Tuesday, January 31, 2012

சுகாவும், சுதந்திரம் சாரும், பின்னே ஞானும்...

ஆனந்த விகடனில் மூங்கில் மூச்சு பிரசுரம் ஆகியிருந்த முதல் சில வாரம் அது. நெல்லை டவுண் சாப்டர் பள்ளியில் சுதந்திரம் சார்வாள் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தைப் பற்றி எழுதியிருந்தார் சுகா. "யாரிந்த சுகா?" என்று தெரியாதிருந்தாலும், என்னவோ எனது பக்கத்து பெஞ்சு தோழன் எழுதும் கட்டுரைகள் என்ற அன்யோன்யம் மூங்கில் மூச்சின் மேல் அன்றே ஏற்பட்டு விட்டது.. ஏனென்றால் அதே சுதந்திரம் சார்வாள்தான் ஜான்ஸ் பள்ளியில் எனக்கும் ஆறாம் வகுப்பில் ஆங்கிலமும் கணக்கும் சொல்லிக் கொடுத்த வகுப்பு வாத்தியார், ஏழாம் வகுப்பு சயின்ஸ் வாத்தியார். சுதந்திரம் சார்வாள்லாம் என்றைக்குமே சிலாகித்து எழுதப்பட வேண்டிய மனிதர்தான். அதுவரை 'மிஸ்'களிடம் மட்டுமே படித்து விட்டு முதல் முறையாக 'சார்'களிடம் வரும் ஆறாம் வகுப்பு மாணவர்களை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்று நன்கு அறிந்தவர் அவர். நாங்கள் ஜான்ஸ் பள்ளியில் படித்தது ஆங்கில வழிக்கல்வி என்பதால் பெருவாரியான நேரங்களில் வகுப்பில் ஆங்கிலத்தில்தான் பேசுவார் அவர். அவர் மிக மிக சந்தோஷமாக இருக்கும் தருணங்களில் தனது பழைய கதைகளையும் பழைய மாணவர்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பார். இந்த மாதிரி தருணங்களில் வகுப்பில் நாங்கள் யாராவது பேசிக் கொண்டோ சிரித்துக் கொண்டோ இருந்தால் அப்படியே ஓரக்கண்ணால் பார்த்து "எலேய்" என்பார். நாம் அப்படியே பம்மியபடியே அவரைப் பார்த்தால் "Your ding dong will be cut off… Soon" என்று சொல்லி நடுவிரலையும் ஆள்காட்டி விரலையும் ஆட்டிக்கொண்டே சிரிப்பார். மற்ற நேரங்களில் ஏதாவது குசும்பு செய்தால் நம் நெற்றியில் சாக்பீஸ் பொடி பட்டை அடித்திருக்கும். மரக்கட்டை டஸ்டர் நம் காலுக்கு கீழே. சுதந்திரம் சாரைப் பற்றிய குறிப்பு வந்ததற்குப் பிறகான வாரங்களில் ஆனந்த விகடன் கைக்கு கிடைத்த முதல் நொடியிலேயே விரல்கள் புரட்டிச் செல்லும் பகுதியாக மூங்கில் மூச்சு அமைந்து போனது. குறுக்குத்துறை முதல் குஞ்சு வரை, சென்ட்ரல் தியேட்டர் முதல் ராயல் டாக்கீஸ் வரை நெல்லை சார்ந்த எதுவுமே எனக்கு கற்பனைக்கான விஷயமே இல்லையென்பதால் சினிமா, கர்நாடக இசை சம்பந்தமாக எழுதிய ஓரிரு பகுதிகளைத் தவிர்த்து, மூங்கில் மூச்சு முழுதுமே எனது பழைய டைரியை இன்னும் கொஞ்சம் பழசாக்கிப் படிப்பது போன்ற உணர்வையே தந்தது. இந்தக் கட்டுரைத் தொடரின் கடைசி வாரத்தில்தான் சுகா, தான் ‘மரியாதைக்குறிய தமிழறிஞர் அய்யா’ நெல்லைக் கண்ணனின் புதல்வர் என்பதைச் சொல்லியிருந்தார். எனக்கென்னவோ அதைக் கடைசி வாரத்தில் சொன்னதுதான் சரி என்றே பட்டது. ஒருவேளை அவர் முன்னமே சொல்லியிருந்தால் பக்கத்துப் பெஞ்ச் தோழன் உணர்வு மங்கி ஒரு மரியாதை வந்திருக்கக் கூடும்.


மூங்கில் மூச்சு


ஆனந்த விகடனில் மூங்கில் மூச்சை நிறுத்திக் கொண்ட பிறகு அவ்வப்பொழுது சொல்வனத்தில் சுகாவின் புதிய பழைய கட்டுரைகளை படிப்பதுண்டு. ஒருமுறை சொல்வனத்திலே செண்பகத்தக்காவின் குரல் என்ற தலைப்பில் "என் வானிலே ஒரே வெண்ணிலா" புகழ் ஜென்சியைப் பற்றி சுகா அல்வாத்தமிழில் எழுதிய கட்டுரையைப் படித்து/கேட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு சிலாகித்துக் கொண்டே இருந்தேன். "அடுக்களையின் குழம்புக் கொதியினூடே கேட்கும் அக்காவின் குரலாக, குளியலறையிலிருந்து சந்திரிகா சோப்பின் நுரைத்த நறுமணத்துடன் வெளியே கசிந்து ஒழுகும் அத்தை மகளின் குரலாக, மதிய உணவுக்குப் பின் ஒட்டுமொத்த வீடும் உறங்கிக் கொண்டிருக்க, ஒருச்சாய்த்துப் படுத்தபடி, ‘ராணி’ புத்தகத்தைப் புரட்டியவாறே, தனக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடும் மதினியின் குரலாக" என்று ஜென்சியின் குரலை உவமைப்படுத்தியிருந்தார் சுகா. தொடர்ச்சியாக ஏழாவது முறை இந்தக் கட்டுரையை படித்த பொழுதில், அது எப்படி இவரால் மட்டும் ஒவ்வொரு காற்புள்ளி, அரைப்புள்ளியிலும் கூட நெல்லையை உரித்து வைக்க முடிகிறது என்று வியந்து உச்சந்தலையில் கை வைத்தேன். குளிர்ந்திருந்தது.


                     இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற பொழுது மூங்கில் மூச்சு தொகுப்பாக வந்திருந்தால் வாங்க வேண்டும் என்று நினைத்துச் சென்றிருந்தேன். ஆனால் ஒரு நண்பன் போன் செய்து தான் மூங்கில் மூச்சு வாங்கி விட்டதாகவும் முடித்து விட்டு என்னிடமே தந்து விடுவதாகவும் சொன்னான். நானும் பட்டியலின் மற்ற புத்தகங்கள் வாங்குவதில் மும்முரமாகி விட்டேன்.  கிழக்கை சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது தற்செயலாக கண்ணில் பட்டது "தாயார் சன்னதி - சுகா". திருப்பிப் பார்த்தேன் பாலுமகேந்திரா அவர்களின் பொழிப்புரை இருந்தது. தாமதிக்காமல் தூக்கிக் கொண்டேன். அதைப் படிக்க ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே மனசுக்குள் முடிவானது. இது கடகடவென்று வாசித்துத் தள்ளிவிடக் கூடிய தொகுதி வகையறாப் புத்தகம் அல்ல. நமக்குப் மிகவும் பிடித்த பால்கோவாவையோ, நெய்விளங்காவையோ எப்படி விள்ளல் விள்ளலாக விண்டு ருசி அனுபவித்து நீண்ட நெடுநேரம் சாப்பிடுவோமோ அப்படி வாசிக்க வேண்டிய புத்தகம். ஒரு நாளைக்கு மூன்று, அதிகம் ஆனால் நான்கு பகுதிகளுக்கு மேல் வாசிக்கக் கூடாது என்று சுயசத்தியம் செய்து கொண்டேன்.  வாசிக்க வாசிக்க மகிழ்ச்சி வலுத்துக் கொண்டே வந்தது.


தாயார் சன்னதி
திருநெவேலி, எனது ஊர், எனது மண், எனது மக்கள், இருட்டு லாலா கடை, நெல்லையப்பர் கோவில் தேர், வாகையடி முக்கு சொக்கப்பனை, பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், பாட்டையாக்கள், மறந்தும் கூட கணவன் பெயரைச் சொல்லாத ஆச்சிகள், ஊர்க்குசும்பு, நக்கல்-நையாண்டி, பொருட்காட்சி, விஞ்சை விலாஸ், சொதி, இஞ்சிப்பச்சடி, டவுண் மார்க்கெட். சொன்னால் சொல்லிக் கொண்ண்ண்ண்ண்ண்டே போகலாம். நாம் பார்த்தவற்றை நாம் பார்த்த மாதிரியே எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் வாசிக்கும் ஒரு மிகச்சிறந்த வாசிப்பானுபவத்தை கொடுத்தது தாயார் சன்னதி. பல இடங்களில் குஞ்சரமணியை என்னுடைய நிலைக்கண்ணாடி உருவமாகத்தான் என்னால் பார்க்க முடிந்தது. "கொளுத்தி விடுறதுக்காகவே பட்டருங்கள் வளக்காங்கல்லா" என்று சொக்கப்பனையை ஒட்டி குஞ்சு அள்ளி விடும் பொழுது அப்படியே அது 15 வருடத்துக்கு முந்தைய நான். நெல்லையில் எங்கள் வீட்டிலும் முதல் டி.வி டைனமோ கம்பெனிக்காரன் தயாரித்ததுதான். இப்படி நான் “கேட்ட” கூட அல்ல, கண்ணால் கண்ட விஷயங்கள் ஒவ்வொன்றையும் மனத்திரையில் படம் காட்டி விட்டது தாயார் சன்னதி.  ஏன் நெல்லையின் நிறத்தையும், மணத்தையும் கூட விடவில்லை.  இந்தப்புத்தகத்தில் இருக்கும் 44 பகுதிகளில் ஒரு 300 இடங்களிலாவது துணுக்குற்று பல முறை வாசித்து வாசித்து வெடிச்சிரிப்பு சிரிக்க வேண்டி இருந்தது. சுகாவின் கையில் மாயக்கோல் ஒன்று வைத்திருக்கிறார். அதில் அவரால் இரண்டு வேலைகளைச் செம்மையாய்ச் செய்ய முடிகிறது. ஒன்று உங்கள் மனதில் காற்றடைத்து விட்டு கனமாக்கி கண்பனிக்கச் செய்வது, இன்னொன்று உங்கள் மனதில் இருக்கு கொஞ்சநஞ்ச காற்றையும் இறக்கி லேசாக்கி வயிறு குலுங்க சிரிக்க வைப்பது. ஆனால் அவர் இதில் எந்த வேலையைச் செய்தாலும் அது பரமானந்தமாகவே இருக்கிறது.


                      இந்தப் புத்தகத்தில் "ஜெயன்ட் வீல்" என்ற பெயரில் ஒரு அத்தியாயம் வருகிறது. எங்கள் நெல்லையின் வருடாந்திர கவர்மெண்டுத் திருவிழாவான பொருட்காட்சி @ பொருக்காச்சி பற்றியது அது.  ஒரு ஞாயித்துக்கிழமையின் பின்னிரவில்தான் அதை முதல் முறை வாசித்தேன்.  அந்தப் பொருட்காட்சிக்கு சுகா தன்னுடன் வந்ததாய்ச் சொல்லியிருக்கும் கமிஷன் கடை சிவப்பழ பெரியப்பாவெல்லாம் நான் பாளை காந்தி மார்க்கெட்டில் பார்த்த பற்பல பெரியவர்தான். பேல்பூரி முதல் டில்லி அப்பளம் வரை, மரணக்கிணறு முதல் அறநிலையத்துறை ஸ்டால் வரை எல்லாவற்றையும் நிதர்சனமாய்க் கடந்து ஜெயன்ட்வீல் ராட்டுப் பக்கம் வந்தது.   ஜெயன்ட்வீல் சுற்ற ஆரம்பித்தது. நான் சிரிக்க ஆரம்பித்தேன். ஜெயன்ட்வீல் நின்றது. வெறித்தனமாய்ச் சிரிக்க ஆரம்பித்தேன். அடக்க வாய்ப்பே இல்லாமல் நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் படித்துப் படித்து தலயணையில் மோதி மோதி சிரித்துக் கொண்டே இருந்தேன். "ரெண்டு மணிக்கு ஏன் இப்படிச் சிரிக்கிற" என்றவாறே பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த அப்பா எழுந்து வந்து விட்டார். "உக்காந்து இத வாசிங்க" என்றேன். "காலைல வாசிக்கிறேன்" என்றார் அப்பா அரைத்தூக்கத்தில். "இல்ல. இப்பவே வாசிங்க" என்றேன். கண்ணாடியை எடுத்து வந்து போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். நான் சிரிப்பை அடக்கமாட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு நிமிடம் கடந்திருக்கும். இந்த முறை அப்பாவுக்கு ஜெயன்ட்வீல் சுற்ற ஆரம்பித்தது. அரை நொடியில் புத்தகத்தை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தார். "முழுசுமா படிங்க" என்றேன். சிரிப்பை அடக்கமாட்டாமல் படித்து முடித்தார். "அனுபவிச்சு எழுதிருக்கான்டா" என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். ஒருவர் சிரிப்பை மற்றவர் பார்த்து "சிரிக்காத..” “சிரிக்காதீங்க..." என்று சொல்லிச் சொல்லியே ஒரு அரை மணி நேரமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது நினைத்தாலும் அலுவலகத்தில் அமர்ந்து கோட்டிக்காரனாய்த் தனியாக சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.  இந்தப் பானைக்கான ஒரு சோறுதான் இது.


                      இந்தப் புத்தகத்தோடு ஒரே ஒரு வருத்தம்தான். 44 அத்தியாயங்களை குறைந்தது 12 நாட்களுக்காவது வாசிக்க வேண்டும் என்று சுயசத்தியம் செய்து கொண்டதை மட்டும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. ஐந்து நாட்களிலேயே முடித்து விட்டேன். இரண்டாம் முறை ஓடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு பால்கோவா பேக்டரி.

12 பேர் சொன்னது என்னான்னா..:

HotlinksIN.com திரட்டி - வலைப்பதிவுகளின் சங்கமம் said...

மலரும் நினைவுகளை அசை போடுகிறது பதிவு...

துளசி கோபால் said...

வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது உங்கள் அருமையான விமரிசனம்.

Anonymous said...

I loved suka all the time I read... but your kirukkal is very nice. Ram I love tirunelveli for many reasons. and these are few in them...
Palanikkumar

Sivagnanam Chandrakanth said...

எனக்கு சுதந்திரம் சார் என்றாலே நினைவுக்கு வருவது கலைஞரும் அவரது கல்லக்குடி போராட்டமும் தான், ஒரு வகையில் அரசியலின் மீது ஈடுபாடு வருவதற்கு அவர் தான் காரணம்.. You made me to remember the things which I forgot, Thanks for this post. Should I say anything about your writing?I don't think so, it speaks for itself :)

பத்மா said...

arumai ..am a hard die fan of suga's writing .is he aware of this post?

ராம்குமார் - அமுதன் said...

மிக்க நன்றி பத்மா.. ஆம் அவருக்கு முகப்புத்தகத்தில் தெரியப்படுத்தினேன். மகிழ்ந்தார்...

மோகன் குமார் said...

// ஒரு நாளைக்கு மூன்று, அதிகம் ஆனால் நான்கு பகுதிகளுக்கு மேல் வாசிக்கக் கூடாது என்று சுயசத்தியம் செய்து கொண்டேன். //

Good. That is how these books are to be read. In fact when we ready weekly one chapter( when released in Vikatan originally) it was too good.

//44 அத்தியாயங்களை குறைந்தது 12 நாட்களுக்காவது வாசிக்க வேண்டும் என்று சுயசத்தியம் செய்து கொண்டதை மட்டும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. ஐந்து நாட்களிலேயே முடித்து விட்டேன்//

:))

Muthu Subramanian (Smams) said...

Padichahcu bossu....namma oora suthi suthi eluthirukkar.

Oru Rewind mathiri irunthuchu.

Ordered it from Flipkart.

செழியன் said...

வணக்கம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

அமுதா கிருஷ்ணா said...

super ah eluthi irrukeenga.Nanum Tineveli than.Puttarthi koil pakkam veedu irrundhuchu.

Meena said...

Very nice Blog. My native is Tirunelveli too. Please let me know where I can get the book "Thayar sannidhi"? Even the few glimpses from the book made me very nostalgic.

kannan venkataraman said...

KEEP WRITING. WE KEEP READ & ENJOYING.

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.