Tuesday, January 31, 2012

சுகாவும், சுதந்திரம் சாரும், பின்னே ஞானும்...

ஆனந்த விகடனில் மூங்கில் மூச்சு பிரசுரம் ஆகியிருந்த முதல் சில வாரம் அது. நெல்லை டவுண் சாப்டர் பள்ளியில் சுதந்திரம் சார்வாள் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தைப் பற்றி எழுதியிருந்தார் சுகா. "யாரிந்த சுகா?" என்று தெரியாதிருந்தாலும், என்னவோ எனது பக்கத்து பெஞ்சு தோழன் எழுதும் கட்டுரைகள் என்ற அன்யோன்யம் மூங்கில் மூச்சின் மேல் அன்றே ஏற்பட்டு விட்டது.. ஏனென்றால் அதே சுதந்திரம் சார்வாள்தான் ஜான்ஸ் பள்ளியில் எனக்கும் ஆறாம் வகுப்பில் ஆங்கிலமும் கணக்கும் சொல்லிக் கொடுத்த வகுப்பு வாத்தியார், ஏழாம் வகுப்பு சயின்ஸ் வாத்தியார். சுதந்திரம் சார்வாள்லாம் என்றைக்குமே சிலாகித்து எழுதப்பட வேண்டிய மனிதர்தான். அதுவரை 'மிஸ்'களிடம் மட்டுமே படித்து விட்டு முதல் முறையாக 'சார்'களிடம் வரும் ஆறாம் வகுப்பு மாணவர்களை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்று நன்கு அறிந்தவர் அவர். நாங்கள் ஜான்ஸ் பள்ளியில் படித்தது ஆங்கில வழிக்கல்வி என்பதால் பெருவாரியான நேரங்களில் வகுப்பில் ஆங்கிலத்தில்தான் பேசுவார் அவர். அவர் மிக மிக சந்தோஷமாக இருக்கும் தருணங்களில் தனது பழைய கதைகளையும் பழைய மாணவர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பார். இந்த மாதிரி தருணங்களில் வகுப்பில் நாங்கள் யாராவது பேசிக் கொண்டோ சிரித்துக் கொண்டோ இருந்தால் அப்படியே ஓரக்கண்ணால் பார்த்து "எலேய்" என்பார். நாம் அப்படியே பம்மியபடியே அவரைப் பார்த்தால் "Your ding dong will be cut off… Soon" என்று சொல்லி நடுவிரலையும் ஆள்காட்டி விரலையும் ஆட்டிக்கொண்டே சிரிப்பார். மற்ற நேரங்களில் ஏதாவது குசும்பு செய்தால் நம் நெற்றியில் சாக்பீஸ் பொடி பட்டை அடித்திருக்கும். மரக்கட்டை டஸ்டர் நம் காலுக்கு கீழே. சுதந்திரம் சாரைப் பற்றிய குறிப்பு வந்ததற்குப் பிறகான வாரங்களில் ஆனந்த விகடன் கைக்கு கிடைத்த முதல் நொடியிலேயே விரல்கள் புரட்டிச் செல்லும் பகுதியாக மூங்கில் மூச்சு அமைந்து போனது. குறுக்குத்துறை முதல் குஞ்சு வரை, சென்ட்ரல் தியேட்டர் முதல் ராயல் டாக்கீஸ் வரை நெல்லை சார்ந்த எதுவுமே எனக்கு கற்பனைக்கான விஷயமே இல்லையென்பதால் சினிமா, கர்நாடக இசை சம்பந்தமாக எழுதிய ஓரிரு பகுதிகளைத் தவிர்த்து, மூங்கில் மூச்சு முழுதுமே எனது பழைய டைரியை இன்னும் கொஞ்சம் பழசாக்கிப் படிப்பது போன்ற உணர்வையே தந்தது. இந்தக் கட்டுரைத் தொடரின் கடைசி வாரத்தில்தான் சுகா, தான் ‘மரியாதைக்குறிய தமிழறிஞர் அய்யா’ நெல்லைக் கண்ணனின் புதல்வர் என்பதைச் சொல்லியிருந்தார். எனக்கென்னவோ அதைக் கடைசி வாரத்தில் சொன்னதுதான் சரி என்றே பட்டது. ஒருவேளை அவர் முன்னமே சொல்லியிருந்தால் பக்கத்துப் பெஞ்ச் தோழன் உணர்வு மங்கி ஒரு மரியாதை வந்திருக்கக் கூடும்.


மூங்கில் மூச்சு


ஆனந்த விகடனில் மூங்கில் மூச்சை நிறுத்திக் கொண்ட பிறகு அவ்வப்பொழுது சொல்வனத்தில் சுகாவின் புதிய பழைய கட்டுரைகளை படிப்பதுண்டு. ஒருமுறை சொல்வனத்திலே செண்பகத்தக்காவின் குரல் என்ற தலைப்பில் "என் வானிலே ஒரே வெண்ணிலா" புகழ் ஜென்சியைப் பற்றி சுகா அல்வாத்தமிழில் எழுதிய கட்டுரையைப் படித்து/கேட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு சிலாகித்துக் கொண்டே இருந்தேன். "அடுக்களையின் குழம்புக் கொதியினூடே கேட்கும் அக்காவின் குரலாக, குளியலறையிலிருந்து சந்திரிகா சோப்பின் நுரைத்த நறுமணத்துடன் வெளியே கசிந்து ஒழுகும் அத்தை மகளின் குரலாக, மதிய உணவுக்குப் பின் ஒட்டுமொத்த வீடும் உறங்கிக் கொண்டிருக்க, ஒருச்சாய்த்துப் படுத்தபடி, ‘ராணி’ புத்தகத்தைப் புரட்டியவாறே, தனக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடும் மதினியின் குரலாக" என்று ஜென்சியின் குரலை உவமைப்படுத்தியிருந்தார் சுகா. தொடர்ச்சியாக ஏழாவது முறை இந்தக் கட்டுரையை படித்த பொழுதில், அது எப்படி இவரால் மட்டும் ஒவ்வொரு காற்புள்ளி, அரைப்புள்ளியிலும் கூட நெல்லையை உரித்து வைக்க முடிகிறது என்று வியந்து உச்சந்தலையில் கை வைத்தேன். குளிர்ந்திருந்தது.


                     இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற பொழுது மூங்கில் மூச்சு தொகுப்பாக வந்திருந்தால் வாங்க வேண்டும் என்று நினைத்துச் சென்றிருந்தேன். ஆனால் ஒரு நண்பன் போன் செய்து தான் மூங்கில் மூச்சு வாங்கி விட்டதாகவும் முடித்து விட்டு என்னிடமே தந்து விடுவதாகவும் சொன்னான். நானும் பட்டியலின் மற்ற புத்தகங்கள் வாங்குவதில் மும்முரமாகி விட்டேன்.  கிழக்கை சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது தற்செயலாக கண்ணில் பட்டது "தாயார் சன்னதி - சுகா". திருப்பிப் பார்த்தேன் பாலுமகேந்திரா அவர்களின் பொழிப்புரை இருந்தது. தாமதிக்காமல் தூக்கிக் கொண்டேன். அதைப் படிக்க ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே மனசுக்குள் முடிவானது. இது கடகடவென்று வாசித்துத் தள்ளிவிடக் கூடிய தொகுதி வகையறாப் புத்தகம் அல்ல. நமக்குப் மிகவும் பிடித்த பால்கோவாவையோ, நெய்விளங்காவையோ எப்படி விள்ளல் விள்ளலாக விண்டு ருசி அனுபவித்து நீண்ட நெடுநேரம் சாப்பிடுவோமோ அப்படி வாசிக்க வேண்டிய புத்தகம். ஒரு நாளைக்கு மூன்று, அதிகம் ஆனால் நான்கு பகுதிகளுக்கு மேல் வாசிக்கக் கூடாது என்று சுயசத்தியம் செய்து கொண்டேன்.  வாசிக்க வாசிக்க மகிழ்ச்சி வலுத்துக் கொண்டே வந்தது.


தாயார் சன்னதி
திருநெவேலி, எனது ஊர், எனது மண், எனது மக்கள், இருட்டு லாலா கடை, நெல்லையப்பர் கோவில் தேர், வாகையடி முக்கு சொக்கப்பனை, பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், பாட்டையாக்கள், மறந்தும் கூட கணவன் பெயரைச் சொல்லாத ஆச்சிகள், ஊர்க்குசும்பு, நக்கல்-நையாண்டி, பொருட்காட்சி, விஞ்சை விலாஸ், சொதி, இஞ்சிப்பச்சடி, டவுண் மார்க்கெட். சொன்னால் சொல்லிக் கொண்ண்ண்ண்ண்ண்டே போகலாம். நாம் பார்த்தவற்றை நாம் பார்த்த மாதிரியே எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் வாசிக்கும் ஒரு மிகச்சிறந்த வாசிப்பானுபவத்தை கொடுத்தது தாயார் சன்னதி. பல இடங்களில் குஞ்சரமணியை என்னுடைய நிலைக்கண்ணாடி உருவமாகத்தான் என்னால் பார்க்க முடிந்தது. "கொளுத்தி விடுறதுக்காகவே பட்டருங்கள் வளக்காங்கல்லா" என்று சொக்கப்பனையை ஒட்டி குஞ்சு அள்ளி விடும் பொழுது அப்படியே அது 15 வருடத்துக்கு முந்தைய நான். நெல்லையில் எங்கள் வீட்டிலும் முதல் டி.வி டைனமோ கம்பெனிக்காரன் தயாரித்ததுதான். இப்படி நான் “கேட்ட” கூட அல்ல, கண்ணால் கண்ட விஷயங்கள் ஒவ்வொன்றையும் மனத்திரையில் படம் காட்டி விட்டது தாயார் சன்னதி.  ஏன் நெல்லையின் நிறத்தையும், மணத்தையும் கூட விடவில்லை.  இந்தப்புத்தகத்தில் இருக்கும் 44 பகுதிகளில் ஒரு 300 இடங்களிலாவது துணுக்குற்று பல முறை வாசித்து வாசித்து வெடிச்சிரிப்பு சிரிக்க வேண்டி இருந்தது. சுகாவின் கையில் மாயக்கோல் ஒன்று வைத்திருக்கிறார். அதில் அவரால் இரண்டு வேலைகளைச் செம்மையாய்ச் செய்ய முடிகிறது. ஒன்று உங்கள் மனதில் காற்றடைத்து விட்டு கனமாக்கி கண்பனிக்கச் செய்வது, இன்னொன்று உங்கள் மனதில் இருக்கு கொஞ்சநஞ்ச காற்றையும் இறக்கி லேசாக்கி வயிறு குலுங்க சிரிக்க வைப்பது. ஆனால் அவர் இதில் எந்த வேலையைச் செய்தாலும் அது பரமானந்தமாகவே இருக்கிறது.


                      இந்தப் புத்தகத்தில் "ஜெயன்ட் வீல்" என்ற பெயரில் ஒரு அத்தியாயம் வருகிறது. எங்கள் நெல்லையின் வருடாந்திர கவர்மெண்டுத் திருவிழாவான பொருட்காட்சி @ பொருக்காச்சி பற்றியது அது.  ஒரு ஞாயித்துக்கிழமையின் பின்னிரவில்தான் அதை முதல் முறை வாசித்தேன்.  அந்தப் பொருட்காட்சிக்கு சுகா தன்னுடன் வந்ததாய்ச் சொல்லியிருக்கும் கமிஷன் கடை சிவப்பழ பெரியப்பாவெல்லாம் நான் பாளை காந்தி மார்க்கெட்டில் பார்த்த பற்பல பெரியவர்தான். பேல்பூரி முதல் டில்லி அப்பளம் வரை, மரணக்கிணறு முதல் அறநிலையத்துறை ஸ்டால் வரை எல்லாவற்றையும் நிதர்சனமாய்க் கடந்து ஜெயன்ட்வீல் ராட்டுப் பக்கம் வந்தது.   ஜெயன்ட்வீல் சுற்ற ஆரம்பித்தது. நான் சிரிக்க ஆரம்பித்தேன். ஜெயன்ட்வீல் நின்றது. வெறித்தனமாய்ச் சிரிக்க ஆரம்பித்தேன். அடக்க வாய்ப்பே இல்லாமல் நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் படித்துப் படித்து தலயணையில் மோதி மோதி சிரித்துக் கொண்டே இருந்தேன். "ரெண்டு மணிக்கு ஏன் இப்படிச் சிரிக்கிற" என்றவாறே பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த அப்பா எழுந்து வந்து விட்டார். "உக்காந்து இத வாசிங்க" என்றேன். "காலைல வாசிக்கிறேன்" என்றார் அப்பா அரைத்தூக்கத்தில். "இல்ல. இப்பவே வாசிங்க" என்றேன். கண்ணாடியை எடுத்து வந்து போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். நான் சிரிப்பை அடக்கமாட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு நிமிடம் கடந்திருக்கும். இந்த முறை அப்பாவுக்கு ஜெயன்ட்வீல் சுற்ற ஆரம்பித்தது. அரை நொடியில் புத்தகத்தை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தார். "முழுசுமா படிங்க" என்றேன். சிரிப்பை அடக்கமாட்டாமல் படித்து முடித்தார். "அனுபவிச்சு எழுதிருக்கான்டா" என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். ஒருவர் சிரிப்பை மற்றவர் பார்த்து "சிரிக்காத..” “சிரிக்காதீங்க..." என்று சொல்லிச் சொல்லியே ஒரு அரை மணி நேரமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது நினைத்தாலும் அலுவலகத்தில் அமர்ந்து கோட்டிக்காரனாய்த் தனியாக சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.  இந்தப் பானைக்கான ஒரு சோறுதான் இது.


                      இந்தப் புத்தகத்தோடு ஒரே ஒரு வருத்தம்தான். 44 அத்தியாயங்களை குறைந்தது 12 நாட்களுக்காவது வாசிக்க வேண்டும் என்று சுயசத்தியம் செய்து கொண்டதை மட்டும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. ஐந்து நாட்களிலேயே முடித்து விட்டேன். இரண்டாம் முறை ஓடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு பால்கோவா பேக்டரி.

Saturday, January 28, 2012

OMR... மதியம்... ஒரு சாப்ட்வேர் இஞ்ஜினியர்...


சென்னை OMRல் நாவலூர், சிறுசேரி, சிப்காட் பகுதியில் வேலை பார்ப்பவரா. வாங்க வாங்க, இது உங்களுக்கான கட்டுரைதான். ஆனால் “Hotels in OMR?? that too after Chozhs (Sozhinganallur)… Before Chozhs means, I would have suggested you lots of options. But After Chozhs means, very few… may be hotel Aloft or Gem Inn resort. Those too OK kind of food. Nothing much yaaaar…” என்று பீட்டர் விடும் பீட்டர்ஸ்பர்க் தேங்கா மண்டையன்ஸா...? இது கண்டிப்பாக உங்களுக்கான கட்டுரை அல்ல. “For every noon it’s just not the taste of the food, but the ambience is something I prefer.” என்று ஒவ்வொரு மதிய வேளை உணவுக்கு 400 - 500 ரூபாய் செலவழிக்கத் தயங்காதவரா நீங்கள். இது உங்களுக்கான கட்டுரையும் அல்ல. “Actually you know, I am basically a Diet and Fitness freak.. these carbo hydrate, carbon di oxide, carbon mono oxide” என்று 6 பேக் முயற்சியில் இருப்பவரா. Yo Boys, Sorry இது உங்களுக்கான கட்டுரையும் அல்ல.  "நல்ல மாடு மாதிரி வேலை பாக்குறோம். ஏதோ கொஞ்சம் சம்பாரிக்கிறோம். எல்லாம் எதுக்கு? இந்த துக்கூணுண்டு நாக்குக்காகதான. ஏதோ ஒவ்வொரு மதியமும் நல்ல சாப்பாடு கெடச்சா சரி..." என்று ஒரு மதிய சாப்பட்டிற்கு 80 - 120 ரூபாய் வரை செலவழிக்க தயாராய் இருக்கும் My Kind of Soup boys ah நீங்கள். வாங்க மக்கா வாங்க. இது உங்களுக்கான கட்டுரைதான். நான் சிப்காட் சிறுசேரிக்கு வேலைக்கு வந்து இரண்டே இரண்டு முறை கண் இமைத்தது போல் இருக்கிறது. 8 மாதம் ஜஸ்ட் லைக் தாட் விஷ்ஷ்ஷ்ஷ்னு ஓடிருச்சு. இங்க வந்ததுல இருந்து உருப்படியா என்னதான் பண்ணிருக்கன்னு யாரும் கேட்டுற கூடாதுங்கிறதுக்காகதான் இந்த பதிவு. வாங்க, எந்தெந்த மூடுக்கு எங்க எங்க என்ன என்ன சாப்பிடலாம்னு பாக்கலாம்.
Yes !!! I love eating out.
 நல்ல பசி என்பதைத் தாண்டி கொடூரமான பசி என்னும் வகையறாவில் வயிறு இருக்கும் பொழுது சாப்பிடச் சரியான இடம் "பவானி ஆந்திரா மெஸ், நாவலூர்". இந்த ஏரியாவிலேயே மிக அதிகமான ரீப்பீட் ஆடியன்ஸ் கொண்ட மெஸ் இதுவாகத்தான் இருக்கும். நாவலூர் டோல் கேட்டை ஒட்டி HP பெட்ரோல் நிலையத்தை ஒட்டிய சந்தில் இருக்கிறது. இவர்களது கடையில் என்னைப் பொறுத்த வரையில் ஸ்பெஷல் என்றால் அது மீல்ஸ்தான். பொடி, நெய், பப்பு, சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, நல்ல கட்டியான தயிர், ஒரு பிரை, ஊறுகாய், கோங்குரா அல்லது மிளகாய் துவையல். இதுதான் மீல்ஸ் மெனு. அனைத்துமே நல்ல கட்டிக் காரமான தயாரிப்பு. இது போக ஒரு ஆம்லேட்டோ, முட்டைப் பொடிமாஸோ வாங்கிக் கொண்டால் செம மீல்ஸ். இவர்களிடத்தில் அதிகமான ரீப்பிட் ஆடியன்ஸைக் கொண்டு சேர்ப்பது மோர்க்குழம்புதான் என்பது என் ஆழமான நம்பிக்கை. நல்ல காரமான மோர்க்குழம்பில் பச்சை வெங்காயாத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிப் போட்டிருப்பார்க்ள். இவ்வளவு காரமான மோர்க்குழம்பை வேறு ஆந்திரா மெஸ்களில் கூட சாப்பிட்டிருக்க முடியாது.  

                          சிக்கன் பிரை, பிரான் பிரை எல்லாம் இரண்டு பேருக்கு ஒன்று என்ற வீதத்தில் வாங்கி கொண்டால் சரியாக இருக்கும்.  இவர்களிடத்தில் கிடைக்கும் மீன்குழம்பு ஒரு வித்தியாசமான ருசி. கொஞ்சம் புளிப்பு தூக்கலான மீன் குழம்பு. மீல்ஸ் விலை ரூபாய் 50. ஆம்லேட் 10 ரூபாய். மற்ற நான்வெஜ் பதார்த்தங்கள் 80 முதல் 140 ரூபாய் வரை இருக்கும். இவர்களிடத்தில் மீல்ஸ் போக சிக்கன், மட்டன், பிஷ், பிரான் பிரியாணியும் கிடைக்கும். பிரியாணி விலை கொஞ்சம் அதிகமும் கூட. அதனால் பவானி மெஸ்னா மீல்ஸ்தான் சரி. பொண்ணுங்க கூட 3, 4 தடவ Rice வாங்கி ச்சும்ம்ம்மா Full கட்டு கட்டுவாங்க. ஆனால் இங்கே சாப்பிடுவதற்கு அதிகமான பசியும், அதை விட அதிகமான பொறுமையும் மிக அவசியம்.1 மணி முதல் 2.30 வரை கூட்டம் அள்ளும். அதுவும் வெள்ளிக்கிழமை என்றால் சிப்காட் TCS ல் இருந்து வண்டி கட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். குறைந்தது 20 முதல் 30 நிமிடம் வரை இடத்திற்காக காத்திருக்க வேண்டும். அதே போல் சாப்பிட்டு விட்டு வந்து ஒரு மணி நேரத்துக்கு கண்டிப்பாக ஒரு அரைத் தூக்க நிலையே இருக்கும், Code அடிக்க வாய்ப்பே இல்லை என்பது உபரித் தகவல். 

Chechi Kadai
                                "பிஷ் உண்டு, மட்டன் உண்டு, சிக்கன் உண்டு... கழிச்சோடு கழிச்சோடு" என்று VTV கேரள ஸ்டைல் உணவு வேண்டுமென்றால் "சேச்சி கேரளா மெஸ்". பவானி ஆந்திரா மெஸ்க்கு அப்படியே பின்னால் இருக்கிறது.  நல்ல மீன் சாப்பிட வேண்டும் என்ற மனநிலை இருந்தால் இங்கே போகலாம். மீன் தான் இங்கே கொஞ்சம் ஸ்பெஷல். சாதம் கேரளாவின் சிவப்பு குண்டு சம்பா அரிசி சாதமும் கிடைக்கும். நம்ம ஊர் வெள்ளை அரிசி சாதமும் கிடைக்கும். சாம்பார், ரசம், மஞ்சமோர், மீன்குழம்பு, காய்கறி எல்லாமே கேரள சுவைதான். பிரியாணி கேரளா ஸ்டைலில் வெள்ளை நிற இன்ஸ்டன்ட் பிரியாணி கிடைக்கும். கேரளா உணவின் சுவை பிடிக்குமென்பவர்கள் அவ்வப்பொழுது இங்கே செல்லலாம். ஏதோ கேரளாவில் நண்பனின் தோட்டத்து வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்ட உணர்வையே தரும் இந்தக் கடை. சுற்று வட்டாரத்தின் CTS, Polaris, HCL என எல்லாக் கம்பெனிகளில் வேலை பார்க்கும் கேரள ஓமேணேக்களும் இங்கேதான் சாப்பிட வருவார்கள் என்பது இன்னும் சுவையாக்கும். எந்தா ஞான் பறையந்தது.
Fish Fry
Fish Fry

            "நல்லாப் பசிக்குது ஆனா Rice சாப்பிட இன்டரஸ்ட் இல்லை" - இந்த சூழ்நிலைக்கும் ஒரு கடை இருக்கிறது. நாவலூர் Kwality Rivieraவை ஒட்டிப் போகும் சின்ன சந்தில் இருக்கிறது அந்தக் கடை. அந்தக் கடைக்கு ஓனர் வைத்திருக்கும் பெயர் "Hot n Spice". ஆனால் யாருக்கும் அது தெரியாது. சப்பாத்திக் கடை என்ற பெயரிலேயே பரவலாய் அறியப் படுகிறது. "Plain Thali, Special Thai, Normal Thali" என்று மூன்று வகை Thali வைத்திருப்பார்கள். நல்ல சூடான, மிருதுவான சப்பாத்தி, இரண்டு சப்ஜி, ஒரு டால், கொஞ்சம் சேலட், அப்பளம், ஒரு கப் தயிர். இது போக Normal Thali ல் கொஞ்சம் White Rice ம், Special Thali ல் கொஞ்சம் Jeera Rice ம் தருவார்கள். டால், சப்ஜி எல்லாமே உண்மையான வட இந்திய ருசி. இது போக சூடான கோபி, ஆலு, பன்னீர் பராத்தாக்கள் மற்றும் சிக்கன் மசாலா கிடைக்கும். குளோப் ஜாமூன், கேரட் அல்வா, லஸ்ஸி இவை மூன்றில் ஏதாவது ஒன்று தினப்படி மாறி மாறிக் கிடைக்கும். அதிகமான வட இந்திய முகங்களை இங்கே பார்க்கலாம். சின்னக் கடை என்பதால் இங்கும் 10 - 15 நிமிடம் காத்திருந்துதான் இடம் பிடிக்க முடியும்.

Chappathi
                           நல்ல பிரியாணி, சிக்கன் 65 சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் Kwality Rivera விற்கு நேர் எதிராக இருக்கும் ரஹ்மான் பாய் பிரியாணிக் கடை. இதுவும் சின்னக்கடையே. ஆனால் இந்த ஏரியாவில் நல்ல சிக்கன் பிரியாணி கிடைப்பது இங்கேதான். ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் பிரியாணி சாதத்தில் அவ்வளவு மசாலா இறாங்கதது போல் இருக்கும். மற்றபடி பிரியாணி நல்ல ருசி, நல்ல Quantity. 1/2 பிளேட் வாங்கினாலே சாப்பிட்டு முடிக்க முடியாது. பிரியாணி, சிக்கன்  65 போக பிரைடு ரைஸ், சில்லி, பெப்பர் சிக்கன் போன்ற சைனீஸ் ஐட்டங்களும் நம்ம ஊர் ருசியில் கிடைக்கும். 1/2 பிளேட் பிரியாணி ஒரு 65 சாப்பிட்டு விட்டு வந்து பக்கத்தில் இருக்கும் ஜூஸ் கடையில் ஒரு லெமன் சோடா குடித்தால் போதும். ம்ம்ம்.. சும்மா கும்முனு தூக்கும். இது போக நல்ல “Bread Omlette, Puff, Cake - Bakery“ வகையறாக்கள், நல்ல Lemon டீ,  ஜூஸ் குடிக்க வேண்டுமென்றால் AGSக்கு முந்தைய சிக்னலைத் தாண்டியவுடன் வரும் முதல் கடை Regency Cool Zoneல் அருமையாகக் கிடைக்கும். இதுவும் ஒரு சேட்டன் கடைதான். ஸ்டராபெர்ரி முதல் சீதாப்பழம் வரை எல்லா வகையான ஜூஸும் நல்ல சுவையோடு போட்டுத் தருவார்கள். AGSக்கு படம் பார்க்க வருபவர்கள் கூட கொஞ்சம் சீக்கிரம் வந்தால் இங்கே வந்து ஜூஸ் குடித்துவிட்டு தியேட்டருக்கு போகலாம். தியேட்டர் உள்ளே எல்லாமே யானை விலை, குதிரை விலை.
என்னதான் வேலை வெட்டி, Code, Bug ன்னு Life மொக்கையாகப் போட்டாலும் இந்த மாதிரி ஒவ்வொரு கடையா போய் சாப்டீங்கன்னாதான் Lifea கொஞ்சம் Length ஆ ஓட்ட முடியும். எப்படிப் பார்த்தாலும் சந்தானம் சொல்ற மாதிரி "வாழ்க்கை என்பதே ஒரு அனுபவம்தானே".  சரி ரைட்டு. எனக்கு  ஒரு போன் கால் வருது. பாக்கலாம். Byee Guys.


#####################


"ஹலோ... சொல்லு மச்சி..."
"-------"
"நைட்டு நா வர்றதுக்கு லேட்டாகும்."
"--------"
"சைதாப்பேட்டைக்கு சாப்பிட போறேன்டா. அங்க யாரோ ஒரு பாய் புதுசா கடை ஆரம்பிச்சுருக்காராம். “Mutton Bulls eye ஆப்பம்"னு ஒண்ணு போடறாராம். செம டேஸ்ட்டா இருக்காம்.
"---------"
"ம்ம்ம்.. நீயும் வர்றியா. சரி. ஒரு 7.30க்கு ரெடியா இரு. பிக்கப் பண்ணிக்கிறேன்."

Friday, January 13, 2012

நண்பன் - ஆல் இஸ் வெல் - ஆல்வேஸ் வெல்.

நண்பன் பார்த்தாகி விட்டது. மனதுக்குள் ரம்மியமாக இருக்கிறது. வழக்கமான நல்ல கரம் மசாலா விஜய் படம் பார்த்து விட்டு வந்தால் இருக்கும் ஆராவாரமான ஆர்ப்பாட்ட மனநிலை அல்ல இது. இரண்டு வாரமாக கனவிலும் நினைவிலும் ஹார்ட்டிலே பேட்டரி போட்டு வைத்த எதிர்பார்ப்புகளை எல்லா வகையிலும் பூர்த்தி செய்திருக்கிறான் நண்பன். சமீப காலங்களில் யாராவது ஒரு நண்பரின் மூலமாக இன்னொரு புதிய நண்பரையோ நபரையோ சந்திக்கும் ஒவ்வொரு விஜய் ரசிகனுக்கும் இது நடந்திருக்கும். சில வேளைகளில் "இவரு விஜய் ரசிகர் தெரியுமா?" என்று போகும் பேச்சுகளின் பொழுதுகளில் "நீங்களா !!!! விஜய் பேனா... ? ஏங்க போயும் போயும் விஜய்க்கா?" என்பது போன்ற இளக்காரப் பேச்சுக்களைக் கேட்க நேர்ந்திருக்கும். விஜயைப் பிடிக்கும் என்று கூறினால் Bad Taste என்பதோ, விஜயைப் பிடிக்காது என்று கூறுவது, முகப்புத்தகத்தில் விஜயைப் பற்றி தேவையே இல்லாத அவதூறு செய்திகளைப் பரப்புவது, மார்பிங்க் செய்யப்பட்ட தவறான புகைப்படங்களைப் பதிவிடுவதுதான் ஒரு Intellectual மனோபாவம் என்று நினைக்கும் ஒவ்வொருவரின் இதயத்திலும் "இனிமேல் யாரும் அப்படில்லாம் சொல்லவோ செய்யவோ கூடாதுடா கண்ணா" என்று சேது படத்தில் வரும் வைத்தியரைப் போல மயிலிறகால் வருடி ஒத்தடம் கொடுத்திருக்கிறான் நண்பன்.


மொத்தத்தில் என் நண்பன் எப்படித்தான் இருந்தான் என்று வகைவகையாய் பார்ப்பதற்கு முன்னால் சில விஷயங்கள் பேசி விடுவோம்.1997 - 2000 இந்த காலகட்டங்களில் பள்ளி இறுதியோ கல்லூரியோ படித்துக் கொண்டிருந்தவர்களில் தமிழ் சினிமாக்களை விரும்பிப் பார்க்கும் பழக்கம் கொண்டிருந்த எவரிடத்தில் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள், கண்டிப்பாக ஆழ்மனதின் அடி ஆழத்தில் இருந்து சொல்லுவார்கள் உண்மையிலேயே விஜய் பிடிக்குமென்று. காரணம் மூன்று முக்கிய படங்கள் 1) காதலுக்கு மரியாதை 2) துள்ளாத மனமும் துள்ளும் 3) குஷி. எனக்கு 8 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பதின்பருவத்தின் துவக்கம் அது. டைரக்டர், அப்பாடக்கர், கதை, லைட்டிங்க், வெயிட்டிங் - இந்த சங்கதிகளெல்லாம் என்னவென்றே அறியாத அந்த ஞானசூன்ய வயதில் "சுண்டு விரலால கூட தொடல பாத்தியா... ஆனா செம லவ் ஸ்டோரில்லா... விஜய்-ஷாலினி சூப்பர்ல்லா" இதுதான் நாங்கள் காதலுக்கு மரியாதை படத்துக்கு கொடுத்துக் கொண்ட "TagLine". அந்தப் படத்தின் பாதிப்பில் நெல்லையின் ஒவ்வொரு புத்தகக் கடையிலும் போய் "அண்ணாச்சி... ‘Love and Love Only’ புக் இருக்கா" என்று கேட்டு பல அண்ணாச்சிகளின் முறைப்புக்கும் " ஏலே... செத்த மூதி... டவுசரே ஒனக்கு இன்னும் ஒழுங்கா இடுப்புல நிக்கல.. ஒனக்கு லவ்வு புக்கு கேக்கோ லவ்வு புக்கு... சவட்டிப் புடுவேன் சவட்டி... ஓடுல... " என்று சில அண்ணாச்சிகளின் நாக்கைத் துறுத்திய மிரட்டலுக்கு ஆளானதும் அக்காலம்தான். உண்மையைச் சொன்னால் "Amazon" முதல் "Flipkart" வரை எங்கெங்கிலும் தேடிப்பார்த்தாகி விட்டது. இன்று வரை அந்தப் புத்தகம் மட்டும் எனக்கு கிடைக்கவே இல்லை.


"என்னைத் தாலாட்ட வருவாளோ, மேகமாய் வந்து போகிறேன், மேக்கரீனா, பாப்பூ பாப்பூ" என்று சில பல கேசட்டுகளால் ரீவைண்ட்-பார்வார்டு என்று எனது Philips 2 in 1 டேப்ரிக்கார்டரை கதறக் கதறக் கற்பழித்துக் (நண்பன் எபக்ட்) கொண்டிருந்ததும் அதே காலகட்டம்தான். எனக்கு விஜய் மிக மிக அதிகமாய்ப் பிடித்துப் போனதும் இந்தக் காலகட்டத்தில்தான். அதற்குப் பிறகு ஏற்றங்கள், இரக்கங்கள் வந்து வந்து போனாலும் விஜயைப் பிடிக்கும், விஜய் படங்கள் ரொம்பப் பிடிக்கும் என்ற தன்னிலை மட்டும் மாறவே இல்லை. சுறா, குருவி, பகவதி போல் ஒரு சில படங்களைப் பார்த்த சில வேலைகளில் விஜய் கதைகளைக் கொஞ்சம் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாமே என்ற வருத்தம் மட்டும் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட சில நேர வருத்தங்களுக்கு ஒட்டுமொத்த வடிகாலாய் அமைந்திருக்கிறான் நண்பன்.
"நண்பனா.. அது 3 இடியட்ஸோட ரீமேக்தான?"

"ஆமா, 3 இடியட்ஸோட ரீமேக்தான். ஆனா 3 இடியட்ஸே 5 Point Someone ஓட ரீமேக் தான."

"என்னதான் இருந்தாலும் அமீர்கான் நடிச்ச ரோல்ல விஜயா..? அதெல்லாம் சரிப்படாது... அமீர்கான்ல்லாம் யாரு"

"ம்.. மொதல்ல சொல்லு... அமீர்கான்ல்லாம் யாரு? என்னய்யா இது பெரிய அநியாயமா இருக்கு... அமீர்கான் மட்டும் பொறக்கேலயே full costume போட்டுகிட்டு மூஞ்சீல எக்ஸ்பிரஷன் காட்டிகிட்டே பொறந்தாரா... அவரும் பாத்து பழகி வந்துதான நடிச்சாரு. அப்படியே பாத்தாலும் இந்தப் படம் எப்படி இருக்கு. விஜய் எப்படி நடிச்சிருக்கார்ன்றதுதான முக்கியம்" (பாலிவுட்டிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அமீர் மட்டுமே. அமீருக்காக மட்டுமே Taare zameen par, Rang de Basanthi, 3 Idiots, Faana ஆகிய திரைப்படங்கள் ஒவொன்றையும் 4,5 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்,)

"படம் நல்லாருக்கா?"

"ஆமா. படம் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாருக்கு. இப்ப என்ன சொல்ற"

"அப்டியா... ம்ம்ம்... ஷங்கர் படம்னால நல்லாதான் இருக்கும்...."

"ஒலக அநியாயம்டா சாமி... அப்படின்னா சுறா படம் நல்லா இல்லாம இருந்ததுக்கு எஸ்.பி.ராஜ்குமார்தான காரணம். எதுக்கு விஜய்ய சொன்னீங்க?"

"ம்ம்ம்... அது எப்படி சொல்ல முடியும்... அந்தப் படம்லாம் ஒரு படமா... தமன்னா நாய்க்குட்டிக்காக தற்கொலை பண்ண போவாளாம்... இவுரு காப்பாத்துவாராம். ..."

"யேய்.. நான் சொகப்பிரசவம், கொறப்பிரசவம்னாடா கேட்டேன்... ஏன்ப்பா சம்பந்த சம்பந்தமில்லாம பேசுறீங்க. சரி விடுங்க....எந்தக் காலகட்டத்துல்லயும் உங்ககிட்ட பேசி பிரயோஜனமே இல்ல... நண்பன் படம் பாருங்கப்பா... கண்டிப்பா மாறுவீங்க"
தமிழ் சினிமாவை பிரமாண்டங்கள் மூலம் மற்றொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும் பிதாமகன் பொறுப்பை தலையில் சுமந்து கொண்டிருக்கும் ஷங்கர் போன்ற ஒரு இயக்குநர், மிக எதார்த்தமான ஒரு கதை, தமிழ் சினிமாவின் ஆக்ஷன் மாஸ் திரைப்படங்களின் மூலம் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் இளைய தளபதி விஜய், இது தவிர ஜீவா, சத்யராஜ், இலியானா, சத்யன் என்று நல்ல திறமையான சகநடிகர் பட்டாளம், எடிட்டிங் – இசை – கேமரா -ஒலிக்கலவைக்கு ரசூல் பூக்குட்டி - பாடல் வரிகளுக்கு மதன் கார்க்கி என தமிழ்சினிமாவின் தலைசிறந்த தொழில்நுட்பப் பட்டாளம் இவையனைத்தும் மிகச்சரியாக ஒரு புள்ளியில் இணைந்தால் கண்டிப்பாக அலாவூதீன் தான்.. விளக்குதான்... மொத்தத்தில் மிகப்பெரிய அற்புதம்தான்.


விஜய் - நடிப்பு பிரமாதம். நடனம் அட்டகாசம். 37 வயதிலும் ஒரு மாணவனுக்கான உடல்மொழி, குரல்மொழி, இளமை துள்ளி விளையாடுகிறது. தமிழ் சினிமாவில் இன்றைய நிலையில் வேறு எந்த நடிகராலும் இந்தக் கதாப்பாத்திரத்தை இவ்வளவு செம்மையாய்ச் செய்திருக்கவே முடியாது. அப்படியே முக்கி முனகி, எம்பி எம்பிச் செய்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு ரீச், ஒரு ஓப்பனிங்க் கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. மிகச் சரியாய் சொல்ல வேண்டுமானால் ஆக்ஷ்னில் மட்டுமல்ல, பஞ்ச் டையலாக்கில் மட்டுமல்ல, இப்படியும் கூட மாஸ் கிளப்பலாம் என்பதை விஜய் அமைதியாய் ஆனால் மிக மிக அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார். The Vijay Mass is now Redefined.
விஜய், ஜீவா இரண்டு பேருமே செம பெர்மான்ஸ். பாட்டுல்லாம் சூப்பர். அஸ்க லஸ்கா செம ஸ்டைலீஷ். இருக்கானா இல்லையானா டான்ஸ்ல பட்டை. இந்த கதையோட்டத்துக்கு இந்தப்பாட்டு தேவையா என்று யோசித்தால் ஷங்கர் விஜயின் கடைநிலை ரசிகனையும் மனதில் வைத்து அமைத்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. இலியானா குடுத்த கேரக்டரை செய்திருக்கிறார், கொஞ்சலாக. சத்யராஜ், சத்யன் இருவருமே பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். வசனம். வயிறு வலிக்க சிர்க்க வைக்கிறது. நெறைய நல்ல ந்ல வசனங்கள் படம் நெடுக. மற்றபடி நீங்கள் எந்த எந்த சீன் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதை விட பிரமாதமாகவே இருக்கிறது. மிக மிக அதிகமாக நோண்டிப் பார்க்கும் comparison attitude ஓடு இந்தப் படம் பார்த்தால் கண்டிப்பாக ஒரு அருமையான படம் கொடுக்கும் மிகச்சிறந்த உணர்வை இழந்து விடுவீர்கள். தமிழுக்கு இது உண்மையிலேயே வேறு நிறம்.வேறு சுவை. அனுபவித்துப் பாருங்கள்.

என் ப்ரெண்டப் போல யாரு மச்சான்...
ஒரு கள்ளம் இல்லா உள்ளம் வச்சான்...
அவன் முன்னே வானம் குள்ளம் மச்சான்....

மொத்தத்தில் நண்பன் - ஆல் இஸ் வெல் - ஆல்வேஸ் வெல். A very very refreshing feel good movie.

Tuesday, January 10, 2012

அழிக்கப் பிறந்தவன் - நாவல் - எனது பார்வை.


நேற்று புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம் பலவற்றுள் கொஞ்சம் முக்கியாமானது/முடிவு செய்து வாங்கியது அழிக்கப் பிறந்தவன். லக்கிலுக்கின் வலைப்பூவில் வாசித்த இரண்டு அத்தியாயங்கள் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. வாங்கியாகி விட்டது. ஆனால் ஏற்கனவே சென்ற வாரத்தில் வாசிக்க ஆரம்பித்த சற்று தடிமனான ஒரு புத்தகம் ஓடிக் கொண்டிருந்தது. முடிக்க நான்கு நாட்களாவது ஆகும். அதற்குப் பிறகுதான் இதனை எடுக்க முடியுமென்று நினைத்திருந்தேன். ஆனால் நேற்றிரவு நண்பன் சிவா போட்ட இந்த முகப்புத்தகப் பதிவை வாசித்தவுடன் தடிமனை மூடிக் கவிழ்த்து விட்டு இதை எடுத்து விட்டேன்.


அழிக்கப்பிறந்தவன் - லக்கிலுக்கின் இந்த முதல் நாவல், ரத்தினச்சுருக்கமாய்ச் சொன்னால் "ஒரு சுவாரசியம் குறையாத விறுவிறுப்பான வாசிப்பானுபவம்". எது வேணும்னாலும் சீப்பா வாங்கலாம்" என்ற சொலவடையோடு சென்னைவாசிகள் நாம் அடிக்கடி போய் வரும் பர்மா பஜார்தான் கதைக்களம். பர்மா பஜாரின் கருப்புச் சந்தை மற்றும் ரத்தமும் சதையுமாய் அங்கு உலவும் மனிதர்கள் பற்றிய டீடெயிலிங் மிக அபாரம். கிட்டத்தட்ட சுஜாதா நிகர். போகிற போக்கில்
கதைக்களம் ப(சு)ற்றிய பல அரி(றி)ய(யா) தகவல்களை அள்ளித்தெளித்துக் கொண்டே செல்கிறது.
இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயமுமே ஒரு அழுத்தமான, அதிவேக சிறுகதையின் தன்மையோடு அமைந்திருப்பதுதான் இந்நாவலின் பலம். நண்பன், ஷங்கர், விஜய், DVD, அரசியல், S Pictures போன்ற சீசனல் சென்சேஷன்களின் பிரயோகம் பிரத்யேகம்.


சிலபல அத்தியாங்களில் பலசில விவரணைகள் பிரமாதப்படுத்துகிறது. எ.கா.வாக இந்நாவலின் மாரி என்னும் கதாப்பாத்திரம் தப்பித்து பேருந்தில் ஊர் சுற்றுவதாய் ஒரு பகுதி. வழக்கமாக ரூட் பஸ்கள் நிற்கும் மோட்டலின் சில கணங்களை பற்றிய விவரணைகளை அசத்தலாக சொல்லிவிட்டு "போலீசுக்கு பயந்து, எதிர்களுக்கு(எதிரிகள் - பக்.44ல் அச்சுப்பிழை) பயந்து பயணிக்கிறவன் தன்னைத் தவிர வேறெவனும் இந்த பஸ் ஸ்டேண்டில் இப்போது இருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டான் மாரி" என்று முடிகிற விவரணை. சற்றேரக்குறைய JK (அ) ஜெயகாந்தன் நிகர். அதிகம் ஆனால் 90 முதல் 100 நிமிடங்களுக்குள் வாசித்து முடிக்கப்பட்டாலும், அடுத்த மூன்று மணி நேரத்துக்காவது சிந்தனையோட்டத்தில் வலம் வருவதுதான் வாப்பா, மாரி, மல்லிகா என்னும் கதாப்பதிரங்களின் தனிநபர் வெற்றி. - In turn நாவலாசிரியரின் ஒட்டுமொத்த வெற்றி.


ஒரு ஒண்ணரை முதல் இரண்டு மணி நேரத்திரைப்படத்துக்கான களம் மற்றும் பாத்திரங்கள் கச்சிதமாய் இருக்கும் இந்நாவலை டீட்டெயிலிங்கில் பிராமதப்படுத்தும்(என் வரையில் கே.வி.ஆனந்த் போல) ஒரு நல்ல இயக்குநர், ஒரு நல்ல குழுமம் சேர்ந்தால் என்றேனும் ஒருநாள் முழுநீளத்திரைப்படமாக பட்டை கிளப்பக்கூடும். அவ்வாறு ஒன்று நடந்தால் என்னுடைய பாத்திரத்தேர்வாக இதுதான் இருக்கும். வாப்பாவுக்கு "பசங்க" ஜெயப்பிரகாஷ் அன்றி வேறொருவர் யான் அறியேன் பராபரமே. மாரிக்கு சம்பத் சரிப்படுவார். சுனிதாவுக்கு 'சுப்ரமணியபுரம்' சுவாதி. கொசுவுக்கு ஆடுகளம் முருகேசன்.. மல்லிகாவுக்கு ச்... ம்ம்ம்ம்.... ச்... ச்... ச்... ச்... எதற்கு வம்பு. என் எண்ணங்கள் என்னோடே போகட்டும். மல்லிகா மாமான் நிக்காலோ. யார் வேண்டுமானாலும் நடிக்கட்டும். நன்றாகத்தான் இருக்கும்.

மொத்தத்தில் பர்மா பஜார், பூக்கடை, பாரீஸ்கார்னர், ஆர்மேனியன் தெரு என்று ஒரு பிரமாதமான லோக்கல் சுத்து சுத்திக் காட்டினான் அழிக்கப் பிறந்தவன். 40/45.
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.