Tuesday, March 27, 2012

அழகழகான தருணங்கள்...

தமிழில் இருக்கும் லட்சத்தி சொச்சம் வார்த்தைகளில் உனக்கு மிகவும் பிடித்த வார்த்தை எது என்று சமீபத்தில் யார் கேட்டிருந்தாலும் டக்கென்று சொல்லியிருக்கக் கூடும் "தருணம்" என்று. ஆனால் பேச்சுவழக்கின் புழக்கத்தில் இந்த வார்த்தையின் பயன்பாடு சிலபல ஆண்டுகளாகவே குறைந்து விட்டது. தருணம் என்ற வார்த்தை ஒரு நொடியையோ, மணித்துளியையோ உயிருள்ளதாக்கி விடுகிறது. காலமும் நேரமும் மனதில் நிற்பதில்லை. தருணங்களே மனதில் நிற்க வல்லவை.  பெருவாரியான புத்தகங்களிலும் கூட இவ்வர்த்தையின் உண்மையான பயன்பாடு காலப்போக்கில் அருகிக் கொண்டே வருகிறது. "அந்தத் தருணத்திலே அந்தப்புரத்தில் நுழைந்த அழகான ராஜகுமாரனைப் பார்த்த இளவரசி..." என்பவையெல்லாம் சாண்டில்யனோடு சம்பவமாகிப் போய்விட்டது. பொழுது என்ற வார்த்தை தருணத்திற்கு பதிலாளியாய் புழக்கத்தில் வந்து விட்டது. ஆனால் பொழுதுகள் உயிரற்றவை. தருணங்கள் உயிருள்ளவை. பொழுதுகள் அதுகளாகவே கழிந்து விடுகிறது. தருணங்கள் நினைவுகளாக உருமாறி விடுகின்றன.


 "யேய்... இது என் மகன்டி" என்று அம்மா என் கழுத்தில் கையைப் போட்டு முடிக்கும் முன்னரே கையைத் தட்டிவிட்டு "வவ்வவ்வவ்வ... எங்க மாமா" என்று கூறி மடியில் அமர்ந்து கன்னத்தில் அழுந்த முத்தம் வைப்பாளே எனது அக்கா மகள். 
ஒரு மகன் மாமாவாகும் மலர்ச்சியான தருணம்.

"யேய்... என் தம்பிடி. ஏன்டி அவனப் போட்டு இந்தப் பாடு படுத்துற. அவன் மேல ஏறி குதிக்காத" என்று தன் மகளிடம் பொய்யாகக் கோபப்படுவாளே அக்கா. 
ஒரு அம்மா அக்காவாகும் அழகான தருணம்.

"யேய் புள்ளைய அடிக்காதடி... உங்களையெல்லாம் இப்படி அடிச்சிருந்தா தெரியும்" என்று அடி கொடுக்கும் அக்காவிடம் இருந்து பாப்பாவை வாரி அணைத்துக் கொள்வாளே அம்மா சிறு வயதில் சேட்டை செய்தால் எங்களை துரத்தித் துரத்தி அடித்த அதே அம்மா. 
ஒரு அம்மா பாட்டியாகும் அற்புதமான தருணம்.

அம்மா ஊருக்கு போயிருக்கும் ஒரு நாளில் "ஆபிஸ்ல இருந்து வர இன்னைக்கு லேட்டாகும்டா. பாப்பாவுக்கு ஊட்டி விட்ரு. நான் வந்து தூக்கிக்குறேன்" என்று அக்கா சொல்லுவாள். 

"பாப்பா... சாப்பிடு பாப்பா... ப்ளீஸ் பாப்பா... நீ சாப்பிடலேன்னா நான் ஊருக்குப் போறேன்." 

"நீ சாப்ட்டா, மாமா உன்னைய கடைக்கு கூட்டிட்டு போய்.... ... ... ... ..." 

"சாப்டாதான், லாப்டாப்ல மாமா டோரா போடுவேன்.. இல்லேன்னா இல்ல" 

மூன்று மணிநேரம் போராடியும் மூன்று வாய்க்குக் கூட வாயைத் திறக்காமல் பழிப்பம் காட்டிச் சிரிப்பாளே.  "என்னால் முடியாதது ஒன்றுமே இல்லை" என்ற அகங்காரம் உடைந்து சுக்கு நூறாகும் தருணம். நீ ஆறாம் வகுப்புல இருந்து B.E வரை எந்த பாடத்தில் படித்த எந்த விதியை, நியூட்டனின் மூன்றாம் விதி உட்பட செயல்படுத்தி பார்த்தாலும் ஒன்றுமே வேலைக்காகாத தருணம் அது.

"டேய்... பாட்டி நம்ம எல்லாத்தையும் விட்டுட்டு போயிருச்சுடா" என்று கம்மிய குரலில் அலைபேசியில் அழைத்துச் சொல்வார் அப்பா. "அப்படியா" என்று கேட்கும் முன்னரே நம் கண்களின் ஓரத்தில் நீர் துளிர்க்குமே. 
ஒரு அப்பா மகனாகவும் ஒரு மகன் பேரனாகவும் மாறும் நெகிழ்ச்சியான தருணம்.

"பாஸ்... நான் பிரசன்னாவோட ப்ரண்டு பேசுறேன் பாஸ். அவன் கூட உங்களுக்கு போன் பண்ணிருப்பான்." "ஆமா.. நாளைக்கு காலைல அங்க வந்துருவேன்." "புது ஊரு பாஸ். யாரையுமே தெரியாது" என்று அலைபேசியில் சொல்லும் பொழுது "கவலைய விடுங்க பாஸ்... வாங்க பாத்துக்கலாம்" என்று சொல்லி தூங்கி முழித்து பஸ்ஸில் இருந்து இறங்கும் பொழுது, பஸ்ஸ்டான்டில் காத்திருந்து பெட்டியைக் கையில் வாங்குவானே. 
ஒரு நண்பனின் நண்பன் நண்பனாகும் நல்லதொரு தருணம்.

இரண்டே இரண்டு பீரை வாங்கிக் கொண்டு 8 ஊறுகாய் பாக்கெட், 32 முறுக்கு, 1 கிலோ மிக்சர், 48 புரோட்டா, 16 ஆம்லேட், 16 வாட்டர் பாக்கெட் சகிதம் நெல்லையின் அந்தக்கடைசியில் ஆளே இல்லாத அகாலக்காட்டில் திருச்செந்தூர் செல்லும் ரயில் தண்டாவாளத்தை ஒட்டிய ஒரு பாறைக்கு போனோமே 16 பேர். அதிலும் ஓ ஓ கிக்கு ஏறுதே, குடித்து முடித்த இரண்டு பாட்டிலையும் தண்டவாளத்தில் எறிந்து சுக்குநூறாக உடைத்து... சிலபல சிறுவர்கள் பலசில இளைஞர்களாக வயது மாறிய வசந்தமான தருணம்.

"டேய் இதெல்லாம் ஒரு புரோட்டாவாடா... எங்க ஊருக்கு வாங்கடா, நியூ ருசிலய்யும், இளங்கோலயும், கண்ணப்ப விலாஸ்லயும் புரோட்டா வாங்கித் தர்றேன். சாப்டுட்டு சொல்லுங்கடா" 
ஒரு சென்னைக்காரன் நெல்லைக்காரனாகும் தருணம்.

"அங்கல்லாம் வீக் எண்ட்னா எங்கயாவது மாலுக்கு மல்டிப்ளெக்ஸ்க்கு போலாம்.. ஏன் பீச்சுக்குக் கூட போலாம். இங்க எங்க போறது" 
ஒரு நெல்லைக்காரன் சென்னைக்காரனாகும் தருணம்.

சைக்கிள், பைக், கார் - இவை ஒவ்வொன்றையும் முதல்முறை ஓட்டியதை நினைத்துப்பார்க்கிறேன். முதன்முதலில் பேசிய மேடை, முதன்முதலில் வாங்கிய பரிசு, சாலமன் பாப்பையாவோடு மேடையில் கரைந்த அந்த சில மணி நேரம், டைடல் பார்க் வாசல்லயே நின்னு 'ஆ'வென்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த முதல் வேலையின் முதல் நாள், "நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலி" என்று அலுவலகத்தில் கொடுத்த முதல் அவார்ட், ஓராண்டுக்கு முன்னால் இந்தியா வென்ற கிரிக்கெட் உலக்கோப்பை. பிள்ளைப்பிராயத்து கனவுகள் ஒவ்வொன்றாய் நிறைவேறிய அழகழகான தருணங்கள்.

இதோ தமிழ்மணத்தில் நட்சத்திரமாக நானும் ஒரு வாரம். "வாழ்வின் முக்கியமான தருணம்" மட்டுமே முக்கியமானதல்ல. வாழ்வின் எல்லாத் தருணங்களுமே முக்கியமானவையே. இடம் பொருள் ஏவல் ஏனையும் மாறலாம். ஆனால் முடிந்த தருணங்கள் மாறுவதேயில்லை. சில படங்கள் தருணமாகலாம். சில புத்தகங்கள் தருணமாகலாம். சில நிகழ்வுகள், சில மனிதர்கள், சில பயணங்கள், சில பாடல்கள் இப்படி எவை வேண்டுமானாலும் தருணமாகலாம்.  

நாம மொதமொதல்ல எங்க பாத்தோம்னு ஞாபகம் இருக்கா மச்சி? 

உங்கிட்ட நான் முதல்முதல்ல பேசுன வார்த்தை என்னன்னு சொல்லு? 

செகண்ட் இயர் டூர்ல போன கொடைக்கானல் டூர் ராத்திரிய மறக்க முடியுமா? 

அன்னைக்கு நீ என்ன சொன்னன்னு ஒனக்கு ஞாபகம் இருக்காடா?

இது போன்ற பல கேள்விகளுக்கும் பதிலாக ஏதோ ஒரு தருணம்தான் இருக்கிறது. வாழ்க்கை என்பதே ஒரு அனுபவம்தானே.


சொல்லப்போனால் சித்தார்த்தன் புத்தனானது கூட ஏதோ ஒரு தருணத்தில்தான். தமிழில் இருக்கும் லட்சத்தி சொச்சம் வார்த்தைகளில் உனக்கு மிகவும் பிடித்த வார்த்தை எது என்று சமீபத்தில் யார் கேட்டிருந்தாலும் டக்கென்று சொல்லியிருக்கக் கூடும் "தருணம்" என்று.

19 பேர் சொன்னது என்னான்னா..:

Anonymous said...

இந்த தருணத்தை உங்களை பாராட்ட பயன்படுத்திகொள்கிறேன்..

வளர்ச்சி அடையும்போது ஒவொரு தருணத்திலும் மனித உறவுகள், பாப்பாவாக தங்கையாக, தம்பியாக அண்ணன்,அக்கா அப்பா,அம்மா, மாமா பாட்டி தாததா என்று ஒவ்வொரு வளர்ச்சியும் எப்படி உறவு முறைகளாக பரிமாண வளர்ச்சி அடைகிறது...

அப்புறம்....நண்பர்களுடனான தருணங்கள்...அவர்களின் மன மாற்றங்கள் எல்லோமே தொட்டு தொட்டு சென்றிருக்கிறீர்கள்..

கடைசியாக......."சொல்லப்போனால் சித்தார்த்தன் புத்தனானது கூட ஏதோ ஒரு தருணத்தில்தான்" முத்தாய்ப்பாக....இது என்னை தொட்ட தருணங்கள்...

Anonymous said...

nalla pathivu..Ini nanum intha tharunam endra varthaiyai payanpaduthukiren...!!!

ராம்குமார் - அமுதன் said...

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனானி நண்பர்கள் இருவருக்கும் என்னுடைய நன்றி... அனானி என்பதை விட பெயர் போட்டிருந்தால் இன்னும் மகிழ்வேன். :))

guna thamizh said...

நட்சதிர வாழ்த்துக்கள் நண்பா

ராம்குமார் - அமுதன் said...

அன்பின் குணா... மிக்க நன்றி வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்...

Anonymous said...

வாழ்த்துக்கள் தமிழ் மண அங்கீகாரத்திற்கு...

ராம்குமார் - அமுதன் said...

அன்பின் ரெவெரி... வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல... :)

Giridharan said...

மூன்று மணிநேரம் போராடியும் மூன்று வாய்க்குக் கூட வாயைத் திறக்காமல் பழிப்பம் காட்டிச் சிரிப்பாளே. "என்னால் முடியாதது ஒன்றுமே இல்லை" என்ற அகங்காரம் உடைந்து சுக்கு நூறாகும் தருணம். நீ ஆறாம் வகுப்புல இருந்து B.E வரை எந்த பாடத்தில் படித்த எந்த விதியை, நியூட்டனின் மூன்றாம் விதி உட்பட செயல்படுத்தி பார்த்தாலும் ஒன்றுமே வேலைக்காகாத தருணம் அது.

"டேய்... பாட்டி நம்ம எல்லாத்தையும் விட்டுட்டு போயிருச்சுடா" என்று கம்மிய குரலில் அலைபேசியில் அழைத்துச் சொல்வார் அப்பா. "அப்படியா" என்று கேட்கும் முன்னரே நம் கண்களின் ஓரத்தில் நீர் துளிர்க்குமே.
ஒரு அப்பா மகனாகவும் ஒரு மகன் பேரனாகவும் மாறும் நெகிழ்ச்சியான தருணம்.....Anna ..... Etho compition nu sonnanga, naanum participate pannalaam nu nenachen..... but unga blog padicha piragu, oru naal pothuma naan paada indroru naal pothuma song thaan gnabagam vanthathu....... i will support you.... i never read sujatha, and other tamil writers.... but i read your's.....i can't compare you and others....but i like your writings..... :) don't give up.... you are having a great future in tamil writing.... I will be the competitor for you..... :)

Giridharan said...

Sorry to find some mistakes in your tamil writing... :)

"ஓராண்டுக்கு முன்னால் இந்தியா வென்ற கிரிக்கெட் உலக்க்கோப்பை. பிள்ளைப்பிராயத்து...."

neengale sari pannikonga na... :)

Ambai iyyappan said...

""டேய் இதெல்லாம் ஒரு புரோட்டாவாடா... எங்க ஊருக்கு வாங்கடா, நியூ ருசிலய்யும், இளங்கோலயும், கண்ணப்ப விலாஸ்லயும் புரோட்டா வாங்கித் தர்றேன். சாப்டுட்டு சொல்லுங்கடா"
ஒரு சென்னைக்காரன் நெல்லைக்காரனாகும் தருணம்."

Unmai Nanbarey ............

ராம்குமார் - அமுதன் said...

@கிரிதரன், விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி... It gave me so much energy. தொடர்ந்து பயணிப்போம்...

சொன்ன பிழை திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. :))

ராம்குமார் - அமுதன் said...

அன்பின் அம்பை ஐயப்பன், வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...

mrrao said...

nalla pathivu ettharunathill

mrrao said...

Nalla pathivu

ராம்குமார் - அமுதன் said...

@MrRao : கருத்துக்கு நன்றி குரு.

முத்துராமலிங்கம் said...

தருணத்தை பற்றிய உங்களது தொகுப்பு அழகு ... வாழ்த்துக்கள்

முத்துராமலிங்கம் said...

தருணத்தை பற்றிய உங்களது தொகுப்பு அழகு ... வாழ்த்துக்கள் ...

ராம்குமார் - அமுதன் said...

@முத்துராமலிங்கம்... நன்றி வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்...

தனிமரம் said...

தருணம் ரசிக்க்க வைக்கக்கூடிய பதிவு வாழ்த்துக்கள் சகோ!

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.