Thursday, February 23, 2012

வேளச்சேரி எண்கவுன்டர் - சிந்தனையும், சில கேள்விகளும்.


ஒரு மூன்று மாதம் இருக்கும். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் தக்ஷின் சித்ராவைத் தாண்டி கொஞ்ச தூரத்தில் ரோட்டைக் கடக்க முயன்ற முதியவர் ஒருவரை உயர்ரக Ford கார் தட்டி விட்டது. அவர் ஒரு நான்கடி தள்ளிப் போய் கீழே விழுந்து விட்டார். காரை மிகவும் பொறுமையாக ஓரம் கட்டி நிறுத்தி விட்டு கண்ணாடியில் முகம்பார்த்து தலை கலைத்து மிகப் பொறுமையாக ஓட்டுனர் இருக்கையில் இருந்து இறங்கிய வண்டுத்தாடிக்காரன் ஒருவன் மிக  மிக இளக்காரமான நமுட்டுச் சிரிப்புடன் கேட்டான் "கெழவன் இருக்கானா, செத்துட்டானாய்யா?" சினிமாவில் மட்டுமே மிகக் கொடூரமாக சித்தரிக்கப்பட்ட வில்லன்களின் அறிமுகக் காட்சியில் இத்தகைய வசனத்தைக் கேட்டு பழக்கப்பட்ட எனக்கு அதீத வித்தியாசமாக இருந்தது அவன் செய்கை. மற்றவர் உயிர் மீது நமக்குள்ளான மரியாதை குறைந்து கொண்டே வருவதை மிக உன்னிப்பாக உணர்ந்த தருணம் அது. பாரீஸ் கார்னர் பள்ளியின் மாணவன் அந்தப் பள்ளியின் ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவமும், அதற்கு அடுத்த வாரத்தில் திண்டுக்கல் பக்கத்தில் ஒரு பள்ளியில் "சத்தம் போடாதே" என்று கண்டித்த ஆசிரியரை "மெட்ராஸ்ல டீச்சரக் குத்துன மாதிரி குத்திக் கொண்டே புடுவேன்" என்று மிரட்டிய மாணவனின் செய்கையும்  பதின்வயதினர் அளவுக்கு இந்தத் தாக்கம் ஊடுருவியிருப்பதற்கான கண்கூடான சாட்சிகள். மனிதர்களில்தான் எத்தணை வகை. நாம் அன்றாடம் சந்திக்கும் எத்தணை எத்தணையோ நல்ல உள்ளங்களுக்கு மத்தியில் சில நேரங்களில் இத்தகைய நபர்களையும் சந்திக்கத்தான் நேரிடுகிறது. ஆனால் கொலை தப்பில்லை - வீரச்செயல்தான் என்ற உணர்வு நம்மிடையே மிதமாக பரவிக்கொண்டே வருகிறது என்பது மறுக்கவியலாதது. கவலைக்குரியது.இன்றைய வங்கிக்கொள்ளையர்களின் எண்கவுன்டர் சம்பவம் பற்றியதான செய்தியைக் காலைத் தொலைக்காட்சியில் பார்த்ததிலிருந்தே மனம் சரியா-தவறா என்ற மனக்கணக்கு போட ஆரம்பித்து விட்டது. அதிலே என் மனத்தில் எழுந்த சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன். பதில் - என்னவாக இருந்தாலும் நியாயமாக இருந்தால்... சரி போங்கப்பா. 

அது ஏன் அத்தணை அவசரம்? வேறு எதிலும் ஏற்படாத அவசரம்?

வீடியோ ஆதாரம் வெளியிட்டதிலிருந்து சரியாகப் பத்து மணி நேரத்துக்குள் என்க்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறது என்பதை எல்லா தொலைக்காட்சி செய்திகளும் அழுத்திச் சொல்கின்றனவே? அது ஏன்?

அவர்கள் ஐந்து பேருக்குமே கொள்ளையில் தொடர்பு இருக்கிறது என்பது எதை வைத்து முடிவு செய்யப்பட்டது? யாராவது ஒரே ஒருவர் அப்பாவியாக இருக்கக்கூடுமேயானால் அதற்கான பதில் என்ன?

பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் அதிகம் இல்லாத இரவு நேரம். பொதுமக்கள் யாரும் பிணைக்கைதிகளாகவும் பிடித்து வைக்கப்படவில்லை. இந்நிலையில் ஏன் மயக்க வாயுவை  வீட்டுக்குள் செலுத்துவதோ வேறு எந்த யுக்தியோ பயன்படுத்தப்படவில்லை? 36 மணிநேரமாக முயற்சி செய்து மயக்கவாயு செலுத்திப் பிடித்த உ.பி மாநில போலீசார் பற்றிய செய்திக்குறிப்புஇங்கே. ரஷ்யாவில் குழந்தைகளையும் பெண்களையும் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டியவர்களை மயக்க வாயு செலுத்தி பிடித்திருக்கிறார்கள் என்ற செய்தியையும் நண்பர் தபூ சங்கர் முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தார்.

கீழே இருக்கும் புகைப்படத்தில் இருப்பது போலானால் அந்நபர் இரவு 1 மணிக்கு காலில் ஷூ அணிந்திருப்பதற்கான அவசியம் என்ன?


 ஏன் ஐவரையுமே கொலை செய்து இந்த இரண்டு கொள்ளைகள் மட்டுமல்லாது வேறு ஏதாவது சதித்திட்டங்களும் தீட்டப்பட்டிருந்தனவா? வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற விஷயங்களைச் சேகரிக்கும் வாய்ப்பு நழுவவிடப்பட்டிருக்கிறது?

எப்படிப்பார்த்தாலும் கொள்ளைக்கு கொலை தண்டணையாகுமா? நூற்றுக்கணக்கான பேரைக் கொன்ற நாசச்செயலில் ஈடுபட்ட கசாப்பையே இன்னும் பிரியாணி ஊட்டி அழகு பார்க்கும் தேசத்தில் தமிழர்கள் மட்டும்தான் மிக வீரமானவர்களா?

நேற்று வெளியிட்ட அந்த வீடியோவில் இருந்த ஆசாமிதான் கொல்லப்பட இருப்பவர்களில் ஒருவர் என்று உறுதி செய்யப்படுவதற்குள், ஏன் இன்று காலை நேரம் அல்லது இரவு வரைக் கூட காத்திருக்காமல் இது செய்து முடிக்கப்பட்டிருக்கிறது?

இத்தணை கேள்விகள் எழுந்தாலும் இனிமேல் வங்கியயைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் "ஏன்" விளையாட்டுச் சிந்தனை கூட யாருக்கும் வரக்கூடாது என்ற முடிவோடே இது செய்யப்பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது. அது தவிர வேறு சில முடிவுகளும், முடிச்சுகளும் இருக்கக்கூடும் என்பதே நிதர்சனம்.  அவிழுமா? அவிழ்க்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

3 பேர் சொன்னது என்னான்னா..:

Anonymous said...

நல்ல கேள்விகள். ஆனால் அவர்கள் பீகாருக்கு தப்பி ஓட முடிவு செய்து கிளம்பியிருந்தார்கள் என்கிறது போலீஸ். வீட்டு சொந்தக்காரரிடம் ஒரே நாளில் நாங்கள் காலி செய்வதாக சொல்லி இருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் எல்லாவற்றையும் மீடியாவிடம் விளக்க முடியாது. இதில் துப்பு கொடுத்தவரின் எதிர்கால பாதுகாப்பு என்னாவது.மீடியாவும் பொதுமக்களும் எல்லாத்தையும் என்னிடம் சொல்லு என்று சொன்னால்? ஆக தேவை ஒரு விசாரணை என்பதுதான் சரி.

அவர்களிடம் துப்பாக்கி இருந்திருக்கிறது. சுட்டிருக்கிறார்கள். போலீஸ் செத்திருந்தால் மனித உரிமை பிரச்னை வந்திருக்காது அல்லவா?

கொள்ளைக்கு கொலை தீர்வாகாது.இது வரை என்ன நடந்தது என்பது யாருக்குமே தெரியாது.அதனால் பொறுத்திருந்துதான் பாக்கணும்.

பி.கு.; கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்தக் கேள்வியையும் என் சார்பாகச் சேர்க்கவும்.
அரசியல்வாதிகளும் அம்மா உட்பட மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். கோட்டுக்கலைகிறார்கள்.
இவர்களை என்ன? செய்வதாய் உத்தேசம்...?
என்கவுண்டரில் போட்டுத் தள்ளலாமா?

kalyan said...

இந்த கொலையைவிட கொடுமையானது , கொள்ளையர் கொல்லப்பட்டதற்கு, நம்மில் பலர் அதை கொண்டாடுவது !

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.