Friday, March 2, 2012

அரவான் - தமிழுக்கு அபூர்வான்.

அரவான். மிக நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த, மிக மிக எதிர்பார்ப்புக்குள்ளாகி, நிறைய நிறைய வெளியீடு பிரச்சனைகளை சந்தித்துக்  கொண்டிருந்த திரைப்படம். எனக்கு முந்தைய வசந்தபாலன் படங்கள் இரண்டுமே மிக மிகப் பிடிக்கும். வெயில், அங்காடித்தெரு. ஆல்பம் படம் பார்த்ததில்லை. வெற்றியா, தோல்வியா - வசூலா இல்லையா என்ற பொதுவான சினிமாத்தனங்களை ஒதுக்கிவிட்டு, எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்குப் பிடித்த சினிமாவைத் துணிந்து எடுப்பவர்.  அதனால் மட்டுமே இரண்டே படங்களில் ஒரு கிரியேட்டராக தமிழ் சினிமாவில் ஆழ முத்திரை பதித்தவர். இந்தப்படத்துக்கு முகப்புத்தகத்தில் அவர் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்த புகைப்படங்களே எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்றி வைத்திருந்தது. மேலும் சென்ற ஆண்டிற்கான சாகித்ய அகடமி விருது பெற்ற "சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்" நாவலைத் தழுவிய திரைப்படம். படம் எப்படி? முதற்பாதி, இரண்டாம் பாதி என்ற பப்பாதிகளாய்ப் பார்ப்போம். ஏனென்றால் உண்மையிலேயே இரண்டும் ஒரே நிறம். 18ம் நூற்றாண்டு காலம். ஆனால் வேறு வேறு கதைக்களம். களவு ஒன்று, காவல் இரண்டு.


முதல் பாதி - பசுபாதி. பசுபதி பசுபதி பசுபதி  மட்டுமே. அடித்து விளாசித் தள்ளி பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் மனுசன். கமலிடம் கொத்தாளத்தேவனாக பரிமளித்த பசுபதி வசந்தபாலனிடம் கொம்பூதியாகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். என்னா நடிப்புடா. Splendid and Marvelous. முதல் பாதியில் வரும் களவானித்தனங்கள் அனைத்தும் படுசுவாரசியம். அதிலும் வசந்தபாலனின் Screen Presence ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்த்து கொண்டே இருக்கிறது.

"எப்பயுமே பூட்ட ஒடக்கிறதுக்கு முன்ன வீட்டுக்காரன் தலகாணிக்குக் கீழ சாவி இருக்கான்னு பாக்கணும்டா"

"தூக்கம் வர்றவன் காவலுக்கு போக்கூடாது, தும்மல் வர்றவன் களவுக்கு போக்கூடாது"

அப்புறம் வெத்தலைக்கிழவி ஒருத்தியை உசுப்பிவிட்டு அவள் வெத்தலை உடைக்கும் சத்ததுக்கேற்ப கல்லலமாரியைத் தட்டித்தூக்குறது என்று முதல் பாதியின் முதல் பதினைந்து நிமிடங்களிலேயே ஏகப்பட்ட அப்ளாஸ் விஷயங்கள். அத்தணையிலும் பசுபதியின் நடிப்பு அருமையிலும் அருமை. பிறகுதான் "ஈரம்" ஆதி என்ட்ரி. ஆதி இந்தப்பாத்திரத்துக்கான மிகச் சரியான தேர்வு. விரைப்பு, வீரம், திருடச் செல்லும் வீட்டுக்குள் பதுங்கித் தவழும் லாவகம், பாம்புக்கு பயப்படும் வெகுளித்தனம், பாசத்துக்கு ஏங்குவது என்று கொடுக்கப்பட்ட வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார். முதல் பாதியில் பசுபதி தவிர்த்து இன்னொரு கதாநாயகன் கேமராமேன் சித்தார்த். களவுக்கு போகையில் ஒருத்தர் ஒருத்தராக Zoom போடுவது ஆகட்டும், காடு சம்பந்தப்பட்ட காட்சிகளாகட்டும், தேவையான இடங்களில் தேவையான அளவுகளில் வானத்தைக் காமிப்பதாக ஆகட்டும், பிரமாதப்படுத்தியிருக்கிறார். முதல் பாதியில் இரண்டுமே கதையோட்டத்தோடு கூடிய பாடல்களே. "ஊரே ஊரே என்னப் பெத்த ஊரே" பாடல் - "ஒரு மயித்துக்கும் இல்ல வயித்துக்குத் தானே இவ்வளவு போரிடுறோம் நாங்க" முதல் பாதியின் மொத்தக்கதையையும் உள்ளடக்கியிருக்கிறது. பிண்ணனிப்பாடகர் கார்த்திக்குக்கு இசையமைப்பாளாராக முதல்படம். சரியான தீனி உள்ள படம். மிகச்சரியாய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்டெர்வல் பிளாக்கிற்கு கொஞ்சம் முந்தையதாய் வரும் அந்த மாட்டு மந்தை கிராபிக்ஸ் சீன் Picture Perfect. சங்கரின் சிஷ்யர், இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம். ஒவ்வொரு கதாப்பாத்திரத்துகான தேர்வும் கனக்கச்சிதம். இப்படி முதல் பாதி முழுவதுமாய் படம் மிகக்கச்சிதம். 60க்கு 55.இரண்டாம்பாதியும் முதல் பாதிக்கு இணையாய் இருந்திருந்தால்... என்று கொஞ்சம் யோசிக்க வைத்து விட்டது என்பதே உண்மை. முழுவதும் ஆதி சம்பந்தப்பட்ட கதைக்களமே, காட்சிகளே. அனைத்தும் காவல் சம்பந்தப்பட்ட காட்சிகள். பரத், அஞ்சலி,ஸ்வேதா மேனன் என்று Star Casting தூக்கலாக இருந்தாலும், கதை பற்பல கிளைக்கதைகளாக பிரிந்து போனதால் என்னவோ கொஞ்சம் அலுப்பு தட்டத்தான் செய்தது. ஆதியின் நடிப்புக்கு அதிகதிக தீனி இருந்தாலும், கொஞ்சம் செய்திருக்கிறார்,சில இடங்களில் நல்ல எக்ஸ்பிரஷன்ஸ். இரண்டாம் பாதியின் கொஞ்சம் சிறப்பு தன்ஷிகாவும்(அவர் வாய்திறந்து பேசாமல் இருக்கும் பொழுது - டப்பிங்க் போட்ருக்கலாம் பாஸ்), "கொழுந்தியா ரொம்ப முக்கியம்டா" என்று டெரர் கிளப்பும் சிங்கம்புலியும்தான். காட்சிகளை இங்கும் அங்கும் கொஞ்சம் மாற்றி, ஏதாவது  ஒன்று பண்ணியிருக்க வேண்டும். டீடெய்லிங்கிலெல்லாம் பிரமாதப்படுத்தியிருந்தாலும் முதல் பாதியில் இருந்த ஜனரஞ்சகம் இரண்டாம் பாதியில் ஏதோ ஒரு வகையில் மட்டுப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். ஏதோ ஒன்னு கொஞ்சம் ஏமாத்திருச்சு. மற்றபடி கிளைமேக்ஸிற்கு பிறகு போடும் "மரணதண்டனையை ஒழிப்போம்" ஸ்லைடு இப்பொழுது சேர்த்திருப்பார்களோ என்று தோன்றியது.
                    ஆனால் இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான். ஏகப்பட்ட உழைப்பும், analysisம், உள்ளடங்கியிருக்கிறது. வைரமுத்து கருவாச்சி காவியம் எழுதிக் கொண்டிருந்த பொழுது "ஒரு கிராம் தங்கம்" என்பதை கதை நடக்கும் காலகட்டத்தில் எப்படிச் சொல்லியிருப்பார்கள் என்பது தெரியாமல் ஒரு வாரம் அன்னம் தண்ணி இல்லாமல் எழுதுவதை நிறுத்தி கொண்டாராம். அப்புறம் எங்கெங்கோ விசாரித்து ஒரு ஆசாரிப் பெரியவரிடம் கேட்டு அவர் "ஒரு குண்டுமணித் தங்கம்"னுல்ல சொல்லுவோம் என்று சொன்னபிறகுதான்  அவருக்கு உயிரே வந்ததாம். அப்படிப்பார்த்தால் இந்தப் படத்திற்கான/நாவலுக்கான விஷயங்களைச் சேகரிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று யோசிக்கவே முடியவில்லை. "தமிழில் டாகுமென்ட்டரி மாதிரி அல்லாமல் ஒரு நல்ல commercial Period film உண்டா என்று கேட்கும் எவருக்கும் இனி மார்தட்டி போட்டுக்காட்டலாம் அரவானை.

மொத்தத்தில் அரவான் - களவு சுவைத்த அளவுக்கு காவல் சுவைக்கவில்லை. சுவைத்திருந்தால் ம்ம்ம்ம்...

1 பேர் சொன்னது என்னான்னா..:

ரெவெரி said...

விமர்சனம் அருமை...

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.