Saturday, July 14, 2012

பில்லா II - ஸ்டைலிஷான மொக்கை

படம் பார்த்து வந்திருக்கிறேன். தற்பொழுதைய மனநிலையில் இந்த விமர்சனத்தை எங்கிருந்து தொடங்குவது என்ற பெருங்குழப்பம் நிலவுகிறது. நேற்றே தெரிந்ததுதான். விமர்சனங்களிலும் விவரிக்கப்பட்டதுதான். இது இப்படித்தான் என்று. சில நண்பர்களின் கதறலலொலியை கண்டு கொள்ளவில்லை. கீச்சர்களின் கர்ணகொடூர கீச்சுகளைச் சட்டை செய்யவில்லை. முகப்புத்தக நண்பர்களின் முக்கல் முனகலையும் மதிக்கவில்லை. இத்தனையும் தாண்டி இப்படத்தைக் காண எனக்கு நானே செய்து கொண்ட சமரசங்கள் இரண்டு.  ஒன்று யுவன். இன்னொன்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அஜீத்.  அஜீத் என்றால் அஜீத்தே அல்ல. இம்மாதிரி படங்களுக்காக அஜீத்துக்கே உரித்தான ஸ்டைலிஷ் லுக். நான் அமர்க்களத்திற்கு பிறகு தியேட்டரில் சென்று பார்த்த அஜீத் படம் பில்லா 1 தான். அதற்குப்பிறகு மங்காத்தா. இதற்கு நடுவே வேறேதும் பார்த்தே தீர வேண்டிய படங்கள் வந்ததா என யோசித்தால்....!!! ஆனால் பில்லா 1ன் கதைக்கு களத்துக்கு கதாப்பாத்திரத்துக்கு அஜீத் ஆகச்சரியான தேர்வாக இருந்தார். அசத்தலாகவே இருந்தது. நயந்தாராவிடமும் நமீதாவிடமும் இருந்து வெளிப்பட்ட கவர்ச்சி கதையோடியைந்ததாகவே இருந்தது. யுவன் பிரமாதப்படுத்தியிருந்தார். விஷ்னுவர்த்தன் பில்லாவுக்கான justiceஐ சரியாகச் செய்திருந்தார். ஆனதெல்லாம் அதோடே. 
ஆனால் பில்லா 2... ? பில்லா 2- இந்திய சினிமாவின் முதல் Prequel படம். ஏற்கனவே ஹிட்டடித்த சூப்பர் ஸ்டாரின் பில்லாவுக்கு செய்யப்பட்ட remakeக்கு செய்யப்பட்ட prequel.  இந்தப்படம் நல்லாருக்கா... ? நல்லா இல்லையா ?  பிடித்தவற்றை முதலில் பேசி விடுவோம். ஏனெனில் பின்னால் பேச ஏகப்பட்ட விஷயமிருக்கிறது.  இப்படத்துக்கான மிக உன்னதமான உழைப்பை நல்கியிருப்பவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் படத்தின் கேமராமேனே. அநியாயத்துக்கு அற்புதப்படுத்தியிருக்கிறார். Frame By Frame அருமை. தேவையான இடத்தில், தேவையான அளவில், தேவையான ஒளியில் இந்தக்களத்துக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் R.D. ராஜசேகர். அவருடைய ஒளிப்பயணத்தில் மிகச்சிறந்த மைல்கல்லென இப்படத்தைச் சொல்லலாம்.  படத்தில் வில்லனாக நடித்திருக்கும்... கேட்பது புரிகின்றது. எந்த வில்லன் என்றுதானே.  இல்லையா.. எத்தனையாவது வில்லன் என்றா? 112வது. ஜார்ஜியாவின் டிமிட்ரியாக நடித்திருக்கும் வித்யுத் ஜாம்வால். நல்லதொரு தேர்வு. அது அறிமுகக் காட்சியில் "Who said that?" என்றவாறே படியில் இருந்து இறங்கி வந்து இருக்கும் அத்துனை பேரையும் அடித்து வீழ்த்தும் Action sequence , To say Awesome. அது தவிர...? Thats it. Let us go to the Let downs.

யுவனின் பிண்ணனி இசை இரண்டு இடங்களில் பிரமாதம். தியேட்டரே ஆர்ப்பரித்தது. ஆனால் அது பில்லா 1 தீம் ம்யூசிக்தான் என்பது மென்சோகம். மதுரப்பொண்ணு பாடல் ஒன்றுதான் உருப்படி. கேட்பதற்கும் பார்ப்பதற்கும். கமலின் 'வேட்டையாடு விளையாடு' "கற்க கற்க" போல ஒரு மிகப்பிரமதமான stylish montage ஆக அஜீத்திற்கு வந்திருக்க வேண்டிய "Gang Gang Gangster" பாடலை படமெல்லாம் முடிந்த பின்னர் Title Marqueeக்கு பயன்படுத்தியிருப்பதில் உள்ள ராஜதந்திரத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. சக்ரி டொலெட்டி.படத்தின் இயக்குநர். இந்த விமர்சனம் இதற்கு மேல் பயணிக்கும் பாதைக்கும் காரணகர்த்தா அவரே. படத்தின் கதைக்காக ஸ்டோரி போர்ட் இப்படித்தான் இருந்திருக்கக் கூடும் என்று ஒரு சிறிய கற்பனை. 

"தல அப்படியே நடந்து வர்றார். கைல ஒரு ஏ.கே 47. அங்க ஒரு 5 பேர் நம்மூர்க்காரங்க உக்காந்து இருக்காங்க. அப்படியே லைட்டா டில்ட் பண்ணி zoom out பண்ணா டுப் டுப் டுப். புல் பயர்... அஞ்சு பேரும் சாகுறாங்க"

இதையே ஒரு 168 முறை எழுதிவிட்டு நம்மூர்க்காரங்க என்பதை "foreigners"- என்றும், ஏ.கே 47 என்பதை "Pistol" "Air gun"  என்றும் Find and Replaceல் replace செய்திருக்கிறார்கள். கதை ரெடி. ஸ்டார்ட்.. ஆக்ஷன்... கேமரா... டும் டும் டுப் டுப் டுப்...


பார்வதி ஓமணக்குட்டன்... பாவம் இந்த ஓமணக்குட்டி. சகுனியின் ப்ரணீதாவிற்கு பிறகு மீண்டும் ஒரு குளுகோஸ் ஏற்றப்பட வேண்டிய அப்பிராணி ஜீவன். இநதக் கதாப்பாத்திரம் என்ன மாதிரியான ஒரு characterization என்பதில் இன்னுமொரு ராஜதந்திரத்தை ஒளித்து வைத்திருக்கிறார் இயக்குநர்.  அவர் வரும் ஒவ்வொரு காட்சியின் இறுதியிலும் ரசிகர்கள் "இதனால் தாங்கள் சொல்ல விளைவது....????" என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். உதாரணமாக ஒரு காட்சியில் அஜீத்தும் அவரும் ஒரு ஹோட்டலில் அமர்ந்திருக்கிறார்கள். மெனுவைப் பார்க்கும் பார்வதியிடம் அஜீத் : "என்ன பாக்குற.. எப்படியும் நீ ஐஸ்க்ரீம்தான ஆர்டர் பண்ணப் போற?" என்று கேட்கிறார். உடனே அவளும் சிரித்துக் கொண்டே "ஐஸ்க்ரீம்" என்கிறாள். காட்சி முடிகிறது.... இதனால் தாங்கள் சொல்ல விளைவது...? ஙே ஙே ஙே.... இது போல இன்னும் பல அதி அற்புதமான காட்சிகளும் படம் நெடுக விரவிக் கிடக்கின்றது. புருனா - வாழ்விழந்த ஒரு மூதாட்டிக்கு வாழ்வளிக்கும் பொருட்டு ஏதொவொரு முதியோர் இல்லத்தில் இருந்து கூட்டி வந்திருக்கிறார்கள் போலும்.

உன்னைப் போல் ஒருவனில் இருட்டடிப்பு செய்யப்பட்ட இரா.முருகனின் வசனங்கள் படத்தில் படு ஷார்ப். ஆனால் ஒவ்வொன்றும் பேசப்படும் இடங்கள் அட்டர் ப்ளாப். 

படத்தின் அடுத்த பகுதியின் வரவாக ரகுமானைக் காட்ட முனைந்தவர்கள் அது போலவே நமீதாவையும் காட்ட முற்பட்டிருக்கலாம் என்பதும் ரசிகர்களின் ஏக்கமாக இருந்தது. "பில்லா 1 கூட இதவிட ஸ்டைலிஷா இருந்துச்சே மச்சி" என்றவொரு ரசிகரின் கேள்விக்கு அவருடைய பக்கத்து சீட் கார நண்பர் கொடுத்த விளக்கம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது... "இப்பதான மச்சி தல டானாகிருக்கார். இனிமேல் நல்லா சம்பாரிச்சுதான் ஸ்டைலான ட்ரெஸ்ஸெல்லாம் வாங்கிப் போடுவாரு". அஜீத்தை எள்ளளவும் குறை சொல்வதற்கில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையில் சிக்கித் தவித்திருக்கிறார்.  செதுக்கு செதுக்கென்று செதுக்கி விட்டார்கள். சினிமாவை பொழுதுபோக்காக பார்க்கும் நமக்கே யூகிக்க முடிகின்ற பலதரப்பட்ட ட்விஸ்டுகளை அவரால் கதை கேட்கையில் யூகிக்க முடியாமல் போனது... ஏனோ அந்த ஹிக்ஸ் போஸானுக்கே வெளிச்சம்.

முடிவில் நண்பனொருவனின் முகப்புத்தக ஸ்டேட்டஸோடு இதனை முடிக்கிறேன்...

சாமி கும்பிட போனேன், ஆகா நல்ல தரிசனம்...கோவில் குப்பையாய் கிடந்தால் நமக்கென்ன #பில்லா 2

தமிழ் சினிமா நடிகர்களால் அல்ல ரசிகர்களாலே வாழ்கிறது. அதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டிய தருணமிது.

மொத்தத்தில் டேவிட் பில்லா - Operation success yet the patient died. அந்தோ பரிதாபம் -  ஆமென்.

Sunday, July 8, 2012

நான் ஈ - Fly that Flies Highநான் ஈ...  Chennai, AGS OMRல இந்த படம் ரிலீஸ் ஆகலங்குற ஒரே காரணத்துக்காக இந்த படத்தப் பாத்ததே லேட்டு.. இன்னைக்குதான் பாத்தேன்.  அதனாலேயே விமர்சனம் எழுதலாமா வேணாமான்னு யோசிச்சுகிட்டே படுத்துட்டேன். ஆனா எனக்கு வந்துருக்கது என்ன வகையான பிரச்சனைன்னு முழுசா சொல்ல முடியல. எனக்குள் இருக்கும் டாக்டர் இதனை ஈயோத்தரலோபியா என்னும் நோயாக வரையறுக்கிறான். காது பூராம் ங்கொய்ங் ங்கொய்ங் ங்கொய்ங்க்னு சத்தம் கேட்டுகிட்டே இருக்கு. உள்ளார உண்டான பாதிப்பாக இருக்கக் கூடும். :))

ராஜமெளலி - தெலுங்கின் சமகாலத்திய ஆகச்சிறந்த இயக்குநர். தமிழில் சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த ஸ்டுடன்ட் நம்பர் ஒன் படத்தின் தெலுங்கு பதிப்பின் மூலமாக ஜூனியர் என்.டி.ஆருக்கு ஒரு  ஐந்தாண்டு கால அணையைக் கட்டிக் கொடுத்தவர். அதுதான் அவரது முதல் படமும் கூட, பின்னர் இவர் இயக்கிய எட்டு படங்களுல் ரவிதேஜாவின் விக்ராமர்குடு, ராம் சரண் தேஜாவின் வாழ்நாள் ஹிட்டான மஹதீரா, காமெடி நடிகர் சுனிலின் ஹீரோ அவதாரமான மரியாத ராமண்ணா ஆகியவையும் அடக்கம். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பீலிங். Ultimately different flavors. பல சினிமா ஆர்வலர்கள் இவருடைய தி பெஸ்ட்டென மஹதீராவை குறிப்பிட்டாலும் என் பார்வையில் விக்கிராமார்குடுவே. தமிழின் சிறுத்தை. ஹிந்தியின் ரவுடி ராத்தோர். மசாலா சினிமாவின் உச்சமென அப்படத்தை மார்தட்டிக் கொள்ளலாம்.


இது இனி நான் ஈ. மிக மிக சாதரணமான கதை. வேலைக்காரன் படத்தில் ரஜினி ஈயை வைத்து மீட்டிங்கைக் கலைக்கும் அதி சிம்பிளான கான்செப்ட். அரை மணி நேரமே வந்து மடிந்து போகும் ஹீரோ நானி. கர்நாடகா புல்டோசர்ஸின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான சுதீப். அரையே அரை நாள் கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுத்திருக்கும் சந்தானம். நாட் ஹாட் பட் அல்டிமேட்லி க்யூட் சமந்தா. கொஞ்சமே கொஞ்சம் காதல். மிச்சமெல்லாம் மிரட்டல் மிரட்டல் மிரட்டல் மட்டுமே.
ஈயால என்ன செய்ய முடியும், என்னது ஈ பழிவாங்குதா ஹ்ஹிஹிக்ஹிக்ஹி என்று ட்ரெயிலர் மற்றும் தட்ஸ்தமிழ் கிசுகிசுக்களை படித்து ஏளனமாகச் சிரித்த எல்லோரும் திரையரங்கின் இருக்கைகளில் இருந்தவாறே எச்சி முழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஈ என்னென்னவோ செய்கிறது.  ஆனால் என்ன செய்தாலும் நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்து சிரிக்க வைக்கிறது. கை தட்ட வைக்கிறது. ஆர்ப்பரிக்க வைக்கிறது.சமகாலத் தென்னிந்திய கமெர்சியல் திரைப்படங்களில்  CG என திரையுலகில் செல்லமாக அழைக்கப்படும் Computer Graphicsல் இப்ப்டம் உச்சம் தொட்டிருக்கிறது. Foreign location போகவில்லை.  Song sequence இல்லை. Stunt sequence என்று எதுவுமில்லை. ஆனால் Studioவுக்குள்ளும் CG Labக்குள்ளும் உட்கார்ந்து உட்கார்ந்து உழைத்திருப்பார்கள் போலும் . ஒவ்வொரு காட்சியிலும் சொல்லொனா perefection. ராஜமெளலியின் உழைப்பு, சிந்த்னையோட்டம்  மற்றும் கலையார்வம் ஈ வரும் ஒவ்வொரு ப்ரேமிலும் தெறிக்கிறது. சமந்தாவை நுண்கலைப்பொருட்கள் செய்யும் மினியேச்சர் ஆர்ட்டிஸ்டாக காட்டியதில் ஆரம்பித்து அதையே ஈயின் க்கு வெடி மருந்து சுமந்து செல்லும் மிகச்சிறிய கூடை மற்றும் மிகச் சிறிய mask என்று டிசைன் செய்ய உதவியிருப்பதாய் காட்டியிருப்பது "ராஜமெளலி class". இது போல சிலாகிக்க பற்பல விஷயங்கள் படம் நெடுகவே. "இரும்பு பெட்டில நெருப்பிருக்கும்.. உன் மூஞ்சில கருப்பிருக்கும்" என்று ஹோமம் யாகம் வளர்க்கும் தெலுங்குத்தன க்ளிஷேக்கள் கொஞ்சமே கொஞ்சமென்றாலும் இத்துனை சுவாராஸ்யத்துக்கு இடையில் it is negligible.மொத்தத்தில் இப்படத்தை யாரெல்லாம் ரசிக்கலாமென்றால்  1 முதல் 140 வயது வரையில் பார்ப்பதற்கு கண்ணும், கேட்பதற்கு காதும், சிரிப்பதற்கு பல்லும் உள்ள எவர் வேண்டுமானாலும் ரசிக்கலாம்., சிலாகிக்கலாம், கண்டிப்பாக பாருங்கள். 150% சுவாரஸ்யமுறுதி. :)

சரி. இரவு/அதிகாலை மணி 3 ஆகிற காரணத்தால் இதை இதோடு நிறுத்துவோம். ஏனெனில் இதற்கு மேலும் Google Imagesல் நான் ஈ எனத் தேடி புகைப்படம் பிடித்து, Bloggerல் போஸ்ட் செய்து என ஒரு 20 நிமிடம் வேலயிருப்பதால் இது இதோடே. ஐயோ இந்நேரத்தில் வேறு பசிக்கிறதே.  உண்ண ஏதுமில்லை :( ... இல்லை இல்லை இருக்கிறது கிச்சனில் ஒரு வாழைப்பழமும் அதன் மேல் இரு ஈக்களும்.  அதில் ஒன்று கண்டிப்பாக நானியே. நல்ல வேளை,  எனக்கும் பிந்துவுக்கும் சம்பந்தம் ஏதுமில்லாததால் பழத்தை உரித்துக் கொண்டிருக்கிறேன். :))

Thursday, July 5, 2012

கடவுள் ஏன் துகளானான்?


கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். பெயரிட்டிருக்கிறார்கள் ஹிக்ஸ்போஸானென்று. கடவுளுக்கு துகள் என்று பெயரிட்டிருந்தால் கடவுள் ஏன் துகளானான். துகளுக்கு கடவுள் என்று பெயரிட்டிருந்தால் துகள் ஏன் கடவுளானது. என்னதான் படித்தது பொறியியலாக இருந்தாலும் school science எனப்படும் அடிமட்ட அறிவியலில் நம்மில் பலருக்கும் தடுமாற்றம் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் நாம் படித்த துகள் இயற்பியலை கொஞ்சமே கொஞ்சம் தூசு தட்டி இணையத்தில் இருக்கும் கட்டுரைகளை வாசித்துப் பார்த்தோமேயானால் இத்துகள் பற்றி கொஞ்சம் பிடிபடுகிறது. மெய்ஞானமாய் அல்ல, விஞ்ஞானமாய்.மேலும் இதுinvention அல்ல. discoveryயே.. அதாவது ஹிக்ஸ் போஸான் துகள்கள் போன வாரம்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தத் துகள் கயிறு கட்டி, மண் சோறு சாப்பிட்டு, உடம்பில் குத்தி, குத்துப்பாட்டுக்கு கும்பலாக ஆனந்த நடனமாடி - இதெல்லாம் செய்து கேட்டவுடன் பணமோ, சுகமோ, நலமோ தரப்போவதில்லை. அதெல்லாம் தரும் அல்லது தருவதாய் எண்ணப்படும் அந்தக் கடவுளைப் பற்றியே இக்கட்டுரை.கடவுள் இருக்காரா இல்லையா? இருந்தால் அவர் யார்? இல்லையென்றால் அது ஏன்? இந்தக் கேள்விகளைத்தான் நாம் நமக்குள் எத்தனை முறை கேட்டிருப்போம்... இந்த உலகின் கடைசி மனிதனும் கூட தனக்குள் இக்கேள்விகளை கேட்டுக் கொள்ளக் கூடும். ஆனால் கடவுளைப் பற்றிய பார்வை என்பது வயதோடும் மனதோடும் மாறிக் கொண்டேதான் வருகிறது.


"அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டும் கடவுளுக்கு"  கடவுளே இல்லையென்று சொல்லும் கமலஹாசனுக்குக் கூட கடவுளை இழுக்காமல் கவிதை எழுத முடிவதில்லை. ஆக நமது சமூக அமைப்பினில் கடவுளென்பது காற்றைப் போலவே. எங்கும் எதிலும்... காற்று இருக்கிறதென்பது விஞ்ஞானம்.. கடவுள் இருக்கிறாரென்பது... ?முன்பொரு முறை சென்னை டூ நெல்லை ரயில் பயணம்... சக பயணிகளாக செம சுட்டியான ஒரு பெண் குழந்தையும் அதன் பெற்றோரும். தானே மாதிரி வேறு ஏதோ ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளியில் செமத்தியான மழை. பயங்கர இடி, மின்னல். "அப்பா ஏன்ப்பா மழை பெய்யுது...?" "மழைல நனஞ்சா ட்ரெயினுக்கும் டாக்டர் ஊசி போடுவாங்களா?" "மின்னல்னா எதுக்கு லைட் வருது?" கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது குழந்தை.  ஆனால் அம்மா அப்பா இருவருமே ஒவ்வொரு பெரிய இடிக்கும் "அர்ஜுனா... அர்ஜுனா..." என்று சொல்லுமாறு  குழந்தையை வற்புறுத்திக் கொண்டிருந்தனர். "மின்னல்ன்னா அது சாமி பவரா டார்ச் அடிக்குறாருடா செல்லம்" "சாமி வீட்ல நெறைய தண்ணி இருக்கா... நம்ம வீட்ல தண்ணியே இல்லையா... நம்ம கேட்டோமா... அதனாலதான் அவரு எல்லாத் தண்ணியையும் கீழ கொட்டுறாரு. மழை பெய்யுது..." அந்த கணம் தோன்றியது "கடவுள் என்னும் கதாப்பாத்திரமே ஒரு குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத ஒரு அம்மாஞ்சி அப்பாவாலோ, மக்கு மாமாவாலோதான் உருவாக்கப்பட்டிருக்கக் கூடும்.". 


இதையே ஒரு முறை ட்வீட்டியிருந்தேன்...

 "கடல் ஏன்ப்பா இவ்ளோ பெருசா இருக்கு?" என்ற குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியாத ஏதொவொரு அப்பாதான் கடவுளைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்.


எனக்கு நெருங்கிய நண்பர்களில் சில மிகத்தீவிரமான கடவுள் மறுப்பாளர்கள் உண்டு. அவர்களிடம் கடவுள் என்னும் பேச்சை ஆரம்பித்தாலே "போய் ஸ்டீவன் ஹாக்கின்ஸோட "A Brief History of Time" படி... எல்லாமே ஏமாத்து வேலைன்னு தெளிவாத் தெரியும்" என்பார்கள். வாசிக்க வேண்டும் என்று யோசித்ததுண்டு, ஆனால் வாசித்ததில்லை. சில பெரியார் புத்தகங்களைக் கொறித்ததுண்டு, மனம் நிறுத்தி வாசித்ததில்லை. கடவுள் என்னும் விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு எனக்கே கொஞ்சம் குழப்பம்தான். ஆனால் சமீபகாலமாக நான் அவரை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. எவரிடத்திலும் அன்பாய் இருக்க வேண்டும், கொஞ்சமே கொஞ்சம் இரக்கமும் கருணையும் இருக்க வேண்டும். இதைத்தான் நம்மோடு சேர்ந்து அவரும் சொல்கிறாரென்றால், கொஞ்சம் சத்தமாகவே சொல்லட்டும்.
 சரி, கடவுள் இருக்கவோ, இல்லாமல் இருக்கவோ.  ஆனால் கடவுள் என்றவொரு விஷயம் தேவையா? என்ற கேள்வி எழுந்தால், குழந்தைப் பருவத்தில் கண்டிப்பாக தேவை என்றே தோன்றுகிறது. கடவுளும் தேவை, சாத்தானும் தேவை. நல்லதும் கெட்டதும், அன்பும், அரக்கத்தனமும் என மாறுபாடுகளைக் கற்றுத் தருவதற்கு கடவுள் என்பவரே மிகச் சிறந்த மீடியம். நான் ஒருவனுக்கு ஒரு நல்லது செய்தால் அந்தக் கடவுள் எனக்கு நல்லது செய்வார் என்ற தன்னம்பிக்கை தருபவராய், அவர் இருந்து விட்டுப் போகட்டும். ஆக கடவுள் என்பவர் moral science அல்லது value education என்று அழைக்கப்படும் கல்வி தாண்டிய கல்விக்கு காரணகர்த்தாவாய் இருந்துவிட்டுப் போகட்டும். எல்லாப் புரிதலும் ஏற்பட்டு, அன்பும் கருணையும் கொண்ட நல்லுள்ளம் வாய்க்கப்பட்டு, பால்யம் கடந்து ஒரு 15 வயதுக்கு மேல் விஞ்ஞானத்தின் ஈர்ப்பால் ஒருவன்/ஒருத்தி கடவுள் மறுப்புக் கொள்கைகள் பேச/செயல்பட ஆரம்பிப்பதில் தவறேதும் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது, அதற்கு கடவுளும் விதிவிலக்கல்ல. ஆனால் அது வரையிலும் அவர்களை கடவுள் என்ற பெயரால் ஏமாற்றும் கார்பரேட் சாமியார்களிடமிருந்தும், மூட நம்பிக்கைச் சமூகத்திலிருந்தும் காப்பாற்றி கரைசேர்க்க வேண்டியது நம் கடமையாகிறது.  இந்த மெயிலை 50 பேருக்கு அனுப்பினால் கடவுள் உனக்கு நல்லது புரிவார். அனுப்பிய கருமாத்தூர் கமலாவுக்கு லாட்டரியில் 50 கோடி ரூபாய் பரிசு. அனுப்பாமல் delete செய்த சேலம் சேகர் ரத்தம் கக்கி... - என வாசித்து முடிக்கும் முன்பே அவர்களுக்கு அதிசிறந்த வகை காமெடிகளில் இதுவும் ஒரு வகைக் காமெடி என்பதை உணரச் செய்து சிரிக்க மட்டுமே வைக்க வேண்டியதும் நம் கடமையாகிறது.


ஆக கடைசியில் இந்தக் கேள்வியினூடே இக்கட்டுரையை முடிக்கிறேன்.


மொத்தத்தில் கடவுள் இருக்காரா? இல்லையா ? :)))
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.