Thursday, July 5, 2012

கடவுள் ஏன் துகளானான்?


கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். பெயரிட்டிருக்கிறார்கள் ஹிக்ஸ்போஸானென்று. கடவுளுக்கு துகள் என்று பெயரிட்டிருந்தால் கடவுள் ஏன் துகளானான். துகளுக்கு கடவுள் என்று பெயரிட்டிருந்தால் துகள் ஏன் கடவுளானது. என்னதான் படித்தது பொறியியலாக இருந்தாலும் school science எனப்படும் அடிமட்ட அறிவியலில் நம்மில் பலருக்கும் தடுமாற்றம் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் நாம் படித்த துகள் இயற்பியலை கொஞ்சமே கொஞ்சம் தூசு தட்டி இணையத்தில் இருக்கும் கட்டுரைகளை வாசித்துப் பார்த்தோமேயானால் இத்துகள் பற்றி கொஞ்சம் பிடிபடுகிறது. மெய்ஞானமாய் அல்ல, விஞ்ஞானமாய்.மேலும் இதுinvention அல்ல. discoveryயே.. அதாவது ஹிக்ஸ் போஸான் துகள்கள் போன வாரம்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தத் துகள் கயிறு கட்டி, மண் சோறு சாப்பிட்டு, உடம்பில் குத்தி, குத்துப்பாட்டுக்கு கும்பலாக ஆனந்த நடனமாடி - இதெல்லாம் செய்து கேட்டவுடன் பணமோ, சுகமோ, நலமோ தரப்போவதில்லை. அதெல்லாம் தரும் அல்லது தருவதாய் எண்ணப்படும் அந்தக் கடவுளைப் பற்றியே இக்கட்டுரை.கடவுள் இருக்காரா இல்லையா? இருந்தால் அவர் யார்? இல்லையென்றால் அது ஏன்? இந்தக் கேள்விகளைத்தான் நாம் நமக்குள் எத்தனை முறை கேட்டிருப்போம்... இந்த உலகின் கடைசி மனிதனும் கூட தனக்குள் இக்கேள்விகளை கேட்டுக் கொள்ளக் கூடும். ஆனால் கடவுளைப் பற்றிய பார்வை என்பது வயதோடும் மனதோடும் மாறிக் கொண்டேதான் வருகிறது.


"அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டும் கடவுளுக்கு"  கடவுளே இல்லையென்று சொல்லும் கமலஹாசனுக்குக் கூட கடவுளை இழுக்காமல் கவிதை எழுத முடிவதில்லை. ஆக நமது சமூக அமைப்பினில் கடவுளென்பது காற்றைப் போலவே. எங்கும் எதிலும்... காற்று இருக்கிறதென்பது விஞ்ஞானம்.. கடவுள் இருக்கிறாரென்பது... ?முன்பொரு முறை சென்னை டூ நெல்லை ரயில் பயணம்... சக பயணிகளாக செம சுட்டியான ஒரு பெண் குழந்தையும் அதன் பெற்றோரும். தானே மாதிரி வேறு ஏதோ ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளியில் செமத்தியான மழை. பயங்கர இடி, மின்னல். "அப்பா ஏன்ப்பா மழை பெய்யுது...?" "மழைல நனஞ்சா ட்ரெயினுக்கும் டாக்டர் ஊசி போடுவாங்களா?" "மின்னல்னா எதுக்கு லைட் வருது?" கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது குழந்தை.  ஆனால் அம்மா அப்பா இருவருமே ஒவ்வொரு பெரிய இடிக்கும் "அர்ஜுனா... அர்ஜுனா..." என்று சொல்லுமாறு  குழந்தையை வற்புறுத்திக் கொண்டிருந்தனர். "மின்னல்ன்னா அது சாமி பவரா டார்ச் அடிக்குறாருடா செல்லம்" "சாமி வீட்ல நெறைய தண்ணி இருக்கா... நம்ம வீட்ல தண்ணியே இல்லையா... நம்ம கேட்டோமா... அதனாலதான் அவரு எல்லாத் தண்ணியையும் கீழ கொட்டுறாரு. மழை பெய்யுது..." அந்த கணம் தோன்றியது "கடவுள் என்னும் கதாப்பாத்திரமே ஒரு குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத ஒரு அம்மாஞ்சி அப்பாவாலோ, மக்கு மாமாவாலோதான் உருவாக்கப்பட்டிருக்கக் கூடும்.". 


இதையே ஒரு முறை ட்வீட்டியிருந்தேன்...

 "கடல் ஏன்ப்பா இவ்ளோ பெருசா இருக்கு?" என்ற குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியாத ஏதொவொரு அப்பாதான் கடவுளைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்.


எனக்கு நெருங்கிய நண்பர்களில் சில மிகத்தீவிரமான கடவுள் மறுப்பாளர்கள் உண்டு. அவர்களிடம் கடவுள் என்னும் பேச்சை ஆரம்பித்தாலே "போய் ஸ்டீவன் ஹாக்கின்ஸோட "A Brief History of Time" படி... எல்லாமே ஏமாத்து வேலைன்னு தெளிவாத் தெரியும்" என்பார்கள். வாசிக்க வேண்டும் என்று யோசித்ததுண்டு, ஆனால் வாசித்ததில்லை. சில பெரியார் புத்தகங்களைக் கொறித்ததுண்டு, மனம் நிறுத்தி வாசித்ததில்லை. கடவுள் என்னும் விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு எனக்கே கொஞ்சம் குழப்பம்தான். ஆனால் சமீபகாலமாக நான் அவரை அதிகம் தொந்தரவு செய்வதில்லை. எவரிடத்திலும் அன்பாய் இருக்க வேண்டும், கொஞ்சமே கொஞ்சம் இரக்கமும் கருணையும் இருக்க வேண்டும். இதைத்தான் நம்மோடு சேர்ந்து அவரும் சொல்கிறாரென்றால், கொஞ்சம் சத்தமாகவே சொல்லட்டும்.
 சரி, கடவுள் இருக்கவோ, இல்லாமல் இருக்கவோ.  ஆனால் கடவுள் என்றவொரு விஷயம் தேவையா? என்ற கேள்வி எழுந்தால், குழந்தைப் பருவத்தில் கண்டிப்பாக தேவை என்றே தோன்றுகிறது. கடவுளும் தேவை, சாத்தானும் தேவை. நல்லதும் கெட்டதும், அன்பும், அரக்கத்தனமும் என மாறுபாடுகளைக் கற்றுத் தருவதற்கு கடவுள் என்பவரே மிகச் சிறந்த மீடியம். நான் ஒருவனுக்கு ஒரு நல்லது செய்தால் அந்தக் கடவுள் எனக்கு நல்லது செய்வார் என்ற தன்னம்பிக்கை தருபவராய், அவர் இருந்து விட்டுப் போகட்டும். ஆக கடவுள் என்பவர் moral science அல்லது value education என்று அழைக்கப்படும் கல்வி தாண்டிய கல்விக்கு காரணகர்த்தாவாய் இருந்துவிட்டுப் போகட்டும். எல்லாப் புரிதலும் ஏற்பட்டு, அன்பும் கருணையும் கொண்ட நல்லுள்ளம் வாய்க்கப்பட்டு, பால்யம் கடந்து ஒரு 15 வயதுக்கு மேல் விஞ்ஞானத்தின் ஈர்ப்பால் ஒருவன்/ஒருத்தி கடவுள் மறுப்புக் கொள்கைகள் பேச/செயல்பட ஆரம்பிப்பதில் தவறேதும் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது, அதற்கு கடவுளும் விதிவிலக்கல்ல. ஆனால் அது வரையிலும் அவர்களை கடவுள் என்ற பெயரால் ஏமாற்றும் கார்பரேட் சாமியார்களிடமிருந்தும், மூட நம்பிக்கைச் சமூகத்திலிருந்தும் காப்பாற்றி கரைசேர்க்க வேண்டியது நம் கடமையாகிறது.  இந்த மெயிலை 50 பேருக்கு அனுப்பினால் கடவுள் உனக்கு நல்லது புரிவார். அனுப்பிய கருமாத்தூர் கமலாவுக்கு லாட்டரியில் 50 கோடி ரூபாய் பரிசு. அனுப்பாமல் delete செய்த சேலம் சேகர் ரத்தம் கக்கி... - என வாசித்து முடிக்கும் முன்பே அவர்களுக்கு அதிசிறந்த வகை காமெடிகளில் இதுவும் ஒரு வகைக் காமெடி என்பதை உணரச் செய்து சிரிக்க மட்டுமே வைக்க வேண்டியதும் நம் கடமையாகிறது.


ஆக கடைசியில் இந்தக் கேள்வியினூடே இக்கட்டுரையை முடிக்கிறேன்.


மொத்தத்தில் கடவுள் இருக்காரா? இல்லையா ? :)))

16 பேர் சொன்னது என்னான்னா..:

sum1 spcl said...

மொத்தத்தில் கடவுள் இருக்காரா? இல்லையா ? தேவை படும் இடங்க்களில் இருக்கிறேர்.. தேவை இல்லாத பொழுது இல்லை எனவும் சொல்லலாம்..
நம்பிக்கையின் ஒரு வகை வெளிபாடே கடவுள்..தோல்வி..விரக்த்தியில் இருக்கையில் கடவுள் பார்த்துகொள்வார் என்பது creates blind faith..n it helps the person!
அனைத்திற்க்கு காரணம் கண்டு பிடிக்கும் அறிவியல் probablityன் outputஐ எப்படி விளக்கும்?? அறிவியலுக்கு உலகம் தானாக படைக்க பட்டது என்பது நிருபிக்கபட்டால் கடவுள் அற்று போகிறார் என எண்ணம். ஆனால் சராசரி மனிதனின் வாழ்வில் தட்கால் டிக்கட் கிடைப்பது தொட்டு எக்சாமில் படித்த கேள்வி வர வேண்டும்,அவள் இன்று திரும்பி பார்க்க வேண்டும் என அனைத்து விஷயங்களுக்கும் கடவுள் தேவை படுகிறார். வாழ்க்கையை வாழ்வதற்கு எதாவது ஒரு பிடிப்பு அனைவர்க்கும் தேவை.. பலருக்கு அது கடவுள்.. அவர் இல்லாமல் வாழ்பவர்களுக்கு தேவையில்லை..
(@_santhu)

Manoj Reuben said...

நல்ல பதிவு.! நம்ம அறிவை ரொம்ப கடவுள் விஷயத்துல யோசிக்குறதை விட்டுட்டு, ஒரு குழந்தை போல நம்பிக்கைன்னா ஒரேயடியா நம்புறது. இல்லன்னா கண்டுக்காம விட்டுறது அப்பிடின்னு பலதடவை நினைத்ததுண்டு! என்ன பண்றது ஏதோ வளர்ந்துட்டோமாம்! அதனால இந்த பாழாப்போன அறிவு கேட்கமாட்டேங்குதே!

thamizhparavai said...

நல்ல நறுக் சுறுக் கட்டுரை ராம்... சுவாரஸ்யம் தட்டாமல் சென்றது...!

ராம்குமார் - அமுதன் said...

வாசித்தமைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சந்து வாழ் நண்பர்களே :))

Anonymous said...

//கடவுள் என்னும் கதாப்பாத்திரமே ஒரு குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத ஒரு அம்மாஞ்சி அப்பாவாலோ, மக்கு மாமாவாலோதான் உருவாக்கப்பட்டிருக்கக் கூடும்.//

சிந்திக்கத் தூண்டுபவை ... நல்லதொரு பதிவு சகோ.

//கடவுள் என்ற பெயரால் ஏமாற்றும் கார்பரேட் சாமியார்களிடமிருந்தும், மூட நம்பிக்கைச் சமூகத்திலிருந்தும் காப்பாற்றி கரைசேர்க்க வேண்டியது நம் கடமையாகிறது. //

கடவுள் இருப்பது பிரச்சனை இல்லை.. ஆனால் நீங்கள் சொன்னது போல கடவுளை வியாபாரம், அரசியல் இன்னப் பற்பல விடயங்களாக்கி மனிதன் செய்யும் கொடுமைகள் தான் பிரச்சனையே சகோ. தங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்.

//மொத்தத்தில் கடவுள் இருக்காரா? இல்லையா ? :)))//

இருக்கிறார் நிச்சயமாக இருக்கிறார். மனிதனின் மனதில் ...

ராம்குமார் - அமுதன் said...

அன்பின் இக்பால் செல்வன்.. முதல் முறையாக வலைபூவிற்கு வந்ததற்கும், மிக நீண்டதொரு பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ... மனதில் இருந்து நடப்பவையும் நல்லவையாகவே இருக்கும் பட்சத்தில், கடவுள் அவராகவே இருக்கட்டும்.. All is well :))

சைக்கிள்காரன் said...

விருந்தோம்பலுக்காக நல்ல பதிவு என்று பின்னூட்டம் செய்து விலகிக் கொள்ள நான் விரும்பவில்லை, மனம் திறந்து ஓரிரு வார்த்தைகள் பேச ஆசை. சக மனிதனுக்கு பயனுள்ளபடி வாழும் ஒவ்வொருவனும் கடவுளே!! மலம் கூட பன்றியின் பசியை ஆற்றுமாயின் அதுவும் கடவுளே!! நபிகள் நாயகம் என்னும் தேவதூதன் திருக்குரானை அருளுவத்றகு முன் தன்னுடைய தவறுகளை எல்லாம் திருத்திக் கொண்டானாம். அப்படி தன் நிலை உணர்ந்து தன்னுள் மாற்றத்தை உருவாக்கும் ஒவ்வொருவனும் கடவுளே!! என்னுள் மாற்றத்தை தந்த இப்படியொரு பதிவை எழுதிய நீங்களும் கடவுளே!! ;-)அன்பே சிவம்,இயேசு, அல்லா, நீங்கள், நான், அவ்ர், அது!!!

ராஜ் said...

ரொம்ப நல்ல கட்டுரை பாஸ்....Hats Off.... :)
மொத்தத்தில் கடவுள் இருக்காரா? இல்லையா ?? என்ற கேள்விக்கான விடையை அவர் அவர் மனசாட்சியின் பதிலுக்கு விட்டது நன்று...

துளசி கோபால் said...

அதான் தூணிலும் இருக்கார் துரும்பிலும் இருக்கார் இப்போ துகளிலும் இருக்கார்!!!!!

எனக்குக் கடவுள் வேண்டித்தான் இருக்கு. என்னோட கஷ்டநஷ்டங்களைப் பகிர்ந்துக்கவும் சொல்லி அழவும் எனக்கொருத்தர் வேணாமா? நான் திட்டுனாலும் திருப்பித்திட்டாதவராவும் இருக்கணுமே!

அப்போ நல்லதுகளைச் சொலலிக்கக் கடவுள் வேணாமான்னா.... அதான் வலைப்பூ இருக்கே! பதிவு போட்டால் ஆச்சு:-)

vini said...

பிரார்த்தனையை வெறுமே மூட நம்பிக்கையா என்னால பார்க்க முடியலை. வயசானவங்களைப் பார்த்ததும் ஒரு மரியாதைக்காக எழுந்து நின்னு வணக்கம் சொல்றோமே, அது மாதிரியான ஒரு சடங்கு தான் பிரார்த்தனை. தனக்கு இனிமே எந்தப் பிடிமானமும் வாழ்க் கையில் இல்லையோனு கலங்கி நிக்கிற ஒருத்தனுக்குப் பிரார்த்தனை தான் பிடிமானமா இருக்கு. சாண் ஏறினா முழம் சறுக்குகிற பாசி பிடிச்ச பாறை மாதிரி இருக்கு நம்ம வாழ்க்கை. அதுல ஒருத்தன் வழுக்காம இருக்கிறதுக்குப் பிரார்த்தனை உதவும்னா, அது மூட நம்பிக்கை யாகவே இருந்தாலும் இருந்துட்டுப் போகட்டுமே!**

RajeeSankar said...

நாம் தான் கடவுள் - நல்ல எண்ணங்கள் ஆக்ரமித்திருக்கும் போது
நாம் தான் சாத்தான் - கெட்ட எண்ணங்கள் ஆக்ரமித்திருக்கும் போது
கடவுளே இல்லை - தன்னலம் மட்டுமே பெரிதென்று நினைக்கும் போது

RajeeSankar said...

நாம் தான் கடவுள் - நல்ல எண்ணங்கள் ஆக்ரமித்திருக்கும் போது
நாம் தான் சாத்தான் - கெட்ட எண்ணங்கள் ஆக்ரமித்திருக்கும் போது
கடவுளே இல்லை - தன்னலம் மட்டுமே பெரிதென்று நினைக்கும் போது

ரங்குடு said...

விஞ்ஞானமும் சரி, மெய்ஞ்ஞானமும் சரி அப்பப்போ காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிக்கிட்டு வருது.

தாலமியின் அறிவியல் கொள்கைகள் கலிலியோவாலும், நியூட்டனின் விஞ்ஞானம் ஐன்ஸ்டினாலும் தகர்க்கப்பட்டன.

வேத காலக் கொள்கைகள், பவுத்தத்தினாலும், பவுத்தம் பக்தி யினாலும், பழங்கால மதங்கள் இஸ்லாத்தினாலும் தகர்க்கப் பட்டன.

இருந்தாலும், கடவுள் உண்டென்று மதங்களாலும், இல்லையென்று அறிவியலாலும் சொல்ல முடியவில்லை.

இதுதான் நமது பரிதாபம்.

இதுவே தொடரும்.

Anonymous said...

பள்ளி சென்ற முதல் நாள் நினைவில் இருக்கிறது. அப்பொழுது எனக்கு நான்கு வயது. என்னை தயார்ப்படுத்தும்போது அம்மா சொன்ன கதை பிள்ளையார், ஆனை முகத்தானாக மாறிய கதை. வெகு நாள் கழித்து வீடு திரும்பிய சிவன் பிள்ளையாரை அடையாளம் கண்டு கொள்ளாததால் வந்த வினை. அன்று அம்மாவின் கையைப் பிடிதுக்குக் கொண்டு பள்ளிக்கூடம் போனேன். அப்பா சைக்கிளைத் தள்ளிக் கொண்டு உடன் வந்தார்கள். அன்று எழுந்த கேள்வி ஒன்றும் நினைவிருக்கிறது. சிவனிடம் ஏன் சைக்கிள் இல்லை. பின்னர் பல வயதுகளில் பல கேள்விகள்.

சில வருடங்களுக்கு முன் super brain yoga பற்றிப் படித்தேன். இது ஒன்றுமில்லை. நம்ம ஊர் தோப்புகரணம். இங்கு இதை செய்யும் குழந்தைகளுக்கு பிள்ளையாரைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பொம்மைகளை வைத்து விளையாடும் பிள்ளைகள் அதையும் கடந்து போவார்கள் என்பார் ராமகிருஷ்ணர்.

இந்து மதம், பொதுவாக மதங்களின் நோக்கம் என்ன?

ராம்குமார் - அமுதன் said...

அன்பின் அனைவருக்கும்... மிக மிக நன்றி வந்தமைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும். இப்படி வகையறாவிலான ஒரு பதிவிற்கு இத்தனை கருத்துச்செறிவிலான பின்னூட்டங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒவ்வொன்றிலும் பல்வேறு கோணங்களை உணர்ந்து கொண்டேன். நன்றி சகாஸ் & சகிஸ் :)))

நடராஜன் said...

நாம் ஏன் பிறந்தோம். இதற்கு ஒரு காரணம் தேவை.நல்லது சேய்யும் போது துன்பம் அடைகிறோம் . துன்பம் செய்யும் போது இன்பம் அனுபவிக்கிறோம் இதற்கு என்ன காரணம். நம்மால் உணரமுடியாத காரணம் ஒன்று இருக்க வேண்டும். வினைக்கு ஏற்ற விளைவு. இதை நெறிப்படுத்தும் இயற்கை மதசார்பற்ற, நம்பிக்கை எதுவாகினும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். இந்த பக்குவம் இன்றி நம் விவாதம் பயன் அற்றது என்பது என் கருத்து
அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.