Thursday, September 20, 2012

ஆதாமின்ட மகன் அபு..இந்த இரவில் இனி தூக்கத்தை தேடித்தான் பார்க்க வேண்டும். கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் கிடைப்பதற்கு வாய்ப்பு கம்மியே. காரணம் ஒரு திரைப்படம்...  மிக நெகிழ்ச்சியான ஒரு மலையாளத் திரைப்படம் - பெயர் ஆதாமின்ட மகன் அபு.  சென்ற ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற திரைப்படம். அபு,ஆயிஷா என்ற வயதான இஸ்லாமிய தம்பதியினர் - இவர்கள் இருவரைச் சுற்றியே நகர்கிறது கதையும் களமும்.. ஹஜ் செல்ல வேண்டும் என்பது அவர்களது வாழ்நாளைய குறிக்கோள். அந்தக் குறிக்கோளை அடைய முன்னிட்டு பல விஷயங்களை இழந்தும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த குறிக்கோள் நிறைவேறாமல் போகும் போது ஏற்படும் வலியை அவர்களோடு சேர்ந்து நமக்கும் தந்து விட்டுப் போகிறது திரைப்படம்.                      மலையாளத் திரை உலகில் ஒரு காமெடி நடிகராக பெருமளவில்  அறியப்பட்ட சலீம் குமாரின் தேர்ந்த நடிப்புத்திறன் படம் நெடுக பளிச்சிடுகிறது. அவரது மனைவி ஆயிஷும்மாவாக நடித்திருக்கும் சரீனாவும் மிக எதார்த்தமான நடிப்பு. ஒருவர் விடாமல் படத்தில் வரும்  அனைவருமே நல்லவர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலுமே வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்திற்கான பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டே செல்கிறது இப்படம்.  அதிலும் பிராயத்தில் சண்டைக்காரனான சுலைமானிடம் அபு மன்னிப்பு கேட்க, அதற்கு நோய்வாய்ப்பட்டு கிடக்கும் சுலைமான் அழும் காட்சி பொட்டில் அறையும் காட்சி...

                        கோவிந்தன் மாஸ்டர் என்னும் இந்துவும்(நெடுமுடி வேணு), ஜான்சன் என்னும் கிறித்தவரும்(கலாபவன் மணி) அபுவின் ஹஜ் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அபுவிற்கு உதவ முன் வருவதாய் காட்டியிருப்பத்து கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் நேசத்திற்கான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஹஜ் செல்வதற்காக புதிதாக எடுத்த  பாஸ்போர்ட்டைத் தொட்டுத் தொட்டு குதூகலிக்கும் காட்சி, பசுமாட்டையும் பலாமரத்தையும் இழந்து விட்டு கண்ணீர் மல்கும் காட்சி என படம் நெடுக பல காட்சிகளும் கண்களை விட்டு அகல மறுக்கிறது.இப்படத்தின் இயக்குநர் சலீம் அகமதுக்கு இது முதல் திரைப்படம் என்பது ஒரு மிகப்பெரிய "அதிசயம் ஆனால் உண்மை". பிறப்பிலேயே இயக்குநர் போலும். 

                            இந்தாண்டு ஹஜ் புனிதப்பயணம் செல்லா விட்டாலும் அடுத்த ஆண்டு சென்று விடலாம் என்ற நம்பிக்கையோடு ஒரு பலாமரத்தை சலீம் நடுவதாய் படம் முடியும் பொழுதில் மனது பாரப்படுவதை தவிர்க்க முடியவில்லை. படம் வந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. இவ்வாண்டு அவர்கள் கண்டிப்பாக ஹஜ் சென்றிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடே உறங்கப்போகிறேன். நம்பிக்கை - அதான சார் எல்லாம்...

நேரம் வாய்க்கும் பொழுது இணையத்திலேனும் கண்டிப்பாக பாருங்கள். 


கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான்.

என்னை இந்தப்படத்தைப் பார்க்கத் தூண்டிய மிகப்பிரமாதாமான விமர்சனம் இங்கே...

3 பேர் சொன்னது என்னான்னா..:

Riyas said...

ஒரு அருமையான திரைப்படத்துக்கு நச் என்றொரு விமர்சனம்!

இந்தப்படத்தைப்பார்த்தவுடன் எழுதவேண்டும் போல் தோன்றியது.. ஆனால் எழுத முடியவில்லை! இப்போது உங்கள் பதிவு பார்த்ததும் எழுத தோன்றுகிறது,

Riyas said...

// படம் வந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. இவ்வாண்டு அவர்கள் கண்டிப்பாக ஹஜ் சென்றிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடே உறங்கப்போகிறேன். நம்பிக்கை - அதான சார் எல்லாம்...// இந்தப்படத்தை எவ்வளவு ரசித்து பார்த்திருக்கிறீர்கள் என்பதற்கு இவ்வரிகளே சாட்சி!

ராம்குமார் - அமுதன் said...

உண்மை ரியாஸ்... படம் எனக்கு உண்மையிலேயே அவ்வளவு பிடித்திருந்தது... :)

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.