உணர்ச்சிக்குவியல். சத்தியமா, சொல்லவும் முடியல. எழுதவும் முடியல. "Hats Off" செல்வா && ஜி.வி.பிரகாஷ். You both form an Ultimate Combo.முதல் பாதி முழுவதுமே படம் அருமை. போனதே தெரியல. செம ஸ்பீட். வசனங்களில் அதிகமாக கவனம் ஈர்க்கிறார் செல்வராகவன்.


"நீ ஒரு இங்கிலீஷ் தெரிஞ்ச *&@*@&&@"


"தம்பி.. இதுவரைக்கும் என் பொண்டாட்டிய நா அழகா பாத்ததே இல்லப்பா"


"நானும் ஆபிஸ்ல எவ்வளவோ வேலைல தப்பு வந்துருக்கு. ஆனா அதுக்காக அழுகைலாம் வந்ததே இல்ல"


இந்த ஒவ்வொரு டையலாக்கும் வர்ற டைமிங்கும் Screen Prescence ம் உண்மையிலேயே பிரமாதம். சூப்பர் செல்வா. இந்தப்படத்தோட பிண்ணனி இசை மற்றும் பாடல்களைக் கேட்கும் பொழுதே தெரிகின்றது. Watch my words, One day or Other... ஜி.வி.பிரகாஷ் தொடப் போகும் உயரம் தமிழ் சினிமா இதுவரை கண்டிராததாய் இருக்கும். பாடல்கள் Visual ஆக எடுக்கப்பட்டிருக்கும் விதமும் மிகவும் அருமை. ஓட ஓட பாட்டோட மேக்கிங்கும் அந்த கார்ட்டூண் ஐடியாவும் செம. காதல் என் காதல் வழக்கமான செல்வா டைப் கோரியோகிராபி. தனுஷ் நடிப்பில் அடுத்த கட்டத்தைத் தொட்டிருப்பதற்கான சத்தியமான சான்று இந்தப் படம். பிரமாதமான ஆக்டிங். படத்துல ஒரு சீன். அதுல தன்னுடைய உழைப்பு நிரகரிக்கப்படும் ஒரு பொழுதில், தன்னுடைய கிரியேட்டிவிட்டி அவமானப்படுத்தப்படும் ஒரு பொழுதில் ஒரு முகபாவம். கட் பண்ணினால் பீச்சில் இருந்து வந்து ஒரு டீக்கடையில் தம் பற்ற வைக்கும் ஒரு சீன். Thatzzzzzzz it. தனுஷுக்கு ஏற்கனவே தேசிய விருது கிடைத்து விட்டதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமே இல்லை. கதாநாயகி ரிச்சா. "என்னா கண்ணுடா" வகையறா பொண்ணு. இந்தப் பாத்திரத்துக்கான சரியான பொருத்தம். முதல் படத்திலேயே பெர்பார்மன்ஸ் பிச்சு உதறிருக்கா. சூப்பர்.
இரண்டாம் பாதி ஆரம்பம் முதல் நன்றாகவே செல்கிறது. நடுவில் கொஞ்சமே கொஞ்சூண்டு தொய்வு. ஆனால் கிளைமேக்ஸ நோக்கி மீண்டும் எழும்பி முடிகிறது. நான் சொன்னதும் மழை வந்துச்சா, பிறைதேடும் நிலவிலே... இரண்டும் நல்ல மாண்டேஜ் பிட். படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு சீன். தனுஷையும் அவர் நண்பரையும் சமாதனப்படுத்துவதற்காக நண்பரின் அப்பா அவர்களுக்கு ஒரு சரக்கு ஊற்றிய க்ளாஸை நீட்டிக் கொண்டே இருப்பார். செல்வாவின் "Darker side cinematic sense"யையும் தாண்டி அவருடைய "Sense of Humour" பளிச்சிடும் இடம் அது. மனித மனங்களின் உள்ளுணர்வு இயல்புகளை அழகாய் படம்பிடித்துக் காட்டும் நிறைய காட்சிகள். ரிச்சா தனுஷின் நண்பரிடம் "சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ. என் புருஷன பைத்தியம்னு எப்பவுமே சொல்லாத. அவன் ஜீனியஸ். அது எனக்குத் தெரியும்". இந்த ஒரு வசனம். இந்த ஒரு காட்சி அதற்கு சரியான எடுத்துக்காட்டு.


இந்தப் படத்துக்கு இந்தக் கதைக்களத்துக்கு ஒரு கேமராமேனின் பணியும் பங்கும் மிக மிக அதிகம். அதனை மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார் ராம்ஜி. படம் நெடுகவே ஏகப்பட்ட க்ளோஸ் அப் ஸாட்ஸ். ரசனையான கேமரா கோணங்கள் பல இடங்களில். படத்துல பெரிய பலம் கொண்ட வில்லன் இல்ல. ஏன் சண்டையே இல்ல. கிளைமேக்ஸ்லாம் முடிஞ்சு Name Scroll Marquee லாம் ஓட ஆரம்பிச்சதுக்கு அப்புறமா தனுஷ் ஒரு தேங்க்ஸ் சொல்வாரு. அதுதான் ஒரு மிகப் பெரிய அடி,பழிவாங்கல். அல்டிமேட்.

நான் சின்னப்பையனா இருக்கேல எங்க ஏரியால உள்ள காலேஜ் பசங்க கூடல்லாம் படத்துக்குப் போவேன். தளபதி, அஞ்சலி படங்கள்லாம் பாக்கேலே அவங்கள்லாம் ஒவ்வொரு சீன்லயும் சிலாகிச்சு சிலாகிச்சு "மணிரத்னம் டச்" "மணிரத்னம் டச்" என்று சொல்லுவார்கள். இந்தத் தலைமுறையில் அது பொருத்தமாய் சொல்ல வேண்டுமானால் இந்தப் படத்தின் ஏகப்பட்ட இடங்களில் "செல்வராகவன் டச்".படத்துல முதல் பாதில தனுஷ் அடிக்கடி சொல்ற வசனம் "ஏதோ தப்பா இருக்கே". ஆனால் "மயக்கம் என்ன..." எதுவுமே பெருசா தப்பா இல்ல... எல்லாமே சரியாத்தன் இருக்கு. க்ளாசிக் சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படம்.

Wednesday, November 2, 2011

அண்ணா நூலகம் - ஆன்மா சாந்தியடையட்டும்.

புத்தகத்தில் உலகத்தைப் படிப்போம்...
உலகத்தையே புத்தகமாய் படிப்போம்
-அறிஞர் அண்ணா.

நான் வேலை நிமித்தமாக இரண்டு மாதங்களுக்கு முன்னால் மும்பை போயிருந்த பொழுது ஒரு உணவு வேளையில் அங்கிருந்த நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். சென்னையா, மும்பையா என்று வாக்குவாதம் சுவாரசியப்பட்ட போது மும்பைவாலா ஒருவர் சொன்னார், "இங்கே மும்பையில் இருப்பவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம். சென்னையைப் போல் ஒன்றும் கிடையாது." நான் அதனைக் கடுமையாக எதிர்த்து வாதிட்டேன். எனக்கே புத்தகம் படிக்கும் பழக்கம் மிக அதிகம் எனவும், தமிழகத்தில் பலருக்கும் அது அதிகமாக உண்டு எனவும் வாதிட்ட போது, எங்கள் ஊர் டவுண் ஹால் நூலகம் போன்றதொரு நூலகம் அங்கே உண்டா என்று கேட்டார்.நான் நமது அண்ணா நூலகத்தையும், அதன் தன்மைகளையும், உலகத்தரமான சிறுவர் நூலகம் இருப்பதையும், முழுதுமாய் குளிரூட்டப்பட்டதையும், ஆசியாவின் இரண்டாம் மிகப்பெரிய நூலகம் இது எனவும் சிலாகித்து சொன்ன பொழுதில் அவரால் அதனை நம்பவே முடியவில்லை. பின்னர் நூலகத்தின் விக்கி பக்கத்தை வைத்து அவருக்கு உண்மைகளை விவரித்த பொழுது அவருக்கு வியப்பு மாளவில்லை. இங்கே உள்ளே போவதற்கு அதிக கட்டணமா? என்று கேட்டார். முற்றிலும் இலவசம் என்று சொன்னபொழுது அதிசயித்துதான் போனார். மும்பையிலெல்லாம் பல நூலகங்கள், சென்று அமர்ந்து படிப்பதற்கே காசாம்.தான் சென்னை வருகின்ற ஒரு பொழுதில் கண்டிப்பாக அங்கே அழைத்துச் செல்ல வேண்டும் என்று உறுதியும் வாங்கிக் கொண்டார்.இன்று அவருக்குக் அலைபேசியில் அழைத்துச் சொன்னேன். "வருவதாக இருந்தால் ஒரு வாரத்திற்குள் வாருங்கள். அந்த நூலகத்தை மூடப் போகிறார்கள்". அவர் என்ன சொல்கிறய் என்று ஒரு அதிர்ச்சியாகக் கேட்டார். "ஆம்... அது கலைஞர் கட்டிய நூலகமாதலால் இந்த ஆட்சியில் அதனை மாற்றி மருத்துவமனையாக ஆக்கப் போகிறார்கள் என்று சொன்னேன். " Arey yaar, koyi paagal ho gaya aur kya" (பைத்தியமா பிடித்து விட்டது) என்று கேட்டார்.
நீ அந்த நூலகத்தைப் பற்றி சொல்லக் கேட்ட எனக்கே மிக மிக வருத்தமாக இருக்கிறது. அதனைப் பார்த்த, அங்கேயே அமர்ந்து படித்த உனக்கு மிகவும் கஷ்டமாய்தான் இருக்கும் என்று ஆறுதல் சொல்லி விட்டு வைத்தார்.


பைத்தியம் என்பதைத் தாண்டிய ஒரு வக்கிரமான மனநிலையையே இது காட்டுகின்றது. யார் என்ன செய்வது. நாம் தமிழகத்தில் தானே வாழ்கிறோம். இதனை முன்னிட்டு ஒன்றுமே செய்ய முடியாது என்ற கையாலாகாததனத்தை நினைக்கும் ஒரு பொழுதில், அதிகம் வேண்டுமானால் அழலாம். இப்படி பதிவு போடலாம், முகப்புத்தகத்தில் எழுதலாம். வேறென்ன செய்வது?

அந்த மும்பைவாலாவது பெரியவர். அவருக்கு அரசியல் சூதுவாதுகள் புரிந்து போகலாம். நான் எனது மூன்று வயது அக்கா மகளிடம், "பப்பு லைப்ரரிய மூடப் போறாங்கடா குட்டி" என்று சொன்னால் அவளுக்கு அரசியல் புரியாத ஒரு வருத்தம் தான் ஏற்படும். பிள்ளைகளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து விடுகிறோம் என்று இதுவரை அங்கே அழைத்து வந்த பெற்றோர்கள் இனிமேல் கொஞ்சம் அல்ல ரொம்பவே சிரமப்படத்தான் போகிறார்கள். அந்த சிறியவர் நூலகப் பகுதியின் "Attractive Ambience" குழந்தைகளுக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு அழகிய பாதிப்பு அவ்வாறானது. அவர்களாவது பரவாயில்லை. 1000, 2000 குடுத்தாவது புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து விடலாம். அங்கே அக்கம்பக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் பல நேரங்களில் வந்து கணிப்பொறி கற்றுக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள்தான் உண்மையிலேயே பாவம். இந்த மாற்றம் ஒரு மூளையில்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படியாகவே தோன்றுகிறது.யாராவது ஏதாவது அதிசயம் செய்து இந்த நிகழ்வு மட்டும் நிறுத்தப்பட்டால் உண்மையிலேயே மகிழ்ச்சியுறும் பற்பல ஜீவன்களில் நானும் பப்புவும் உண்டு.

இதுவரை நாங்கள் ஒருமுறை கூட அங்கு சென்று பார்த்ததில்லை என்பவர்கள் தயவு செய்து மூடப்படுவதற்குள் ஒருமுறை சென்று வாருங்கள். தாஜ்மகாலைப் பார்க்காத ஒரு இந்தியனின் வாழ்க்கை முழுமையடையாது என்று சொல்லப்படுவதைப் போல, இந்த நூலகத்தைப் பார்க்காமல் தமிழகத்தின் சென்னைவாசியாக உங்கள் வாழ்வும் முழுமையடையாது.
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.