மேரி கோம்மின் ஒவ்வொரு குத்தும் வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு இழைத்த துரோங்களுக்கான பதிலடிகள்
— ஆல்தோட்டபூபதி (@thoatta) August 6, 2012
இன்று இந்தியாவிற்குத் தங்கம் கொண்டு வருவார் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஏற்றி வைத்திருக்கும் மேரி கோமின் கடந்தகாலம் அத்துனை மகிழ்ச்சியானதென சொல்வதற்கில்லை. மனிப்பூரின் காங்த்தே கிராமத்தில் 1983ம் ஆண்டு, ஜூம் நிலப்பரப்புகளில் காடுகளை எரித்து விவசாயத்தில் ஈடுபடும் ஏழைப் பெற்றோர்களான மாங்தே டோபா, மாங்தே அகோம் ஆகியோரின் மூத்த மகளாக பிறந்தவர் மேரி கோம். பள்ளி செல்லும் நேரம் தவிர பெற்றோரோடு சேர்ந்து மரங்களை வெட்டுவது, நிலக்கரி சேகரிப்பது என்று அவர்கள் வகை விவசாயத்தில் சிறுவயது முதலே உதவியாக இருந்து வந்தார். வீட்டின் மூத்த பெண்ணாதலால் அவருடைய தம்பி தங்கைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவருக்கேத் தரப்பட்டது. இத்தனைக்கிடையிலும் மொய்ராங் நகரின் கிறித்தவப்பள்ளிகளில் படித்த காலகட்டத்தில் தடகள விளையாட்டின் மீது மேரிக்கு ஒரு புரியாத ஆர்வம் ஏற்பட்டது. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து தன்னை மேம்படுத்தி ஏதாவது சாதிப்பதற்கான தளமாக தடகள விளையாட்டைக் கருதினார். ஆனால் அவருக்கான மகுடமாக வேறு ஒன்று செய்யப்பட்டிருந்தது அவருக்கு அப்பொழுது தெரியவில்லை. மொய்ராங்கில் இருந்து இம்பால் நகருக்கு எட்டாம் வகுப்பு படிப்பதற்காக சென்றார் மேரிகோம். அங்குதான் அவருக்கு பெண்களுக்கான குத்துச்சண்டை பற்றி தெரிய வந்தது. மாற்றம் ஒன்றே மாறாதது போல் அவரின் ஆசையும் மாறியது. குத்துச்சண்டை பழகப்பழக ஆசை பெரும் பேராசையாக உருவெடுத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் இந்தியாவின் டிங்கோ சிங் 1998ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியில் தங்க மகனானார். அவருக்கு அந்நாளில் இந்தியா அளித்த வரவேற்பு அபரிமிதமானதாக இருந்தது. அதையெல்லாம் பார்த்த மேரியின் ஆசை உருமாறி உருமாறி நம்பிக்கையாக துளிர்விட்ட தருணங்கள் அவை. ஆனாலும் குத்துச்சண்டை வீராங்கனையாகப் போகிறேன் என்பதை வீட்டில் சொல்லும் நிலையில்லலாத ஒரு சராசரி இந்தியப் பெண்ணாகவே இருந்தார் மேரி. இருப்பினும் உள்ளிருந்து உந்துதல் அதிகமாகவே வீட்டிற்குத் தெரியாமலே கூமன் லம்ப்பாக்கில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்த இந்தியாவின் தலைசிறந்த பயிற்சியாளரான இபோம்ச்சா சிங் முதலில் மேரியை சிறுமி என தவிர்த்தாலும் பின்னர் மேரியின் ஆர்வம் கண்டு தன்னுடைய முதன்மை மாணவியாக ஆக்கிக் கொண்டார். இரவு பகலாக ஊண் உரக்கமில்லாத பயிற்சி. அதன் பிறகு குத்திய ஒவ்வொரு குத்தும் வெற்றி முத்திரைதான். மேரியின் குடும்பத்தினர் ஒரு முறை அவர் மாநில அளவில் வெற்றி பெற்ற செய்தி நாளிதழில் வந்ததைப் பார்த்தே அவர் குத்துச்சண்டை வீராங்கனை ஆனதை தெரிந்து கொண்டனராம்.
2001ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த பெண்களுக்கான உலக குத்துசண்டை சாம்பியன்சிப்பில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட மேரி வெள்ளியைக் கொய்து வந்தார். அதன் பிறகு வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே. 2005ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட மேரி கோம் இரட்டை மகன்களுக்குத் தாயானார். அதுவும் சிசேரியன் முறையில். ஆனால் அது எவ்வகையிலும் அவர் பயணத்துக்குத் தடைக்கல்லாக இருக்கவில்லை. 2001க்கு பிறகு நடந்த ஐந்து உலக சாம்பியன்சிப்களிலும் தங்கம் வென்றார் மேரி. ஆசிய, தேசிய அளவிலும் எங்கும் தங்கம், எதிலும் தங்கம்தான். இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜுனா, பத்மஸ்ரீ, ராஜீவ் காந்தி கேல் ரத்னா என ஒன்று விடாமல் வாங்கிக் குவித்தார் மேரி. மனிப்பூர் காவல்துறையில் பணியமர்த்தப்பட்ட மேரி அங்கும் படிப்படியாக உயர்ந்து டி.எஸ்.பி அளவுக்கு பதவி உயர்ந்தார்.
இந்நிலையில்தான் 2012ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான தகுதிச்சுற்றுக்காகவும் சேர்த்து சைனாவில் நடத்தப்பட்ட 2012ம் ஆண்டின் உலக சாம்பியன்சிப் போட்டியின் காலிறுதியில் தோற்றுப்போனார் மேரி. உலக சாம்பியன்சிப்பின் பதக்கப் பட்டியலில் மேரியின் பெயர் இல்லாமல் போனது அதுவே முதல் முறை. ஆனாலும் அவருடைய பிரார்த்தனையின் பலனாக ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார். அதற்குப்பிறகு நேற்று வரை நடந்தது உலகறியும் வரலாறு.
இதுவரை கூறிய அனைத்துமே உலகறிந்த விஷயங்களே. ஆனால் மேரி வடகிழக்கு மாகாண மக்கள் அடையும் அத்தனை வேதனைகளையும் அடையாதவர் ஒன்றுமில்லை. முற்காலங்களில் நல்ல உணவு, உடை, ஷூக்கள் கூட கிடையாது. பெருத்த பணக்கஷ்டங்களைச் சந்தித்து வந்தவராகவே இருக்கிறார் மேரி. உலக சாம்பியன்சிப்பில் வெள்ளி ஜெயித்து வந்த காலகட்டத்துக்கு பின்பு ஒருமுறை நடந்த விளையாட்டுக் குழும சந்திப்பில் அவருடைய சமூகத்தின் பெயரை சுட்டிக்காட்டி அங்கு வந்திருந்த அனைவருக்கும் தேநீர் வழங்குமாறு பணிக்கப்பட்டாராம் மேரி. ஆனால் புன்னகை மாறாத முகத்தோடு அதையும் செய்தாராம் மேரி. இது தவிரவும் அவர் மற்றும் அவர் சார்ந்த இனமும் அனுபவித்த அவமானங்கள் எல்லையில்லாதது. மேரியின் வெற்றிகளைப் பொறுக்காத ஒரு கும்பலால் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டு இறந்து போனார் மேரியின் மாமனார். மேரியைத் தெரிந்த ஒருவரின் ட்விட்டர் ஸ்டேட்டஸ் இவ்வாறாக இருக்கிறது.
Have seen MARY KOM pleading with Delhi three wheelerwallahs to take her to the stadium. Hope after the Olympics medal things will change!
— dibang (@dibang) August 6, 2012
மேரி சிரித்துக் கொண்டே ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்கிறார் "'என்னால் முடியாது' என்பதே என்னிடம் அதிகளவில் சொல்லப்பட்ட வார்த்தை. ஒரு பெண்ணாக உன்னால் குத்துச்சண்டை போட முடியாது... திருமணம் செய்த பிறகு உன்னால் வெற்றி பெற முடியாது... குழந்தைப் பேறுக்கு பிறகு உன்னால் வெற்றி பெற முடியாது - ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் சொல்வதை பொய்யாக்க வேண்டியது எனது கடமையாக இருக்கிறது, கூடவே இந்தியாவிற்கான எனது வரலாறை எழுதுவதும்."
வடகிழக்கு மாகாண பெண்களின் மீதான இந்திய ராணுவத்தின் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து போராடும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டத்துக்கு இணையானதாகவே நான் மேரியின் இந்த வெற்றியைப் பார்க்கிறேன். மேரியின் இப்பதக்கம் இந்திய அரசுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் உணர்த்தியிருப்பது ஒன்றைத்தான். அது வடகிழக்கு மக்களை சக மனிதர்களாக மதிக்க, மரியாதை செய்ய வேண்டும் என்பதைத்தான். இனிமேலாவது தமிழில் இருந்து "சிங்கிஸ் மிங்கிஸ்" "கூர்கா" "கும்பல் ஆப் கூர்காஸ்" போன்ற சொற்றொடர்கள் வழக்கொழிந்து போகட்டும்.
தங்கமோ, வெள்ளியோ, வெண்கலமோ - Medal is Confirmed, Metal yet to be.. ஆனால் எதுவாக இருந்தாலும் சில லட்சம் இந்தியர்களின் இதயத்தையும், அன்பையும் வென்றெடுத்ததுதான் இந்த ஒலிம்பிக்கின் உங்களது மகத்தான சாதனை. ஜெய் ஹோ மேரி கோம். Prayers and Wishes.
2 பேர் சொன்னது என்னான்னா..:
சிறப்பான பதிவு..நானும் தேடி தேடி பார்த்து கிடைக்காத தகவல்கள்.தகவல்களை விட மணிப்பூரின் நிலையை கூடவே ஒலிக்க வைத்த விதம அருமை.இது எனது பதிவு.நேரம் அமைத்து வாங்க...ஊரhttp://tamilmottu.blogspot.in/2012/08/25.html
nice
Post a Comment
வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...