Wednesday, November 2, 2011

அண்ணா நூலகம் - ஆன்மா சாந்தியடையட்டும்.

புத்தகத்தில் உலகத்தைப் படிப்போம்...
உலகத்தையே புத்தகமாய் படிப்போம்
-அறிஞர் அண்ணா.

நான் வேலை நிமித்தமாக இரண்டு மாதங்களுக்கு முன்னால் மும்பை போயிருந்த பொழுது ஒரு உணவு வேளையில் அங்கிருந்த நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். சென்னையா, மும்பையா என்று வாக்குவாதம் சுவாரசியப்பட்ட போது மும்பைவாலா ஒருவர் சொன்னார், "இங்கே மும்பையில் இருப்பவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம். சென்னையைப் போல் ஒன்றும் கிடையாது." நான் அதனைக் கடுமையாக எதிர்த்து வாதிட்டேன். எனக்கே புத்தகம் படிக்கும் பழக்கம் மிக அதிகம் எனவும், தமிழகத்தில் பலருக்கும் அது அதிகமாக உண்டு எனவும் வாதிட்ட போது, எங்கள் ஊர் டவுண் ஹால் நூலகம் போன்றதொரு நூலகம் அங்கே உண்டா என்று கேட்டார்.நான் நமது அண்ணா நூலகத்தையும், அதன் தன்மைகளையும், உலகத்தரமான சிறுவர் நூலகம் இருப்பதையும், முழுதுமாய் குளிரூட்டப்பட்டதையும், ஆசியாவின் இரண்டாம் மிகப்பெரிய நூலகம் இது எனவும் சிலாகித்து சொன்ன பொழுதில் அவரால் அதனை நம்பவே முடியவில்லை. பின்னர் நூலகத்தின் விக்கி பக்கத்தை வைத்து அவருக்கு உண்மைகளை விவரித்த பொழுது அவருக்கு வியப்பு மாளவில்லை. இங்கே உள்ளே போவதற்கு அதிக கட்டணமா? என்று கேட்டார். முற்றிலும் இலவசம் என்று சொன்னபொழுது அதிசயித்துதான் போனார். மும்பையிலெல்லாம் பல நூலகங்கள், சென்று அமர்ந்து படிப்பதற்கே காசாம்.தான் சென்னை வருகின்ற ஒரு பொழுதில் கண்டிப்பாக அங்கே அழைத்துச் செல்ல வேண்டும் என்று உறுதியும் வாங்கிக் கொண்டார்.இன்று அவருக்குக் அலைபேசியில் அழைத்துச் சொன்னேன். "வருவதாக இருந்தால் ஒரு வாரத்திற்குள் வாருங்கள். அந்த நூலகத்தை மூடப் போகிறார்கள்". அவர் என்ன சொல்கிறய் என்று ஒரு அதிர்ச்சியாகக் கேட்டார். "ஆம்... அது கலைஞர் கட்டிய நூலகமாதலால் இந்த ஆட்சியில் அதனை மாற்றி மருத்துவமனையாக ஆக்கப் போகிறார்கள் என்று சொன்னேன். " Arey yaar, koyi paagal ho gaya aur kya" (பைத்தியமா பிடித்து விட்டது) என்று கேட்டார்.
நீ அந்த நூலகத்தைப் பற்றி சொல்லக் கேட்ட எனக்கே மிக மிக வருத்தமாக இருக்கிறது. அதனைப் பார்த்த, அங்கேயே அமர்ந்து படித்த உனக்கு மிகவும் கஷ்டமாய்தான் இருக்கும் என்று ஆறுதல் சொல்லி விட்டு வைத்தார்.


பைத்தியம் என்பதைத் தாண்டிய ஒரு வக்கிரமான மனநிலையையே இது காட்டுகின்றது. யார் என்ன செய்வது. நாம் தமிழகத்தில் தானே வாழ்கிறோம். இதனை முன்னிட்டு ஒன்றுமே செய்ய முடியாது என்ற கையாலாகாததனத்தை நினைக்கும் ஒரு பொழுதில், அதிகம் வேண்டுமானால் அழலாம். இப்படி பதிவு போடலாம், முகப்புத்தகத்தில் எழுதலாம். வேறென்ன செய்வது?

அந்த மும்பைவாலாவது பெரியவர். அவருக்கு அரசியல் சூதுவாதுகள் புரிந்து போகலாம். நான் எனது மூன்று வயது அக்கா மகளிடம், "பப்பு லைப்ரரிய மூடப் போறாங்கடா குட்டி" என்று சொன்னால் அவளுக்கு அரசியல் புரியாத ஒரு வருத்தம் தான் ஏற்படும். பிள்ளைகளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து விடுகிறோம் என்று இதுவரை அங்கே அழைத்து வந்த பெற்றோர்கள் இனிமேல் கொஞ்சம் அல்ல ரொம்பவே சிரமப்படத்தான் போகிறார்கள். அந்த சிறியவர் நூலகப் பகுதியின் "Attractive Ambience" குழந்தைகளுக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு அழகிய பாதிப்பு அவ்வாறானது. அவர்களாவது பரவாயில்லை. 1000, 2000 குடுத்தாவது புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து விடலாம். அங்கே அக்கம்பக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் பல நேரங்களில் வந்து கணிப்பொறி கற்றுக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள்தான் உண்மையிலேயே பாவம். இந்த மாற்றம் ஒரு மூளையில்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படியாகவே தோன்றுகிறது.யாராவது ஏதாவது அதிசயம் செய்து இந்த நிகழ்வு மட்டும் நிறுத்தப்பட்டால் உண்மையிலேயே மகிழ்ச்சியுறும் பற்பல ஜீவன்களில் நானும் பப்புவும் உண்டு.

இதுவரை நாங்கள் ஒருமுறை கூட அங்கு சென்று பார்த்ததில்லை என்பவர்கள் தயவு செய்து மூடப்படுவதற்குள் ஒருமுறை சென்று வாருங்கள். தாஜ்மகாலைப் பார்க்காத ஒரு இந்தியனின் வாழ்க்கை முழுமையடையாது என்று சொல்லப்படுவதைப் போல, இந்த நூலகத்தைப் பார்க்காமல் தமிழகத்தின் சென்னைவாசியாக உங்கள் வாழ்வும் முழுமையடையாது.

3 பேர் சொன்னது என்னான்னா..:

ரா.செழியன். said...

அண்ணா நினைவு நூலக பிரச்சனை குறித்த ஒவ்வொரு நல்ல வாசகனின் மனநிலையையும் பதிவில் பிரதிபலித்துள்ளீர்கள்.கண்டனத்தை தெரிவிப்போம் என்ன நடக்கிறது என பார்ப்போம்.

Giridhara Srinivasan said...

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், இறுதியில் தர்மம் வெல்லும் - இது எதுக்கு இங்க? ன்னு கேக்க கூடாது - இது அவர்களால் அடிக்கடி சொல்லப்பட்டது.

Giridhara Srinivasan said...

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், இறுதியில் தர்மம் வெல்லும் - இது எதுக்கு இங்க? ன்னு கேக்க கூடாது - இது அவர்களால் அடிக்கடி சொல்லப்பட்டது.

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.