Thursday, November 8, 2012

கண்டேன் கடவுளை - A day with Raja Sir !

நன்றி இளையதளம், நண்பர் ப்ரான்கோ மற்றும் யாழிலிருந்து தங்கை சருகா.

நவம்பர் 6 - 2012. வாழ்வின் மிக முக்கியமானதொரு தருணத்தை தன்னகத்தே கொண்ட நாளாக மாறிப் போனது எனது அதிர்ஷ்டமே. இசை ஞானியை ஒரே ஒரு முறையேனும் கண்ணால் பார்த்து விட்டாலே போதும், பிறவிப்பயன் உண்டு என்ற எண்ணத்தில் வாழ்ந்து வரும் ஒரு சாமானியனுக்கு அவருடைய ஸ்டுடியோவில் மூன்று மணி நேரம், அவரோடு அமர்ந்து அவர் வாசிப்பதைப் பார்த்து, பேசுவதைக் கேட்டு, பாடுவதை உணரும் ஒரு வாய்ப்பு கிடைத்தால்... கிடைத்தது. இன்னும் ஒரு மீளா மயக்க நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கிறது மனது. 

நேற்று மதியம் 2:15 மணிக்கு இளையதளத்தில் இருந்து  சொன்னார்கள், முடியுமானால் 3 மணிக்குள் வந்து சேருங்கள் என்று. சிறுசேரியில் இருந்து வடபழனி செல்ல வேண்டும். கிட்டத்தட்ட 40 கி.மீ தூரம். தாறுமாறான வாகன நெரிசல் மிகுந்த சாலைகள். ஆனால் வாய்ப்பை இழக்க விரும்பாமல் "கெளம்பிட்டேன்.. தோ வர்றேன்.." என்று எனது சிங்கக்குட்டியை விரட்டு விரட்டியதில் மூன்று மணிக்கெல்லாம் அங்கே இடம்சேர்ந்தேன். எதையுமே யோசிக்க முடியாவொரு பரவச நிலையில் படபடத்துக் கொண்டிருந்தது மனது. அங்கிருந்த நண்பர்களோடு சற்று பேசினாலும் ஆசுவாசப்படவில்லை. கிட்டத்தட்ட அரை மணி நேர காத்திருப்புக்குப் பின் உள்ளழைத்தார்கள். இதயம் மணிக்கு இரண்டாயிரம் முறை துடித்த அந்தக் கணம்... உள்ளே சென்றால் ராஜகம்பீரத்தோடும், மாறாப் புன்னகையோடும் வெள்ளை உடையணிந்து கட்டைகளில் கைகளைத் தவழ விட்டுக் கொண்டிருந்தார் ராகதேவன். கர்ப்பக்கிரகத்தில் கடவுளைக் கண்ட உணர்வு என்று சொல்லுவதை உள்ளுணர்வாய் உணர முடிந்தது. பக்தி, பரவசம் என்ற வார்த்தையெல்லாம் மட்டுப்பட்டவையே. எல்லாம் தாண்டிய ஒரு நிலை அது. யாது மனம் நினையுமந்த நினைவுக்கு நினைவாகி...அமர்ந்தோம், நிமிர்ந்தோம், நின்றோம், நடந்தோம்... என் செய்வதென்றறியாது ஏதேதோ செய்தோம். எல்லோருக்கும் ஒரு கடைக்கண் பார்வையை பரிசளித்து விட்டு வாசிக்கத் தொடங்கினார் ராகதேவன். "பூங்கதவே தாழ் திறவாய்" - அவர் ஸ்வரம் பிடித்து பாடப்பாட வயலினில் வழிந்ததொரு இசைப் பிரவாகம். உந்தன் ராஜராகம் பாடும் நேரம் பாறை பாலுறூதே...  அப்படியே இன்னும் இரண்டு மூன்று பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமென. பழைய இரண்டு லைலா மஜ்னு திரைப்படங்களின் பாடல்களை பிரித்து ஒப்பிட்டு விளக்கினார். சி.ஆர்.சுப்புராமனைப் புகழ்ந்தார். சில ராகமாலிகைகளை விவரித்தார், சிலாகித்தார். அப்படியே பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக பகிர்ந்து, பாடி, வாசித்து, பேசி, சிரித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இரண்டு நொடிகளென சட் சட்டென்று கரைந்து போனது.

பாடல்களில் அரைச்சொல் வராமல் கண்டுகொள்வதற்கான காரணம் சொன்னார். காரணத்தோடு கொஞ்சம் கோபமும் பட்டார். சட்டென்று தன்னிலை திரும்பியவர்,  அதெல்லாம் நமக்கு வேண்டாமே என்று குழந்தை போல சிரித்தார். மேற்கொண்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

"இறைவன் இருப்பதை திருவிளையாடல்கள் மூலம் உணர்த்துவது சரி எனின் - தம்மைப் போல கற்றறிந்தவர்கள் கற்றதை சொல்லுவதன் மூலம் உணர்த்துவதுதான் சரி" என்பதை அழுத்திச் சொன்னார். 

"ஒரு நல்ல இசையமைப்பாளர் என்பவர் தன்னுடைய மேதாவித்தனத்தை மறைக்க நினைத்தாலும் அது எவ்வகையிலும் வெளிப்பட்டு விடும் " என்பதை சந்தம் பாடி விவரித்தது - நினைக்கையிலும் பேரின்பம். 

"சில சுமாரான திரைப்படங்களுக்கும் அதில் சுமரான சூழ்நிலைகளுக்கும் மிக அருமையான ட்யூன்களை கொடுத்து விட்டீர்களே" என்ற ஆதங்கக் கேள்விக்கு "ஒரு தாய் பசியென்று வரும் பிள்ளைக்கு கையில் இருப்பதைதான் கொடுப்பாளே தவிர இன்னொரு பிள்ளைக்கு வேண்டுமென எதையும் எடுத்து வைத்துக் கொள்ள மாட்டாள். அது போல இது..." என்று உவமை பேசினார். இது பொருட்டு பாரதிராஜாவின் செல்லக்கோபத்தை சிலாகித்தார்.
பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" பாடலைச் சொல்லிக்கொடுத்த பாங்கை விளக்கினார். கூடவே பாடினார்... அழைக்கிறாஆஆஆன் ராதையை பூங்கோதையை... Bliss of the bliss... 

அன்னக்கிளி வருமுன்னரே வாத்தியக்காரர்களை சேர்த்துக் கொண்டு Orchestration வாசித்துப் பார்த்த அனுபவம் பகிர்ந்தார். டிரம்மர் நோயலோடு கொண்ட ஊடல் சொன்னார். கடும் உழைப்புக் காலங்களைச் சொன்னார். "உங்களுக்கெல்லாம் இப்போ எல்லாமே youtubeல ஈஸியா கெடைக்குதே" என்றார்.

தன் கையில் ஒன்றுமே இல்லை, எல்லாமே இறையருள் என்பதை பல இடங்களில் அழுத்திச் சொன்னார். தற்செயலாகத் திறந்த தியாகராஜ சாமி கீர்த்தனைகளில் 'அரை அடி தள்ளி ஆகச்சரியாக அமர்ந்த' மரி மரி நின்னேவை ஆச்சர்யமாய் சொன்னார். தான் இறைவனுக்கு உண்மையாக இருப்பதன் சான்றுகளுள் அதுவும் ஒன்றென சொன்னார்.  கீர்தனையையும் பாடி மகிழச் செய்தார். கீர்த்தனையின் முடிவில் நாத்திகர்கள் கூட பக்தர்களாய் மாறிப் போனார்கள்... ராகதேவனின் பக்தர்களாக.. இசைக்கடவுளின் பக்தர்களாக... இசையராஜாவின் பக்தர்களாக...

ராகம் பேசினார்கள்... சட்ஜமத்தில் இருந்து வீடு மாறுமென கிரகபேதம் பேசினார்கள்.. ஒரு சங்கீத பாமரனாய் அவர்கள் பேசியது எனக்குப் புரியவில்லை எனும் போதிலும் அவர்கள் சொல்லிய பாடல் ஒவ்வொன்றும் இசைத் தொகுதி ஒவ்வொன்றும் Interlude ஒவ்வொன்றும் இதயக்கூட்டில் எவ்வப்பொழுதிலும் ஒலித்துக் கொண்டிருப்பவைதான்.

புன்னகை மன்னன் BGM வாசித்து முடித்து... எல்லாம் முடிந்து எழுந்து வந்தார்... நாங்கள் ஒவ்வொருவராய் பாதம் பணிந்தோம்...

திருவாசக ட்யூனில் திவ்யப்பிரபந்தத்தையும், ஜனனி ஜனனி ட்யூனில் ரமணா ரமணாவையும் பாடிய சகோதரரின் பக்தியை என்னென்று சொல்ல... கண்ணீர் மல்கி காலில் விழுந்து வணங்கிய சகோதரியின் பரவசத்தை என்னென்று சொல்ல... அவரின் ஒவ்வொரு வாசிப்புக்கும் என்னிடம் ஒரிஜினல் இருக்கிறது என்று குழந்தையாய் குதூகலித்த நண்பரின் மகிழ்ச்சியை என்னென்று சொல்ல... ராஜா பாடல்களின் ரசிகர்கள் என்பது ரசனை சம்பந்தப்பட்ட விஷயமாகிப் போனாலும் ராஜாவின் ரசிகர்கள் என்பது ஆன்மா சம்பந்தப்பட்ட விஷயம்தான் என்பது கண்கூடு. வந்திருந்த ஒவ்வொருவருக்குமே ஒரு நீண்ட நெடுந்தவத்தின் முடிவில் வரம் கிடைத்த மகிழ்ச்சியே. ஆனந்தம் பரமானந்தம் இசைக்கடவுளின் தரிசனம் ஆனந்தம்.வீடு திரும்பி கிட்டத்தட்ட 30 மணி நேரம் ஆன பிறகும் இன்னமும் அந்த Hangover கொஞ்சமும் குறையவே இல்லை. எந்தப்பாட்டிலிலும் இல்லாத போதை இந்தப்பாட்டில்தான் இருக்கிறது... இன்னும் நினைவில் புரியவில்லை - நடந்தது கனவா நனவா என்று... ஆனால் வாழ்நாளைக்கும் நெஞ்சுக்கூட்டில் புதைந்திருக்கும் என்பது நிதர்சனம்.

ஆதலாலே இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ...
நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்நதிடாதோ..


ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை மாட்டி வைத்தேன் 


19 பேர் சொன்னது என்னான்னா..:

Ramesh Krishnan said...

1000 likes...

நாரத முனி said...

ஹலோ, அடுத்து நான் வந்து "கோடி இன்பம் மேனி எங்கும் " பாடல் உங்கள் நினைவில் இருக்கிறதா என்று கேட்டேன்? இரண்டு வரிகள் பாடி காட்டியதும், தன் பியானோவில் வாசித்து.. "ஆமா நான் போட்ட மாதிரி தான் இருக்கு" என்று சொன்னதை எழுத விட்டீங்களே :)

கோவை நேரம் said...

கடவுளை கண்ட பக்தருக்கு வாழ்த்துக்கள்..

siva kumar said...

உங்கள் வாழ்க்கையின் மிக அற்புதமான தருணங்களை மிக அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! பொறாமையுடன் -- சிவக்குமார்

siva kumar said...

உங்கள் வாழ்க்கையின் மிக அற்புதமான தருணங்களை மிக அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! பொறாமையுடன் -- சிவக்குமார்

ராம்குமார் - அமுதன் said...

@நாரதமுனி : மன்னிக்க நண்பரே.. விடுபட்டுப் போனது... இது போல் இன்னும் ஏதேனும் இருந்தால் பின்னூட்டங்களில் பகிருங்கள்... ரீபோஸ்ட் செய்கிறேன்...

அனைவருக்கும் நன்றிகள்...

Unknown said...

Hi,

Ennidam tamizh font illai enavae, englishil.... ungal post migavum arumai..enadhu, namadhu anubavangalai miga azhagaaga, unavu poorvamaaga post seiythadharku mikka nandri...

Dhinakar said...

You could have sought my permission for using my photos and given due credit. Without seeking permission and posting in a blog or site is a copyright violation!

ராம்குமார் - அமுதன் said...

அன்பின் தினகர்.. மன்னிக்கவும்... புகைப்படங்களுக்கு நன்றி...

satheesh said...

அருமை...படித்து சிலிர்த்தேன் !! வாழ்க ராஜா !!

Silicon Sillu said...

செம்ம பொறாமையா இருக்கு, அதேசமயம் அவர் பேசினதை முழுசா தெரிந்துகொள்ள ஆர்வமா இருக்கு!

Packya Raj said...

super

Packya Raj said...

super

கோபிநாத் said...

தல கூடவே இருந்த உணர்வு..அருமை ;)

| * | அறிவன்#11802717200764379909 | * | said...

[[சொவ்வொறையாளர்]]

இது என்ன நீங்கள் உருவாக்கிய சொல்லா?

Anonymous said...

உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்...

incissor said...

அற்புத பதிவு நண்பரே, இன்று தான் பார்த்தேன்!என் ப்ளாக் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
http://isaivaazhkai.blogspot.in/2012/11/blog-post_2533.html

incissor said...

திரு.M.S.V அவர்கள் குறித்து பேசும்போது, ஒரு பாடலைக் குறிப்பிட்டு, இதன் முதன் இரண்டு வரிகளை யார் வேண்டுமானாலும் இசையமைக்கலாம் ஆனால் அந்த கடைசிவரியை அவரால் தான் இசையமைக்க முடியுமென சொன்னார்!. அந்த பாடல் எதுவென்று நினைவு கூற முடியுமா? மேலும் பாடகர் திரு.செந்தில் தாஸ் கிரஹபேதம் குறித்து கேட்டபோது ஒரு பாடலை சொன்னார்[இரண்டு கர்னாடக சங்கீத வல்லுனர்கள் பாடும் போட்டிப் பாடல் அது என்று தலைவர் குறிப்பிட்டார்]அந்த பாடலையும் முடிந்தால் நினைவு படுத்தவும். மேலும் செந்தில் உயிரே உயிரே பாடலின் சரணத்தைப் பாடி[அதை நீ பவுர்ணமி பாடலின் சரணம் என்று தவராக சொன்னார்]அதன் டெம்போவை சற்று ஏற்றி வேறு ஒரு பாடலுடன் ஒப்பிட்டார்! அந்த பாடலும் மறந்துவிட்டது.தெரிந்தால் நினைவு படத்தவும்.

incissor said...

நீங்கள் மதியம் 2 மணிக்கு கேள்விப்பட்டு அவசரமாக வந்ததைக் குறிப்பிட்டிருந்தீர்கள். நான் அன்று காலை 8 மணிக்கு விஷயம் கேள்விப்பட்டு, 8.30 மணிக்கு என் ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து[எங்கள் ஊரிலிருந்து சென்னைக்கு பேருந்தில் 6 மணி நேரம் ஆகும்]புறப்பட்டு, செங்கதிலிருந்து திருவண்ணாமலை வர அந்த நேரத்தில் பேருந்து இல்லாததால், நேரம் கடத்த விரும்பாமல் வாழ்நாளில் முதல்முறையாக அந்த வழியே சென்ற ஒரு லாரியில் லிஃப்ட் கேட்டு ஏறி திருவண்ணாமலை வந்தடைந்து, அங்கிருந்து சென்னைக்கு பேருந்து ஏறி பல்வேறு இன்னல்களை கடந்து பிரசாத் லேப் வந்தடைந்தேன்! ஆனால் என் எல்லா கஷ்டங்களும் ராகதேவனை தரிசித்த ஒரே வினாடியில் மறைந்தது! அன்று எனக்கு கிடைத்த அற்புத அனுபவதுக்கு அந்த கஷ்டங்களெல்லாம் ஒன்றுமே இல்லை!

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.