Friday, March 2, 2012

கடவுள் வந்திருந்தார்.

சுஜாதா ரங்கராஜன். சுருக்கமாகச் சொன்னால் சுஜாதா.  இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கேனும் சிலாகிக்கப் பட வேண்டிய அறிவியல் எழுத்தாளர், ஜனரஞ்சக நாவலாசிரியர், அதிசிறந்த தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர். இன்னும் சொன்னால் தலைவர், வாத்தியார், குரு, ஆசான்.  எனக்கு எப்பொழுதுமே ஒரு கர்வம் உண்டு. எல்லாரிடமும் சொல்லுவதும் உண்டு. நான் வாசிக்காத ஒரே வைரமுத்து புத்தகம் மூன்றாம் உலகப்போர் மட்டும்தான், ஏன்னா அது இன்னும் புத்தகமாகவே வெளிவரவில்லை. ஆனால் சுஜாதா விஷயத்தில் அப்படி கர்வப்பட என்னால் மட்டும் அல்ல யாராலுமே, எப்பொழுதுமே முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு புத்தகம் வாங்கும் படலத்திலும் பத்து பதினைந்து புத்தகங்களாக வாங்கிக் குவித்து படித்துக் கிழித்தாலும் இன்னும் சில நூறு புத்தகங்கள் பாக்கி இருந்து கொண்டேதான் இருக்கிறது. கடந்த வார இறுதி சென்னை டூ பெங்களூர் டூ சென்னை பயணத்தில் கூட சட்டை துணிமணிகளோடு சேர்ந்து வந்தது சுஜாதாவின் "ஒரு நிமிடக்கதைகள், ஆதலினால் காதல் செய்வீர், கடவுள் வந்திருந்தாரும்தான்". கடவுள் வந்திருந்தார் சுமார் 45 நிமிடங்களுக்கானச் சின்னப் புத்தகம். ஆனால் அறிவியலையும் நகைச்சுவையையும் சரி விகிதத்தில் கலந்து இத்தணை சுவாராஸ்யமான நாடகத்தை வாழ்விலும் வாசித்ததில்லை. மனநிலையும் இடம் பொருள் ஏவலும் மறந்து இரவு 12 மணிக்கு உரக்கச் சிரித்துக் கொண்டிருந்த என்னை ஒருமாதிரி பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, சுஜாதா எனதருகில் அமர்ந்து கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தது.கல்லூரி சேரும் வரை எனக்கும் சுஜாதாவுக்குமான தொடர்பு குமுதத்தில் வந்த சுஜாதா கேள்வி பதில்களும், ஆனந்த விகடனில் வந்த கற்றதும் பெற்றதும்தான். வாரம் தவறாமல் வாசித்ததுண்டு. ஆனால் கல்லூரி இரண்டாம் ஆண்டின் விடுமுறையில்தான் முதன்முதலாக ஒரு சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்பு வாங்கி வந்தேன். அதுவும் நெல்லை தெற்கு பஜாரின் ஒரு பழைய புத்தகக் கடையில் இருந்து.  பெயர் இன்னும் நெஞ்சில் அறையப்பட்ட ஆணியாய் நினைவிருக்கிறது. "கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு". அந்தப்புத்தகம் எனக்கு திறந்து காமித்த உலகம் அத்துணை சுவாரஸ்யமானது, அற்புதமானது. அதிலே "சசி காத்திருக்கிறாள்" என்றொரு கதை உண்டு. கடைசிவரி வரை நம்மைப் படபடக்க தடதடக்க விட்டு பிரமாதப்படுத்தியிருப்பார். அந்தப்புத்தகம் முழுதும் சிறுகதை வடிவத்தில் ஏகப்பட்ட பரிசோதனை முயற்சிகளை அள்ளி எறிந்திருப்பார். அந்த விடுமுறைக்கு முன்னால் நடந்த செமஸ்டர் தேர்வில்தான் நான் "Digital Electronics" பேப்பரை எழுதியிருந்தேன். ‘AND gate’ ‘OR gate’ என்று “Logic Gate, Truth Table”க்கே சிங்கியடித்து சீட்டியடித்து ஏதோ 36 மதிப்பெண்ணுக்குத்தான் அந்தப் பேப்பரை கிறுக்கியிருந்தேன். ஆனால் அந்தப் புத்தகத்திலே "கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு" கதையில் ஒரு கதை சொல்லும் இயந்திரத்தை வடிவமைத்திருப்பார். "Flip-Flop" "D Flip-Flop" என்று அவர் புகுந்து விளையாடியிருந்ததைப் பார்த்த பொழுதுதான் நான் கற்பணை பண்ணிக் கொண்டு படித்த “Digital Electronics” எத்தணை அபத்தமானது என்று புரிந்ததது. பயன்பாடு புரியாமல் படித்தற்காய் வெட்கப்பட்ட முதல் தருணம் அது. இன்று தோழர் பாடலாசிரியர் மதன்கார்க்கி செய்துகொண்டிருப்பதாய்ச் சொல்லும் “Lyric Engine”க்கெல்லாம் அந்தக் கதை சொல்லும் எந்திரம்தான் முன்னோடி.

அதற்குப்பிறகு கதை, கட்டுரை, சங்க இலக்கிய அறிமுகம், நாவல், நாடகம் என்று சுஜாதாவை இதுவரை கணக்கில்லாமல் வாசித்தாகி விட்டது. எதைச் சொல்ல, எதை விடுக்க? அவருடைய எல்லாமே எனக்கு மாஸ்டர்பீஸ்தான். அதிலும் ஸ்ரீரங்கத்து தேவதைகளெல்லாம் எத்தணை முறை வாசித்திருக்கிறேன் என்று எனக்கே தெரிவதற்கில்லை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த அந்த கிரிக்கெட் கதை, அத்தணை சுவாரஸ்யம். சமீபத்தில் ஒரு ஆறு மாதத்துக்கு முன்பு வாசித்த அவருடைய "நிறமற்ற வானவில்" என்ற நாவல் எனக்கு வாழ்க்கையை வேறுமாதிரி பார்க்கக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையில்லை. எப்பேர்ப்பட்ட கஷ்டம் வந்தாலும்    அதைத்தாண்டி ஒவ்வொருவரும் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் எப்பொருட்டும் இருக்கிறது என்ற எண்ணத்தை எனக்குள் ஆழப்பதித்துச் சென்றது அந்த நாவல். எந்த வடிவில் எதை வாசித்தாலும் தெரிந்து கொள்வதற்கு ஏதாவது ஒன்றை புதிதாக கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார் சுஜாதா. அன்றும், இன்றும், என்றென்றும். 


                     
                            அவருடைய பற்பல நாவல்கள் ஒரு பத்தாண்டுக்கு பிறகான உலகத்தை இப்பொழுதே கண்முன் காட்டி விட வல்லவை. "JAVA, HTML, UNIX" என்று கணினி மொழிகளில் புகுந்து விளையாடியிருப்பார். நாவலின் முதற்பதிப்பு எப்பொழுது என்று திருப்பிப் பார்த்தோமேயானால்  1991 என்று இருக்கும். "Project planning, Quality assurance, process assurance, Six Sigma" என்று "PMP"யின் அத்தணை அம்சங்களையும் பிரித்து மேய்ந்திருப்பார். பார்த்தால் 1989ல் எழுதியதாக இருக்கும்.  அதுதான் சுஜாதா.  மேலும் "Colloquial slang” என்றழைக்கப்படும் தமிழின் அத்துணை வட்டார வழக்குகளிலும் புகுந்து விளையாடுவதில் அவருடைய வல்லமை அவருடையது மட்டுமே. கும்பகோணம் ஐயங்கார் பாஷையில் இருந்து சென்னை ரிக்ஷாக்காரர் பாஷை, பாலக்காட்டு மலையாளத்தமிழ் வரை அச்சரசுத்தமாக எழுத வல்லவர். அதிலும் பெங்களூர்த் தமிழில் "பேரண்ட்ஸ் காஞ்சிபுரம் பூர்த்தி. ஙேன் பங்களூர் செட்டில்டு. சீதா சொல்ப தமிழ் பேத்ஸ் ஆயி" என்று ஹாஸ்யமாய் கலந்து கட்டி அடிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.  1970 ஆகட்டும் 2030 ஆகட்டும், எதுவாக இருந்தாலும் அவருடைய விவரிப்பு விரித்துக்காட்டும் படம் மிக மிக துல்லியம்.  அவர் எல்லாக் காலகட்டங்களிலுமே ஒரு மிகச்சிறந்த absorber ஆக இருந்திருக்கிறார். அதனாலேயே 5 வயதுக் குழந்தையாகட்டும், 22 வயது இளம்பெணாகட்டும், 80 வயது முதியவராகட்டும், யாருடைய பார்வையிலும் மிக நுணுக்கமாய் கதையை நகர்த்திச் செல்லும் லாவகம் அவருக்கு வாய்த்திருந்தது. இன்றைய விகடனில் வந்திருக்கும் இயக்குநர் ஷங்கரின் பதிலைப் படித்த பொழுது சினிமாவில் ஒரு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் அவருடைய பங்கை எவ்வளவு செவ்வனே செய்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது.


கடந்த பிப்ரவரி 27ஓடு நாண்காண்டுகள் கடந்தோடிவிட்டது.   "சீக்கிராமாவே இல்லாமப்பூட்டியே வாத்யாரே" என்று அவர் மறைவுக்குப் பின்னால்  அனுதினமும் விசனப்பட மட்டுமே முடிகிறது. இன்னும் அந்த நாள் நினைவிருக்கிறது. துக்கத்தையும் மரியாதையையும் எப்படி வெளிப்படுத்த என்று தெரியாமல் ORKUTடில் ஒரு மாதகாலத்துக்கும் சுஜாதா மீசை வைத்திருந்த ஒரு போட்டோவை "Profile picture" ஆக வைத்திருந்ததை மட்டுமே செய்ய முடிந்தது. "இனிமேல் விகடன்ல கற்றதும் பெற்றதும் வராது, சுஜாதாவே இல்ல அப்டின்னு நெனச்சா கஷ்டமாதான் இருக்குல்ல" என்று அப்பொழுதைய அறை நண்பன் மதுரை ராஜபாண்டி சொன்ன பொழுதில் கொஞ்சம் தொண்டை கரகரக்கத்தான் செய்தது. ஆனால் கொடைகொடையாய்க் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறார். படிக்கவும், விவாதிக்கவும், சிந்திக்கவும், சிரிக்கவும், ரசிக்கவும்  என்று நீண்டநெடுங்காலத்துக்குத் தேவையானதை எக்கச்சக்கமாய் கொடுத்து விட்டுதான் சென்றிருக்கிறார். அவர் அறிவில் கற்பனையாய் உருவான எந்திரனுக்காக எழுதப்பட்ட இந்த வரிகள், அவருக்கும் அவருடைய படைப்புகளுக்கும்தான் அடி பிசகாமல் அதிகதிகம் பொருந்திப் போகின்றது.  
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்...
அறிவில் பிறந்தது மறிப்பதே இல்லை...
நான் என்பது அறிவு மொழி...
வான் போன்றது எனது வெளி...
நான் நாளைய ஞான ஒளி...
நீ கண்டது ஒரு பிறவி...
நான் காண்பது பல பிறவி...

9 பேர் சொன்னது என்னான்னா..:

பத்மநாபன் said...

வாத்தியாரின் நினைவுகளை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.. என்னவோ தெரியவில்லை வாத்தியார் தன்னுடைய வாசகர்களுக்கெல்லாம் ஒரே மாதிரியாய் இழப்பு உணர்வை விட்டு சென்றுவிட்டார்... வருடா வருடம் அவரை படிப்பது அதிகமாகிக் கொண்டிருப்பது தான் ஆறுதல்..

Uthay said...

He was one of the versatile writers in Tamil...

கோவை நேரம் said...

நினைவுகள் மலரும்

Anonymous said...

he is a great writer who made an impact in every story with the reader

DREAMER said...

அவரது அட்சயப்பாத்திரத்தில் தேடும்போது, எனக்கும் சமீபத்தில்தான் "கடவுள் வந்திருந்தார்" கையில் சிக்கியது... உங்கள் பதிவு மீண்டும் அவரை நினைத்துப் பார்க்க வைத்தது.. இந்த பொன்னான நினைவுகளை பகிர்ந்த உங்களுக்கும், உங்கள் எழுத்துக்கும், எழுத்துலக அமரத்தலைவருக்கும் நன்றி..!

-
DREAMER

GOPS said...

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்...

ஞானசேகர் ராஜேந்திரன் said...

செம நண்பரே.. அருமையான பதிவு தலைவருக்கு..

GANESH SESHADRI said...

TRULY REMINISCED AND WRITTEN WITH UTMOST RECOGNITION OF SUJATHA'S TALENTS.... HE IS NO DOUBT ONE OF THE BEST WRITERS WHO TRANSCENDED EPIC,CULTURAL AND SCIENTIFIC REALMS OF LIFE IN HIS WRITING....FEW WRITERS DO THAT.... WE MISS HIM A LOT....

Arun Prasath said...

machi try collecting everything that he has written... actually the list is not ending for me..

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.