Friday, March 30, 2012

"3" திரைப்படம் - 3 ரியாக்ஷன்ஸ்3 திரைப்படத்தோட விமர்சனத்த நம்ம 3 ரியாக்ஷன் படங்கள்ல பாக்கலாம்.

ஹலோ ப்ரம்மி சார்... "3" படம் பாத்துட்டீங்க போல... ம்ம்ம்ம்...

படத்துல பாட்டுல்லாம் கேக்குறதுக்கு  எப்படி.? தனுஷ் நடிப்பு எப்படி ?  சிவகார்த்திக்கேயன் டைமிங்/காமெடி எப்படி? 


படத்துல "First Half" எப்படி? ஸ்ருதி நடிப்பு எப்படி? நல்லாருந்துச்சா? என்ன சார்... ? ஏன் மூஞ்சிய இப்படி வைக்குறீங்க? அப்பன்னா "Second Half"வும் கிளைமேக்ஸும் தான் உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருந்தது போல...அய்யய்யோ... விட்ருங்க சார் ஓடிர்றேன்... ஐ ஆம் வெரி வெரி பாவம்...

தியேட்டரில் இருந்து வெளியே வரும்பொழுது கேட்ட சில வசனங்கள் :

"இந்தப் படத்துக்கு வந்ததுக்கு முப்பொழுதும் உன் சைக்கோத்தனங்கள் படத்தையே முப்பது வாட்டி பாத்ருக்கலாம் மச்சி" #பீலிங்ஸ்.

"டேய்... மாசக்கடைசின்னு சொல்லியும் நீதான என்னைய ஏமாத்தி இந்தப் படத்துக்கு கூட்டிட்டு வந்த.. ஒழுங்கா டிக்கெட் காசத் திரும்ப குடு.... அப்படியே இன்னைக்கு ராத்திரி ட்ரீட் குடு... செம டென்ஷன்ல இருக்கேன்... கொலைகாரனா ஆக்காத...." #மிரட்டல்.

"Hey dude, awesome romantic first half da... Taken back to my school days... Memories... ச்சோ ச்ச்வீட் யூ நோ...Even 2nd half கூட my characterடா மச்சான்..." #சைக்கோ பீட்டர்ஸ்.


"மச்சி... நான் சிம்புவோட வல்லவன், ஷாம் நடிச்ச தூண்டில், சாம் ஆன்டர்சனின் யாரோ யாரோ கூட பாத்து அவ்ளோ கடுப்பாகலடா.. ஆனா இந்த படம், முடியல மச்சான்..." #Confident இல்லாத பாய்ஸ்


"எனக்கு முதல்லயே தெரியும் மச்சி, படம் மொக்கையாதான் இருக்கும்ன்னு.. இது இன்னும் கொஞ்சம் சூர மொக்கை அவ்ளோதான்...." #அய் வலிக்கலையே வலிக்கலையேஆனால் ஒன்று மட்டும்தான் புரியவில்லை.. எல்லாரும் கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் ஏன் இப்படி கடுப்பாக இருந்தார்கள் என்று. ஒரு Scenario... இந்தியா பாகிஸ்தான் 20 - 20 மேட்ச்... இந்தியா பேட்டிங்... ரெய்னா பேட்ஸ்மேன்... கடைசி மூன்று பந்துகள்... ஆறு ரன் எடுத்தால் வெற்றி... முதல் பந்து யார்க்கர்... ரன் இல்லை. இரண்டாம் பந்து பவுன்சர்... ரன் இல்லை... கடைசி பந்து.  ஷார்ட் பால்... Straightல் பிரமாதமான சிக்சர்... வெற்றி... எப்படிக் கத்துவோம், குதூகலிப்போம்.. இப்படத்தின் கிளைமேக்ஸில்லும் அப்படித்தான். தனுஷ் தற்கொலை செய்து கொள்வதற்காக கத்தியைக் கழுத்துப் பக்கத்தில் கொண்டு போகிறார்... பயத்தில் அறுக்கவில்லை... அழுகையோடு இரண்டாம் முறையும் கத்தியைக் கழுத்து வரைக் கொண்டு போகிறார், மொத்தத் தியேட்டரும் அலறுகிறது "Come on Dhanusssssh… You can…. Die soon… Come on maaaaaan.. Getting late... Do it Do it" இம்முறையும் இல்லை. மூன்றாம் முறை... கொண்டு போகி.... றா ....றா..... றார்.. அறுத்தே விட்டார்... தற்கொலை வெற்றி... படம் முடிகிறது "ஹேஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்" என்று கத்தியவாறே மொத்தத் தியேட்டரும் குதூகலத்தில் கும்மாளமிடுகிறது.  இயக்குநருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. நிற்க தனுஷ் வில்லனோ, நெகட்டிவ் காரெக்டரோ அல்ல.. ஹீரோதான்.
 முதல் பாதி முழுவதும் 1970களின் க்ளிஷேக்கள்... உட்காரவே முடியவில்லை. ஊரோடு கொஞ்சமும் ஒத்து வாழாமல் மயக்கம் என்ன நல்ல திரைப்படம்தான் என்று நாந்தான் விமர்சனம் எழுதினேன். உண்மையில் படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் அந்தப் படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்ட காட்சிகளைக் கொண்டு மீண்டும் ஏன் "3" என்ற பெயரில் படம் எடுத்தார்கள் என்றுதான் புரியவில்லை. It is time to take a break from Psycho character Dhanush… You had done enough of it… No more for next 10 movies at least… You are doing a Great performance on that… But How many times ? Fed up….

மொத்தத்தில் "இனிமேல் ஓவர் ஹைப் ஏத்தும் படங்களை முதல் நாளே பாக்க வருவியா, வருவியா?"ன்னு கேட்டுக் கேட்டு 3 மணி நேரம் மூஞ்சியிலேயே கும் கும்மென்று குத்துகிறது இந்த மூணு...."

3 = 3/120 :(

Thursday, March 29, 2012

ஆட்டோ கர்ணா - II


இந்தப் பகடியின் முதல் பாகத்தைப் படிக்க "ஆட்டோ கர்ணா - I" இங்கே சொடுக்குங்கள்.

இன்டெர்வெல், பாப்கார்ன், பப்ஸ், ஐஸ்க்ரீம், மாயாஜால் - புட் கார்ட் - 1000 ரூபாய் போயே போச்சுன்னு வந்து உக்கார்றப்ப எதிர்பார்க்கல... செகண்ட் Half இப்படி ஒரு ஆக்ஷன் & சென்டிமென்ட் ப்ளாக்கா இருக்கும்ன்னு.

செகண்ட் Half ஆரம்பிச்சவுடனே செகண்ட் ஹீரோ cum ஆன்டி(Both Anti and Aunty) ஹீரோ காரெக்டர் இன்ட்ரோ ஆவுது. பேரு கண்ணா @ சுசாமி. பண்றது  புல்லா நாரதர் வேலை. கர்ணாவுக்கு எதிரான பஞ்சா கேங்குக்கு சப்போர்ட் பண்ற கேரக்டர் அது.

சுசாமி நேரா கர்ணா-துரியோத் கேங் இருக்க இடத்துக்கே வந்து பஞ்சா கேங் மங்காத்தால ஜிகிடிய பந்தயம் வச்சு ஆடிட்டானுக. அதுனால ஏரியால இருக்க எல்லாப் லேடீஸும் கல்லால அடிச்சு தொரத்தி வுட்டாங்க. சோ அவங்களுக்கு உங்க ஏரியால பாதி வேணும். குடுங்க"ன்னு சொல்றாரு. உடனே துரியோத் கேங்க்ல இருந்து ஒரு அங்கிள் கிண்டலா "ஏரியால பாதியா? ஏரியல் பவுடர் பாக்கெட்ல கூட பாதி தர முடியாது.  ஓடிரு"ன்னு சொல்றாரு. "அப்படின்னா போட்டுப்பாக்கலாமா... கவுட்டாப்புள்ளுல யாரு பெரிய ஆளுன்னு போட்டுப்பாக்கலாமா"ன்னு சுசாமி கேக்க "த்தா... வாங்கடா போட்டுப்பாப்போம்"ன்னு துரியோத் செம காண்டாவுறாரு. "சரி நான் போய் அவங்ககிட்ட சொல்றேன்"ன்னு சொல்லிட்டு கெளம்புறாரு சுசாமி. "கண்ணா, வந்தது வந்துட்ட பிரியாணி துன்னுட்டு போறியா"ன்னு லெக்பீச காட்டி ஒரு பெருசு உசுப்பேத்த "அதெல்லாம் ஒன்னியும் வேணாம்.. ஏற்கனவே உங்க ஆளு  ஒருத்தன் வீட்ல கூப்டு பிரியாணி போட்டான்"னு சொல்லி ஒருத்தனக் காமிச்சு கொழுத்திப் போட்டுட்டு கெளம்பி போயிடறாரு. உடனே துரியோத் அந்த வீட்ல கூப்டு சோறு போட்டவனப் பாத்து "டேய்... ஒய்புக்கு பொறந்தா ஒழுங்கா இருப்ப... கீப்புக்கு பொறந்தா இப்படித்தான் வேண்டாவதனுக்கெல்லாம் சோறு போடுவ"ன்னு சொல்றாரு. அந்தாளு உடனே கடுப்பாகி "யாரப் பாத்து அந்த வார்த்தைய சொன்ன"ன்னு டென்ஷன்ல அந்த கேங்கிட்ட இருக்கதுலேயே சூப்பரான ஒரு கவுட்டாப்புள்ள ஒடச்சுப் போட்டு கெளம்பிடறாரு. அப்படியே அந்த சீனக் கட் பண்றானுக.

அடுத்த சீன் ஓப்பன் பண்ணா கர்ணாவோட சம்சாரம் அவருகிட்ட வந்து "யோவ்.. நீ அப்பாவாகப் போறய்யா... அதுக்காக நா எங்க அப்பா வூட்டுக்கு போறேன்"ன்னு சொல்லுது. "யேய்.. நீதான்டி பர்ஸ்ட் ஆப்ல சொன்ன, உங்கப்பன் ஒரு பேமானின்னு.. அங்கல்லாம் போகாதடி"ன்னு சொல்றாரு. ஆனா சொல்ல சொல்ல கேக்காம அவரு ஒய்பு அப்பா வீட்டுக்கு போகுது. அங்க போனா அவங்கப்பா சேட்டு "ஓடிபோனவளுக்குல்லாம் வெங்கலக் கிண்ணம் கூட கெடையாது, கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்"ன்னு சொல்லித் துரத்தி வுட்டுர்றாரு. அந்தப் பொண்ணு அழுதுகிட்டே வீட்டுக்கு வந்தா கர்ணா கத்துறாரு. "நாந்தான் போகாத போகதன்னு சொன்னேன்ல..."ன்னு. டக்னு அங்க வர்ற சிஸ்டர்(Mrs.துரியோத்) “Cool down… Cool down" ன்னு சொல்லுது. ஏதோ ஒண்ண துணியப் போட்டு மறைச்சு வச்சுகிட்டு 30 பேர் கூட சேந்து 40 நிமிஷம் ஒரு பாட்டு பாடுறாங்க. என்னத்த மறைச்சு வச்சுருக்காங்கன்னு கடைசில பாத்தா "மாங்கா  – The Symbol of pregnancy ". அப்படியே அந்த சீனக் கட் பண்றானுக.

டக்னு பஞ்சா பிரதர்ஸோட அம்மா கேரக்டரக் காட்டுறாங்க. நல்லா வயசான கேரக்டர். அத வந்து கண்ணா @ சுசாமி மீட் பண்ணுறாரு. "Aunty, நீங்க தண்ணில சுத்தி அனுப்பிச்சு விட்ட பிள்ள உயிரோடதான் இருக்கு. அதுதான் கர்ணா. அது கவுட்டாப்புள்ளு காம்பெடிஷன்ல உங்க பசங்க அஞ்சு பேரையும் போட்டுத் தள்ளப் போகுது. பாத்து சூதானமா நடந்துக்குங்க"ன்னு கொழுத்திப் போட்டுட்டு போறாரு. அந்த ஆன்டியும் உடனே கெளம்பி கர்ணாவப் பாக்க வருது. பேக்கிரவுண்ட்ல "சின்னத் தாயவள் தந்த ராசாவே....". அங்க போய் அந்த ஆன்டி கர்ணாகிட்ட "கர்ணா, நாந்தாம்பா உன் மதரு"னு சொல்ல அவரு உடனே "Is It..? Wow" அப்படின்னு சொல்லி செம ஹேப்பி ஆவுறாரு. உடனே அந்த ஆன்டி "மவனே... கவுட்டாப்புள்ளு காம்பெடிஷன்ல உன் தம்பிகள போட்டுத் தள்ளிராதடா ப்ளீஸ்."ன்னு சொல்லி ரெண்டு சத்தியம் வாங்கிட்டு போயிருது. சீனக் கட் பண்றானுக. 

இதுக்கு நடுல துரியோத் அமாவாசை அன்னிக்கி எல்லா கவுட்டாப்புள்ளையும் வச்சு பூஜை பண்ணா காம்பெடிஷன்ல ஜெயிக்கலாம்ன்னு முடிவு பண்றாரு. அதத் தெரிஞ்சுகிட்ட சுசாமி யாருக்கும் தெரியாம ராத்திரில வந்து துரியோத் வீட்டுக் காலண்டர்ல "நாளைக்குதான் அமாவாசை. இன்னைக்கு இல்ல" அப்படின்னு எழுதி வச்சுட்டு போயிடறாரு. அங்க ஒரு கன்ப்யூஷன். அப்புறமா துரியோத் கேங்க்லயும் கர்ணாவ ஓரங்கட்டுறாங்க. கர்ணா செம கடுப்பாவுறாரு. ஆனா அது பைனல் லெவல் காம்பெடிஷன்ல அவர கவுட்டாப்புள்ளு விட வைக்கிறதுக்குக்கான மாஸ்டர் பிளான்ன்னு பின்னாடிதான் தெரியுது. காம்பெடிஷன் ஸ்டார்ட் ஆவுது. கர்ணாவும் தீயா வேலை செஞ்சு கவுட்டாப்புள்ளுல கல்ல மாட்டிகினு துவம்சம் பண்றாரு. செம ஆக்ஷன் பிளாக்.

ஆனா அவரு அவங்கம்மாகிட்ட கொடுத்த சத்தியம், அப்புறமா சுசாமி கேரக்டர் பண்ற சில சில்லறைத்தனமான சூழ்ச்சி  அப்படி இப்படின்னு ஏகப்பட்ட சதி செஞ்சு பஞ்சா குரூப்ஸ் கர்ணாவ தோற்கடிச்சுற்றாங்க. அவரும் டவுன் ஆகி கீழ விழுந்துர்றாரு.  உடனே அந்த சுசாமி "I am a disco dancerrrr" அப்படின்னு பாட்டு பாடிகிட்டே டான்ஸ் ஆடிகிட்டு கர்ணா பக்கத்துல போறாரு. கர்ணா அரைகுறை உயிர்ல அப்படியே மூச்சு விட முடியாம கீழ கெடக்குறாரு. அவரு நெறைய தானதர்மம் செஞ்சு புண்ணியம் சேத்து வச்சுருக்கதுனாலதான் சாகாம இருக்காருன்னு சொல்லி மாறுவேஷத்துல போய் அவருகிட்ட நீ செஞ்ச புண்ணியத்தெல்லாம் எனக்கு குடுன்னு சொல்லிக் கேக்குறாரு. உடனே கர்ணாவும் "புண்ணியம் can neither be created nor be destroyed. But it can be transformed from கர்ணா to கண்ணா." states ‘Law of Conservation of புண்ணியம்’ கிறது படி எல்லாப் புண்ணியத்தையும் transform பண்ணிட்டு செத்துப் போயிடறாரு. உடனே அவங்கம்மா கேரக்டர் வந்து "போயிட்டியா மை சன்... ஓ காட்... ஒய் திஸ் கொலவெறி"ன்னு சொல்லி கர்ச்சீப் வச்சுகிட்டு மேக்கப் கலையாம அழுகுறாங்க. டக்னு இன்னோரு ஆன்டியும் என்ட்ரி கொடுத்து "போயிட்டியா மை சன்.. யூ ஆர் மை ஒன்லி சன்"னு சொல்லி அழுகுது. எல்லாருக்கும் குழப்பமாகிடுது. உடனே சுசாமி "யேய்.. யாரும்மா நீயி?"ன்னு கேக்குறாரு. அதுக்கு அந்தம்மா "நாந்தான் ஆட்டோ ராணி"ன்னு சொல்லுது. "ஆட்டோ ராணி, அது லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தி நடிச்ச படம் ஆச்சே, நீங்க விஜயசாந்தியா" அப்படின்னு சொல்லி கலாய்க்கிறாரு சுசாமி. அதுக்கு அந்த ஆன்டி "இல்ல.. நாந்தான் ஆட்டோ ராணி. ஆட்டோக்களின் தேவதை. இந்த தமிழ்நாட்டுலயே ஒழுங்கா மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுன புள்ள கர்ணன் மட்டும்தான். இப்படி அவனையும் போட்டீங்களேடா. இனிமேல் தமிழ்நாட்டுல எந்த ஆட்டோ டிரைவரும் மீட்டர் போட்டு வண்டி ஓட்ட மாட்டான். 1 கிலோமீட்டர் போறதுக்குக் கூட இனிமேல் 300 ரூ. கேப்பான். சாவுங்க... அப்படியே பெட்ரோல்/டீசல் விலையெல்லாம் ஏறட்டும்."ன்னு சொல்லி சாபம் கொடுத்துருது. அதுல இருந்துதான் ஆட்டோ fareல்லாம் பயங்கராமா ஏறிப்போச்சாம்.  முற்றும் போட்டு Name marquee ஓட வுட்டானுக. ஆல் பீப்பிள் "Eyes Full ah Tears" ஓட கெளம்பி வந்தோம்.
  
டிஸ்கி : போன பதிவில் சொல்லியதைப் போல இந்தப் பகடி நகைச்சுவைக்காக மட்டுமே. நான் இப்பொழுதுதான் இந்தப்படத்தை முதன்முதலாகப் பார்த்தேன். எனக்கு படம் ரொம்பப் பிடித்திருந்தது. முதல் பாதியில் அடிக்கொரு முறை வந்த பாடல்களைத் தவிர படத்தில ஒருகுறையும் சொல்ல முடியாது. சிவாஜிதான் நடிகர்களில் திலகங்களின் திலகம் என்பதை நன்குணர முடிந்தது.  2012/13ல் நடக்கும் எந்தவொரு விருது விழாவிலும் "And the Nominees for Best Hero in Tamil are" என்பதில் இந்தப் படத்தையும் சேர்த்தார்களனால் வேறு எவருக்கும் வெங்கலக் கிண்ணம் கூட  கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. தலைவா யூ ஆர் கிரேட்.

Tuesday, March 27, 2012

அழகழகான தருணங்கள்...

தமிழில் இருக்கும் லட்சத்தி சொச்சம் வார்த்தைகளில் உனக்கு மிகவும் பிடித்த வார்த்தை எது என்று சமீபத்தில் யார் கேட்டிருந்தாலும் டக்கென்று சொல்லியிருக்கக் கூடும் "தருணம்" என்று. ஆனால் பேச்சுவழக்கின் புழக்கத்தில் இந்த வார்த்தையின் பயன்பாடு சிலபல ஆண்டுகளாகவே குறைந்து விட்டது. தருணம் என்ற வார்த்தை ஒரு நொடியையோ, மணித்துளியையோ உயிருள்ளதாக்கி விடுகிறது. காலமும் நேரமும் மனதில் நிற்பதில்லை. தருணங்களே மனதில் நிற்க வல்லவை.  பெருவாரியான புத்தகங்களிலும் கூட இவ்வர்த்தையின் உண்மையான பயன்பாடு காலப்போக்கில் அருகிக் கொண்டே வருகிறது. "அந்தத் தருணத்திலே அந்தப்புரத்தில் நுழைந்த அழகான ராஜகுமாரனைப் பார்த்த இளவரசி..." என்பவையெல்லாம் சாண்டில்யனோடு சம்பவமாகிப் போய்விட்டது. பொழுது என்ற வார்த்தை தருணத்திற்கு பதிலாளியாய் புழக்கத்தில் வந்து விட்டது. ஆனால் பொழுதுகள் உயிரற்றவை. தருணங்கள் உயிருள்ளவை. பொழுதுகள் அதுகளாகவே கழிந்து விடுகிறது. தருணங்கள் நினைவுகளாக உருமாறி விடுகின்றன.


 "யேய்... இது என் மகன்டி" என்று அம்மா என் கழுத்தில் கையைப் போட்டு முடிக்கும் முன்னரே கையைத் தட்டிவிட்டு "வவ்வவ்வவ்வ... எங்க மாமா" என்று கூறி மடியில் அமர்ந்து கன்னத்தில் அழுந்த முத்தம் வைப்பாளே எனது அக்கா மகள். 
ஒரு மகன் மாமாவாகும் மலர்ச்சியான தருணம்.

"யேய்... என் தம்பிடி. ஏன்டி அவனப் போட்டு இந்தப் பாடு படுத்துற. அவன் மேல ஏறி குதிக்காத" என்று தன் மகளிடம் பொய்யாகக் கோபப்படுவாளே அக்கா. 
ஒரு அம்மா அக்காவாகும் அழகான தருணம்.

"யேய் புள்ளைய அடிக்காதடி... உங்களையெல்லாம் இப்படி அடிச்சிருந்தா தெரியும்" என்று அடி கொடுக்கும் அக்காவிடம் இருந்து பாப்பாவை வாரி அணைத்துக் கொள்வாளே அம்மா சிறு வயதில் சேட்டை செய்தால் எங்களை துரத்தித் துரத்தி அடித்த அதே அம்மா. 
ஒரு அம்மா பாட்டியாகும் அற்புதமான தருணம்.

அம்மா ஊருக்கு போயிருக்கும் ஒரு நாளில் "ஆபிஸ்ல இருந்து வர இன்னைக்கு லேட்டாகும்டா. பாப்பாவுக்கு ஊட்டி விட்ரு. நான் வந்து தூக்கிக்குறேன்" என்று அக்கா சொல்லுவாள். 

"பாப்பா... சாப்பிடு பாப்பா... ப்ளீஸ் பாப்பா... நீ சாப்பிடலேன்னா நான் ஊருக்குப் போறேன்." 

"நீ சாப்ட்டா, மாமா உன்னைய கடைக்கு கூட்டிட்டு போய்.... ... ... ... ..." 

"சாப்டாதான், லாப்டாப்ல மாமா டோரா போடுவேன்.. இல்லேன்னா இல்ல" 

மூன்று மணிநேரம் போராடியும் மூன்று வாய்க்குக் கூட வாயைத் திறக்காமல் பழிப்பம் காட்டிச் சிரிப்பாளே.  "என்னால் முடியாதது ஒன்றுமே இல்லை" என்ற அகங்காரம் உடைந்து சுக்கு நூறாகும் தருணம். நீ ஆறாம் வகுப்புல இருந்து B.E வரை எந்த பாடத்தில் படித்த எந்த விதியை, நியூட்டனின் மூன்றாம் விதி உட்பட செயல்படுத்தி பார்த்தாலும் ஒன்றுமே வேலைக்காகாத தருணம் அது.

"டேய்... பாட்டி நம்ம எல்லாத்தையும் விட்டுட்டு போயிருச்சுடா" என்று கம்மிய குரலில் அலைபேசியில் அழைத்துச் சொல்வார் அப்பா. "அப்படியா" என்று கேட்கும் முன்னரே நம் கண்களின் ஓரத்தில் நீர் துளிர்க்குமே. 
ஒரு அப்பா மகனாகவும் ஒரு மகன் பேரனாகவும் மாறும் நெகிழ்ச்சியான தருணம்.

"பாஸ்... நான் பிரசன்னாவோட ப்ரண்டு பேசுறேன் பாஸ். அவன் கூட உங்களுக்கு போன் பண்ணிருப்பான்." "ஆமா.. நாளைக்கு காலைல அங்க வந்துருவேன்." "புது ஊரு பாஸ். யாரையுமே தெரியாது" என்று அலைபேசியில் சொல்லும் பொழுது "கவலைய விடுங்க பாஸ்... வாங்க பாத்துக்கலாம்" என்று சொல்லி தூங்கி முழித்து பஸ்ஸில் இருந்து இறங்கும் பொழுது, பஸ்ஸ்டான்டில் காத்திருந்து பெட்டியைக் கையில் வாங்குவானே. 
ஒரு நண்பனின் நண்பன் நண்பனாகும் நல்லதொரு தருணம்.

இரண்டே இரண்டு பீரை வாங்கிக் கொண்டு 8 ஊறுகாய் பாக்கெட், 32 முறுக்கு, 1 கிலோ மிக்சர், 48 புரோட்டா, 16 ஆம்லேட், 16 வாட்டர் பாக்கெட் சகிதம் நெல்லையின் அந்தக்கடைசியில் ஆளே இல்லாத அகாலக்காட்டில் திருச்செந்தூர் செல்லும் ரயில் தண்டாவாளத்தை ஒட்டிய ஒரு பாறைக்கு போனோமே 16 பேர். அதிலும் ஓ ஓ கிக்கு ஏறுதே, குடித்து முடித்த இரண்டு பாட்டிலையும் தண்டவாளத்தில் எறிந்து சுக்குநூறாக உடைத்து... சிலபல சிறுவர்கள் பலசில இளைஞர்களாக வயது மாறிய வசந்தமான தருணம்.

"டேய் இதெல்லாம் ஒரு புரோட்டாவாடா... எங்க ஊருக்கு வாங்கடா, நியூ ருசிலய்யும், இளங்கோலயும், கண்ணப்ப விலாஸ்லயும் புரோட்டா வாங்கித் தர்றேன். சாப்டுட்டு சொல்லுங்கடா" 
ஒரு சென்னைக்காரன் நெல்லைக்காரனாகும் தருணம்.

"அங்கல்லாம் வீக் எண்ட்னா எங்கயாவது மாலுக்கு மல்டிப்ளெக்ஸ்க்கு போலாம்.. ஏன் பீச்சுக்குக் கூட போலாம். இங்க எங்க போறது" 
ஒரு நெல்லைக்காரன் சென்னைக்காரனாகும் தருணம்.

சைக்கிள், பைக், கார் - இவை ஒவ்வொன்றையும் முதல்முறை ஓட்டியதை நினைத்துப்பார்க்கிறேன். முதன்முதலில் பேசிய மேடை, முதன்முதலில் வாங்கிய பரிசு, சாலமன் பாப்பையாவோடு மேடையில் கரைந்த அந்த சில மணி நேரம், டைடல் பார்க் வாசல்லயே நின்னு 'ஆ'வென்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த முதல் வேலையின் முதல் நாள், "நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலி" என்று அலுவலகத்தில் கொடுத்த முதல் அவார்ட், ஓராண்டுக்கு முன்னால் இந்தியா வென்ற கிரிக்கெட் உலக்கோப்பை. பிள்ளைப்பிராயத்து கனவுகள் ஒவ்வொன்றாய் நிறைவேறிய அழகழகான தருணங்கள்.

இதோ தமிழ்மணத்தில் நட்சத்திரமாக நானும் ஒரு வாரம். "வாழ்வின் முக்கியமான தருணம்" மட்டுமே முக்கியமானதல்ல. வாழ்வின் எல்லாத் தருணங்களுமே முக்கியமானவையே. இடம் பொருள் ஏவல் ஏனையும் மாறலாம். ஆனால் முடிந்த தருணங்கள் மாறுவதேயில்லை. சில படங்கள் தருணமாகலாம். சில புத்தகங்கள் தருணமாகலாம். சில நிகழ்வுகள், சில மனிதர்கள், சில பயணங்கள், சில பாடல்கள் இப்படி எவை வேண்டுமானாலும் தருணமாகலாம்.  

நாம மொதமொதல்ல எங்க பாத்தோம்னு ஞாபகம் இருக்கா மச்சி? 

உங்கிட்ட நான் முதல்முதல்ல பேசுன வார்த்தை என்னன்னு சொல்லு? 

செகண்ட் இயர் டூர்ல போன கொடைக்கானல் டூர் ராத்திரிய மறக்க முடியுமா? 

அன்னைக்கு நீ என்ன சொன்னன்னு ஒனக்கு ஞாபகம் இருக்காடா?

இது போன்ற பல கேள்விகளுக்கும் பதிலாக ஏதோ ஒரு தருணம்தான் இருக்கிறது. வாழ்க்கை என்பதே ஒரு அனுபவம்தானே.


சொல்லப்போனால் சித்தார்த்தன் புத்தனானது கூட ஏதோ ஒரு தருணத்தில்தான். தமிழில் இருக்கும் லட்சத்தி சொச்சம் வார்த்தைகளில் உனக்கு மிகவும் பிடித்த வார்த்தை எது என்று சமீபத்தில் யார் கேட்டிருந்தாலும் டக்கென்று சொல்லியிருக்கக் கூடும் "தருணம்" என்று.

ஆட்டோ கர்ணா - I


இப்போ சமீபத்துல ஆட்டோ கர்ணானு ஒரு படம் ரிலீஸ் ஆகி ஹவுஸ்புல்லா ஓடிகிட்டு இருக்கு. சொல்லப்போனா எல்லாப்பக்கமும் ஹவுஸ்புல்லா சக்கைபோடு போடுது. படம் எப்படின்னு டெம்பெர்மெண்ட்டா சொல்லணும்னா செம படம். படத்தோட கதை இரண்டு கேங்ஸ்டர்ஸ் மற்றும் அவர்களுக்குள் நடக்கும் சண்டை பற்றியது. செம ட்விஸ்ட் & டர்ன் அங்கங்க. ஓப்பனிங்க் ஸீன் சூப்பர் ஸ்டாரோட தளபதி படத்த பாத்து அப்படியே காப்பி அடிச்சுருக்காங்க. இன்னும் நெறைய சீன்களும். 
 சரி மொத்தக் கதையும் என்னன்னு பாப்போம்.

ஓப்பன் பண்ண உடனேயே ஒரு குழந்தைய அவங்கம்மா அழுதுகிட்டே "எங்கிட்டு போனாலும் நல்லா இருடா மவனே"ன்னு சொல்லி ஒரு பெட்டிக்குள்ள வச்சு தண்ணிக்குள்ள விட்ருது. அது அப்படியே ட்ராவல் ஆகி போய் இன்னோரு ஊர்ல ஆத்துல ஆட்டோவ கழுவிக்கிட்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர்கிட்ட போய்டுது. அந்த டிரைவரும் அவரு சம்சாரமும் அந்தக் குழந்தையை எடுத்து, கர்லாக்கட்ட மாதிரி இருக்கதுனால கர்ணான்னு பேரு வச்சு வளர்க்க ஆரம்பிக்குறாங்க. அப்டிக்கா "ஆட்டோ கர்ணா" அப்படின்னு Zoom marquee ல Blowஆகி டைட்டில் கார்டு போடுறாங்க. அது முடிஞ்சவுடனே குழந்தைய வளர்க்க ஆரம்பிச்ச ஆட்டோ டிரைவர வயசானவரா காட்டுறாங்க. அவரு சம்சாரத்தையும். அந்தம்மா "இன்னாய்யா இது? பொறந்தநாளு அதுவுமா இந்த கர்ணம்பயல காணோமே"ன்னு கேக்க "அவ்ந்தான் ரேசு கீசுன்னு வந்தா வீட்ல தங்க மாட்றானே. நம்ம பெத்த புள்ளையா இருந்தா சொல்லலாம். இது கைல என்னாத்த சொல்றது"ன்னு சொல்றாரு. கரெக்ட்டா அந்த டயத்துல வீட்டுக்கு வந்த கர்ணம்பய(25 years Guy - Auto Driver cum Gym boy cum DhaDha) காதுல அது விழுந்துருது. "இன்னாப்பா சொல்ற... அப்டின்னா மை மதர் யாருமை மதர்... மததததர்"ன்னு கேட்டுகிட்டே கர்ணா eyes Full ஆ  Tears வுட"தெரியலப்பா தெரியலயே"ன்னு சொல்லி அவங்கப்பா ஆட்டோக்காரும் அழுவுறாரு. இந்த நேரத்துல அவங்க ஏரியாவுக்கு ஆப்போஸிட் கேங்ல இருந்து அஞ்சு பேரு வந்து, "தில்லிருந்தா இந்த பஞ்சா கேங்கிட்ட கவுட்டப்புள்ளு வுடுற காம்பெடிஷன்ல மோதிப்பாருங்கடா"ன்னு  கர்ணா ப்ரண்டு துரியோதன்கிட்ட வம்பு பண்றாங்க. அப்படியே அந்த ஏரியால இருந்த மரத்துல ரெண்டு மாங்காயையும் கவுட்டாப்புள்ளுல தட்டுறாங்க. (ந.கு : பஞ்சா கேங்குல அஞ்சு பேருக்கும் சேத்து ஒரே ஒரு பிகர்தான் ஜிகிடி. For Imagination சரோஜா படத்துல வர்ற நிகிதா மாதிரி) அப்ப டக்னு  கர்ணா என்ட்ரி ஆகி "த்தா.. யாருகிட்ட. இப்போ பாருங்கடா"ன்னு சொல்லி அந்த ஏரியால செம பெர்பார்மன்ஸ் காட்டுறாரு. மாங்கா, தேங்கா, கெழவி தலைல இருந்த மோர்ச்சட்டி, ஆப்போசிட் IT Companyல இருந்த கண்ணாடின்னு எல்லாத்தையும் கவுட்டாப்புள்ளுல கல்ல வச்சு போட்டுத் தள்ளுறாரு. அத தாங்க முடியாத பஞ்சா குரூப்ஸ் "ஆத்தா அப்பன் பேரு தெரியாத ஆட்டோ டிரைவர்லாம் காம்பெடிஷன்ல கலந்துக்க கூடாது"ன்னு சொல்லி கலாய்க்க  கர்ணா மெர்சலாகிடுறாரு. டக்னு உள்ளார பூந்து துரியோதனன் "யார்டா ஆட்டோ டிரைவர்... இனிமேல் என்கிட்ட இருக்க பாதி ஏரியாக்கு இவந்தான்டா தாதா... பாதி பேருக்கு இவந்தான்டா தலைவன்.. என் தளபதிடா இவன்"னு சொல்ல  கர்ணா "மச்சி சூப்பர்டா... உன் லைப்புக்கு 100% நான் கியாரண்டிடா... மதர் பிராமிஸ்"ன்னு ஆனந்தக்கண்ணீர் வடிக்கசல்லோ சீனக் கட் பண்றானுக. அப்படியே கர்ணன் ஏரியால நல்ல தாதாவா இருந்து எல்லாருக்கும் நல்லது பண்ண ஆரம்பிக்குறாரு. கைல இருக்க அம்பது-நூறு, ஆட்டோல வேலை செய்யாமப் போன பழைய ஸ்பேர் பார்ட்ஸ், பழைய பேண்ட், கிழிஞ்ச சட்டை இப்படி எல்லாத்தையும் கூட எல்லாருக்கும் தானமா குடுக்குறாரு.


 ஒரு நாளு துரியோதனன் அவரோட சம்சாரத்த "கர்ணா, இது ஒனக்கு சிஸ்டரு"  "மை ஒய்பு, இது ஒனக்கு பிரதரு"ன்னு சொல்லி இன்ட்ரோ குடுக்க அவங்க அப்படியே "அண்ணாத்த அண்ணாத்த " - "தங்கச்சி நீதாம்மா என் கட்சி"ன்னு பாசம் காட்டுறாங்கோ. சேம் பாசமலர் குரூப்ஸ். ஒரு நாளைக்கு அண்ணனும் தங்கச்சியும் கேரம் ஆடுறப்போ ஏதோ சொல்லிக்கிட்டே அந்த தங்கச்சி எந்திரிச்சு போகுது. "ஏய்... எங்க புள்ள போற"ன்னு இவரு அதப்புடிக்க அது இடுப்புல இருந்த பாசி அந்து போகுது. அந்த நேரத்துல உள்ளார வர்ற துரியோதனன் "அல்லாப் பாசியும் எடுத்து நா வேணா நூலு போட்டுனு கோக்கவா"ன்னு கேக்க "மச்சி ப்ளீஸ் மச்சி, தப்பா நெனைக்காதடா"ன்னு  கர்ணா பீல் ஆவுறாரு. "என் ப்ரெண்டப் போல யாரு மச்சான்... அவன் ட்ரெண்டையெல்லாம் மாத்தி வச்சான்..."ன்னு துரியோத் சொல்ல, தங்கச்சி கேரக்டர் அழ சீனக் கட் பண்றானுக.

இன்னோரு நாள்  கர்ணா ரோட்டுல நிக்கேல ஒரு பொண்ணு "கார் மேய்ன் பிரேக் நஹி ஹை... மேரா நாம் சகுத் பஹி ஹை..."ன்னு கத்திகிட்டே இஸ்பீடா கார்ல போகுது. அது ஒரு சேட்டுப்பொண்ணு.  இவரு டக்னு உள்ள குதிச்சு பேனட் மூடியத் தொறந்து ஜஸ்ட் லைக் தாட் கார இஸ்டாப் பண்ண அந்தப்பொண்ணுக்கு  கர்ணா மேல லவ்வாகிடுது. "இந்தாடி... எந்த ஏரியா பிகருடி நீயி"ன்னு கர்ணா கேக்க அந்தப் பொண்ணு மூஞ்சில கைய வச்சுட்டு, படிக்கிற மாதிரி சைகை காமிச்சுட்டு ஓடிருது. இவரு டக்னு ஏரியால வந்து "புல் அடிச்சும் போதையில்லை, புல்லட் பீரடிச்சும் கிக்கு இல்லை"ன்னு லவ்ல ராவடி பண்றாரு. டக்னு அங்க ஒரு ட்ரீம் சாங். துரியோதனன் வந்து "மச்சி, பிகரு பேர் என்ன, எந்த ஏரியா, இன்னா மேட்டரு"ன்னு கேக்க "ஒண்ணுமே தெர்ல மச்சி"ன்னு சொல்லி கர்ணன் அவ பண்ண ஆக்ஷன பண்ணிக் காட்டுறாரு. "ஒரு எளவும் புரியல.. இது ஆவுறதுல்ல மச்சி... கஷ்டம் டா"ன்னு சொல்லிட்டே "வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு.. மூடி தொறக்கும் போதே நம்மள கவுக்கும் குவாட்டரு"ன்னு ஓகே ஒகே ஸாங்கப் போடுறாரு. அந்நேரத்துல அங்க வர்ற அவரோட சம்சாரம் "போய்யா போய்யா பொங்சு... அந்தப் பொண்ணு சொன்னதுக்கு அர்த்தம் எனக்குத் தெரியும்... மூஞ்சில கைய வச்சு படிக்கிற மாதிரி காமிச்சா இன்னா அர்த்தம்.. மூஞ்சிபுக்... அதான்யா பேஸ்புக்ல தேடிக் கண்டுபிடின்னு சொல்லிருக்குதுய்யா. போய் எல்லா சேட்டு பிகர் புரொபைலையும் தேடுங்க."ன்னு சொல்ல  கர்ணா  மூஞ்சி பத்துவாட்ஸ் பல்பு மாதிரி ப்ரைட் ஆவுது. சீனக் கட் பண்றானுக.


 நெக்ஸ்ட் சீனே மேரேஜ்தான். மேரேஜ் முடிஞ்சன்னிக்கி ராத்திரிக்கா பொண்ணோட அப்பாவுக்கு  கர்ணா  பேருக்குதான் தாதா... ஆனா உண்மையிலேயே ஆட்டோ டிரைவர்ன்னு தெரியவர, அவரு "ஆட்டோ டிரைவர் மேலே ஆன மேரேஜும் அடைச்சுக்கிட்டு நிக்கிற ட்ரைனேஜும் மீ சேட்டுக்கு ஒண்ணுதான்" அது இதுன்னு பஞ்சு டயலாக்லாம் பேசி பர்ஸ்ட் நைட் நடக்க விடாமப் பண்றாரு சேட்டு கர்ணா மூடவுட் ஆகி அழுதுகிட்டே ஏரியாக்கு வர்றாரு. பேக்கிரவுண்ட்ல "என் அழகென்ன என் தொழிலென்ன.. ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு". பாத்தா அவருக்கு முன்னாடியே அந்த பிகரு ஐ மீன் அவரு ஒய்பு அங்க வந்து நிக்கிது. "என்னா புள்ள நீ எப்படி வந்த"ன்னு  கர்ணா  கேக்க "எங்கப்பன் ஒரு லூசுப்பய... பேமானி.. அவன் சொல்றதெல்லாம் மதிக்க வேணாம்"ன்னு சொல்லுது. "அது சரி... எனக்கு முன்னாடியே எப்படி இங்க வந்த"ன்னு கேக்க "ம்ம்ம்... ஆட்டோக்காரன் பொண்டாட்டி ஆட்டோல தான் வந்தேன்"ன்னு அந்தப் பொண்ணு சொல்ல "நீயும் என்னைய ஆட்டோக்காரன்னு சொல்றியேயேயேயே"ன்னு ஜெர்க்காகி பீலிங்ஸ் காட்டுறாரு. "யோவ்... டயத்த வேஸ்ட் பண்ண வேணாம்யா, வாய்யா" அப்படின்னு அந்தப் பொண்ணு சொல்ல அப்படியே அங்க ஒரு பர்ஸ்ட் நைட் சாங்.
சாங்க க்ளோஸ் பண்ணிட்டு அப்படியே இடைவேளை ஸ்லைடு போடுறாங்க..

Second Half புல் ஆக்ஷன் ப்ளாக் & இண்டெலிஜென்ட் ட்விஸ்ட்ஸ்... சீயான் விக்ரம் வாய்ஸ்ல சொல்லனும்னா "ஹே சுசி/லிங்கு/விஜய்... வெரி நைஸ் ஸ்க்ரிப்ட் யூ நோ.. Shall we remake this? "ன்னு கேக்குற மாதிரியான புல்டைம் ஆக்ஷன்...


தொடரும்... 

இது யாரையும் எந்தப் படைப்பையும் தரக்குறைவாக சித்தரிக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல... ஏதாவது ஒரு படத்தைப் பகடி செய்து ரீமேக் எழுதமுடியுமா என்று இணைய நண்பர் ஒருவர் கேட்டதன் பேரில் செய்து பார்த்த முதல் முயற்சி... வாழ்த்தோ வசவோ, எதுவாக இருந்தாலும் இங்கேயே சொல்லி விடுங்கள். Don't be a Buddha here.. Just be a Laughing Buddha. All for Fun :))


இரண்டாம் பாகம் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Monday, March 26, 2012

கடலிலே ஒரு காகிதக்கப்பல்...

"தமிழ்மணத்தில் ஒரு வாரத்துக்கு நட்சத்திரமாக இருக்க சம்மதமா?" இப்படி ஒரு மின்னஞ்சலைப் பார்த்த பொழுது மிகவும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. நானோ வருடத்துக்கு நான்கைந்து சுமாரான பதிவுகள் மட்டுமே எழுதுபவன். அதுவும் பார்த்த படம், பிடிச்ச பாட்டு, படிச்ச புத்தகம் என்று தேறுவதைக் கிறுக்கிக் கொண்டிருப்பவன்.  அதனால் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருந்து தினமும் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்று சொல்லியவுடனே கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன். எழுதித்தான் பார்ப்போமே என்று. நான் 2006லேயே ராம்குமார் அமுதன் என்ற பெயரில் ஒரு வலைப்பூவைத் தொடங்கி கிறுக்க ஆரம்பித்தேன். ஆனால் "யப்பா.. மரணமொக்கையா எழுதி சாவடிக்கிறான்டா... முடியல" என்று உணர்ந்த ஏதோ ஓர் நல்லுள்ளம் அந்த வலைப்பூவை ஹேக் செய்து கொண்டது. அப்புறம் சில நாட்கள் சும்மா இருந்தேன். அதற்குப்பிறகு 2007ல் நெல்லை நண்பன் என்ற இந்த வலைப்பூவைத் தொடங்கி கிறுக்க ஆரம்பித்தேன். வருடத்திற்கு இரண்டோ மூன்றோ பதிவுகள் எழுதுவதின் மூலம் இந்த சமுதாயத்தை ஏன் சொல்லப்போனால் மொத்த தமிழ்ச் சமூகத்தையும் திருத்தி நல்வழியில் செலுத்தும் கடமையை தோளில் சுமந்து கொண்டிருப்பவன்.   அதே அதே. மொத்ததில் நான் இந்த வலைகடலிலே மிதக்கும் ஒரு காகிதக்கப்பல்.

என்னைப்பற்றி கொஞ்சமே கொஞ்சம் சுயபுராணம். அக்பர்ஷா முதல் அப்புசாமித்தாத்தா வரை பலரையும் தெரிந்த உங்களுக்கு இந்த அப்பிராணியைப் பற்றி கொஞ்சமே கொஞ்சம். பிறப்பாலும் நினைப்பாலும் எப்பொருட்டும் நெல்லைக்காரன். படித்தது நெல்லை அரசினர் பொறியியற் கல்லூரி.  இப்பொழுது பார்க்கின்ற மென்பொருள் பணி நிமித்தமாக கடந்த ஆறாண்டுகளாக சென்னை வாசம். நடுவில் ஓராண்டு நம்ம பெங்களூரு. இனிமேல் நிரந்தரமாக சென்னைக்காரந்தான். தமிழ் கொஞ்சம் பிடிக்கும். தமிழ் சினிமா இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிடிக்கும். சிறு வயது முதலே தமிழ் மேடைப்பேச்சுகளில் அதிக ஆர்வம் உண்டு. பள்ளிக்காலங்களில் பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்ற நாட்களை விட பேச்சுப்போட்டிக்குச் சென்ற நாட்கள் மிக மிக அதிகம். அப்புறம் கொஞ்ச காலம் தொடர்பு விட்டுப்போனது. கல்லூரிக்காலங்களில் மூன்று, நான்கு மேடைகளில் பேசியிருக்கிறேன். அதிலே கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் பொழுது சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றம் பேசியது எனது வாழ்வானுபவம். மார்ச் 8 2006 - முகில் 2006 - தமிழ் மன்ற விழா - வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நாள். அந்தப் பேச்சின் காணொளியைக்  இணைத்திருக்கிறேன். பாருங்கள். ஒரு கல்லூரி மாணவனின் மனப்பக்குவத்தில் பேசியது அது. யாரையேனும் புண்படுத்தினால் மன்னிச்ச்ச்ச்சூ. மென்பொருள் துறைக்கு வந்த பிறகு தமிழ் மேடைப் பேச்சுக்கான வாய்ப்பு என்பது "கடல்லயே இல்லையாம்" என்பது போன்ற வாய்ப்பற்ற ஒரு விஷயமாக ஆகி விட்டது. பார்க்கலாம், மங்காத்தாவில் 'தல' அஜீத் சொன்னதைப் போல "Life begins at 40". நமக்கு ஜஸ்ட் 20 :) இன்னும் வயது இருக்கிறது. வாழ்க்கை இருக்கிறது. வசந்தம் இருக்கிறது. ஓ பாஸுகளா, வீடியோவப் பாத்துட்டு போகலையா. இன்னும் இங்கனயேதான் சுத்திகிட்டு இருக்கீங்களா? அவ்ளோ வெட்டியா? சரி உங்களுக்காக நான் முற்காலங்களில் எழுதிய சில பழைய பதிவுகளுக்கு லின்ங்க் கொடுக்கிறேன். வாசித்துப் பாருங்கள். இந்தப் பதிவுகள் அனைத்தும் எனது பதிவுகளிலேயே ஆகச்சிறந்தது என்று உலக அளவில், பல நாடுகளில் இருந்தும் அதிகமான பாராட்டுக்களைப்  பெற்றவை. யாருங்க அது RRல "ஆணியே புடுங்க வேணாம்"னு சொல்றது. வுடுங்க பாஸூ.. ஒரு வெளம்பரம்... எதையும் சீரியஸாக எடுத்து யாரும் இந்த வலைபூவையும் ஹேக் செய்ய வேண்டாமெனத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். ஐ ஆம் பாவம்.. ஆகையால் எல்லாரும் நெஞ்சில் கை வைத்து ஒருமுறை சொல்லுங்கள் "All is Well All is Well"

Friday, March 16, 2012

சச்சின் - தலைவா, யூ ஆர் கிரேட். !!!


இன்றிருக்கும் மனநிலையில் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க வாய்ப்பு இல்லை. என்றோ பிறக்கப் போகும் குழந்தைக்கு முன்பே தொட்டிலும், பொம்மைகளும் வாங்கி வைப்பதைப் போல இன்று சதத்தின் சதத்தை அடித்த சச்சினுக்காக என்றோ யோசித்து வைத்த கட்டுரை இதுஎழுதவா வேண்டாமா, வேண்டாமா  எழுதவா என்று யோசனையாகவே இருந்தது. ஆனால் என்னவோ இந்த நூறாவது சதம் மட்டுமல்லாமல் நூறு சதங்களையுமே பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு எதிராக மட்டுமே சச்சின் அடித்திருப்பதாய் சமூக வலைதளங்களில் அங்கலாய்ப்பவர்களுக்காகவேனும் இதனை எழுதுவது அவசியாமாகிறது. அவர்களுக்கான "இன்று ஒரு தகவல்" சச்சின் பங்களாதேஷ்க்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அடித்திருக்கும் முதன்முதல் சதம் இது. இந்த நாள், கிரிக்கெட்டை ரசித்துப் பார்க்கும் ஒவ்வொரு இந்தியனது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு நாள். சச்சின் என்ற சதங்களின் சகாப்தம் தனது நூறாவது நூறை அடித்துச் சுவைத்திருக்கும் இந்த நாள். எத்தணை நாடுகள், எத்தணை அணிகள், எத்தணை மைதானங்கள், எத்தணை பந்துவீச்சாளர்கள், எத்தணை விதமான தட்பவெட்ப நிலைகள், எத்தணை விதமான ரசிகர்கள், எத்தணை சக அணி வீரர்கள், எத்தணை எதிரணி வீரர்கள், எத்தணை காயங்கள், எத்தணை சிகிச்சைகள், எத்தணை சோதனைகள், எத்தணை சாதனைகள்... கடந்த 25 ஆண்டுகளில் சச்சின் தனது கிரிக்கெட் வாழ்நாளில் கடந்து வந்துள்ள இத்தணை "எத்தணை"களுக்குமான மிகப் பெரிய மைல்கல் இந்த நூறாவது நூறு. இந்த மைல்கல்லை எட்டுவதற்கு சச்சின் கொடுத்திருக்கும் அயராத உழைப்பும் கொண்டிருந்த அழகான அர்ப்பணிப்பும் எண்ணிப் பார்ப்பதற்கே அளப்பறியது. உழைப்பின் உச்சத்திற்கான மிகப்பெரிய எடுத்துக்காட்டு சச்சினின் இந்த சாதனை.


இனி வரும் காலங்களில், குறைந்தபட்சம் நமது தலைமுறையின் வாழ்நாள் முடிவுக்குள் இன்னொரு வீரர் இதை நிகழ்த்துவது என்பது கண்டிப்பாக நடக்கப் போவது இல்லை. நமது தலைமுறையில் நாம் கண்ட மிகப்பெரிய "Cricketing Entertainer"சச்சின் என்றால் அது எவ்வகையிலும் மிகையாகாது. கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் உலக வரலாற்றின் முதல் 200 ரன்களை அடித்துவிட்டு எந்த விதமான மமதையும் துளியும் இல்லாமல் ஒரு குழந்தைச் சிரிப்போடு சாதரணமாய்ச் சொன்னாரே "I am dedicating this double ton to all my Indian people." அதேதான் இன்றும். சிறிதும் மாற்றமில்லாமல். இதுவரையில் தான் நிகழ்த்திய எத்துணை பெரிய சாதனையையும் தனது தலைக்கோ இதயத்திற்கோ எடுத்துச் சென்றதில்லை. அதுதான் சச்சின். 1996 முதல் 2011 வரையிலான அத்துணை உலகக் கோப்பைகளிலும் சோபித்த ஒரு இந்தியன். கிட்டத்தட்ட பேட்டிங் தொடர்பான அத்தணை சாதனைப் பட்டியலிலும் சச்சினின் பெயர்தான் முதலாவதாய் இருக்கின்றது.


சச்சினின் முதல் சதம் எனது பிறப்பிற்கு பிறகுதான் அடிக்கப் பட்டிருக்கிறது.இதோ நூறாவது சதத்தையும் பார்த்து விட்டேன். என்னுடைய நெல்லையின் மிகமகிழ்ச்சியான இளமைக்காலங்களின் கிரிக்கெட் வேட்கை சச்சினது தலை சிறந்த ஆட்டங்களைப் பார்ப்பதிலேயே கழிந்திருக்கிறது. சச்சினின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 200 ரன்களைப் பார்த்திருக்கிறேன். சச்சின் சார்ஜாவில் புயல் காற்றுக்கு நடுவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய 143 ரன் ருத்ரதாண்டவத்தைப் பார்த்திருக்கிறேன். சச்சின் சோயப் அக்தரை துரத்தி துரத்தி அடித்த 98 ரன்களைப் பார்த்திருக்கிறேன். ஷேன் வார்னேவின் சுழலில் "விலகிச் சென்று இறங்கி வந்து" Straightல் சிக்சருக்கு விளாசுவதைப் பார்த்திருக்கிறேன். சச்சின் கையில் ஒரு உலகக்கோப்பை தவழ்வதை கண்ணாரப் பார்த்திருக்கிறேன். நமது வாழ்நாளில் நமதளவில் நமக்கு இதுவே மிகப் பெரிய சாதனைதான். அளவில்லா சந்தோஷம்தான்.


2011, ஏப்ரல் 2ம் தேதி இந்தியா உலக்கோப்பையை கைத்தாங்கிய பொழுது கிடைத்த ஆராவாரமான மகிழ்ச்சியை விட சச்சினின் இந்த நூறாவது நூறு அளித்திருக்கும் ஆனந்தம் ஏதோ ரம்மியமான உள்ளுணர்வாய் இருக்கிறது. கடவுள் என்னும் வார்த்தைக்கு மற்றவர்களை மகிழ்விப்பவன் என்று அர்த்தமும், சித்தாந்தமும் மாறும் ஒரு பொழுதில் எதிர்காலாத்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதை வேண்டுமானால் சொல்லிக் கொடுக்கலாம்.சச்சின் என்றொருவர் நம் கண்ணெதிரே இருக்கிறார்.
அவர்தான் கிரிக்கெட் என்னும் மதத்துக்கு கடவுள்..
அவருக்கு Cricket Bat என்பதே ஆயுதமாகத் திகழ்ந்தது.
அந்த ஆயுதத்தைக் கொண்டு அவர் 100 கோடி இந்தியர்களை மகிழ்வித்தார்..
ஜாதி, மதம், இனம், நிறம், மொழி என்ற பாகுபாடுகளைக் கடந்து
அத்துணை இந்தியர்களுக்கும் பொதுவானவர் அவர்.

Thursday, March 15, 2012

கஹானி - திரைப்படம் - ஒரு பார்வை.

தமிழிலே மனசெல்லாம் என்று ஒரு படம் 2003ல் வெளிவந்தது. அந்தப்படத்திலே ஒரு புதுமுகத்தை நடிகையாக அறிமுகம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு அப்பொழுதைய வழக்கம் போல் ஒரு மலையாளப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்தார்களாம்.  கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற பிறகு அந்தப்பெண்ணிற்கு நடிகர் ஸ்ரீகாந்துக்கு இணையாக நடிக்க வரவில்லை என்று காரணம் சொல்லி அப்படத்திலிருந்து தூக்கிவிட்டு த்ரிஷாவை நடிக்க வைத்தார்கள். இந்த விஷயமே அந்தப்படத்தின் விளம்பரத்திற்காக எல்லாப் பத்திரிகைகளிலும், பேட்டிகளிலும் பெருமளவில் சொல்லப்பட்டது. த்ரிஷா கையில் தீபம் ஏந்தி வந்தார்.  ஸ்ரீகாந்த் நின்றார், நடந்தார், artificial ஆக அழுதார். ஆனால் படம் பப்படம்.

"அண்ணே, ஸ்ரீகாந்த் இங்க சும்மாதான் இருக்காரு. அந்த மலையாளப்பொண்ணு எங்கண்ணே இருக்கு?" என்று சொப்பனசுந்தரிக்காகவும் காருக்காகவும் கவலைப்படும் செந்தில்களுக்கான பதில், அந்தப் பெண் இப்பொழுது உச்சத்தில் இருக்கிறாள். இன்னும் இரண்டு மாதத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடக்க இருக்கும் 59வது திரைப்பட தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கப்போகிறாள். இந்தியாவின் அத்தணை தலைசிறந்த சினிமா இயக்குநர்களும் அவளுக்காக கதைகளை பிரத்யோகமாய் உருவாக்குவார்கள். இந்திய சினிமா வரலாற்றில் நீக்கமறா ஒரு இடத்தை சில பத்தாண்டுகளுக்கேனும் அவள் தக்க வைத்திருப்பாள். இன்றைய தேதியில் நடித்துக் கொண்டிருக்கும் கதாநாயகிகளுள் சந்தேகமே இல்லாமல் இந்தியாவின் தலைசிறந்த நடிகை அவள்தான். அந்த அவள் வித்யா பாலன். ஆம்… இன்றுதான் கஹானி திரைப்படம் பார்த்தேன். வந்து கணம் தாமதிக்காமல் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். "The Dirty Picture"ஐத் தொடர்ந்து வித்யா பாலனுக்கு அடுத்ததாக வந்திருக்கும் படம்.  சற்றும் சறுக்காமல் மீண்டும் ஒரு அற்புதமான நடிப்பானுபவத்தைக் கொடுத்திருக்கிறார் வித்யா.  படத்திலும் அவர் பெயர் வித்யாதான். கொல்கட்டாவில் பித்யாவாக அழைக்கப்படும் தமிழ்ப்பெண் வித்யா. வித்யா வெங்கடேசன்.  வித்யா வெங்கடேசன் பாக்ச்சி. ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கான உடல்மொழியில் படம் முழுவதுமாக மிகப்பிரமாதமாக நடிக்க முயற்சி செய்து தோற்றுப் போய் வாழ்ந்திருக்கிறார்.


கஹானி - இந்தியாவில் இதுவரையில் வெளிவந்திருக்கும் த்ரில்லர் வகையறாத் திரைப்படங்களுள் தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை அழுத்தமாக பதிவு செய்து கொண்டது. ஒரு அருமையான த்ரில்லர் ஸ்டேரிலைன் கிடைத்து விட்டது. நல்ல திரைக்தை அமைத்தாகிவிட்டது. கொல்கட்டாவையும் துர்கா பூஜையையும் பின்னிறுத்தி பிரமாதமான களம் பிடித்தாகி விட்டது.  ஆனால் இயக்குநர் சுஜாய் கோஷ் உண்மையிலேயே மகத்தான வெற்றி பெற்றது பாத்திரத் தேர்வில்தான். ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கான நடிகர்தேர்வும் கனகச்சிதம். வித்யாவுக்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர் கான் என்ற  Intelligence Bureau Officer கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக்தான். அந்த சிகரெட்டை ஊதித் தள்ளும் லாவகமென்ன, அலட்சியமாய்க் கோபப்படும் உடல்மொழியென்ன, அருமையாகப் பண்ணியிருக்கிறார். அதற்குப் பிறகு  வருபவர் ராணாவாக வரும் போலீஸ் அதிகாரி பரம்ப்ரத்தா சேட்டர்ஜி. நல்ல அன்டர்ப்ளே நடிப்பு. சொல்லப்போனால் படம் முழுவதும் வரும் ஒவ்வொரு சேட்டர்ஜியும், பேனர்ஜியும், முகர்ஜியும், கங்குலியும் அருமையாக நடித்திருக்கிறார்கள். நடிக்க வைக்கப் பட்டிருக்கிறார்கள்.  சுஜாய் கோஷின் உன்மத்தமான வெற்றி.

நான் படத்தின் கதையையோ, கிளைமேக்ஸையையோ பற்றி எது சொன்னாலும் சுவாரசியம் குறைந்துவிடும் அபாயம் இருப்பதால் நீங்களே வெள்ளித்திரையில் காணுங்கள். கண்டிப்பாக காணுங்கள். கஹானி என்ற படத்தின் பெயர்க்காரணம் அறியும் ஒரு தருவாயில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உணர்வீர்கள். மிகப்பிரமாதமான ஒரு திரை அனுபவம். நல்ல பொருத்தமான பிண்ணணி இசை. காட்சியோடு நகரக்கூடிய, பெங்காலியும் ஹிந்தியும் கலந்துகட்டிய அருமையான பாடல்கள். மிக மிக கச்சிதமான படத்தொகுப்பு. இப்படி அனைத்துமே மிகச்சிறப்பாக ஒன்றிணைந்ததால் இப்படம் ஒரு படி மேலான தரத்தை எட்டியிருக்கிறது. "எக்ளா சாலோ ரே" என்றொரு பெங்காலிப் பாடல். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு சுதந்திர தினத்தில் ஸ்ரேயா கோஷல் இந்தியா கேட் முன் பாடிய வீடியோவைப் பார்த்திருக்கிறேன். மிகப்பிரமாதமாகப் பாடியிருப்பார். அந்தப் பாடலை இந்தப்படத்தில் கொல்கட்டா கதைக்களத்தில் மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பாடலை எழுதியவர் ரவீந்திர நாத் தாகூர். இந்தப்படத்தில் அந்தப்பாடலைப் பாடியிருப்பது யார் தெரியுமா? The Big ‘B’.  ம்ம்ம்ம். அமிதாப் பச்சன்.


சமீபத்திய தமிழ்படங்களின் தாக்கத்தோடு சொல்லப்போனால் எங்கேயும் எப்போதும்க்கு இணையான திரைக்கதை மற்றும் Emotionsஓடு  மெளனகுரு படத்தை விட ஒரு புள்ளி மேலான புத்திசாலித்தன த்ரில்லர்த் திறமும் கூடிய ஒரு திரைப்படம். கண்டிப்பாக பாருங்கள். உணர்வீர்கள். மொத்தத்தில் இந்தப்படம் எனக்கு 120க்கு 150. 150/120.

மொத்தத்தில் கஹானி - குடுத்த காசுக்கு மேலே.

Friday, March 2, 2012

அரவான் - தமிழுக்கு அபூர்வான்.

அரவான். மிக நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த, மிக மிக எதிர்பார்ப்புக்குள்ளாகி, நிறைய நிறைய வெளியீடு பிரச்சனைகளை சந்தித்துக்  கொண்டிருந்த திரைப்படம். எனக்கு முந்தைய வசந்தபாலன் படங்கள் இரண்டுமே மிக மிகப் பிடிக்கும். வெயில், அங்காடித்தெரு. ஆல்பம் படம் பார்த்ததில்லை. வெற்றியா, தோல்வியா - வசூலா இல்லையா என்ற பொதுவான சினிமாத்தனங்களை ஒதுக்கிவிட்டு, எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்குப் பிடித்த சினிமாவைத் துணிந்து எடுப்பவர்.  அதனால் மட்டுமே இரண்டே படங்களில் ஒரு கிரியேட்டராக தமிழ் சினிமாவில் ஆழ முத்திரை பதித்தவர். இந்தப்படத்துக்கு முகப்புத்தகத்தில் அவர் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்த புகைப்படங்களே எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்றி வைத்திருந்தது. மேலும் சென்ற ஆண்டிற்கான சாகித்ய அகடமி விருது பெற்ற "சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்" நாவலைத் தழுவிய திரைப்படம். படம் எப்படி? முதற்பாதி, இரண்டாம் பாதி என்ற பப்பாதிகளாய்ப் பார்ப்போம். ஏனென்றால் உண்மையிலேயே இரண்டும் ஒரே நிறம். 18ம் நூற்றாண்டு காலம். ஆனால் வேறு வேறு கதைக்களம். களவு ஒன்று, காவல் இரண்டு.


முதல் பாதி - பசுபாதி. பசுபதி பசுபதி பசுபதி  மட்டுமே. அடித்து விளாசித் தள்ளி பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் மனுசன். கமலிடம் கொத்தாளத்தேவனாக பரிமளித்த பசுபதி வசந்தபாலனிடம் கொம்பூதியாகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். என்னா நடிப்புடா. Splendid and Marvelous. முதல் பாதியில் வரும் களவானித்தனங்கள் அனைத்தும் படுசுவாரசியம். அதிலும் வசந்தபாலனின் Screen Presence ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்த்து கொண்டே இருக்கிறது.

"எப்பயுமே பூட்ட ஒடக்கிறதுக்கு முன்ன வீட்டுக்காரன் தலகாணிக்குக் கீழ சாவி இருக்கான்னு பாக்கணும்டா"

"தூக்கம் வர்றவன் காவலுக்கு போக்கூடாது, தும்மல் வர்றவன் களவுக்கு போக்கூடாது"

அப்புறம் வெத்தலைக்கிழவி ஒருத்தியை உசுப்பிவிட்டு அவள் வெத்தலை உடைக்கும் சத்ததுக்கேற்ப கல்லலமாரியைத் தட்டித்தூக்குறது என்று முதல் பாதியின் முதல் பதினைந்து நிமிடங்களிலேயே ஏகப்பட்ட அப்ளாஸ் விஷயங்கள். அத்தணையிலும் பசுபதியின் நடிப்பு அருமையிலும் அருமை. பிறகுதான் "ஈரம்" ஆதி என்ட்ரி. ஆதி இந்தப்பாத்திரத்துக்கான மிகச் சரியான தேர்வு. விரைப்பு, வீரம், திருடச் செல்லும் வீட்டுக்குள் பதுங்கித் தவழும் லாவகம், பாம்புக்கு பயப்படும் வெகுளித்தனம், பாசத்துக்கு ஏங்குவது என்று கொடுக்கப்பட்ட வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார். முதல் பாதியில் பசுபதி தவிர்த்து இன்னொரு கதாநாயகன் கேமராமேன் சித்தார்த். களவுக்கு போகையில் ஒருத்தர் ஒருத்தராக Zoom போடுவது ஆகட்டும், காடு சம்பந்தப்பட்ட காட்சிகளாகட்டும், தேவையான இடங்களில் தேவையான அளவுகளில் வானத்தைக் காமிப்பதாக ஆகட்டும், பிரமாதப்படுத்தியிருக்கிறார். முதல் பாதியில் இரண்டுமே கதையோட்டத்தோடு கூடிய பாடல்களே. "ஊரே ஊரே என்னப் பெத்த ஊரே" பாடல் - "ஒரு மயித்துக்கும் இல்ல வயித்துக்குத் தானே இவ்வளவு போரிடுறோம் நாங்க" முதல் பாதியின் மொத்தக்கதையையும் உள்ளடக்கியிருக்கிறது. பிண்ணனிப்பாடகர் கார்த்திக்குக்கு இசையமைப்பாளாராக முதல்படம். சரியான தீனி உள்ள படம். மிகச்சரியாய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்டெர்வல் பிளாக்கிற்கு கொஞ்சம் முந்தையதாய் வரும் அந்த மாட்டு மந்தை கிராபிக்ஸ் சீன் Picture Perfect. சங்கரின் சிஷ்யர், இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம். ஒவ்வொரு கதாப்பாத்திரத்துகான தேர்வும் கனக்கச்சிதம். இப்படி முதல் பாதி முழுவதுமாய் படம் மிகக்கச்சிதம். 60க்கு 55.இரண்டாம்பாதியும் முதல் பாதிக்கு இணையாய் இருந்திருந்தால்... என்று கொஞ்சம் யோசிக்க வைத்து விட்டது என்பதே உண்மை. முழுவதும் ஆதி சம்பந்தப்பட்ட கதைக்களமே, காட்சிகளே. அனைத்தும் காவல் சம்பந்தப்பட்ட காட்சிகள். பரத், அஞ்சலி,ஸ்வேதா மேனன் என்று Star Casting தூக்கலாக இருந்தாலும், கதை பற்பல கிளைக்கதைகளாக பிரிந்து போனதால் என்னவோ கொஞ்சம் அலுப்பு தட்டத்தான் செய்தது. ஆதியின் நடிப்புக்கு அதிகதிக தீனி இருந்தாலும், கொஞ்சம் செய்திருக்கிறார்,சில இடங்களில் நல்ல எக்ஸ்பிரஷன்ஸ். இரண்டாம் பாதியின் கொஞ்சம் சிறப்பு தன்ஷிகாவும்(அவர் வாய்திறந்து பேசாமல் இருக்கும் பொழுது - டப்பிங்க் போட்ருக்கலாம் பாஸ்), "கொழுந்தியா ரொம்ப முக்கியம்டா" என்று டெரர் கிளப்பும் சிங்கம்புலியும்தான். காட்சிகளை இங்கும் அங்கும் கொஞ்சம் மாற்றி, ஏதாவது  ஒன்று பண்ணியிருக்க வேண்டும். டீடெய்லிங்கிலெல்லாம் பிரமாதப்படுத்தியிருந்தாலும் முதல் பாதியில் இருந்த ஜனரஞ்சகம் இரண்டாம் பாதியில் ஏதோ ஒரு வகையில் மட்டுப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். ஏதோ ஒன்னு கொஞ்சம் ஏமாத்திருச்சு. மற்றபடி கிளைமேக்ஸிற்கு பிறகு போடும் "மரணதண்டனையை ஒழிப்போம்" ஸ்லைடு இப்பொழுது சேர்த்திருப்பார்களோ என்று தோன்றியது.
                    ஆனால் இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான். ஏகப்பட்ட உழைப்பும், analysisம், உள்ளடங்கியிருக்கிறது. வைரமுத்து கருவாச்சி காவியம் எழுதிக் கொண்டிருந்த பொழுது "ஒரு கிராம் தங்கம்" என்பதை கதை நடக்கும் காலகட்டத்தில் எப்படிச் சொல்லியிருப்பார்கள் என்பது தெரியாமல் ஒரு வாரம் அன்னம் தண்ணி இல்லாமல் எழுதுவதை நிறுத்தி கொண்டாராம். அப்புறம் எங்கெங்கோ விசாரித்து ஒரு ஆசாரிப் பெரியவரிடம் கேட்டு அவர் "ஒரு குண்டுமணித் தங்கம்"னுல்ல சொல்லுவோம் என்று சொன்னபிறகுதான்  அவருக்கு உயிரே வந்ததாம். அப்படிப்பார்த்தால் இந்தப் படத்திற்கான/நாவலுக்கான விஷயங்களைச் சேகரிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று யோசிக்கவே முடியவில்லை. "தமிழில் டாகுமென்ட்டரி மாதிரி அல்லாமல் ஒரு நல்ல commercial Period film உண்டா என்று கேட்கும் எவருக்கும் இனி மார்தட்டி போட்டுக்காட்டலாம் அரவானை.

மொத்தத்தில் அரவான் - களவு சுவைத்த அளவுக்கு காவல் சுவைக்கவில்லை. சுவைத்திருந்தால் ம்ம்ம்ம்...

கடவுள் வந்திருந்தார்.

சுஜாதா ரங்கராஜன். சுருக்கமாகச் சொன்னால் சுஜாதா.  இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கேனும் சிலாகிக்கப் பட வேண்டிய அறிவியல் எழுத்தாளர், ஜனரஞ்சக நாவலாசிரியர், அதிசிறந்த தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர். இன்னும் சொன்னால் தலைவர், வாத்தியார், குரு, ஆசான்.  எனக்கு எப்பொழுதுமே ஒரு கர்வம் உண்டு. எல்லாரிடமும் சொல்லுவதும் உண்டு. நான் வாசிக்காத ஒரே வைரமுத்து புத்தகம் மூன்றாம் உலகப்போர் மட்டும்தான், ஏன்னா அது இன்னும் புத்தகமாகவே வெளிவரவில்லை. ஆனால் சுஜாதா விஷயத்தில் அப்படி கர்வப்பட என்னால் மட்டும் அல்ல யாராலுமே, எப்பொழுதுமே முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு புத்தகம் வாங்கும் படலத்திலும் பத்து பதினைந்து புத்தகங்களாக வாங்கிக் குவித்து படித்துக் கிழித்தாலும் இன்னும் சில நூறு புத்தகங்கள் பாக்கி இருந்து கொண்டேதான் இருக்கிறது. கடந்த வார இறுதி சென்னை டூ பெங்களூர் டூ சென்னை பயணத்தில் கூட சட்டை துணிமணிகளோடு சேர்ந்து வந்தது சுஜாதாவின் "ஒரு நிமிடக்கதைகள், ஆதலினால் காதல் செய்வீர், கடவுள் வந்திருந்தாரும்தான்". கடவுள் வந்திருந்தார் சுமார் 45 நிமிடங்களுக்கானச் சின்னப் புத்தகம். ஆனால் அறிவியலையும் நகைச்சுவையையும் சரி விகிதத்தில் கலந்து இத்தணை சுவாராஸ்யமான நாடகத்தை வாழ்விலும் வாசித்ததில்லை. மனநிலையும் இடம் பொருள் ஏவலும் மறந்து இரவு 12 மணிக்கு உரக்கச் சிரித்துக் கொண்டிருந்த என்னை ஒருமாதிரி பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, சுஜாதா எனதருகில் அமர்ந்து கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தது.கல்லூரி சேரும் வரை எனக்கும் சுஜாதாவுக்குமான தொடர்பு குமுதத்தில் வந்த சுஜாதா கேள்வி பதில்களும், ஆனந்த விகடனில் வந்த கற்றதும் பெற்றதும்தான். வாரம் தவறாமல் வாசித்ததுண்டு. ஆனால் கல்லூரி இரண்டாம் ஆண்டின் விடுமுறையில்தான் முதன்முதலாக ஒரு சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்பு வாங்கி வந்தேன். அதுவும் நெல்லை தெற்கு பஜாரின் ஒரு பழைய புத்தகக் கடையில் இருந்து.  பெயர் இன்னும் நெஞ்சில் அறையப்பட்ட ஆணியாய் நினைவிருக்கிறது. "கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு". அந்தப்புத்தகம் எனக்கு திறந்து காமித்த உலகம் அத்துணை சுவாரஸ்யமானது, அற்புதமானது. அதிலே "சசி காத்திருக்கிறாள்" என்றொரு கதை உண்டு. கடைசிவரி வரை நம்மைப் படபடக்க தடதடக்க விட்டு பிரமாதப்படுத்தியிருப்பார். அந்தப்புத்தகம் முழுதும் சிறுகதை வடிவத்தில் ஏகப்பட்ட பரிசோதனை முயற்சிகளை அள்ளி எறிந்திருப்பார். அந்த விடுமுறைக்கு முன்னால் நடந்த செமஸ்டர் தேர்வில்தான் நான் "Digital Electronics" பேப்பரை எழுதியிருந்தேன். ‘AND gate’ ‘OR gate’ என்று “Logic Gate, Truth Table”க்கே சிங்கியடித்து சீட்டியடித்து ஏதோ 36 மதிப்பெண்ணுக்குத்தான் அந்தப் பேப்பரை கிறுக்கியிருந்தேன். ஆனால் அந்தப் புத்தகத்திலே "கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு" கதையில் ஒரு கதை சொல்லும் இயந்திரத்தை வடிவமைத்திருப்பார். "Flip-Flop" "D Flip-Flop" என்று அவர் புகுந்து விளையாடியிருந்ததைப் பார்த்த பொழுதுதான் நான் கற்பணை பண்ணிக் கொண்டு படித்த “Digital Electronics” எத்தணை அபத்தமானது என்று புரிந்ததது. பயன்பாடு புரியாமல் படித்தற்காய் வெட்கப்பட்ட முதல் தருணம் அது. இன்று தோழர் பாடலாசிரியர் மதன்கார்க்கி செய்துகொண்டிருப்பதாய்ச் சொல்லும் “Lyric Engine”க்கெல்லாம் அந்தக் கதை சொல்லும் எந்திரம்தான் முன்னோடி.

அதற்குப்பிறகு கதை, கட்டுரை, சங்க இலக்கிய அறிமுகம், நாவல், நாடகம் என்று சுஜாதாவை இதுவரை கணக்கில்லாமல் வாசித்தாகி விட்டது. எதைச் சொல்ல, எதை விடுக்க? அவருடைய எல்லாமே எனக்கு மாஸ்டர்பீஸ்தான். அதிலும் ஸ்ரீரங்கத்து தேவதைகளெல்லாம் எத்தணை முறை வாசித்திருக்கிறேன் என்று எனக்கே தெரிவதற்கில்லை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த அந்த கிரிக்கெட் கதை, அத்தணை சுவாரஸ்யம். சமீபத்தில் ஒரு ஆறு மாதத்துக்கு முன்பு வாசித்த அவருடைய "நிறமற்ற வானவில்" என்ற நாவல் எனக்கு வாழ்க்கையை வேறுமாதிரி பார்க்கக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையில்லை. எப்பேர்ப்பட்ட கஷ்டம் வந்தாலும்    அதைத்தாண்டி ஒவ்வொருவரும் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் எப்பொருட்டும் இருக்கிறது என்ற எண்ணத்தை எனக்குள் ஆழப்பதித்துச் சென்றது அந்த நாவல். எந்த வடிவில் எதை வாசித்தாலும் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது ஒன்றை புதிதாக கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார் சுஜாதா. அன்றும், இன்றும், என்றென்றும். 


                     
                            அவருடைய பற்பல நாவல்கள் ஒரு பத்தாண்டுக்கு பிறகான உலகத்தை இப்பொழுதே கண்முன் காட்டி விட வல்லவை. "JAVA, HTML, UNIX" என்று கணினி மொழிகளில் புகுந்து விளையாடியிருப்பார். நாவலின் முதற்பதிப்பு எப்பொழுது என்று திருப்பிப் பார்த்தோமேயானால்  1991 என்று இருக்கும். "Project planning, Quality assurance, process assurance, Six Sigma" என்று "PMP"யின் அத்தணை அம்சங்களையும் பிரித்து மேய்ந்திருப்பார். பார்த்தால் 1989ல் எழுதியதாக இருக்கும்.  அதுதான் சுஜாதா.  மேலும் "Colloquial slang” என்றழைக்கப்படும் தமிழின் அத்துணை வட்டார வழக்குகளிலும் புகுந்து விளையாடுவதில் அவருடைய வல்லமை அவருடையது மட்டுமே. கும்பகோணம் ஐயங்கார் பாஷையில் இருந்து சென்னை ரிக்ஷாக்காரர் பாஷை, பாலக்காட்டு மலையாளத்தமிழ் வரை அச்சரசுத்தமாக எழுத வல்லவர். அதிலும் பெங்களூர்த் தமிழில் "பேரண்ட்ஸ் காஞ்சிபுரம் பூர்த்தி. ஙேன் பங்களூர் செட்டில்டு. சீதா சொல்ப தமிழ் பேத்ஸ் ஆயி" என்று ஹாஸ்யமாய் கலந்து கட்டி அடிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.  1970 ஆகட்டும் 2030 ஆகட்டும், எதுவாக இருந்தாலும் அவருடைய விவரிப்பு விரித்துக்காட்டும் படம் மிக மிக துல்லியம்.  அவர் எல்லாக் காலகட்டங்களிலுமே ஒரு மிகச்சிறந்த absorber ஆக இருந்திருக்கிறார். அதனாலேயே 5 வயதுக் குழந்தையாகட்டும், 22 வயது இளம்பெணாகட்டும், 80 வயது முதியவராகட்டும், யாருடைய பார்வையிலும் மிக நுணுக்கமாய் கதையை நகர்த்திச் செல்லும் லாவகம் அவருக்கு வாய்த்திருந்தது. இன்றைய விகடனில் வந்திருக்கும் இயக்குநர் ஷங்கரின் பதிலைப் படித்த பொழுது சினிமாவில் ஒரு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் அவருடைய பங்கை எவ்வளவு செவ்வனே செய்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது.


கடந்த பிப்ரவரி 27ஓடு நாண்காண்டுகள் கடந்தோடிவிட்டது.   "சீக்கிராமாவே இல்லாமப்பூட்டியே வாத்யாரே" என்று அவர் மறைவுக்குப் பின்னால்  அனுதினமும் விசனப்பட மட்டுமே முடிகிறது. இன்னும் அந்த நாள் நினைவிருக்கிறது. துக்கத்தையும் மரியாதையையும் எப்படி வெளிப்படுத்த என்று தெரியாமல் ORKUTடில் ஒரு மாதகாலத்துக்கும் சுஜாதா மீசை வைத்திருந்த ஒரு போட்டோவை "Profile picture" ஆக வைத்திருந்ததை மட்டுமே செய்ய முடிந்தது. "இனிமேல் விகடன்ல கற்றதும் பெற்றதும் வராது, சுஜாதாவே இல்ல அப்டின்னு நெனச்சா கஷ்டமாதான் இருக்குல்ல" என்று அப்பொழுதைய அறை நண்பன் மதுரை ராஜபாண்டி சொன்ன பொழுதில் கொஞ்சம் தொண்டை கரகரக்கத்தான் செய்தது. ஆனால் கொடைகொடையாய்க் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறார். படிக்கவும், விவாதிக்கவும், சிந்திக்கவும், சிரிக்கவும், ரசிக்கவும்  என்று நீண்டநெடுங்காலத்துக்குத் தேவையானதை எக்கச்சக்கமாய் கொடுத்து விட்டுதான் சென்றிருக்கிறார். அவர் அறிவில் கற்பனையாய் உருவான எந்திரனுக்காக எழுதப்பட்ட இந்த வரிகள், அவருக்கும் அவருடைய படைப்புகளுக்கும்தான் அடி பிசகாமல் அதிகதிகம் பொருந்திப் போகின்றது.  
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்...
அறிவில் பிறந்தது மறிப்பதே இல்லை...
நான் என்பது அறிவு மொழி...
வான் போன்றது எனது வெளி...
நான் நாளைய ஞான ஒளி...
நீ கண்டது ஒரு பிறவி...
நான் காண்பது பல பிறவி...
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.