Tuesday, August 7, 2012

ஜெய் ஹோ மேரி கோம்

மேரி கோம். நேற்று வரை இப்பெயர் பெரிய பரிச்சயமான பெயர் ஒன்றுமில்லை. ஏதோ 80ஓடு 81ன்றாக ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீராங்கனை என்ற அளவிலேயே நூற்றுக்கு எண்பது பேருக்குப்  பரிச்சயம். அதிலும் சானியா மிர்சா, சாய்னா நெய்வால் அளவுக்கெல்லாம் இல்லை. ஆனால் இன்றைய நிலைமை அப்படியே தலைகீழ். மொத்த இந்தியாவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. முகப்புத்தகம், ட்விட்டர் என இணைய உலகம் முழுதுமாய் பிரார்த்தனைகளாலும், வாழ்த்துகளாலும் உச்சி முகர்ந்து கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் காரணம் நேற்று 06/08/2012 திங்களன்று நடந்த ஒலிம்பிக் பெண்களுக்கான 51 கிலோ பிரிவு குத்துச்சண்டை காலிறுதிப் போட்டிதான். தனது பிறந்தகமும் வாழ்விடமுமான மனிப்பூரும் சுற்றியுள்ள மொத்த வடகிழக்கு மாகாணங்களும் மின்வெட்டினால் இருளில் மூழ்கிக் கிடந்த நேரத்தில் லண்டன் ஒலிம்பிக்கின் குத்துச்சண்டை வளையத்துக்குள் துனிசீயா நாட்டைச் சேர்ந்த மரூவா ரஹாலியைத் 15-6 என துவம்சம் செய்து புயலென அரையிறுதிக்குள் நுழைந்ததுதான். இதில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் நேற்றுதான் இவருடைய இரட்டை மகன்களான ரெய்ச்சூங்வார் மற்றும் குப்பேன்யாவாரின் ஐந்தாவது பிறந்தநாள்.  ஆம்... மேரி இரண்டு குழந்தைகளின் தாய்.


இன்று இந்தியாவிற்குத் தங்கம் கொண்டு வருவார் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஏற்றி வைத்திருக்கும் மேரி கோமின் கடந்தகாலம் அத்துனை மகிழ்ச்சியானதென சொல்வதற்கில்லை. மனிப்பூரின் காங்த்தே கிராமத்தில் 1983ம் ஆண்டு, ஜூம் நிலப்பரப்புகளில் காடுகளை எரித்து விவசாயத்தில் ஈடுபடும் ஏழைப் பெற்றோர்களான மாங்தே டோபா, மாங்தே அகோம் ஆகியோரின் மூத்த மகளாக  பிறந்தவர் மேரி கோம். பள்ளி செல்லும் நேரம் தவிர பெற்றோரோடு சேர்ந்து மரங்களை வெட்டுவது, நிலக்கரி சேகரிப்பது என்று அவர்கள் வகை விவசாயத்தில் சிறுவயது முதலே உதவியாக இருந்து வந்தார். வீட்டின் மூத்த பெண்ணாதலால் அவருடைய தம்பி தங்கைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவருக்கேத் தரப்பட்டது. இத்தனைக்கிடையிலும் மொய்ராங் நகரின் கிறித்தவப்பள்ளிகளில் படித்த காலகட்டத்தில் தடகள விளையாட்டின் மீது மேரிக்கு ஒரு புரியாத ஆர்வம் ஏற்பட்டது. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து தன்னை மேம்படுத்தி ஏதாவது சாதிப்பதற்கான தளமாக தடகள விளையாட்டைக் கருதினார். ஆனால் அவருக்கான மகுடமாக வேறு ஒன்று செய்யப்பட்டிருந்தது அவருக்கு அப்பொழுது தெரியவில்லை.  மொய்ராங்கில் இருந்து இம்பால் நகருக்கு எட்டாம் வகுப்பு படிப்பதற்காக சென்றார் மேரிகோம். அங்குதான் அவருக்கு பெண்களுக்கான குத்துச்சண்டை பற்றி தெரிய வந்தது. மாற்றம் ஒன்றே மாறாதது போல் அவரின் ஆசையும் மாறியது. குத்துச்சண்டை பழகப்பழக ஆசை பெரும் பேராசையாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.  இந்நிலையில்தான் இந்தியாவின் டிங்கோ சிங் 1998ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியில் தங்க மகனானார். அவருக்கு அந்நாளில் இந்தியா அளித்த வரவேற்பு அபரிமிதமானதாக இருந்தது.  அதையெல்லாம் பார்த்த  மேரியின் ஆசை உருமாறி உருமாறி  நம்பிக்கையாக துளிர்விட்ட தருணங்கள் அவை. ஆனாலும் குத்துச்சண்டை வீராங்கனையாகப் போகிறேன் என்பதை வீட்டில் சொல்லும் நிலையில்லலாத ஒரு சராசரி இந்தியப் பெண்ணாகவே இருந்தார் மேரி. இருப்பினும் உள்ளிருந்து உந்துதல் அதிகமாகவே வீட்டிற்குத் தெரியாமலே கூமன் லம்ப்பாக்கில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்த இந்தியாவின் தலைசிறந்த பயிற்சியாளரான இபோம்ச்சா சிங் முதலில் மேரியை சிறுமி என தவிர்த்தாலும் பின்னர் மேரியின் ஆர்வம் கண்டு தன்னுடைய முதன்மை மாணவியாக ஆக்கிக் கொண்டார். இரவு பகலாக ஊண் உரக்கமில்லாத பயிற்சி. அதன் பிறகு குத்திய ஒவ்வொரு குத்தும் வெற்றி முத்திரைதான். மேரியின் குடும்பத்தினர் ஒரு முறை அவர் மாநில அளவில் வெற்றி பெற்ற செய்தி நாளிதழில் வந்ததைப் பார்த்தே அவர் குத்துச்சண்டை வீராங்கனை ஆனதை தெரிந்து கொண்டனராம்.

2001ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த பெண்களுக்கான உலக குத்துசண்டை சாம்பியன்சிப்பில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட மேரி வெள்ளியைக் கொய்து வந்தார்.  அதன் பிறகு வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே. 2005ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட மேரி கோம் இரட்டை மகன்களுக்குத் தாயானார்.  அதுவும் சிசேரியன் முறையில்.  ஆனால் அது எவ்வகையிலும் அவர் பயணத்துக்குத் தடைக்கல்லாக இருக்கவில்லை. 2001க்கு பிறகு நடந்த ஐந்து உலக சாம்பியன்சிப்களிலும் தங்கம் வென்றார் மேரி. ஆசிய, தேசிய அளவிலும் எங்கும் தங்கம், எதிலும் தங்கம்தான். இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜுனா, பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா என ஒன்று விடாமல் வாங்கிக் குவித்தார் மேரி. மனிப்பூர் காவல்துறையில் பணியமர்த்தப்பட்ட மேரி அங்கும் படிப்படியாக உயர்ந்து டி.எஸ்.பி அளவுக்கு பதவி உயர்ந்தார்.

இந்நிலையில்தான் 2012ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான தகுதிச்சுற்றுக்காகவும் சேர்த்து சைனாவில் நடத்தப்பட்ட 2012ம் ஆண்டின் உலக சாம்பியன்சிப் போட்டியின் காலிறுதியில் தோற்றுப்போனார் மேரி. உலக சாம்பியன்சிப்பின் பதக்கப் பட்டியலில் மேரியின் பெயர் இல்லாமல் போனது அதுவே முதல் முறை. ஆனாலும் அவருடைய பிரார்த்தனையின் பலனாக ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார். அதற்குப்பிறகு நேற்று வரை நடந்தது உலகறியும் வரலாறு.
இதுவரை கூறிய அனைத்துமே உலகறிந்த விஷயங்களே. ஆனால் மேரி வடகிழக்கு மாகாண மக்கள் அடையும் அத்தனை வேதனைகளையும் அடையாதவர் ஒன்றுமில்லை. முற்காலங்களில் நல்ல உணவு, உடை, ஷூக்கள் கூட கிடையாது. பெருத்த பணக்கஷ்டங்களைச் சந்தித்து வந்தவராகவே இருக்கிறார் மேரி. உலக சாம்பியன்சிப்பில் வெள்ளி ஜெயித்து வந்த காலகட்டத்துக்கு பின்பு ஒருமுறை நடந்த விளையாட்டுக் குழும சந்திப்பில் அவருடைய சமூகத்தின் பெயரை சுட்டிக்காட்டி அங்கு வந்திருந்த அனைவருக்கும் தேநீர் வழங்குமாறு பணிக்கப்பட்டாராம் மேரி. ஆனால் புன்னகை மாறாத முகத்தோடு அதையும் செய்தாராம் மேரி.  இது தவிரவும் அவர் மற்றும் அவர் சார்ந்த இனமும் அனுபவித்த அவமானங்கள் எல்லையில்லாதது. மேரியின் வெற்றிகளைப் பொறுக்காத ஒரு கும்பலால் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டு இறந்து போனார் மேரியின் மாமனார்.  மேரியைத் தெரிந்த ஒருவரின் ட்விட்டர் ஸ்டேட்டஸ் இவ்வாறாக இருக்கிறது.
மேரி சிரித்துக் கொண்டே ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்கிறார் "'என்னால் முடியாது'  என்பதே என்னிடம் அதிகளவில் சொல்லப்பட்ட வார்த்தை. ஒரு பெண்ணாக உன்னால் குத்துச்சண்டை போட முடியாது... திருமணம் செய்த பிறகு உன்னால் வெற்றி பெற முடியாது... குழந்தைப் பேறுக்கு பிறகு உன்னால் வெற்றி பெற முடியாது - ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் சொல்வதை பொய்யாக்க வேண்டியது எனது கடமையாக இருக்கிறது, கூடவே இந்தியாவிற்கான எனது வரலாறை எழுதுவதும்."

வடகிழக்கு மாகாண பெண்களின் மீதான இந்திய ராணுவத்தின் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து போராடும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்துக்கு இணையானதாகவே நான் மேரியின் இந்த வெற்றியைப் பார்க்கிறேன்.  மேரியின் இப்பதக்கம் இந்திய அரசுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் உணர்த்தியிருப்பது ஒன்றைத்தான். அது  வடகிழக்கு மக்களை சக மனிதர்களாக மதிக்க, மரியாதை செய்ய வேண்டும் என்பதைத்தான். இனிமேலாவது தமிழில் இருந்து "சிங்கிஸ் மிங்கிஸ்" "கூர்கா" "கும்பல் ஆப் கூர்காஸ்" போன்ற சொற்றொடர்கள் வழக்கொழிந்து போகட்டும்.

தங்கமோ, வெள்ளியோ, வெண்கலமோ - Medal is Confirmed, Metal yet to be.. ஆனால் எதுவாக இருந்தாலும் சில லட்சம் இந்தியர்களின் இதயத்தையும், அன்பையும் வென்றெடுத்ததுதான் இந்த ஒலிம்பிக்கின் உங்களது மகத்தான சாதனை. ஜெய் ஹோ மேரி கோம்.  Prayers and Wishes.

Monday, August 6, 2012

ட்வீட்டாலஜி - 06/08/2012


செத்துக் கொண்டே இருக்கும் சேகருக்கும், கடவுளை உணர்ந்து கொண்டே இருக்கும் கொமாருக்கும் தமிழ் வரலாற்றில் நிச்சயம் இடமுண்டு
###############
என்சைக்ளோப்பீடியாவின் இணைய பரிமாணம்தான் விக்கிபீடியா என்பது வரும் சந்நதியினருக்கு தெரியாமலே போய்விடக்கூடும் #Wikipedia
###############
உறக்கத்தின் பற்றை அறுத்து விழிக்க விழிக்க வீழ்த்தும் விளையாட்டை ஆரம்பித்துவிட்டது இரவு
###############
வந்துசென்ற மழையின் எச்சமாய் காட்சியளிக்கிறது உலர்த்தும் உன் தலையில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகள்
###############
குழந்தைகள் சொல்லும் பொய்கள் பெரும்பாலும் சிரிப்பையே வரவழைக்கிறது. #எங்க வீட்டுகிட்ட சிங்கம் இருக்கே. எத்தன சிங்கம்? ஏழு சிங்கம். J

###############

ரோட்டில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கும் போதெல்லாம் பைக்கின் ஸ்பீட் 20KM குறைவது தனிச்சையான செயலே.
###############
சனிக்கிழமைல ஏதாச்சும் உருப்படியான வேலை பாத்து உருப்படியா செலவழிக்கிறவன் ஏதாச்சும் வரம் வாங்கிட்டு வந்தவனாதான் இருக்கனும்.
###############
ஒரு ப்ரெண்டோட தங்கை கவுன்சலிங் போயிருந்தேன். BE Mech படித்தால் கூடவே BE civil இலவசம் என்பதைத் தவிர எல்லா வகை விளம்பரங்களும்.
###############
சனிக்கிழமைகளில் ஏதாவது உருப்படியான வேலை பார்த்து நேரத்தை உருப்படியாகச் செலவழிப்பவன் ஏதோ மிகப்பெரிய வரம் வாங்கி வந்தவனாகத்தான் இருக்க வேண்டும்.
###############
மதுபானக்கடை படத்துக்கு போனேன். தியேட்டர்ல படத்த மாத்தி மிரட்டல் போட்டாய்ங்க. பாத்துட்டுக் கெளம்பிட்டோம். போஸ்டர. :))
###############

குஷ்பு, ராதிகா, தேவயானி - மார்க்கெட் இழந்து சீரியல் நடிக்க வரும் நடிகைகள் வரிசையில் அப்பாஸியும். #VijayTV
###############
தேவயானி, ரம்பா, சினேகா - இப்படி ஹீரோயின் செலக்ட் பண்ண லிங்குசாமிதான் சமீராப் பையனையும் வச்சு படம் எடுத்துருக்கார் #வாவ்.. வாட் எ சேஞ்ச் ஓவர் மாமா?
###############
பொதுவா முகபாவனைன்னா கண்ணு வாய்லதான் குடுப்பாங்க. மூக்குல எக்ஸ்பிரஷன் குடுத்த ஒரே நடிகர் என்று முரளியை அவதானிக்கிறேன் #ஆனந்தம்
###############
பக்கத்துல ஒரு ஆட்டோல வயர் ஹீட் ஆகி விடாம ஹாரன் அடிச்சுகிட்டே இருந்துச்சு. வயரக்
கண்டுபிடிச்சு வெட்டுறதுக்குள்ள பேசாம easy ah ஒரு Bomb diffuse பண்ணிருக்கலாம் போல.
###############
இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்... சிலருக்கு இன்னும் யாஹூலல்லாம் மெயில் ஐடி இருக்குப்பா #yahoo
###############
தங்கத்துக்கே தங்கமா செங்கமலத்துக்கே மல்லிகையா. அட வுடு புள்ள.ஒன்னியும் பீல் ஆவாத. #WellPlayedSaina. U won billion hearts rather than this chotta medal.
###############
எதுக்கு உண்ணாவிரதம் இருந்தீங்க?"
 "லோக்பாலுக்கு"
"லோக்பால் வந்துச்சா?"
"வரல"
"அப்புறம் எதுக்கு முடிச்சீங்க?"
 "அதான்ணேன் இது"  
- அன்னா ஹசாரே பற்றிய அனைத்து செய்திகளையும் ஆதித்யா நகைச்சுவைச் சேனலில் போடுமாறு பரிந்துரை செய்கிறேன். #AnnaHazare
###############
ஆத்தா போன ஆட்சி பரவால்ல மண்டபத்தத் தான் காலி பண்ணனுக. இந்த ஆட்சில அடிமடிலயே கைய வச்சுருவாய்ங்க போலயே #கேப்டன் on #மதுவிலக்கு
###############
பழைய சோத்துடன் வெங்காயம் சாப்பிட்டவன் நான்-கேப்டன் # சூறாவளிக் காத்துல சுண்டல் தின்னீங்க, அட மழைல அவல் தின்னீங்க, கொட்டுற மழைல கொய்யா தின்னீங்க. அந்தந்த சீசனுக்கு அவனவன் சாப்பிடறதுதான் கேப்டன்.
###############


நம்ம அப்பா காலத்துல பென்ஷனப் பத்தி கவலைப்பட்டாங்க... நம்ம மென்ஷனப் பத்தி கவலைபடுறோம். #GenerationChange
###############
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.