Thursday, March 15, 2012

கஹானி - திரைப்படம் - ஒரு பார்வை.

தமிழிலே மனசெல்லாம் என்று ஒரு படம் 2003ல் வெளிவந்தது. அந்தப்படத்திலே ஒரு புதுமுகத்தை நடிகையாக அறிமுகம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டு அப்பொழுதைய வழக்கம் போல் ஒரு மலையாளப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்தார்களாம்.  கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற பிறகு அந்தப்பெண்ணிற்கு நடிகர் ஸ்ரீகாந்துக்கு இணையாக நடிக்க வரவில்லை என்று காரணம் சொல்லி அப்படத்திலிருந்து தூக்கிவிட்டு த்ரிஷாவை நடிக்க வைத்தார்கள். இந்த விஷயமே அந்தப்படத்தின் விளம்பரத்திற்காக எல்லாப் பத்திரிகைகளிலும், பேட்டிகளிலும் பெருமளவில் சொல்லப்பட்டது. த்ரிஷா கையில் தீபம் ஏந்தி வந்தார்.  ஸ்ரீகாந்த் நின்றார், நடந்தார், artificial ஆக அழுதார். ஆனால் படம் பப்படம்.

"அண்ணே, ஸ்ரீகாந்த் இங்க சும்மாதான் இருக்காரு. அந்த மலையாளப்பொண்ணு எங்கண்ணே இருக்கு?" என்று சொப்பனசுந்தரிக்காகவும் காருக்காகவும் கவலைப்படும் செந்தில்களுக்கான பதில், அந்தப் பெண் இப்பொழுது உச்சத்தில் இருக்கிறாள். இன்னும் இரண்டு மாதத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடக்க இருக்கும் 59வது திரைப்பட தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கப்போகிறாள். இந்தியாவின் அத்தணை தலைசிறந்த சினிமா இயக்குநர்களும் அவளுக்காக கதைகளை பிரத்யோகமாய் உருவாக்குவார்கள். இந்திய சினிமா வரலாற்றில் நீக்கமறா ஒரு இடத்தை சில பத்தாண்டுகளுக்கேனும் அவள் தக்க வைத்திருப்பாள். இன்றைய தேதியில் நடித்துக் கொண்டிருக்கும் கதாநாயகிகளுள் சந்தேகமே இல்லாமல் இந்தியாவின் தலைசிறந்த நடிகை அவள்தான். அந்த அவள் வித்யா பாலன். ஆம்… இன்றுதான் கஹானி திரைப்படம் பார்த்தேன். வந்து கணம் தாமதிக்காமல் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். "The Dirty Picture"ஐத் தொடர்ந்து வித்யா பாலனுக்கு அடுத்ததாக வந்திருக்கும் படம்.  சற்றும் சறுக்காமல் மீண்டும் ஒரு அற்புதமான நடிப்பானுபவத்தைக் கொடுத்திருக்கிறார் வித்யா.  படத்திலும் அவர் பெயர் வித்யாதான். கொல்கட்டாவில் பித்யாவாக அழைக்கப்படும் தமிழ்ப்பெண் வித்யா. வித்யா வெங்கடேசன்.  வித்யா வெங்கடேசன் பாக்ச்சி. ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கான உடல்மொழியில் படம் முழுவதுமாக மிகப்பிரமாதமாக நடிக்க முயற்சி செய்து தோற்றுப் போய் வாழ்ந்திருக்கிறார்.


கஹானி - இந்தியாவில் இதுவரையில் வெளிவந்திருக்கும் த்ரில்லர் வகையறாத் திரைப்படங்களுள் தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை அழுத்தமாக பதிவு செய்து கொண்டது. ஒரு அருமையான த்ரில்லர் ஸ்டேரிலைன் கிடைத்து விட்டது. நல்ல திரைக்தை அமைத்தாகிவிட்டது. கொல்கட்டாவையும் துர்கா பூஜையையும் பின்னிறுத்தி பிரமாதமான களம் பிடித்தாகி விட்டது.  ஆனால் இயக்குநர் சுஜாய் கோஷ் உண்மையிலேயே மகத்தான வெற்றி பெற்றது பாத்திரத் தேர்வில்தான். ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கான நடிகர்தேர்வும் கனகச்சிதம். வித்யாவுக்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர் கான் என்ற  Intelligence Bureau Officer கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக்தான். அந்த சிகரெட்டை ஊதித் தள்ளும் லாவகமென்ன, அலட்சியமாய்க் கோபப்படும் உடல்மொழியென்ன, அருமையாகப் பண்ணியிருக்கிறார். அதற்குப் பிறகு  வருபவர் ராணாவாக வரும் போலீஸ் அதிகாரி பரம்ப்ரத்தா சேட்டர்ஜி. நல்ல அன்டர்ப்ளே நடிப்பு. சொல்லப்போனால் படம் முழுவதும் வரும் ஒவ்வொரு சேட்டர்ஜியும், பேனர்ஜியும், முகர்ஜியும், கங்குலியும் அருமையாக நடித்திருக்கிறார்கள். நடிக்க வைக்கப் பட்டிருக்கிறார்கள்.  சுஜாய் கோஷின் உன்மத்தமான வெற்றி.

நான் படத்தின் கதையையோ, கிளைமேக்ஸையையோ பற்றி எது சொன்னாலும் சுவாரசியம் குறைந்துவிடும் அபாயம் இருப்பதால் நீங்களே வெள்ளித்திரையில் காணுங்கள். கண்டிப்பாக காணுங்கள். கஹானி என்ற படத்தின் பெயர்க்காரணம் அறியும் ஒரு தருவாயில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று உணர்வீர்கள். மிகப்பிரமாதமான ஒரு திரை அனுபவம். நல்ல பொருத்தமான பிண்ணணி இசை. காட்சியோடு நகரக்கூடிய, பெங்காலியும் ஹிந்தியும் கலந்துகட்டிய அருமையான பாடல்கள். மிக மிக கச்சிதமான படத்தொகுப்பு. இப்படி அனைத்துமே மிகச்சிறப்பாக ஒன்றிணைந்ததால் இப்படம் ஒரு படி மேலான தரத்தை எட்டியிருக்கிறது. "எக்ளா சாலோ ரே" என்றொரு பெங்காலிப் பாடல். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு சுதந்திர தினத்தில் ஸ்ரேயா கோஷல் இந்தியா கேட் முன் பாடிய வீடியோவைப் பார்த்திருக்கிறேன். மிகப்பிரமாதமாகப் பாடியிருப்பார். அந்தப் பாடலை இந்தப்படத்தில் கொல்கட்டா கதைக்களத்தில் மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பாடலை எழுதியவர் ரவீந்திர நாத் தாகூர். இந்தப்படத்தில் அந்தப்பாடலைப் பாடியிருப்பது யார் தெரியுமா? The Big ‘B’.  ம்ம்ம்ம். அமிதாப் பச்சன்.


சமீபத்திய தமிழ்படங்களின் தாக்கத்தோடு சொல்லப்போனால் எங்கேயும் எப்போதும்க்கு இணையான திரைக்கதை மற்றும் Emotionsஓடு  மெளனகுரு படத்தை விட ஒரு புள்ளி மேலான புத்திசாலித்தன த்ரில்லர்த் திறமும் கூடிய ஒரு திரைப்படம். கண்டிப்பாக பாருங்கள். உணர்வீர்கள். மொத்தத்தில் இந்தப்படம் எனக்கு 120க்கு 150. 150/120.

மொத்தத்தில் கஹானி - குடுத்த காசுக்கு மேலே.

6 பேர் சொன்னது என்னான்னா..:

குருத்து said...

Good Review. Keep it up.

- Socrates

ராம்குமார் - அமுதன் said...

மிக்க நன்றி குருத்து சார்... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

மௌனகுரு said...

Yes boss awesome thriller.... Even name selection kooda differenta oru feel kuduthuchu... Baakshi damji rana etc etc...... Nice review keep going

சைக்கிள்காரன் said...

என்னங்க சொல்றீங்க மனசெல்லாம் படத்துல பித்யா பாலன் நடிக்க வேண்டியதா ? வட போச்சே!!!

ராம்குமார் - அமுதன் said...

@சைக்கிள்காரன் ஆமப்பா ஆமா... நடிக்க வேண்டியது மிஸ்ஸாகிடுச்சு...

THAMBU said...

welldone Ramkumar your block is very nice mamme.

by
nellai thambu

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.