Wednesday, May 30, 2012

ஹலோ...


நாடு, மொழி, நிறம், குணம், மணம், கலாச்சாரம், தட்ப வெட்பம் இதையெல்லாம் தாண்டி இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு மனித உயிரும் இந்த வார்த்தையை அறிந்திருக்கக் கூடும். பேச்சுக்குறைபாடில்லாத அத்தனை மனிதர்களும் இதை சொல்லியிருக்கவும் கூடும். உலக மொழிகள் ஒவ்வொன்றிலும் இவ்வார்த்தை அம்மொழிக்கான ஒரு வார்த்தையாகவே மாறிப் போய் விட்டது. சொல்லபோனால் இந்த technology உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் வாழ்நாள் முழுவதுமாய் அதிகமாய்ச் சொல்லும் வார்த்தைகளின் டாப் 10 வரிசையில் இவ்வார்த்தைக்கு கண்டிப்பாய் இடம் உண்டு. ஆங்கிலத்தில் ஒன், டூ, த்ரி அறியாதவனைக் கூட கண்டுவிட முடியும். ஆனால் இந்த வார்த்தையைக் தெரியாதவனோ, அறியாதவளோ அரிதரிது மானிடராய் இருத்தலரிது..

இப்பொழுது தமிழையே எடுத்துக் கொண்டால் கூட அந்த வார்த்தைக்கான தமிழ்பதம் என்னவென்று துல்லியாமாய்ச் சொல்லுவது கஷ்டமே. இன்னும் பலரும் அதுவே ஒரு தமிழ் வார்த்தைதானென்று வாதிட்டாலும், ஆச்சர்யப்படுவதற்கில்லை. சரி சரி  பில்டப்ப நிறுத்திக்கலாம். அந்தவொரு வார்த்தை "ஹலோ". ஒரு நிமிடம் யோசித்துப்ப் பாருங்கள் நீங்கள் வாழ்வில் எத்தனை லட்சம் முறை அந்த வார்த்தையை உபயோகித்திருக்கக் கூடும். போனில், நேரில், காரில், பாரில் என.


இப்பொழுது நம் தமிழ் சினிமாவையே எடுத்துக் கொண்டால் ஹலோ என்ற வார்த்தைக்கு  அது கொடுத்திருக்கும் இடம் மிக மிகப் பெரிது. புதையல் என்றொடு  படத்தில் 1957ல்  பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் "ஹலோ மை டியர் டார்லிங்.. எங்கம்மா உனக்கு மாமி" என்று சந்திரபாபுவுக்காக ஒரு பாடலை எழுதி தொடங்கி வைத்தார். அதற்கு முன்னாலே ஏதும் பாடலில் "ஹலோ" வந்திருக்கிறதா என சரி வரத் தெரியவில்லை.  "ஹலோ ஹலோ சுகமா” என்று தர்மம் தலை காக்கும் படத்துல கவியரசர் எழுதி அதை தொடர்ந்தார்.. ஜெமினி கணேஷனும் சாவித்திரியும் நடித்து "ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்" என்றொரு படமும் அதிலே "ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் – How do you do" என்றொரு பாடலும் கூட உண்டு. அதிலிருந்து கொஞ்ச நாளிலேயே பழம்பெரும் நடிகர் பிரசாந்த் என்பவரும்(ஓ மை காட்.. வாட் எ டெரிப்க் அன்டு டைனமிக் ஆக்டர் ஹீ இஸ்) ப்ரீத்தி ஜாங்கிரியாயினி என்ற நடிகையும் நடித்து "ஹலோ" என்ற பெயரிலேயே ஒரு மொகாஹிட் திரைப்படம் கூட வந்தது. அந்தப்படத்தில் ப்ரீத்தி ஜாங்கிரியாயினி சொல்லும் "ப்ப்போடா போடா போடா போடா சந்துரு" என்ற வசனமும் 'சலாம் குலாமு' என்ற பாடலும் சன் மற்றும் கே டி.வியின் உபயத்தில் உலகப்பிரசித்தி. தலைவர் டி.ஆரும் மோனிஷா என் மோனோலிசா என்னும் திரைக்காவியத்தில் "ஹலோ ஹலோ ஹலோ... பேரை நான் சொல்லவா" என்று பாடல் வைத்திருந்தார்.


இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் ஹலோ என்ற வார்த்தைக்கு மிகப்பெரிய significance ஏற்படுத்திக் கொடுத்தவர் என வைகைப்புயல் வடிவேலுவைச் சொல்லலாம். "ஹலோ, துபாயா.. என்னோட பிரதர் மார்க் இருக்காரா" என்று "ஹலோவுக்கு தனி மாடுலேஷனே வரையறுத்தார் அவர். ஹலோ.. ஹல்லல்லலலோ… என்று ஹலோவை உச்சகட்டத்திற்கு ஏற்றிய பெருமை அவரையே சேரும். "ஹல்ல்லோ, ஐ ஆம் குண்டலகேசி" என்று கவுண்டரும் தன்னுடைய பங்குக்கு ஹலோவை கவுரவித்து இருக்கிறார். "ஹலோ மிஸ்டர்" என்பதை பகுதியாகவும் "என்னய பாலோ பண்றீங்களா?" என்பதை விகுதியாகவும் கொண்ட வசனங்களைப் பேசாத தமிழ் சினிமா கதாநாயகிகளை போன அரை நூற்றாண்டில் விரல் விட்டு எண்ணி விடலாம்


இப்பேர்ப்பட்ட ஹலோவைப் பற்றி இப்பதிவு எழுத காரணமே நேற்றுக் கேட்ட இந்த "ஹலோ"வின் வரலாறுதான். ஒருத்தன் சொன்னான் "ஹலோங்கிறது தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம்பெல்லின் மனைவி/காதலி பெயர். அவர் தொலைபேசியைக் கண்டுபிடித்தவுடனே முதன் முதலாக அவர் மனைவிக்குத்தான் அழைத்தார். அவள் எடுத்தவுடனே 'ஹலோ' என்று அவள் பெயரைச் சொன்னார். அது முதலாகவே ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும் ஹலோ என்ற வார்த்தை சொல்லப்படுகிறது." இதைக் கேட்டு அப்படியே அசந்து விட்டேன். எவ்வளவு பெரிய விஷயம்.ஒருவன் தன்னுடைய வாழ்க்கைத்துணைக்கு இதை விட இன்னுமொரு சிறப்பை செய்து விட முடியுமா. அதுநாள் முதல் இப்பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் சில லட்சம் முறையேனும் தன்னுடைய மனைவியின் பெயரை உச்சரிக்குமாறு வழிவகை செய்து விட்டாரய்யா என்று வியந்து மாளவில்லை.


 பிறகு வீட்டுக்கு வந்தவுடனே கூகிளாண்டவரிடம் "யோவ் பாத்தியா... கிராகம்பெல் கிரேட் மேன்யா. அவரு சம்சாரம் பேர ஊருக்கே தெரிய வச்ச மகான்யா" என்றேன். "ஹஹஹ" எனச் சிரித்து விட்டு சில லிங்குகளைக் காறி உமிழ்ந்தார். ஒன்றொன்றாக வாசிக்க வாசிக்கவே அறிய முடிந்தது கிராகம்பெலின் மனைவி ஹலோ என்பவள் நிலாவில் வடை சுடும் பாட்டிக்கு சொந்தக்காரி என. ரசனையானதொரு கட்டுக்கதை. அவருடைய மனைவியின் உண்மையான பெயர் Mabel Hubbardஅவளும் ஒரு கேட்கும் திறனில்லாத மாற்றுத் திறனாளி. ஆக தொலைபேசி கண்டுபிடிப்பாளரின் மனைவிக்கு காது கேட்காது. நிஜங்கள்  எப்பொழுதும் ரசனைக்குறியதாய் இருப்பதே இல்லை என்பதே நிதர்சனம். மேலும் அவர் டெலிபோனைக் கண்டுபிடித்தவுடனே சொன்ன முதல் வார்த்தை ஹலோவும் அல்ல. "Ahoy"… "hoi" என்ற Dutch வார்த்தையில் இருந்து மருவி வந்த "Ahoy". பிற்காலங்களில் இதுவே "Hi" என்றாகியிருக்கிறது என அறிகிறேன். “Hello” என்பது கூட "hola" "Hullo“ “Hallo” என்ற ஏதொவொரு பண்டைய மொழியின் வார்த்தைகளிலிருந்து மருவி வந்ததே. "Hello" என்பதை தொலைபேசியின் வணக்க வார்த்தையாக புழக்கத்தில் கொண்டு வந்தது தாமஸ் ஆல்வா எடிசன் தான் என்றொரு கூற்றும் நிலவுகிறது. ம்ம்ம் எது எப்படியோ, ஹலோ என்பது
 ஒவ்வொ... ஒன் நிமிட்.. எங்கோ நீதானே என் பொன்வசந்தம் டீசர் இசை கேட்கிறதே.. ஆங், என் மொபைல்தான்.  ஒரு கால் வருதுங்க. பை பை...


"ஹலோ சொல்லு மச்சி..."
---
"ஹலோ சொல்லுடா..."
---
"ஹலோ கேக்குதாடா.."
----
"ஹலோ ஹலோ ஒன்னுமே கேக்கலடா...."

மொத்தத்தில் வாழ்க்கை என்பது சில இன்பங்கள், சில துன்பங்கள் மற்றும் சில லட்சம் ஹலோக்களாலும் ஆனது. ஹலோ.... :)

7 பேர் சொன்னது என்னான்னா..:

முன்பனிக்காலம் said...

ஹலோ, கேக்குதா...ஐடியாவ எங்க புடிச்சீங்க? சூப்பர்!

ராம்குமார் - அமுதன் said...

@முன்பனிக்காலம் - ஒருத்தன் கிராகம்பெல்லின் மனைவி பேரு ஹலோன்னு என்கிட்ட கதை விட்டான். அதை பத்தி வாசிக்கப் போய்.. சும்மா அப்படியே தோனுச்சு :))

கருத்துக்கு நன்றி :))

உலக சினிமா ரசிகன் said...

//ஆக தொலைபேசி கண்டுபிடிப்பாளரின் மனைவிக்கு காது Kகாது. //
நல்லதொரு பதிவில்... சிறு பிழை வந்து விட்டது.
இது போன்ற சமயங்களில் வார்த்தை விளையாட்டு மனதை புண்படுத்தும்.இனிமேல் தவிற்க்கவும்.

ராம்குமார் - அமுதன் said...

@உலக சினிமா ரசிகன் - திருத்திவிட்டேன் தலைவரே.. சும்மா ஒரு வார்த்தை விளையாட்டுக்காக போட்டேன்.. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ...

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

ராஜ் said...

"ஹாய் மதன்" இல்லாத குறையை உங்க பதிவு தீர்குது..உங்க explanation அதே ஸ்டைல்.. அருமை....ரொம்பவே ரசித்தேன்..

ராம்குமார் - அமுதன் said...

"ஹாய் மதன்" ஆஆஆஆஆஆ ? நன்றி சகா... தன்யனானேன் :))

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.