Wednesday, November 21, 2012

ப்ரணயம் - ஒரு திரைப்பார்வை

இரண்டு மாதத்திற்கு முன்னால் ஒரு மழை நாளின் பின்னிரவில்தான் ஷ்ரேயா கோஷலின் மதி மயக்கும் குரலில் இப்பாடலைக் கேட்க நேர்ந்தது. உறக்கம் தொலைத்து கேட்டுக் கொண்டே இருந்தேன்.. இருநூறு முறைக்கும் மேல் இருக்கலாம். பின்னர் நண்பனொருவன் சொன்னான் இப்பாடல் இடம்பெற்ற திரைப்படமான "ப்ரணயம்" சமகால மலையாளத்திரைப்படங்களுல் ஒரு அற்புதமென. இணையத்தில் தேடினால் பார்க்கும் நிலையிலான நல்ல ப்ரிண்ட் கிடைக்கவில்லை. பிறகு ஒருவாறாக தேடித் திரிந்து தவிறரக்கினேன். பார்க்கும் முன் படத்தைப் பற்றி இணையத்தில் மேய்ந்த பொழுதுதான் தெரிந்தது படத்தில் நடித்திருப்பது நடிப்பு ராட்சஸர்களின் கூட்டணி என. மோகன்லால், ஜெயப்ரதா மற்றும் அனுபம் கேர்.


கடந்த நூற்றாண்டின் ப்ரபஞ்ச பேரழகி ஜெயப்ரதா என்றவுடனேயே இப்படம் இன்னும் தனிக்கவனம் பெற்றது. ஜெயப்ரதா தன்னுடைய திரை வாழ்க்கையை துவக்கிய பொழுதில் எனது வயதென்ன தெரியுமா?  -(10). அதாகப்பட்டது நான் பிறப்பதற்கு பத்து வருடங்கள் முன்னால். எனக்கு - 2 வயதாக இருக்கும் பொழுதில் எடுக்கப்பட்ட சலங்கை ஒலி திரைப்படத்தை நான் முதன் முதலாக தூர்தர்ஷனில் பார்த்த பொழுது எனக்கு 7 அல்லது 8 வயது இருந்திருக்கலாம். ஆனால் 'ஆலம்பனா, நான் உங்கள் அடிமை' என்று சொல்லும் அலாவுதீனின் பூதத்தைப் போல உதட்டுக்கும் மூக்குக்கும் இடையிலான அந்த ஒரு புள்ளி மச்சத்துக்கு அன்று முதல் நானும்தான் அடிமை. சலங்கை ஒலிக்குப் பிறகு அவர் நடித்த அடுத்த தமிழ்ப்படமே "தசாவதாரம்"தான் என்பது காலம் தமிழகத்துக்கு செய்த மாபெரும் கொடுமை. அப்பேர்ப்பட்ட ஜெயப்ரதாவுக்காக வேண்டி இப்படத்தை பார்க்க நேரிட்டாலும் படத்தின் முடிவில் மனத்திரையில் அட்டினக்காலிட்டு அமர்ந்து கொண்டவர்கள் மூவருமே தான்.. இல்லை இல்லை நால்வர். படத்தின் இயக்குநர் ப்ளெஸியையும் சேர்த்து.


வாழ்வில் இது மாதிரியான ஒரு காதல் திரைப்படத்தை பார்த்ததே இல்லை. வாழ்க்கையை மெச்சி நிரம்ப வாழ்ந்த மனிதர்களிடத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள என்பதை ஒவ்வொரு காட்சியிலும் விரித்துக் கொண்டே செல்கிறது இப்படம். அதிலும் இது ஒரு முக்கோணக் காதல் கதை - முக்கோணத்தின் மூன்று பக்கங்களுக்குமான சராசரி வயது கிட்டத்தட்ட 70. அச்சுத மேனன் (அனுபம் கேர்) என்னும் 67 வயது இளைஞர் கண் பரிசோதனை செய்து கொள்ளும் காட்சியிலிருந்து தொடங்குகிறது படம். ஒரு மாத்திற்கு முன்பு மாரடைப்பு வந்திருக்கிறது. அவருடைய மகன் அரபு தேசத்தில் வேலை பார்க்க, ஒரு கடற்கரையோர அபார்ட்மென்டில் மருமகளோடும், பேத்தியோடும் வாழ்வதாக காட்சிகள் விரிகின்றன. கால்பந்து விளையாடும் தன்னுடைய பேத்தியின் நண்பனொருவனுடன் பேசுகையில் "கேரள தேசத்துக்காக கால்பந்து விளையாடுவது எனது கனவாக இருந்தது.. ஆனால் வாய்ப்பு கிடைத்த நேரம் என் மனைவி நிறை கர்ப்பிணியாக இருந்ததால் போக முடியவில்லை என்று சொல்கிறார்". அதே நாளில் வீடு திரும்பும் பொழுதில் லிப்டில் கிரேஸைப்(ஜெ.பி) பார்க்கிறார். அப்படியே மாரைப் பிடித்துக் கொண்டு கீழே விழுகிறார். இந்த வெட்னஸ்டே நாயகனின் நடிப்பைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? Simply splendid.

அவரை மடியில் கிடத்தி அழுது, அரற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறாள் கிரேஸ். அதிலிருந்து கிரேஸின் பார்வையில் விரிகிறது இவர்களிருவருக்குமான இளமைக்கால காதல் காட்சிகள். காதல் - கலப்பு மதத் திருமணம் - குழந்தை - குழந்தையின் இரண்டரை வயதில் விவாகரத்தாகி பிரிவு.


வீடுதிரும்பும் கிரேஸ் தன்னுடைய கணவன் மேத்யூசிடம்(லாலேட்டா) அழுகையினூடே இதைச் சொல்கிறாள். மேத்யூஸ் ஒரு கை ஒரு கால் பாதிக்கப்பட்ட Paralytic attack.  அவர்களுக்கு ஒரு மகள் - குடும்பம். நெஞ்சில் சாய்த்து ஆறுதல் சொல்கிறார் மேத்யூஸ். இது மாதிரியான பல காட்சிகள் படம் நெடுக. ஒவ்வொன்றிலும் மோகன்லாலின் நடிப்பு உச்சத்தின் உச்சம். இது மாதிரி ஒரு காட்சி பிண்ணனியில்தான் ஒலிக்கிறத்ய் ஷ்ரேயா கோஷலின் "பாட்டில் இபாட்டில்". கண்களில் ஒரு துளி நீரேனும் வராதார் கண்ணீர் சுரப்பிகள் வற்றிப்போனோர். இம்மாதிரியான ஒரு உறவுச்சிக்கலை ஒத்துக் கொள்ள/சகிக்க முடியாமல் வாரிசுகள் ஒருவர் மாறி ஒருவர் இவர்களை வசைபாடினாலும் தங்க மூவருக்குள்ளுமாக ஒரு நட்பு வளையத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் மூவரும். அக்காட்சிகளில் மேத்யூசும் கிரேசும் அன்னியோன்யமாக இருப்பது கண்டு அச்சு ஒரு லேசான கூச்சம் கொள்வதாகக் காண்பித்திருப்பது real real director’s touch. இம்மாதிரியான் ஒரு உறவுச்சிக்கலை, காதலை இவ்வளவு matureஆக கொஞ்சமும் விரசமற்று நேர்த்தியாக  காண்பித்திருப்பதில் இருக்கிறது இயக்குநரின்  awesomeness. வாரிசுகளின் ஏச்சும் பேச்சும் நாளுக்கு நாள் அதிகமாகவே மூவரும் கடைசியாக ஒரு சாலைப்பயணம் செய்து திரும்ப முடிவெடுக்கிறார்கள். மிக மகிழ்ச்சியான ஒரு சாலைப்பயணமாக அது அமைகிறது.  Leonard Cohenன் I am your man பாடுகிறார்கள்... மார்ட்டினி அருந்துகிறார்கள், மீன்பிடி படகில் சவாரி செய்கிறார்கள். மகிழ்ச்சியான தருணங்கள். இம்மாதிரியானவொரு தருணத்தில் மேத்யூசுக்கு இன்னுமொரு  storke வர மருத்துவமனையில் தொடர்கிறது காட்சிகள்... அச்சு-கிரேஸின் மகன் அவர்கள் பிரிவுக்கு பின்னான காரணத்தை அறிந்து அம்மாவிடம் அவளை புண்படுத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கிறான்.... இன்னும் சில காட்சிகள்... பின்னர் படத்தின் கடைசி காட்சி.. நிறைவுறுகிறது படம். நமக்கு நிறைய நிறைய பாடம்.


எவ்விதமான காட்சிகளுக்காகவும் எவ்விதமான சமரசமும் செய்து கொள்ளப்படவில்லை. அத்தனையிலும் அத்தனையும் இயல்பு. Stirctly No clichés… No Clichés at all.. . இசையும் பாடல்களும் மிகப்பிரமாதமாக படத்தினூடே உயிராகவே வருகிறது. பாத்திரத்தேர்விலும், நடிகர்களின் நடிப்பிலும் - எதிலும் மிகையில்லை. ஜெயப்பிரதாவின் டீனேஜ் பருவத்தின் கதாப்பாத்திரத்துக்கு 'தட்டத்தின் மறையத்து' நிவேதா தாமஸ். முகத்துக்கு முகம் cut shot போட்டாலும் கூட அப்படியே இருக்கிறது சாயல். Itz a medical miracle I say…

மொத்ததில் ப்ரணயம் கொடுத்த மனத்தாக்கம் ஒரு வாரமேனும் நிலையாக நீடிக்கும்.


saagaram maarilettum kathiron veenerinju
kaathare ninte nenchil eriyum sooryanaaro..
kadalala thuduniramaarnnu nin
kavililum arunima poothuvo..
pranayamorasulabha madhuramaam nirvruthi...


Thursday, November 8, 2012

கண்டேன் கடவுளை - A day with Raja Sir !

நன்றி இளையதளம், நண்பர் ப்ரான்கோ மற்றும் யாழிலிருந்து தங்கை சருகா.

நவம்பர் 6 - 2012. வாழ்வின் மிக முக்கியமானதொரு தருணத்தை தன்னகத்தே கொண்ட நாளாக மாறிப் போனது எனது அதிர்ஷ்டமே. இசை ஞானியை ஒரே ஒரு முறையேனும் கண்ணால் பார்த்து விட்டாலே போதும், பிறவிப்பயன் உண்டு என்ற எண்ணத்தில் வாழ்ந்து வரும் ஒரு சாமானியனுக்கு அவருடைய ஸ்டுடியோவில் மூன்று மணி நேரம், அவரோடு அமர்ந்து அவர் வாசிப்பதைப் பார்த்து, பேசுவதைக் கேட்டு, பாடுவதை உணரும் ஒரு வாய்ப்பு கிடைத்தால்... கிடைத்தது. இன்னும் ஒரு மீளா மயக்க நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கிறது மனது. 

நேற்று மதியம் 2:15 மணிக்கு இளையதளத்தில் இருந்து  சொன்னார்கள், முடியுமானால் 3 மணிக்குள் வந்து சேருங்கள் என்று. சிறுசேரியில் இருந்து வடபழனி செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 40 கி.மீ தூரம். தாறுமாறான வாகன நெரிசல் மிகுந்த சாலைகள். ஆனால் வாய்ப்பை இழக்க விரும்பாமல் "கெளம்பிட்டேன்.. தோ வர்றேன்.." என்று எனது சிங்கக்குட்டியை விரட்டு விரட்டியதில் மூன்று மணிக்கெல்லாம் அங்கே இடம்சேர்ந்தேன். எதையுமே யோசிக்க முடியாவொரு பரவச நிலையில் படபடத்துக் கொண்டிருந்தது மனது. அங்கிருந்த நண்பர்களோடு சற்று பேசினாலும் ஆசுவாசப்படவில்லை. கிட்டத்தட்ட அரை மணி நேர காத்திருப்புக்குப் பின் உள்ளழைத்தார்கள். இதயம் மணிக்கு இரண்டாயிரம் முறை துடித்த அந்தக் கணம்... உள்ளே சென்றால் ராஜகம்பீரத்தோடும், மாறாப் புன்னகையோடும் வெள்ளை உடையணிந்து கட்டைகளில் கைகளைத் தவழ விட்டுக் கொண்டிருந்தார் ராகதேவன். கர்ப்பக்கிரகத்தில் கடவுளைக் கண்ட உணர்வு என்று சொல்லுவதை உள்ளுணர்வாய் உணர முடிந்தது. பக்தி, பரவசம் என்ற வார்த்தையெல்லாம் மட்டுப்பட்டவையே. எல்லாம் தாண்டிய ஒரு நிலை அது. யாது மனம் நினையுமந்த நினைவுக்கு நினைவாகி...அமர்ந்தோம், நிமிர்ந்தோம், நின்றோம், நடந்தோம்... என் செய்வதென்றறியாது ஏதேதோ செய்தோம். எல்லோருக்கும் ஒரு கடைக்கண் பார்வையை பரிசளித்து விட்டு வாசிக்கத் தொடங்கினார் ராகதேவன். "பூங்கதவே தாழ் திறவாய்" - அவர் ஸ்வரம் பிடித்து பாடப்பாட வயலினில் வழிந்ததொரு இசைப் பிரவாகம். உந்தன் ராஜராகம் பாடும் நேரம் பாறை பாலுறூதே...  அப்படியே இன்னும் இரண்டு மூன்று பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமென. பழைய இரண்டு லைலா மஜ்னு திரைப்படங்களின் பாடல்களை பிரித்து ஒப்பிட்டு விளக்கினார். சி.ஆர்.சுப்புராமனைப் புகழ்ந்தார். சில ராகமாலிகைகளை விவரித்தார், சிலாகித்தார். அப்படியே பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக பகிர்ந்து, பாடி, வாசித்து, பேசி, சிரித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இரண்டு நொடிகளென சட் சட்டென்று கரைந்து போனது.

பாடல்களில் அரைச்சொல் வராமல் கண்டுகொள்வதற்கான காரணம் சொன்னார். காரணத்தோடு கொஞ்சம் கோபமும் பட்டார். சட்டென்று தன்னிலை திரும்பியவர்,  அதெல்லாம் நமக்கு வேண்டாமே என்று குழந்தை போல சிரித்தார். மேற்கொண்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

"இறைவன் இருப்பதை திருவிளையாடல்கள் மூலம் உணர்த்துவது சரி எனின் - தம்மைப் போல கற்றறிந்தவர்கள் கற்றதை சொல்லுவதன் மூலம் உணர்த்துவதுதான் சரி" என்பதை அழுத்திச் சொன்னார். 

"ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பவர் தன்னுடைய மேதாவித்தனத்தை மறைக்க நினைத்தாலும் அது எவ்வகையிலும் வெளிப்பட்டு விடும் " என்பதை சந்தம் பாடி விவரித்தது - நினைக்கையிலும் பேரின்பம். 

"சில சுமாரான திரைப்படங்களுக்கும் அதில் சுமரான சூழ்நிலைகளுக்கும் மிக அருமையான ட்யூன்களை கொடுத்து விட்டீர்களே" என்ற ஆதங்கக் கேள்விக்கு "ஒரு தாய் பசியென்று வரும் பிள்ளைக்கு கையில் இருப்பதைதான் கொடுப்பாளே தவிர இன்னொரு பிள்ளைக்கு வேண்டுமென எதையும் எடுத்து வைத்துக் கொள்ள மாட்டாள். அது போல இது..." என்று உவமை பேசினார். இது பொருட்டு பாரதிராஜாவின் செல்லக்கோபத்தை சிலாகித்தார்.
பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" பாடலைச் சொல்லிக்கொடுத்த பாங்கை விளக்கினார். கூடவே பாடினார்... அழைக்கிறாஆஆஆன் ராதையை பூங்கோதையை... Bliss of the bliss... 

அன்னக்கிளி வருமுன்னரே வாத்தியக்காரர்களை சேர்த்துக் கொண்டு Orchestration வாசித்துப் பார்த்த அனுபவம் பகிர்ந்தார். டிரம்மர் நோயலோடு கொண்ட ஊடல் சொன்னார். கடும் உழைப்புக் காலங்களைச் சொன்னார். "உங்களுக்கெல்லாம் இப்போ எல்லாமே youtubeல ஈஸியா கெடைக்குதே" என்றார்.

தன் கையில் ஒன்றுமே இல்லை, எல்லாமே இறையருள் என்பதை பல இடங்களில் அழுத்திச் சொன்னார். தற்செயலாகத் திறந்த தியாகராஜ சாமி கீர்த்தனைகளில் 'அரை அடி தள்ளி ஆகச்சரியாக அமர்ந்த' மரி மரி நின்னேவை ஆச்சர்யமாய் சொன்னார். தான் இறைவனுக்கு உண்மையாக இருப்பதன் சான்றுகளுள் அதுவும் ஒன்றென சொன்னார்.  கீர்தனையையும் பாடி மகிழச் செய்தார். கீர்த்தனையின் முடிவில் நாத்திகர்கள் கூட பக்தர்களாய் மாறிப் போனார்கள்... ராகதேவனின் பக்தர்களாக.. இசைக்கடவுளின் பக்தர்களாக... இசையராஜாவின் பக்தர்களாக...

ராகம் பேசினார்கள்... சட்ஜமத்தில் இருந்து வீடு மாறுமென கிரகபேதம் பேசினார்கள்.. ஒரு சங்கீத பாமரனாய் அவர்கள் பேசியது எனக்குப் புரியவில்லை எனும் போதிலும் அவர்கள் சொல்லிய பாடல் ஒவ்வொன்றும் இசைத் தொகுதி ஒவ்வொன்றும் Interlude ஒவ்வொன்றும் இதயக்கூட்டில் எவ்வப்பொழுதிலும் ஒலித்துக் கொண்டிருப்பவைதான்.

புன்னகை மன்னன் BGM வாசித்து முடித்து... எல்லாம் முடிந்து எழுந்து வந்தார்... நாங்கள் ஒவ்வொருவராய் பாதம் பணிந்தோம்...

திருவாசக ட்யூனில் திவ்யப்பிரபந்தத்தையும், ஜனனி ஜனனி ட்யூனில் ரமணா ரமணாவையும் பாடிய சகோதரரின் பக்தியை என்னென்று சொல்ல... கண்ணீர் மல்கி காலில் விழுந்து வணங்கிய சகோதரியின் பரவசத்தை என்னென்று சொல்ல... அவரின் ஒவ்வொரு வாசிப்புக்கும் என்னிடம் ஒரிஜினல் இருக்கிறது என்று குழந்தையாய் குதூகலித்த நண்பரின் மகிழ்ச்சியை என்னென்று சொல்ல... ராஜா பாடல்களின் ரசிகர்கள் என்பது ரசனை சம்பந்தப்பட்ட விஷயமாகிப் போனாலும் ராஜாவின் ரசிகர்கள் என்பது ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம்தான் என்பது கண்கூடு. வந்திருந்த ஒவ்வொருவருக்குமே ஒரு நீண்ட நெடுந்தவத்தின் முடிவில் வரம் கிடைத்த மகிழ்ச்சியே. ஆனந்தம் பரமானந்தம் இசைக்கடவுளின் தரிசனம் ஆனந்தம்.வீடு திரும்பி கிட்டத்தட்ட 30 மணி நேரம் ஆன பிறகும் இன்னமும் அந்த Hangover கொஞ்சமும் குறையவே இல்லை. எந்தப்பாட்டிலிலும் இல்லாத போதை இந்தப்பாட்டில்தான் இருக்கிறது... இன்னும் நினைவில் புரியவில்லை - நடந்தது கனவா நனவா என்று... ஆனால் வாழ்நாளைக்கும் நெஞ்சுக்கூட்டில் புதைந்திருக்கும் என்பது நிதர்சனம்.

ஆதலாலே இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ...
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ..


ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன் 


 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.