Thursday, April 26, 2012

நான் சொன்னது தப்பா சார்...


இன்றே கடைசி, மதியத்துக்குள் குடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் குடுக்க வேண்டிய விண்ணப்பத்தைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். பெயர், பிறந்த தினம், கல்வித்தகவல்கள், முகவரி, அலைபேசி எண். எல்லாம் சரியாகவே இருந்தது. விண்ணப்பத்தின் கூடவே சமர்பிக்க வேண்டிய சான்றிதழ் நகல்களின் பட்டியலையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டேன். கிளம்ப எத்தனிக்கையில்தான் அந்த வாக்கியம் கண்ணில் பட்டது. "All the Certificate photocopies must be duly attested" . அட, இதை எப்படி கவனிக்காமல் விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கின்றது. பல்கலைக்கழகத்துக்கு எட்டு கிலோமீட்டர் போக வேண்டும். இன்று சனிக்கிழமை வேறு. எங்கு போய் attestation வாங்குவது. யாரிடம் வாங்குவது. இதே நெல்லையாய் இருந்தால், attestation போடுவதற்கு தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஏன், எனது அம்மா அப்பா இருவருமே கூட ஓய்வு பெறும் வரையில் பலருக்கும் attest பண்ணியிருக்கிறார்கள்.. ஆனால் சென்னையில எனது பழக்கம் எல்லாமே தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நண்பர்களோடே என்பதால் Attestation போடுமளவிற்கு அரசு துறையில் உள்ளவர்கள் யாரும் பழக்கம் இல்லை. என்ன செய்வது? தோன்றியது, வீட்டின் அருகில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்தில் போய் கேட்டுப் பார்க்கலாம். பொறியாளர் எவரேனும் இருந்தால் போடுவார்கள். எல்லாச் சான்றிதழ்களின் அசலையும் நகலையும் எடுத்துக் கொண்டு அங்கே போனேன்.

கையில் பைலோடு உள்நுழைவதைப் பார்த்த கடைநிலை சிப்பந்தி ஒருவர் வழிமறித்தார்.

"யாரு சார்? என்ன வேணும்?"

"AE,  ADE யாராவது இருக்காங்களா? பாக்கணும்"

"கமெர்ஷியல் கனெக்ஷன் தான? மொதல்ல என்கிட்ட சொல்லுங்க சார்.. நேரா AEயப் பாக்க முடியாது."  - பைலைப் பார்த்து தப்பாக நினைத்திருந்தார்.

"கனெக்ஷன்லாம் இல்லீங்க. Attestation வாங்கனும். அதான்.."

" Attestationஆ... போங்க... உள்ளார யாராவது இருந்தா போய்ப்பாருங்க." சில்லறை தேறாது என்ற கடுப்பில் தலையைச் சொறிந்து கொண்டு போனார்.

இன்னும் இரண்டு மூன்று பேரைக் கடந்த போதும் இதே. Attestation என்ற வார்த்தையைக் கேட்டதுமே ஏதோ பல்பு திருடியவனைப் பார்ப்பது போல் கேவலமாகப் பார்த்தார்கள். ஒருவழியாக AEன் அறையை நெருங்கி வாசலில் போய் நின்றேன். இரண்டு மூன்று முறை ஏறெடுத்துப் பார்த்தார். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. நான்காம் முறை பார்த்த பொழுது கேட்டார்

"யாரு நீங்க என்ன வேணும்?"

" Attestation வேணும் சார்"

"எதுக்கு Attestation?"

"காலேஜ் அப்ளிக்கேஷனுக்கு certificate, Marksheet attestation "

"அது ஏன் சார் சனிக்கிழமை வர்றீங்க... வாரநாள்ல வர வேண்டியதுதான. போய்ட்டு திங்கக்கிழமை வாங்க.."  - அது வரையில் அவர் துக்ளக்தான் படித்துக் கொண்டிருந்தார் என்பதை இந்த இடத்திலே சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் மை லார்ட்.

"இல்ல சார், இன்னிக்கு கடைசி நாள்... குடுக்கணும்"

"உங்க கடைசி நேர அவசரத்துக்கு எங்களையும் பாடாப்படுத்துங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க தம்பி" சொல்லியவாறே எழுந்து போய் கம்ப்யூட்டரில் போய் உட்கார்ந்தார். கண்டிப்பாக சீட்டுதான் விளையாடப் போகிறார் என்று உள்மனது சொல்லியது. ஆனால் இல்லை.

"யோவ் ராமநாதன், அந்த DC பண்ணதுல பில்லு கட்டுனவன் லிஸ்டக் கொண்டாய்யா... இந்த எளவுல என்ட்ரியப் போடணும்" என்று சொல்லியவாறே சிஸ்டத்தை ஆன் செய்து மவுசைத் ஆட்டிக் கொண்டே இருந்தார். ராமநாதன் வந்து லிஸ்டைக் கொடுத்துவிட்டு என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் போனார். ராமநாதன் - அந்த முதல் கமர்ஷியல் கனக்ஷனார்.  சிரித்து வைத்தேன்.

ஒரு ஐந்து நிமிடம் போயிருந்தது. என்னதான் செய்கிறார் என்று தற்செயலாகப் பார்த்தே. வினோதமாக ஏதோ செய்து கொண்டிருந்தார்.  முதலில் மவுசை வைத்து மவுஸ்பேடில் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ போட்டார். பின்னர் ஒரு க்ளிக். திரும்பவும் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ. பின்னர் ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.  மீண்டும்  பதினாறு, க்ளிக், பதினாறு, டைப்பிங்…. தொடர்ந்து கொண்டிருந்தது. விஷயம் என்னவென்றால், அது ஒரு Form. நான்கு Text Boxகளை Fill பண்ண வேண்டும். Submit.  ஒவ்வொரு Text Boxஐயும் தேடிப் போய் க்ளிக் பண்ணி விட்டு மீண்டும் Mouse cursorஐ மானிட்டரின் கீழே ஓரத்துக்கு கொண்டு வந்து வைத்து விடுகிறார். டைப் செய்கிறார். மீண்டும் ஜென்மப் பிரயத்தனத்தில் மவுசை நகட்டி நகட்டி அடுத்த Text Boxல் க்ளிக். மீண்டும் மானிட்டரின் ஓரம். ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.  

என்னுடைய ஏழரை அங்கேதான் தொடங்கியது. சனி வாய் வழியாக வந்தது.

"சார்... ... .... .... ... ....." -  அதை நான் சொல்லி விட்டேன்.

ஏறிட்டுப் பார்த்து "என்ன சொன்னீங்க?" என்றார். அதைக் காட்டி மீண்டும் அதையே சொன்னேன். அங்கே ஆரம்பித்தது டண்டணக்கா.

"கம்ப்யூட்டர் தெரியும்ன்னு திமிரு காட்றீங்களா..? என்ன வேலை பாக்குறீங்க?"

"சாப்ட்வேர்லதான் சார். ஆனா அப்படில்லாம் இல்ல சார்.. நான் சொன்னது.. சார்... சாரி... அது வந்து"

"வருவீங்க இத அடி, அத அடின்னு சொல்லுவீங்க. அப்புறம் கம்ப்யூட்டர் நொட்டையா வேல செய்யாம ரிப்பேராப் போகும். யாரு பாக்குறது. நீ வந்து ஓசில சர்வீஸ் பண்ணுவியா.. எதாவதுன்னா என் சம்பளத்துல கைக்காசு போட்டு பாக்க சொல்லி தாளி அறுப்பானுங்க. நீ வந்து பாப்பியா? சொல்லுய்யா..."

"சார்... அது வந்து சார்... அப்படில்லாம் ஒன்னும் ஆகாது சார்..."

"என்னாது வந்து போயி... இப்படித்தான் முன்னால வந்தவன் ஒருத்தன் கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்ன்னான். கம்ப்யூட்டர் Slowவா இருக்கு பாக்குறீங்களான்னு கேட்டதுக்கு இத்த அத்தன்னு எத்தையோ கெலிட்(delete) பண்ணீட்டு போய்ட்டான். இந்த சனியன் 3 மாசமா வேலை செய்யாமக் கெடந்தது. என்னையப் போட்டு கொடஞ்சிட்டானுக.. தேவையா எனக்கு"

"சார்... அது வந்து... அப்படில்லாம்... சார்..."

"போயிரு… Attestationலாம் ஒன்ணும் போட முடியாது... போயிரு"

"சார்... சாரி சார்.. இல்ல அது சார்.. சாரி சார்..."

"போங்கறேன்ல... போயிரு" என்று கோபத்தில் மவுசை வைத்து மவுஸ் பேடில் 360, 3350 எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஏப்ரல் மாசம் வேற... ராத்திரிக்கு கரண்டப் புடுங்கிட்டானுகன்னா Fan, AC ஓடாது என்பதால் கம்மென்று கிளம்பி விட்டேன்.

அவரிடம் நான் சொன்னது இதுதான்.... இது மட்டும்தான்

"சார்... இந்த Tab Key ah அடிச்சீங்கன்னா அடுத்தடுத்த Text boxக்கு ஆட்டோமேடிக்காப் போகும். Mouse ah use பண்ண தேவை இல்லை."நான் சொன்னது தப்பா சார்?

****************************
பக்கத்திலேயே இருந்த அரசு மருத்துவர் ஒருவரிடத்தில் Attestation வாங்கப் போனேன். நல்லவேளையாக அவர் அறையில் கம்ப்யூட்டர் எதுவும் இல்லாத காரணத்தால் அன்றே அப்ளிகேஷனைக் கொடுக்க முடிந்தது.  

கடவுள் இருக்கான் கொமாரு.

21 பேர் சொன்னது என்னான்னா..:

Anonymous said...

நல்ல அனுபவம் ராம்குமார்...சொந்ததோ?

ராம்குமார் - அமுதன் said...

ரெவெரி... ஆமாம் நண்பரே... சொந்த அனுபவம்தான்...

ராஜ் said...

//நான் சொன்னது தப்பா சார்?//
கண்டிப்பா எந்த உயர் நிலையில் இருக்கும் அரசு ஊழியரும் தனக்கு கீழ இருப்பவங்க அட்வைஸ் சொல்லுறதை ஏத்துக மாட்டாங்க....
ஏங்க சாப்ட்வேர் பில்ட்ல மேனேஜர், அதுக்கும் மேல இருப்பவங்க, தனக்கு கீழ இருப்பவங்க கருத்து சொன்னாலோ அட்வைஸ் பண்ணுனாலோ கேட்பாங்களா....?????
மனித ஈகோ கண்டிப்பா தடுக்கும்...
அப்புறம் நீங்க கண்டிப்பா சிறுகதை எழுதலாம்...உங்களுக்கும் கதை சொல்லுறது ரொம்ப நல்லா வருது...

Anonymous said...

பி.எஸ்.என்.எல்.லில் இன்டெர்நெட் கனெக்ஷன் அப்ளை செய்ய பெங்களூரில் அதன் ஆபீஸ் போயிருந்தபோது இதுமாதிரி தான் நடந்தது.இன்றைக்கு எட்டாவது படிக்கிற பையன்கூட அவரைவிட வேகமாக வேலை பார்ப்பான்.அவ்வளவு மெதுவாக கம்ப்யூட்டரை தட்மzடிக் கொண்டிருந்தார்.ஒரு அப்ளிகேஷன் நகர 45 நிமிஷம். நிறைய பேர்களை நாளைக்கு வா என்று விரட்டிவிட்டார். அவருக்கு அசிஸ்டெண்ட் வேற.தூங்கி வழிந்தார்கள்.தனியார் கம்பெனியில் இருந்திருந்தால் நாலு நாள் கூட தாக்குப்பிடித்திருக்க முடியாது அவரால். எனக்கு receipt பிரின்ட் அடித்து தந்தார்.(பிரிண்டரில் பேப்பரை வைத்து சரிசெய்ய 20 நிமிஷம்).தன் அசிஸ்டெண்டையம் செய்ய விடவில்லை. அவன் தப்பா செய்றானாம்.

வீட்டுக்கு வந்து receipt ஐப் பார்த்தால் அதனோட பின்னாலே ஒரு பேப்பரும் ஒட்டிக் கொண்டிருந்தது. அது அவரோட pay slip. மாதம் 65 ஆயிரம் சம்பளம் அவருக்கு.

Ambai iyyappan said...

நல்ல வேலை உங்க வீட்டு eb connection ஐ புடுங்கலை .....

ராம்குமார் - அமுதன் said...

@ராஜ்... தெரியாத விஷயம் சொன்னால் கேட்பதில் தப்பில்லையே தலைவா... எல்லாம் அவரவர் இயல்பைப் பொறுத்ததே... என்ன சொல்றீங்க...

எல்லாப்பதிவையுமே வாசித்து பின்னூட்டமிடுவதற்கு நன்றி தலைவா :))

ராம்குமார் - அமுதன் said...

@கூலிங் பியர் : உண்மை சகா... அரசுத்துறையின் எல்லா இடங்களிலும் இது மாதிரியான ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்... சென்னையின் சில வங்கிகளில் சமீபகாலங்களில் பரவாயில்லை... கொஞ்சம் தேறியிருக்கிறார்கள்.... ஆனால் EB சில BSNL அலுவலகங்கள் ஆகியவை இன்னும் மாறவில்லை என்பது மிகவும் உண்மையே...

65K ஆ? ம்ம்ம்... திஸ் இஸ் கால்ட் குட் தலையெழுத்து :))


@அம்பை ஐயப்பன்... நாங்கதான் சுதாரிப்பா கெளம்பிட்டோம்ல:))

Balavasanth M said...

ram romba nalla irukku da...! I cant stop reading your blogs..keep writing..!! Good work....!!

ராம்குமார் - அமுதன் said...

@Balavasanth டேங்க்யூ பார் தி கமெண்ட்ஸ் மச்சி... கண்டிப்பா தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் :)))

Anonymous said...

Nandru.......... unmai...

arul said...

nalla padam angalai pondra vasagargalukkum

Vijay Periasamy said...

அரசு அதிகாரிகள் பல பேர் இப்படி தான் இருக்காங்க ?!

இணையத் தமிழன்,
http://www.inaya-tamilan.blogspot.com/

ராம்குமார் - அமுதன் said...

வந்தவர்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பர்களே :)

Muruganandan M.K. said...

சுவையாக இருந்தது.

Chandrasekaran said...

Nice one :)

Chandrasekaran said...

nice one :)

Aruna Saran said...

arusu adikarigal mattum illai nanbare, 50 vaysuku mer matta mukalemunu veesam per ippadithan irukuranga,yen thantahi utpada, keyboradla type pannum pothu screen la yeluthu appear aagi 2 ,3 sec kalithuhtan adutha lettera type seiya vendum yenbar,

ஆனந்த் ராஜ்.P said...

இதன் மூலம் சகலரும் அறிவது என்னவென்றால் அரசு அலுவலகங்களில் இணைய இணைப்பு இல்லையாதலால் சாட்டும் பண்ணமுடியாது...கம்ப்யூட்டர்ல எவனுக்கும் விளையாடத்தெரியாது ஏன் ....வேலையும் செய்யத்தெரியாது. அப்பாடா.., ஒரு உண்மையை உலகுக்கு உரத்து சொல்லியாச்சி..!

Santhosh said...

அருமையான பதிவு நண்பரே...
இன்றும் நம் அணைத்து அரசு அலுவகங்களிலும் இதுபோல் யாரோ ஒருவன் அடிபட்டுக்கொண்டேதான் இருக்கிறான்...

நான் அடி வாங்கினது 2008-ல.... :D :D :D

Gnanasekar said...

நல்லா எழுதிருக்கீங்க.வாழ்த்துக்கள்..:-)))

Jee said...

இது கொஞ்சம் சீரியசான விஷயமும் கூட.சில விதிவிலக்குகள் தவிர்த்து,பெரும்பாலான அலுவலகங்களில் இதுதான் நிலைமை..(இன்னும் 100 சதவீத கணினிமயத்தை எட்டாதபோதே....) சில மாதங்களுக்கு முன்பு wireless modem ஒன்றை Configure செய்ய BSNL அலுவலகத்துக்குக்குப் போய் நான் லோல்ப்பட்ட அனுபவம்,உங்களுடைய அனுபவத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல! கணினிப்பயிற்சி முகமைகளின் மூலம் 30 நாட்கள் இவர்கள் அனைவருக்கும் கணினியை இயக்கவும்,இன்ன பிற அத்தியாவசிய அலுவல்களை கணினி மூலம் செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.அதை பெரும்பாலனவர்கள் 'ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக' கருதி பயிற்சிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிடுவதன் விளைவுகள்தான் இவை.அதிகாரிகளுக்கு தன்னார்வ ஈடுபாடு வராமல்,இந்தப் பிரச்சினையை சரி செய்யவே முடியாது!

நகைச்சுவையா எழுதியிருக்கீங்க. நல்லா இருக்கு :)

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.