Friday, March 16, 2012

சச்சின் - தலைவா, யூ ஆர் கிரேட். !!!


இன்றிருக்கும் மனநிலையில் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க வாய்ப்பு இல்லை. என்றோ பிறக்கப் போகும் குழந்தைக்கு முன்பே தொட்டிலும், பொம்மைகளும் வாங்கி வைப்பதைப் போல இன்று சதத்தின் சதத்தை அடித்த சச்சினுக்காக என்றோ யோசித்து வைத்த கட்டுரை இதுஎழுதவா வேண்டாமா, வேண்டாமா  எழுதவா என்று யோசனையாகவே இருந்தது. ஆனால் என்னவோ இந்த நூறாவது சதம் மட்டுமல்லாமல் நூறு சதங்களையுமே பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு எதிராக மட்டுமே சச்சின் அடித்திருப்பதாய் சமூக வலைதளங்களில் அங்கலாய்ப்பவர்களுக்காகவேனும் இதனை எழுதுவது அவசியாமாகிறது. அவர்களுக்கான "இன்று ஒரு தகவல்" சச்சின் பங்களாதேஷ்க்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அடித்திருக்கும் முதன்முதல் சதம் இது. இந்த நாள், கிரிக்கெட்டை ரசித்துப் பார்க்கும் ஒவ்வொரு இந்தியனது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு நாள். சச்சின் என்ற சதங்களின் சகாப்தம் தனது நூறாவது நூறை அடித்துச் சுவைத்திருக்கும் இந்த நாள். எத்தணை நாடுகள், எத்தணை அணிகள், எத்தணை மைதானங்கள், எத்தணை பந்துவீச்சாளர்கள், எத்தணை விதமான தட்பவெட்ப நிலைகள், எத்தணை விதமான ரசிகர்கள், எத்தணை சக அணி வீரர்கள், எத்தணை எதிரணி வீரர்கள், எத்தணை காயங்கள், எத்தணை சிகிச்சைகள், எத்தணை சோதனைகள், எத்தணை சாதனைகள்... கடந்த 25 ஆண்டுகளில் சச்சின் தனது கிரிக்கெட் வாழ்நாளில் கடந்து வந்துள்ள இத்தணை "எத்தணை"களுக்குமான மிகப் பெரிய மைல்கல் இந்த நூறாவது நூறு. இந்த மைல்கல்லை எட்டுவதற்கு சச்சின் கொடுத்திருக்கும் அயராத உழைப்பும் கொண்டிருந்த அழகான அர்ப்பணிப்பும் எண்ணிப் பார்ப்பதற்கே அளப்பறியது. உழைப்பின் உச்சத்திற்கான மிகப்பெரிய எடுத்துக்காட்டு சச்சினின் இந்த சாதனை.


இனி வரும் காலங்களில், குறைந்தபட்சம் நமது தலைமுறையின் வாழ்நாள் முடிவுக்குள் இன்னொரு வீரர் இதை நிகழ்த்துவது என்பது கண்டிப்பாக நடக்கப் போவது இல்லை. நமது தலைமுறையில் நாம் கண்ட மிகப்பெரிய "Cricketing Entertainer"சச்சின் என்றால் அது எவ்வகையிலும் மிகையாகாது. கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் உலக வரலாற்றின் முதல் 200 ரன்களை அடித்துவிட்டு எந்த விதமான மமதையும் துளியும் இல்லாமல் ஒரு குழந்தைச் சிரிப்போடு சாதரணமாய்ச் சொன்னாரே "I am dedicating this double ton to all my Indian people." அதேதான் இன்றும். சிறிதும் மாற்றமில்லாமல். இதுவரையில் தான் நிகழ்த்திய எத்துணை பெரிய சாதனையையும் தனது தலைக்கோ இதயத்திற்கோ எடுத்துச் சென்றதில்லை. அதுதான் சச்சின். 1996 முதல் 2011 வரையிலான அத்துணை உலகக் கோப்பைகளிலும் சோபித்த ஒரு இந்தியன். கிட்டத்தட்ட பேட்டிங் தொடர்பான அத்தணை சாதனைப் பட்டியலிலும் சச்சினின் பெயர்தான் முதலாவதாய் இருக்கின்றது.


சச்சினின் முதல் சதம் எனது பிறப்பிற்கு பிறகுதான் அடிக்கப் பட்டிருக்கிறது.இதோ நூறாவது சதத்தையும் பார்த்து விட்டேன். என்னுடைய நெல்லையின் மிகமகிழ்ச்சியான இளமைக்காலங்களின் கிரிக்கெட் வேட்கை சச்சினது தலை சிறந்த ஆட்டங்களைப் பார்ப்பதிலேயே கழிந்திருக்கிறது. சச்சினின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 200 ரன்களைப் பார்த்திருக்கிறேன். சச்சின் சார்ஜாவில் புயல் காற்றுக்கு நடுவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய 143 ரன் ருத்ரதாண்டவத்தைப் பார்த்திருக்கிறேன். சச்சின் சோயப் அக்தரை துரத்தி துரத்தி அடித்த 98 ரன்களைப் பார்த்திருக்கிறேன். ஷேன் வார்னேவின் சுழலில் "விலகிச் சென்று இறங்கி வந்து" Straightல் சிக்சருக்கு விளாசுவதைப் பார்த்திருக்கிறேன். சச்சின் கையில் ஒரு உலகக்கோப்பை தவழ்வதை கண்ணாரப் பார்த்திருக்கிறேன். நமது வாழ்நாளில் நமதளவில் நமக்கு இதுவே மிகப் பெரிய சாதனைதான். அளவில்லா சந்தோஷம்தான்.


2011, ஏப்ரல் 2ம் தேதி இந்தியா உலக்கோப்பையை கைத்தாங்கிய பொழுது கிடைத்த ஆராவாரமான மகிழ்ச்சியை விட சச்சினின் இந்த நூறாவது நூறு அளித்திருக்கும் ஆனந்தம் ஏதோ ரம்மியமான உள்ளுணர்வாய் இருக்கிறது. கடவுள் என்னும் வார்த்தைக்கு மற்றவர்களை மகிழ்விப்பவன் என்று அர்த்தமும், சித்தாந்தமும் மாறும் ஒரு பொழுதில் எதிர்காலாத்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதை வேண்டுமானால் சொல்லிக் கொடுக்கலாம்.சச்சின் என்றொருவர் நம் கண்ணெதிரே இருக்கிறார்.
அவர்தான் கிரிக்கெட் என்னும் மதத்துக்கு கடவுள்..
அவருக்கு Cricket Bat என்பதே ஆயுதமாகத் திகழ்ந்தது.
அந்த ஆயுதத்தைக் கொண்டு அவர் 100 கோடி இந்தியர்களை மகிழ்வித்தார்..
ஜாதி, மதம், இனம், நிறம், மொழி என்ற பாகுபாடுகளைக் கடந்து
அத்துணை இந்தியர்களுக்கும் பொதுவானவர் அவர்.

4 பேர் சொன்னது என்னான்னா..:

PREM.S said...

அருமையான கட்டுரை வங்க தேசத்திற்கு எதிராக முதல் சதம் என்பது புதிய தகவல்

அரசன் சே said...

சச்சினை பற்றி மிக அருமையாக எழுதிய உங்களுக்கு என் நன்றிகள் நெல்லை அன்பரே

Johnson said...

நெல்லை நண்பரே சூப்பர்

Johnson said...

நெல்லை நண்பரே சூப்பர்

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.