Friday, December 14, 2012

நீதானே என் பொன்வசந்தம் !!!

நீதானே என் பொன்வசந்தம் !!! படம் ஆரம்பம் முதலாக "நல்லாத்தானய்யா போய்கிட்டு இருக்கு" என்ற வகையறாவில்தான் இருந்தது. சந்தானம் வழக்கம் போல அசத்தல் டைமிங்கிலும், சமந்தா கிறக்கும் expressionகளிலும், ராஜா பாடல்களிலும், RRலும் , ஜீவா நல்ல underplay actingலும் என முதல் 45 நிமிடங்கள் வரை செம படம்யா என்று கெத்தாக உட்கார்ந்து பார்க்கும் வகையிலேயே இருந்தது. பிடிக்கல மாமு, சாய்ந்து சாய்ந்து இரண்டுமே அப்படியே தூக்கிட்டு போச்சு. சூப்பர்யா சூப்பர்யா என்று சொல்லிக் கொ?#?#?.... ஆனதெல்லாம் அதோடே..
அதுக்கப்புறம் இடைவேளையில்...

என்னாச்சி.. படத்துக்கு வந்தோம்... வண்டிய பார்க் பண்ணிட்டு மேல வந்தோம். சந்தானம் காமெடி, சாய்ந்து சாய்ந்து பாட்டு வரைக்கும் நல்லாப் போச்சு.. என்னாச்சி.. 

இடைவேளையில் கார்க்கி வாங்கிக் கொடுத்த காபியை உறிஞ்சிக் கொண்டே இப்படித்தான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆம். படத்தின் முதல் 45 நிமிடங்களுக்குப் பிறகு #நடுவுல கொஞ்சம் என்டெர்டயின்மென்ட்டக் காணோம்.அதற்கு பிறகான எல்லாக் காட்சிகளிலுமே ராஜா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்... அய்யகோ.. நினைத்து பார்க்கவே முடியவில்லை. எனக்கு விண்ணைத் தாண்டி வருவாயாவே பிடிக்காது எனும் பட்சத்தில் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் எதுவுமே என் ரசனை லெவலான 330க்கு உட்பட்டதாகவே இல்லை. "என்னோடு வா வா என்று" பாட்டு ஒன்று மட்டுமே இரண்டாம் பாதிக்கான ஒரே ஆறுதல். மற்றபடி வாங்கி விட்ட காரணத்துக்காக, தேவையோ தேவை இல்லையோ... எல்லாப்பாடல்களின் முதல் வரியையும் அங்கங்கு உபயோகப்படுத்தியிருக்கிறார் கெளதம். பை தி பை அக்கார்டிங் டூ தி கெளதம் மேனன் தியரி தி ட்ரூ காதல் மீன்ஸ் ஊடல் தென் கூடல் தென் ஊடல்... ஓகே பாஸ். ஆனா படம் பாக்க வருவோம்னு எங்களைப் பற்றியும் கொஞ்சம் யோசித்திருக்கலாம். "You dont deserve my love" No No.. You dont deserve my love" என்று சமந்தாவும் ஜீவாவும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்ட பொழுது பக்கத்தில் கார்க்கியிடம் இருந்து வந்த கமெண்ட் " Yes Yes We dont deserve this movie" ".    
 "கெளதம்கிட்ட asst. director சேரனுமா? எதுக்கு தமிழ்ல எங்கிலீஷ் படம் எடுக்கப் போறியா?" என்பதாகட்டும், இப்படத்தில் சந்தானத்தை அதே வீட்டு கேட்டில் சாய வைத்து "இங்க என்ன சொல்லுது.. ஜெனி ஜெனி சொல்லுதா"னு சுய எள்ளல் செய்வதெல்லாம் ஓகே. ஆனா இதெல்லாத்துக்கும் சேத்து கதைல இன்னும் கொஞ்சம் concentrate பண்ணிருக்கலாமே கெளதம் சார்.

கிளைமேக்ஸில் ஜீவா சமந்தாவிடம் "நீ எதுக்கு நித்யா வந்த?" என்பதை 113வது வாட்டி கேட்கும் பொழுதில் உள்மனது ஊக்கத்தோடு கத்தியது "அவ எதுக்கு வந்தான்னு தெரியல... அதவிட நாங்க எதுக்கு வந்தோம்னு சத்தியமா தெரியல... வெள்ளிக் கிழமை வெள்ளிக் கிழமை அடிவாங்குறதே நமக்கு பொழப்பா போச்சு".

சச்சின் திரைப்படத்தையே குஷியின் ரீமேக் என்றுரைத்த சமகால இந்தியாவில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப்பார்க்கும் வேளையில்.. அத்திரைப்படத்தின் ஒரே ஒரு மொட்டை மாடிக்காட்சியையும் , விஜயகுமார் சொல்வதைப் போல "அது ஏதோ நம்ம ஊர்ல சனியன் பிடிச்ச மாதிரின்னு எக்கோவோ ஈகோவோ..." அதை மட்டும் தன்னகத்தே வைத்துக் கொண்டு இருக்கும்இப்படத்துக்கு வரவிருக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனத்திறனை கெளதம் மேனனுக்கு அந்த ஆண்டவன் அருளட்டும்... ஆமென்.

Wednesday, November 21, 2012

ப்ரணயம் - ஒரு திரைப்பார்வை

இரண்டு மாதத்திற்கு முன்னால் ஒரு மழை நாளின் பின்னிரவில்தான் ஷ்ரேயா கோஷலின் மதி மயக்கும் குரலில் இப்பாடலைக் கேட்க நேர்ந்தது. உறக்கம் தொலைத்து கேட்டுக் கொண்டே இருந்தேன்.. இருநூறு முறைக்கும் மேல் இருக்கலாம். பின்னர் நண்பனொருவன் சொன்னான் இப்பாடல் இடம்பெற்ற திரைப்படமான "ப்ரணயம்" சமகால மலையாளத்திரைப்படங்களுல் ஒரு அற்புதமென. இணையத்தில் தேடினால் பார்க்கும் நிலையிலான நல்ல ப்ரிண்ட் கிடைக்கவில்லை. பிறகு ஒருவாறாக தேடித் திரிந்து தவிறரக்கினேன். பார்க்கும் முன் படத்தைப் பற்றி இணையத்தில் மேய்ந்த பொழுதுதான் தெரிந்தது படத்தில் நடித்திருப்பது நடிப்பு ராட்சஸர்களின் கூட்டணி என. மோகன்லால், ஜெயப்ரதா மற்றும் அனுபம் கேர்.


கடந்த நூற்றாண்டின் ப்ரபஞ்ச பேரழகி ஜெயப்ரதா என்றவுடனேயே இப்படம் இன்னும் தனிக்கவனம் பெற்றது. ஜெயப்ரதா தன்னுடைய திரை வாழ்க்கையை துவக்கிய பொழுதில் எனது வயதென்ன தெரியுமா?  -(10). அதாகப்பட்டது நான் பிறப்பதற்கு பத்து வருடங்கள் முன்னால். எனக்கு - 2 வயதாக இருக்கும் பொழுதில் எடுக்கப்பட்ட சலங்கை ஒலி திரைப்படத்தை நான் முதன் முதலாக தூர்தர்ஷனில் பார்த்த பொழுது எனக்கு 7 அல்லது 8 வயது இருந்திருக்கலாம். ஆனால் 'ஆலம்பனா, நான் உங்கள் அடிமை' என்று சொல்லும் அலாவுதீனின் பூதத்தைப் போல உதட்டுக்கும் மூக்குக்கும் இடையிலான அந்த ஒரு புள்ளி மச்சத்துக்கு அன்று முதல் நானும்தான் அடிமை. சலங்கை ஒலிக்குப் பிறகு அவர் நடித்த அடுத்த தமிழ்ப்படமே "தசாவதாரம்"தான் என்பது காலம் தமிழகத்துக்கு செய்த மாபெரும் கொடுமை. அப்பேர்ப்பட்ட ஜெயப்ரதாவுக்காக வேண்டி இப்படத்தை பார்க்க நேரிட்டாலும் படத்தின் முடிவில் மனத்திரையில் அட்டினக்காலிட்டு அமர்ந்து கொண்டவர்கள் மூவருமே தான்.. இல்லை இல்லை நால்வர். படத்தின் இயக்குநர் ப்ளெஸியையும் சேர்த்து.


வாழ்வில் இது மாதிரியான ஒரு காதல் திரைப்படத்தை பார்த்ததே இல்லை. வாழ்க்கையை மெச்சி நிரம்ப வாழ்ந்த மனிதர்களிடத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள என்பதை ஒவ்வொரு காட்சியிலும் விரித்துக் கொண்டே செல்கிறது இப்படம். அதிலும் இது ஒரு முக்கோணக் காதல் கதை - முக்கோணத்தின் மூன்று பக்கங்களுக்குமான சராசரி வயது கிட்டத்தட்ட 70. அச்சுத மேனன் (அனுபம் கேர்) என்னும் 67 வயது இளைஞர் கண் பரிசோதனை செய்து கொள்ளும் காட்சியிலிருந்து தொடங்குகிறது படம். ஒரு மாத்திற்கு முன்பு மாரடைப்பு வந்திருக்கிறது. அவருடைய மகன் அரபு தேசத்தில் வேலை பார்க்க, ஒரு கடற்கரையோர அபார்ட்மென்டில் மருமகளோடும், பேத்தியோடும் வாழ்வதாக காட்சிகள் விரிகின்றன. கால்பந்து விளையாடும் தன்னுடைய பேத்தியின் நண்பனொருவனுடன் பேசுகையில் "கேரள தேசத்துக்காக கால்பந்து விளையாடுவது எனது கனவாக இருந்தது.. ஆனால் வாய்ப்பு கிடைத்த நேரம் என் மனைவி நிறை கர்ப்பிணியாக இருந்ததால் போக முடியவில்லை என்று சொல்கிறார்". அதே நாளில் வீடு திரும்பும் பொழுதில் லிப்டில் கிரேஸைப்(ஜெ.பி) பார்க்கிறார். அப்படியே மாரைப் பிடித்துக் கொண்டு கீழே விழுகிறார். இந்த வெட்னஸ்டே நாயகனின் நடிப்பைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? Simply splendid.

அவரை மடியில் கிடத்தி அழுது, அரற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறாள் கிரேஸ். அதிலிருந்து கிரேஸின் பார்வையில் விரிகிறது இவர்களிருவருக்குமான இளமைக்கால காதல் காட்சிகள். காதல் - கலப்பு மதத் திருமணம் - குழந்தை - குழந்தையின் இரண்டரை வயதில் விவாகரத்தாகி பிரிவு.


வீடுதிரும்பும் கிரேஸ் தன்னுடைய கணவன் மேத்யூசிடம்(லாலேட்டா) அழுகையினூடே இதைச் சொல்கிறாள். மேத்யூஸ் ஒரு கை ஒரு கால் பாதிக்கப்பட்ட Paralytic attack.  அவர்களுக்கு ஒரு மகள் - குடும்பம். நெஞ்சில் சாய்த்து ஆறுதல் சொல்கிறார் மேத்யூஸ். இது மாதிரியான பல காட்சிகள் படம் நெடுக. ஒவ்வொன்றிலும் மோகன்லாலின் நடிப்பு உச்சத்தின் உச்சம். இது மாதிரி ஒரு காட்சி பிண்ணனியில்தான் ஒலிக்கிறத்ய் ஷ்ரேயா கோஷலின் "பாட்டில் இபாட்டில்". கண்களில் ஒரு துளி நீரேனும் வராதார் கண்ணீர் சுரப்பிகள் வற்றிப்போனோர். இம்மாதிரியான ஒரு உறவுச்சிக்கலை ஒத்துக் கொள்ள/சகிக்க முடியாமல் வாரிசுகள் ஒருவர் மாறி ஒருவர் இவர்களை வசைபாடினாலும் தங்க மூவருக்குள்ளுமாக ஒரு நட்பு வளையத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் மூவரும். அக்காட்சிகளில் மேத்யூசும் கிரேசும் அன்னியோன்யமாக இருப்பது கண்டு அச்சு ஒரு லேசான கூச்சம் கொள்வதாகக் காண்பித்திருப்பது real real director’s touch. இம்மாதிரியான் ஒரு உறவுச்சிக்கலை, காதலை இவ்வளவு matureஆக கொஞ்சமும் விரசமற்று நேர்த்தியாக  காண்பித்திருப்பதில் இருக்கிறது இயக்குநரின்  awesomeness. வாரிசுகளின் ஏச்சும் பேச்சும் நாளுக்கு நாள் அதிகமாகவே மூவரும் கடைசியாக ஒரு சாலைப்பயணம் செய்து திரும்ப முடிவெடுக்கிறார்கள். மிக மகிழ்ச்சியான ஒரு சாலைப்பயணமாக அது அமைகிறது.  Leonard Cohenன் I am your man பாடுகிறார்கள்... மார்ட்டினி அருந்துகிறார்கள், மீன்பிடி படகில் சவாரி செய்கிறார்கள். மகிழ்ச்சியான தருணங்கள். இம்மாதிரியானவொரு தருணத்தில் மேத்யூசுக்கு இன்னுமொரு  storke வர மருத்துவமனையில் தொடர்கிறது காட்சிகள்... அச்சு-கிரேஸின் மகன் அவர்கள் பிரிவுக்கு பின்னான காரணத்தை அறிந்து அம்மாவிடம் அவளை புண்படுத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கிறான்.... இன்னும் சில காட்சிகள்... பின்னர் படத்தின் கடைசி காட்சி.. நிறைவுறுகிறது படம். நமக்கு நிறைய நிறைய பாடம்.


எவ்விதமான காட்சிகளுக்காகவும் எவ்விதமான சமரசமும் செய்து கொள்ளப்படவில்லை. அத்தனையிலும் அத்தனையும் இயல்பு. Stirctly No clichés… No Clichés at all.. . இசையும் பாடல்களும் மிகப்பிரமாதமாக படத்தினூடே உயிராகவே வருகிறது. பாத்திரத்தேர்விலும், நடிகர்களின் நடிப்பிலும் - எதிலும் மிகையில்லை. ஜெயப்பிரதாவின் டீனேஜ் பருவத்தின் கதாப்பாத்திரத்துக்கு 'தட்டத்தின் மறையத்து' நிவேதா தாமஸ். முகத்துக்கு முகம் cut shot போட்டாலும் கூட அப்படியே இருக்கிறது சாயல். Itz a medical miracle I say…

மொத்ததில் ப்ரணயம் கொடுத்த மனத்தாக்கம் ஒரு வாரமேனும் நிலையாக நீடிக்கும்.


saagaram maarilettum kathiron veenerinju
kaathare ninte nenchil eriyum sooryanaaro..
kadalala thuduniramaarnnu nin
kavililum arunima poothuvo..
pranayamorasulabha madhuramaam nirvruthi...


Thursday, November 8, 2012

கண்டேன் கடவுளை - A day with Raja Sir !

நன்றி இளையதளம், நண்பர் ப்ரான்கோ மற்றும் யாழிலிருந்து தங்கை சருகா.

நவம்பர் 6 - 2012. வாழ்வின் மிக முக்கியமானதொரு தருணத்தை தன்னகத்தே கொண்ட நாளாக மாறிப் போனது எனது அதிர்ஷ்டமே. இசை ஞானியை ஒரே ஒரு முறையேனும் கண்ணால் பார்த்து விட்டாலே போதும், பிறவிப்பயன் உண்டு என்ற எண்ணத்தில் வாழ்ந்து வரும் ஒரு சாமானியனுக்கு அவருடைய ஸ்டுடியோவில் மூன்று மணி நேரம், அவரோடு அமர்ந்து அவர் வாசிப்பதைப் பார்த்து, பேசுவதைக் கேட்டு, பாடுவதை உணரும் ஒரு வாய்ப்பு கிடைத்தால்... கிடைத்தது. இன்னும் ஒரு மீளா மயக்க நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கிறது மனது. 

நேற்று மதியம் 2:15 மணிக்கு இளையதளத்தில் இருந்து  சொன்னார்கள், முடியுமானால் 3 மணிக்குள் வந்து சேருங்கள் என்று. சிறுசேரியில் இருந்து வடபழனி செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 40 கி.மீ தூரம். தாறுமாறான வாகன நெரிசல் மிகுந்த சாலைகள். ஆனால் வாய்ப்பை இழக்க விரும்பாமல் "கெளம்பிட்டேன்.. தோ வர்றேன்.." என்று எனது சிங்கக்குட்டியை விரட்டு விரட்டியதில் மூன்று மணிக்கெல்லாம் அங்கே இடம்சேர்ந்தேன். எதையுமே யோசிக்க முடியாவொரு பரவச நிலையில் படபடத்துக் கொண்டிருந்தது மனது. அங்கிருந்த நண்பர்களோடு சற்று பேசினாலும் ஆசுவாசப்படவில்லை. கிட்டத்தட்ட அரை மணி நேர காத்திருப்புக்குப் பின் உள்ளழைத்தார்கள். இதயம் மணிக்கு இரண்டாயிரம் முறை துடித்த அந்தக் கணம்... உள்ளே சென்றால் ராஜகம்பீரத்தோடும், மாறாப் புன்னகையோடும் வெள்ளை உடையணிந்து கட்டைகளில் கைகளைத் தவழ விட்டுக் கொண்டிருந்தார் ராகதேவன். கர்ப்பக்கிரகத்தில் கடவுளைக் கண்ட உணர்வு என்று சொல்லுவதை உள்ளுணர்வாய் உணர முடிந்தது. பக்தி, பரவசம் என்ற வார்த்தையெல்லாம் மட்டுப்பட்டவையே. எல்லாம் தாண்டிய ஒரு நிலை அது. யாது மனம் நினையுமந்த நினைவுக்கு நினைவாகி...அமர்ந்தோம், நிமிர்ந்தோம், நின்றோம், நடந்தோம்... என் செய்வதென்றறியாது ஏதேதோ செய்தோம். எல்லோருக்கும் ஒரு கடைக்கண் பார்வையை பரிசளித்து விட்டு வாசிக்கத் தொடங்கினார் ராகதேவன். "பூங்கதவே தாழ் திறவாய்" - அவர் ஸ்வரம் பிடித்து பாடப்பாட வயலினில் வழிந்ததொரு இசைப் பிரவாகம். உந்தன் ராஜராகம் பாடும் நேரம் பாறை பாலுறூதே...  அப்படியே இன்னும் இரண்டு மூன்று பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமென. பழைய இரண்டு லைலா மஜ்னு திரைப்படங்களின் பாடல்களை பிரித்து ஒப்பிட்டு விளக்கினார். சி.ஆர்.சுப்புராமனைப் புகழ்ந்தார். சில ராகமாலிகைகளை விவரித்தார், சிலாகித்தார். அப்படியே பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக பகிர்ந்து, பாடி, வாசித்து, பேசி, சிரித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இரண்டு நொடிகளென சட் சட்டென்று கரைந்து போனது.

பாடல்களில் அரைச்சொல் வராமல் கண்டுகொள்வதற்கான காரணம் சொன்னார். காரணத்தோடு கொஞ்சம் கோபமும் பட்டார். சட்டென்று தன்னிலை திரும்பியவர்,  அதெல்லாம் நமக்கு வேண்டாமே என்று குழந்தை போல சிரித்தார். மேற்கொண்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

"இறைவன் இருப்பதை திருவிளையாடல்கள் மூலம் உணர்த்துவது சரி எனின் - தம்மைப் போல கற்றறிந்தவர்கள் கற்றதை சொல்லுவதன் மூலம் உணர்த்துவதுதான் சரி" என்பதை அழுத்திச் சொன்னார். 

"ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பவர் தன்னுடைய மேதாவித்தனத்தை மறைக்க நினைத்தாலும் அது எவ்வகையிலும் வெளிப்பட்டு விடும் " என்பதை சந்தம் பாடி விவரித்தது - நினைக்கையிலும் பேரின்பம். 

"சில சுமாரான திரைப்படங்களுக்கும் அதில் சுமரான சூழ்நிலைகளுக்கும் மிக அருமையான ட்யூன்களை கொடுத்து விட்டீர்களே" என்ற ஆதங்கக் கேள்விக்கு "ஒரு தாய் பசியென்று வரும் பிள்ளைக்கு கையில் இருப்பதைதான் கொடுப்பாளே தவிர இன்னொரு பிள்ளைக்கு வேண்டுமென எதையும் எடுத்து வைத்துக் கொள்ள மாட்டாள். அது போல இது..." என்று உவமை பேசினார். இது பொருட்டு பாரதிராஜாவின் செல்லக்கோபத்தை சிலாகித்தார்.
பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" பாடலைச் சொல்லிக்கொடுத்த பாங்கை விளக்கினார். கூடவே பாடினார்... அழைக்கிறாஆஆஆன் ராதையை பூங்கோதையை... Bliss of the bliss... 

அன்னக்கிளி வருமுன்னரே வாத்தியக்காரர்களை சேர்த்துக் கொண்டு Orchestration வாசித்துப் பார்த்த அனுபவம் பகிர்ந்தார். டிரம்மர் நோயலோடு கொண்ட ஊடல் சொன்னார். கடும் உழைப்புக் காலங்களைச் சொன்னார். "உங்களுக்கெல்லாம் இப்போ எல்லாமே youtubeல ஈஸியா கெடைக்குதே" என்றார்.

தன் கையில் ஒன்றுமே இல்லை, எல்லாமே இறையருள் என்பதை பல இடங்களில் அழுத்திச் சொன்னார். தற்செயலாகத் திறந்த தியாகராஜ சாமி கீர்த்தனைகளில் 'அரை அடி தள்ளி ஆகச்சரியாக அமர்ந்த' மரி மரி நின்னேவை ஆச்சர்யமாய் சொன்னார். தான் இறைவனுக்கு உண்மையாக இருப்பதன் சான்றுகளுள் அதுவும் ஒன்றென சொன்னார்.  கீர்தனையையும் பாடி மகிழச் செய்தார். கீர்த்தனையின் முடிவில் நாத்திகர்கள் கூட பக்தர்களாய் மாறிப் போனார்கள்... ராகதேவனின் பக்தர்களாக.. இசைக்கடவுளின் பக்தர்களாக... இசையராஜாவின் பக்தர்களாக...

ராகம் பேசினார்கள்... சட்ஜமத்தில் இருந்து வீடு மாறுமென கிரகபேதம் பேசினார்கள்.. ஒரு சங்கீத பாமரனாய் அவர்கள் பேசியது எனக்குப் புரியவில்லை எனும் போதிலும் அவர்கள் சொல்லிய பாடல் ஒவ்வொன்றும் இசைத் தொகுதி ஒவ்வொன்றும் Interlude ஒவ்வொன்றும் இதயக்கூட்டில் எவ்வப்பொழுதிலும் ஒலித்துக் கொண்டிருப்பவைதான்.

புன்னகை மன்னன் BGM வாசித்து முடித்து... எல்லாம் முடிந்து எழுந்து வந்தார்... நாங்கள் ஒவ்வொருவராய் பாதம் பணிந்தோம்...

திருவாசக ட்யூனில் திவ்யப்பிரபந்தத்தையும், ஜனனி ஜனனி ட்யூனில் ரமணா ரமணாவையும் பாடிய சகோதரரின் பக்தியை என்னென்று சொல்ல... கண்ணீர் மல்கி காலில் விழுந்து வணங்கிய சகோதரியின் பரவசத்தை என்னென்று சொல்ல... அவரின் ஒவ்வொரு வாசிப்புக்கும் என்னிடம் ஒரிஜினல் இருக்கிறது என்று குழந்தையாய் குதூகலித்த நண்பரின் மகிழ்ச்சியை என்னென்று சொல்ல... ராஜா பாடல்களின் ரசிகர்கள் என்பது ரசனை சம்பந்தப்பட்ட விஷயமாகிப் போனாலும் ராஜாவின் ரசிகர்கள் என்பது ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம்தான் என்பது கண்கூடு. வந்திருந்த ஒவ்வொருவருக்குமே ஒரு நீண்ட நெடுந்தவத்தின் முடிவில் வரம் கிடைத்த மகிழ்ச்சியே. ஆனந்தம் பரமானந்தம் இசைக்கடவுளின் தரிசனம் ஆனந்தம்.வீடு திரும்பி கிட்டத்தட்ட 30 மணி நேரம் ஆன பிறகும் இன்னமும் அந்த Hangover கொஞ்சமும் குறையவே இல்லை. எந்தப்பாட்டிலிலும் இல்லாத போதை இந்தப்பாட்டில்தான் இருக்கிறது... இன்னும் நினைவில் புரியவில்லை - நடந்தது கனவா நனவா என்று... ஆனால் வாழ்நாளைக்கும் நெஞ்சுக்கூட்டில் புதைந்திருக்கும் என்பது நிதர்சனம்.

ஆதலாலே இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ...
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ..


ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன் 


Thursday, October 25, 2012

இங்கிலீsh விங்கிலீsh...


இங்கிலீஷ் விங்கிலீஷ்... கடந்த சில நாட்களில் இப்படத்தைப் பற்றி எத்தனை எத்தனையோ நல்ல விமர்சனங்களை வாசித்திருந்தாலும் இன்றுதான் பார்க்க முடிந்தது... such a wonderful of the fantabulous of the awesomatic movie...vபடத்தைப் பற்றி மேலும் சொல்ல வேண்டுமானால் இப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ஆணுக்குள்ளேயும் இருக்கும் chauvinist யையும் வெளியில் வர வைத்து செல்லமாகச் செருப்பால் அடிக்கிறது இப்படம். "உனக்குல்லாம் இதப்பத்தி சொன்னாப் புரியாது.." - நாம் ஒவ்வொருவருமே ஏதோவொரு தருணத்தில் யாரோ ஒருவரிடம் இப்படிச் சொல்லியிருக்கக் கூடும். ஆனால் மிகச்சாதராணமாக சொல்லப்படும் இவ்வார்த்தைகள் கொடுக்கும் வலி கொஞ்சம் அதிகம்தான். இப்படத்தின் அடிநாதமும் இதுதான். ஸ்ரீ தேவி ஒரே வசனத்தில் இதை மிக அழகாகச் சொல்கிறார். "இந்த உலகத்துல எத வேணும்னாலும் சொல்லிக் கொடுக்கலாம்.. ஆனா மத்தவங்களோட உணர்வுகளப் புரிஞ்சுக்குறதுக்கு...?"


 "எவ்வளவு வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் மாறவே இல்லை" என்பது ஸ்ரீ  தேவிக்குதான் ஆகச்சரியாக பொருந்துகிறது. இத்தனை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆரம்பித்திருக்கும் இந்த இன்னிங்க்ஸின் முதல் பந்திலேயே அவர் அடித்திருப்பது ஆறு அல்ல, அறுநூறு ரன்கள். அடிப்பொலி. நமது பெரியம்மாவின் வயதில் இருக்கும் ஸ்ரீதேவியின் மேல் அந்த ப்ரெஞ்சுக்காரனுக்கு ஏற்படும் அந்த cute ஆன crushஐக் கூட நம்மால் சகஜமாக எடுத்துக் கொள்ள முடிவதற்கு காரணமே ஸ்ரீதேவியின் fair and pretty look தான். அதிலும் ஒரு ஆரம்பக்காட்சியில் மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப் போடுகையில் நமக்கே ஒரு குட்டி க்ரஷ் வரத்தான் செய்கிறது. படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே அவரவர் பாத்திரத்தை அவரவர் செவ்வனே செய்திருக்கிறார்கள். மிகைநடிப்பென்றோ குறைநடிப்பென்றோ எங்குமில்லை. அதிலும் இந்தியா பாகிஸ்தான்காரர்கள் நண்பர்களாக நடந்து கொள்வதாக காண்பித்திருப்பது அத்தனை உண்மை. இந்தியாவிற்கு வெளியில் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் கற்கும் வகுப்பறைக் காட்சிகள் எல்லாமே கனஜோர்.படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜீத் வரும் அந்த குட்டி சீக்வன்ஸ் பட்டாசு ரகம். Kudos Ajith. Such a neat presence and performance. ஹிந்தியில் Big B அமிதாப் பச்சன் பண்ணியிருப்பதாகச் சொன்னார்கள். அந்த சீக்வன்ஸ்க்காகவேனும் படத்தை ஹிந்தியிலும் ஒருமுறை பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.


படத்தில் இன்னுமொரு மிகப்பெரிய ஆறுதல் கிளைமேக்ஸ். இங்கிலீஷ் கற்றுக்கொண்டேன் பேர்வழி என்பதற்காக "I can talk English walk English laugh English and English is the constitution in the constipation of the nation" என்கிற ரேஞ்சில் full peterல் பேசாமல் சின்னச்சின்ன வாக்கியங்களாக குட்டி குட்டி தப்புகளுடன் சசி பேசி முடிக்கும் கிளைமேக்ஸ் அழகான ஒரு கவிதைக்கு நிகர்.

மொத்தத்தில் இப்படத்தின் மூலம் இதன் இயக்குநர் கெளரி ஷிண்டே சொல்லுவது ஒன்றே ஒன்றைத்தான்... "யாரையும் மட்டம் தட்டாதிங்கப்பா.. ப்ளீஸ்..."

Thursday, September 20, 2012

ஆதாமின்ட மகன் அபு..இந்த இரவில் இனி தூக்கத்தை தேடித்தான் பார்க்க வேண்டும். கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் கிடைப்பதற்கு வாய்ப்பு கம்மியே. காரணம் ஒரு திரைப்படம்...  மிக நெகிழ்ச்சியான ஒரு மலையாளத் திரைப்படம் - பெயர் ஆதாமின்ட மகன் அபு.  சென்ற ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற திரைப்படம். அபு,ஆயிஷா என்ற வயதான இஸ்லாமிய தம்பதியினர் - இவர்கள் இருவரைச் சுற்றியே நகர்கிறது கதையும் களமும்.. ஹஜ் செல்ல வேண்டும் என்பது அவர்களது வாழ்நாளைய குறிக்கோள். அந்தக் குறிக்கோளை அடைய முன்னிட்டு பல விஷயங்களை இழந்தும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த குறிக்கோள் நிறைவேறாமல் போகும் போது ஏற்படும் வலியை அவர்களோடு சேர்ந்து நமக்கும் தந்து விட்டுப் போகிறது திரைப்படம்.                      மலையாளத் திரை உலகில் ஒரு காமெடி நடிகராக பெருமளவில்  அறியப்பட்ட சலீம் குமாரின் தேர்ந்த நடிப்புத்திறன் படம் நெடுக பளிச்சிடுகிறது. அவரது மனைவி ஆயிஷும்மாவாக நடித்திருக்கும் சரீனாவும் மிக எதார்த்தமான நடிப்பு. ஒருவர் விடாமல் படத்தில் வரும்  அனைவருமே நல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலுமே வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்திற்கான பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டே செல்கிறது இப்படம்.  அதிலும் பிராயத்தில் சண்டைக்காரனான சுலைமானிடம் அபு மன்னிப்பு கேட்க, அதற்கு நோய்வாய்ப்பட்டு கிடக்கும் சுலைமான் அழும் காட்சி பொட்டில் அறையும் காட்சி...

                        கோவிந்தன் மாஸ்டர் என்னும் இந்துவும்(நெடுமுடி வேணு), ஜான்சன் என்னும் கிறித்தவரும்(கலாபவன் மணி) அபுவின் ஹஜ் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அபுவிற்கு உதவ முன் வருவதாய் காட்டியிருப்பத்து கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் நேசத்திற்கான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஹஜ் செல்வதற்காக புதிதாக எடுத்த  பாஸ்போர்ட்டைத் தொட்டுத் தொட்டு குதூகலிக்கும் காட்சி, பசுமாட்டையும் பலாமரத்தையும் இழந்து விட்டு கண்ணீர் மல்கும் காட்சி என படம் நெடுக பல காட்சிகளும் கண்களை விட்டு அகல மறுக்கிறது.இப்படத்தின் இயக்குநர் சலீம் அகமதுக்கு இது முதல் திரைப்படம் என்பது ஒரு மிகப்பெரிய "அதிசயம் ஆனால் உண்மை". பிறப்பிலேயே இயக்குநர் போலும். 

                            இந்தாண்டு ஹஜ் புனிதப்பயணம் செல்லா விட்டாலும் அடுத்த ஆண்டு சென்று விடலாம் என்ற நம்பிக்கையோடு ஒரு பலாமரத்தை சலீம் நடுவதாய் படம் முடியும் பொழுதில் மனது பாரப்படுவதை தவிர்க்க முடியவில்லை. படம் வந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. இவ்வாண்டு அவர்கள் கண்டிப்பாக ஹஜ் சென்றிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடே உறங்கப்போகிறேன். நம்பிக்கை - அதான சார் எல்லாம்...

நேரம் வாய்க்கும் பொழுது இணையத்திலேனும் கண்டிப்பாக பாருங்கள். 


கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான்.

என்னை இந்தப்படத்தைப் பார்க்கத் தூண்டிய மிகப்பிரமாதாமான விமர்சனம் இங்கே...

Tuesday, August 7, 2012

ஜெய் ஹோ மேரி கோம்

மேரி கோம். நேற்று வரை இப்பெயர் பெரிய பரிச்சயமான பெயர் ஒன்றுமில்லை. ஏதோ 80ஓடு 81ன்றாக ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீராங்கனை என்ற அளவிலேயே நூற்றுக்கு எண்பது பேருக்குப்  பரிச்சயம். அதிலும் சானியா மிர்சா, சாய்னா நெய்வால் அளவுக்கெல்லாம் இல்லை. ஆனால் இன்றைய நிலைமை அப்படியே தலைகீழ். மொத்த இந்தியாவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. முகப்புத்தகம், ட்விட்டர் என இணைய உலகம் முழுதுமாய் பிரார்த்தனைகளாலும், வாழ்த்துகளாலும் உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் காரணம் நேற்று 06/08/2012 திங்களன்று நடந்த ஒலிம்பிக் பெண்களுக்கான 51 கிலோ பிரிவு குத்துச்சண்டை காலிறுதிப் போட்டிதான். தனது பிறந்தகமும் வாழ்விடமுமான மனிப்பூரும் சுற்றியுள்ள மொத்த வடகிழக்கு மாகாணங்களும் மின்வெட்டினால் இருளில் மூழ்கிக் கிடந்த நேரத்தில் லண்டன் ஒலிம்பிக்கின் குத்துச்சண்டை வளையத்துக்குள் துனிசீயா நாட்டைச் சேர்ந்த மரூவா ரஹாலியைத் 15-6 என துவம்சம் செய்து புயலென அரையிறுதிக்குள் நுழைந்ததுதான். இதில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் நேற்றுதான் இவருடைய இரட்டை மகன்களான ரெய்ச்சூங்வார் மற்றும் குப்பேன்யாவாரின் ஐந்தாவது பிறந்தநாள்.  ஆம்... மேரி இரண்டு குழந்தைகளின் தாய்.


இன்று இந்தியாவிற்குத் தங்கம் கொண்டு வருவார் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஏற்றி வைத்திருக்கும் மேரி கோமின் கடந்தகாலம் அத்துனை மகிழ்ச்சியானதென சொல்வதற்கில்லை. மனிப்பூரின் காங்த்தே கிராமத்தில் 1983ம் ஆண்டு, ஜூம் நிலப்பரப்புகளில் காடுகளை எரித்து விவசாயத்தில் ஈடுபடும் ஏழைப் பெற்றோர்களான மாங்தே டோபா, மாங்தே அகோம் ஆகியோரின் மூத்த மகளாக  பிறந்தவர் மேரி கோம். பள்ளி செல்லும் நேரம் தவிர பெற்றோரோடு சேர்ந்து மரங்களை வெட்டுவது, நிலக்கரி சேகரிப்பது என்று அவர்கள் வகை விவசாயத்தில் சிறுவயது முதலே உதவியாக இருந்து வந்தார். வீட்டின் மூத்த பெண்ணாதலால் அவருடைய தம்பி தங்கைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவருக்கேத் தரப்பட்டது. இத்தனைக்கிடையிலும் மொய்ராங் நகரின் கிறித்தவப்பள்ளிகளில் படித்த காலகட்டத்தில் தடகள விளையாட்டின் மீது மேரிக்கு ஒரு புரியாத ஆர்வம் ஏற்பட்டது. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து தன்னை மேம்படுத்தி ஏதாவது சாதிப்பதற்கான தளமாக தடகள விளையாட்டைக் கருதினார். ஆனால் அவருக்கான மகுடமாக வேறு ஒன்று செய்யப்பட்டிருந்தது அவருக்கு அப்பொழுது தெரியவில்லை.  மொய்ராங்கில் இருந்து இம்பால் நகருக்கு எட்டாம் வகுப்பு படிப்பதற்காக சென்றார் மேரிகோம். அங்குதான் அவருக்கு பெண்களுக்கான குத்துச்சண்டை பற்றி தெரிய வந்தது. மாற்றம் ஒன்றே மாறாதது போல் அவரின் ஆசையும் மாறியது. குத்துச்சண்டை பழகப்பழக ஆசை பெரும் பேராசையாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.  இந்நிலையில்தான் இந்தியாவின் டிங்கோ சிங் 1998ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியில் தங்க மகனானார். அவருக்கு அந்நாளில் இந்தியா அளித்த வரவேற்பு அபரிமிதமானதாக இருந்தது.  அதையெல்லாம் பார்த்த  மேரியின் ஆசை உருமாறி உருமாறி  நம்பிக்கையாக துளிர்விட்ட தருணங்கள் அவை. ஆனாலும் குத்துச்சண்டை வீராங்கனையாகப் போகிறேன் என்பதை வீட்டில் சொல்லும் நிலையில்லலாத ஒரு சராசரி இந்தியப் பெண்ணாகவே இருந்தார் மேரி. இருப்பினும் உள்ளிருந்து உந்துதல் அதிகமாகவே வீட்டிற்குத் தெரியாமலே கூமன் லம்ப்பாக்கில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்த இந்தியாவின் தலைசிறந்த பயிற்சியாளரான இபோம்ச்சா சிங் முதலில் மேரியை சிறுமி என தவிர்த்தாலும் பின்னர் மேரியின் ஆர்வம் கண்டு தன்னுடைய முதன்மை மாணவியாக ஆக்கிக் கொண்டார். இரவு பகலாக ஊண் உரக்கமில்லாத பயிற்சி. அதன் பிறகு குத்திய ஒவ்வொரு குத்தும் வெற்றி முத்திரைதான். மேரியின் குடும்பத்தினர் ஒரு முறை அவர் மாநில அளவில் வெற்றி பெற்ற செய்தி நாளிதழில் வந்ததைப் பார்த்தே அவர் குத்துச்சண்டை வீராங்கனை ஆனதை தெரிந்து கொண்டனராம்.

2001ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த பெண்களுக்கான உலக குத்துசண்டை சாம்பியன்சிப்பில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட மேரி வெள்ளியைக் கொய்து வந்தார்.  அதன் பிறகு வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே. 2005ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட மேரி கோம் இரட்டை மகன்களுக்குத் தாயானார்.  அதுவும் சிசேரியன் முறையில்.  ஆனால் அது எவ்வகையிலும் அவர் பயணத்துக்குத் தடைக்கல்லாக இருக்கவில்லை. 2001க்கு பிறகு நடந்த ஐந்து உலக சாம்பியன்சிப்களிலும் தங்கம் வென்றார் மேரி. ஆசிய, தேசிய அளவிலும் எங்கும் தங்கம், எதிலும் தங்கம்தான். இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜுனா, பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா என ஒன்று விடாமல் வாங்கிக் குவித்தார் மேரி. மனிப்பூர் காவல்துறையில் பணியமர்த்தப்பட்ட மேரி அங்கும் படிப்படியாக உயர்ந்து டி.எஸ்.பி அளவுக்கு பதவி உயர்ந்தார்.

இந்நிலையில்தான் 2012ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான தகுதிச்சுற்றுக்காகவும் சேர்த்து சைனாவில் நடத்தப்பட்ட 2012ம் ஆண்டின் உலக சாம்பியன்சிப் போட்டியின் காலிறுதியில் தோற்றுப்போனார் மேரி. உலக சாம்பியன்சிப்பின் பதக்கப் பட்டியலில் மேரியின் பெயர் இல்லாமல் போனது அதுவே முதல் முறை. ஆனாலும் அவருடைய பிரார்த்தனையின் பலனாக ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார். அதற்குப்பிறகு நேற்று வரை நடந்தது உலகறியும் வரலாறு.
இதுவரை கூறிய அனைத்துமே உலகறிந்த விஷயங்களே. ஆனால் மேரி வடகிழக்கு மாகாண மக்கள் அடையும் அத்தனை வேதனைகளையும் அடையாதவர் ஒன்றுமில்லை. முற்காலங்களில் நல்ல உணவு, உடை, ஷூக்கள் கூட கிடையாது. பெருத்த பணக்கஷ்டங்களைச் சந்தித்து வந்தவராகவே இருக்கிறார் மேரி. உலக சாம்பியன்சிப்பில் வெள்ளி ஜெயித்து வந்த காலகட்டத்துக்கு பின்பு ஒருமுறை நடந்த விளையாட்டுக் குழும சந்திப்பில் அவருடைய சமூகத்தின் பெயரை சுட்டிக்காட்டி அங்கு வந்திருந்த அனைவருக்கும் தேநீர் வழங்குமாறு பணிக்கப்பட்டாராம் மேரி. ஆனால் புன்னகை மாறாத முகத்தோடு அதையும் செய்தாராம் மேரி.  இது தவிரவும் அவர் மற்றும் அவர் சார்ந்த இனமும் அனுபவித்த அவமானங்கள் எல்லையில்லாதது. மேரியின் வெற்றிகளைப் பொறுக்காத ஒரு கும்பலால் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டு இறந்து போனார் மேரியின் மாமனார்.  மேரியைத் தெரிந்த ஒருவரின் ட்விட்டர் ஸ்டேட்டஸ் இவ்வாறாக இருக்கிறது.
மேரி சிரித்துக் கொண்டே ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்கிறார் "'என்னால் முடியாது'  என்பதே என்னிடம் அதிகளவில் சொல்லப்பட்ட வார்த்தை. ஒரு பெண்ணாக உன்னால் குத்துச்சண்டை போட முடியாது... திருமணம் செய்த பிறகு உன்னால் வெற்றி பெற முடியாது... குழந்தைப் பேறுக்கு பிறகு உன்னால் வெற்றி பெற முடியாது - ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் சொல்வதை பொய்யாக்க வேண்டியது எனது கடமையாக இருக்கிறது, கூடவே இந்தியாவிற்கான எனது வரலாறை எழுதுவதும்."

வடகிழக்கு மாகாண பெண்களின் மீதான இந்திய ராணுவத்தின் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து போராடும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்துக்கு இணையானதாகவே நான் மேரியின் இந்த வெற்றியைப் பார்க்கிறேன்.  மேரியின் இப்பதக்கம் இந்திய அரசுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் உணர்த்தியிருப்பது ஒன்றைத்தான். அது  வடகிழக்கு மக்களை சக மனிதர்களாக மதிக்க, மரியாதை செய்ய வேண்டும் என்பதைத்தான். இனிமேலாவது தமிழில் இருந்து "சிங்கிஸ் மிங்கிஸ்" "கூர்கா" "கும்பல் ஆப் கூர்காஸ்" போன்ற சொற்றொடர்கள் வழக்கொழிந்து போகட்டும்.

தங்கமோ, வெள்ளியோ, வெண்கலமோ - Medal is Confirmed, Metal yet to be.. ஆனால் எதுவாக இருந்தாலும் சில லட்சம் இந்தியர்களின் இதயத்தையும், அன்பையும் வென்றெடுத்ததுதான் இந்த ஒலிம்பிக்கின் உங்களது மகத்தான சாதனை. ஜெய் ஹோ மேரி கோம்.  Prayers and Wishes.

Monday, August 6, 2012

ட்வீட்டாலஜி - 06/08/2012


செத்துக் கொண்டே இருக்கும் சேகருக்கும், கடவுளை உணர்ந்து கொண்டே இருக்கும் கொமாருக்கும் தமிழ் வரலாற்றில் நிச்சயம் இடமுண்டு
###############
என்சைக்ளோப்பீடியாவின் இணைய பரிமாணம்தான் விக்கிபீடியா என்பது வரும் சந்நதியினருக்கு தெரியாமலே போய்விடக்கூடும் #Wikipedia
###############
உறக்கத்தின் பற்றை அறுத்து விழிக்க விழிக்க வீழ்த்தும் விளையாட்டை ஆரம்பித்துவிட்டது இரவு
###############
வந்துசென்ற மழையின் எச்சமாய் காட்சியளிக்கிறது உலர்த்தும் உன் தலையில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகள்
###############
குழந்தைகள் சொல்லும் பொய்கள் பெரும்பாலும் சிரிப்பையே வரவழைக்கிறது. #எங்க வீட்டுகிட்ட சிங்கம் இருக்கே. எத்தன சிங்கம்? ஏழு சிங்கம். J

###############

ரோட்டில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கும் போதெல்லாம் பைக்கின் ஸ்பீட் 20KM குறைவது தனிச்சையான செயலே.
###############
சனிக்கிழமைல ஏதாச்சும் உருப்படியான வேலை பாத்து உருப்படியா செலவழிக்கிறவன் ஏதாச்சும் வரம் வாங்கிட்டு வந்தவனாதான் இருக்கனும்.
###############
ஒரு ப்ரெண்டோட தங்கை கவுன்சலிங் போயிருந்தேன். BE Mech படித்தால் கூடவே BE civil இலவசம் என்பதைத் தவிர எல்லா வகை விளம்பரங்களும்.
###############
சனிக்கிழமைகளில் ஏதாவது உருப்படியான வேலை பார்த்து நேரத்தை உருப்படியாகச் செலவழிப்பவன் ஏதோ மிகப்பெரிய வரம் வாங்கி வந்தவனாகத்தான் இருக்க வேண்டும்.
###############
மதுபானக்கடை படத்துக்கு போனேன். தியேட்டர்ல படத்த மாத்தி மிரட்டல் போட்டாய்ங்க. பாத்துட்டுக் கெளம்பிட்டோம். போஸ்டர. :))
###############

குஷ்பு, ராதிகா, தேவயானி - மார்க்கெட் இழந்து சீரியல் நடிக்க வரும் நடிகைகள் வரிசையில் அப்பாஸியும். #VijayTV
###############
தேவயானி, ரம்பா, சினேகா - இப்படி ஹீரோயின் செலக்ட் பண்ண லிங்குசாமிதான் சமீராப் பையனையும் வச்சு படம் எடுத்துருக்கார் #வாவ்.. வாட் எ சேஞ்ச் ஓவர் மாமா?
###############
பொதுவா முகபாவனைன்னா கண்ணு வாய்லதான் குடுப்பாங்க. மூக்குல எக்ஸ்பிரஷன் குடுத்த ஒரே நடிகர் என்று முரளியை அவதானிக்கிறேன் #ஆனந்தம்
###############
பக்கத்துல ஒரு ஆட்டோல வயர் ஹீட் ஆகி விடாம ஹாரன் அடிச்சுகிட்டே இருந்துச்சு. வயரக்
கண்டுபிடிச்சு வெட்டுறதுக்குள்ள பேசாம easy ah ஒரு Bomb diffuse பண்ணிருக்கலாம் போல.
###############
இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்... சிலருக்கு இன்னும் யாஹூலல்லாம் மெயில் ஐடி இருக்குப்பா #yahoo
###############
தங்கத்துக்கே தங்கமா செங்கமலத்துக்கே மல்லிகையா. அட வுடு புள்ள.ஒன்னியும் பீல் ஆவாத. #WellPlayedSaina. U won billion hearts rather than this chotta medal.
###############
எதுக்கு உண்ணாவிரதம் இருந்தீங்க?"
 "லோக்பாலுக்கு"
"லோக்பால் வந்துச்சா?"
"வரல"
"அப்புறம் எதுக்கு முடிச்சீங்க?"
 "அதான்ணேன் இது"  
- அன்னா ஹசாரே பற்றிய அனைத்து செய்திகளையும் ஆதித்யா நகைச்சுவைச் சேனலில் போடுமாறு பரிந்துரை செய்கிறேன். #AnnaHazare
###############
ஆத்தா போன ஆட்சி பரவால்ல மண்டபத்தத் தான் காலி பண்ணனுக. இந்த ஆட்சில அடிமடிலயே கைய வச்சுருவாய்ங்க போலயே #கேப்டன் on #மதுவிலக்கு
###############
பழைய சோத்துடன் வெங்காயம் சாப்பிட்டவன் நான்-கேப்டன் # சூறாவளிக் காத்துல சுண்டல் தின்னீங்க, அட மழைல அவல் தின்னீங்க, கொட்டுற மழைல கொய்யா தின்னீங்க. அந்தந்த சீசனுக்கு அவனவன் சாப்பிடறதுதான் கேப்டன்.
###############


நம்ம அப்பா காலத்துல பென்ஷனப் பத்தி கவலைப்பட்டாங்க... நம்ம மென்ஷனப் பத்தி கவலைபடுறோம். #GenerationChange
###############
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.