Sunday, January 13, 2013

அலெக்ஸ் பாண்டியன் - உலக சினிமாவின் உச்சம்.


அலெக்ஸ் பாண்டியன் - பயங்கர போண்டியான் - அய்யய்யோ பூண்டியான்... கேவலம், மட்டம், மகா மோசம்... யாரையும் படம் பார்க்க விடாமல் செய்ய வேண்டி இன்னும் என்னென்ன வார்த்தைகளையெல்லாம் உபயோகித்தீர்கள். ட்விட்டர், பேஸ்புக், சயின்ஸ் புக் என எங்கெங்கிலும் "அய்யய்யோ... அம்மம்மா... கொல்றாங்க..." என்றெல்லாம் என்னென்னவோ கிறுக்கி வைத்தீர்கள்..

உங்களையெல்லாம் பார்த்து ஒன்றே ஒன்றுதான் கேட்க ஆசைப்படுகிறேன்... "அட அற்ப மானிட ஜென்மங்களே...இதை விட ஒரு திரைப்படத்தை எப்படி அதி அற்புதமாக எடுக்க முடியும்?" இந்தப் படத்தையெல்லாம் உங்களால் ரசிக்க முடியவில்லையென்றால்  உங்களுக்கெல்லாம் ஏதோ ஒரு ரசனைக்குறைபாடு உள்ளதனெவே எண்ணத் தோன்றுகிறது. இது போன்ற படங்களையெல்லாம் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஒரு கொண்டாட்ட மனநிலை என்பது அவசியாமாகிறது...


இந்நிலையில் உங்களிடம் ஒரு சில கேள்விகள் கேட்பதென்பது எனக்கு அவசியமாகிறது...

நீங்க எப்பொழுதாவது உங்கள் தாய்மாமாவோடு தாய்லாந்துக்கு போய் தாய் உணவை ருசித்திருக்கிறீர்களா?

அட அவ்வளவு ஏன்... உங்கள் ஏரியா கூர்க்கவை கூட்டிக் கொண்டு அம்பத்தூருக்குப் போய் அல்வா வாங்கிக் குடுத்திருக்கிறீர்களா?

அது கூட வேண்டாம்.. குற்றாலத்தில் போய் ஒரே ஒரு முறையாவது உங்கள் குடையை ரிப்பேர் செய்திருக்கிறீர்களா?

இதில் எதையுமே செய்ததில்லை என்பவர்களுக்கு இந்தப்படத்தைப் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை... இப்படி வாழ்க்கையில் கொண்டாட்டமான விஷயங்கள் எதுவுமே செய்யாமல் கொண்டாட்ட மனநிலை அற்றுப்போய் இருக்கும் உங்களிடத்தில் இப்படத்தை ரசிக்கும் தன்மையை எதிர்பார்ப்பதென்பது மடத்தனமன்றி வேறென்ன?

என்ன குறை கண்டீர்கள்? எதிலே குறையைக் கண்டீர்கள் இந்தக் காவியத்திலே? நடிப்பிலா? கதையிலா? திரைக்கதையிலா? இசையிலா? எதிலே குறையைக் கண்டீர்கள்?

கார்த்தி என்னும் கலைஞனின் திரைவாழ்க்கையின் உச்சமென இப்படத்தை கொண்டாட வேண்டிய தருணமிது... இதை விட்டால் அம்மாதிரியான வேறு தருணங்கள் கிடைக்காமல் போய் விட்டால் என்ன செய்வீர்கள் என் தமிழ் மானிடப் பதர்களே...? ம்ம் அதேதான்.. கொண்டாட்ட மனநிலை... கொண்டாட்ட மனநிலை...

கார்த்தி அரிவாளால் வெட்டி சுமோவின் டயர் கிழிந்து பனைமரத்தில் போய் வெடிக்கக் கூடாதா? ரயிலை விட வேகமாக ஓடிப்போய் அதிரிபுதிரியென ஆற்றிலே குதிக்க முடியாதா? ஏன் முடியாது? சோமாலியா நாட்டு விண்வெளி வீரர் மைக்கேல் சூசை சொல்வதை ஒரு நிமிடம் கேளுங்கள் "ஒன்பது கிரகங்களிலும் உச்சம் பெற்று காஸ்மோஸில் இருந்து பவர் கிடைக்கப் பெற்ற ஒருவனால் ஒளியையும் ஒலியையும் விட வேகமாகச் செயல்பட்டு பாண்டியன் எக்ஸ்பிரசின் மேல் பயணிக்க முடியும். சர்வ நிச்சயமாக..." போதுமா? உங்களுக்கு கொண்டாட்ட மனநிலை மட்டுமில்லாமல் அறிவியல் அறிவும் கம்மியென்பதை ஒத்துக் கொள்ளுங்கள். அதை விடுத்து....

இன்னும் ஒரு கேள்வி கேட்கிறீர்களே... அது ஏன் அந்த எர்வா மார்ட்டின் வில்லன் அவ்வளவு நீளமான கோட் போட்டிருக்கிறார் என்று... அதைப் பற்றிச் சொன்னால் மட்டும் உங்களுக்கு புரிந்து விடப் போகிறதா... நீங்களெல்லாம்தான் கொண்டாட்ட மனநிலையில் இல்லாத கொடுங்கோலர்களே...

"படத்தில் புதுமையாக ஒன்றுமே இல்லையே...." எப்படி ஐயா வாய் கூசாமல் இதைச் சொன்னீர்கள்...அனுஷ்கா போன்ற ஒரு நடிகையை கதாநாயகியாகப் போட்டு படத்தில் 7 நிமிடம் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்களே அது புதுமை இல்லையா? அவர் வந்த 7 நிமிடத்தில் காதலும் டூயட்டும் ஒரு குத்துப்பாட்டும் வந்ததே... அது புதுமை இல்லையா?

வில்லன் குரூப் ஊர் ஊராகப் போய் மக்களிடம் போட்டோவைக் காட்டி "இவனை எங்கயாவது பாத்துருக்கீங்களாஆஆஆஆஅடாஆஆஆ?" என்று கத்திக் கத்திக் கேட்கிறார்களே - இது புதுமை இல்லையா...

மொத்ததில் எதுதான் புதுமை இல்லை சொல்லுங்கள் கொண்டாட்ட மனநிலை இல்லாதவர்களே...

"புத்தன் + காந்தி + ஏசு = பிரதாப் போத்தன்" என்றளவில் நம்மிடத்தில் impact ஏற்படுத்தி விட்டு ""''நோ கய்ஸ் நோ.. திஸ் இஸ் தி ராதாகிருஷ்ணன் ஆப் தி கொடூர வில்லன்..." என்று கிளைமேக்ஸில் ட்விஸ்ட் வைத்தார்களே - அது இல்லையா?

"ஆம்பிளையா இருந்தா அவனோட கட்ட அவுத்து விட்டு அடிங்கடா" என்று கோபம் கொப்பளிக்க அனுஷ்கா பேசிய வசனம் - தமிழ் சினிமாவின் 50 ஆண்டு கால வரலாற்றில் ஆகச்சிறந்த புதுமை இல்லையா.

படத்தின் காமெடியன் சந்தானம் இரட்டை அர்த்த வசனம் மட்டுமே பேசி எவ்வப் பொழுதிலும் "பின்புறம்" அடிவாங்கியபடியே இருக்கிறாரே - அது இல்லையா...


 இதெல்லாம் கூட விட்டுத்தள்ளுங்கள்... கவுட்டாப்புள்ளில்  கல்லை வைத்து சொம்பை அடிக்கும் பொழுதும், தேன்கூட்டில் இருந்து வரும் தேனீக்களிடமிருந்து காப்பாற்றும் அந்தத் தருணத்திலும் அனுஷ்காவிற்கு காதல் வருகிறதே.. இதைக் கூட புதுமை என்று ஒத்து கொள்ள முடியாதா உங்களால்...?

"இசையும் பாடல்களும் சரி இல்லையா?" எப்பொழுதேனும் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் அரைஞான்கயிறு என்ற இசைக்கருவியை வாசித்திருக்கிறீர்களா...? இல்லைதானே... ம்ம் பேசக்கூடாது.. மூச்.

விசு, மனோபாலா, சுமன், எர்வா மார்ட்டின்... அட அட !! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என் இறைவா... 

"இன்னும் ஒரு மணி நேரத்தில CM sign பன்றேன்னு சொல்லிருக்காரு ... அது வரைக்கும் என்ன பண்றது?"  என்று அந்த எர்வா மார்ட்டின் வில்லன் கேட்கும் பொழுதில் உங்களுக்கு "ஏற்கனவே ஏழரை மணி நேரம் என்டெர்டெயின்மென்ட் கொடுத்தார்கள்... இன்னும் ஒரு மணிநேரம் நீடிக்கப் போகிறதே" என்ற சந்தோஷம் உங்களுக்கு வரவில்லையென்றால் - இதற்கும் மேலும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.. கொண்டாட்ட மனநிலையோடு கொண்டாட வேண்டிய தருணமிது.. இப்படத்தின் வெற்றியில் திளைத்து இது போல் ஒரு நான்கு படங்களேனும் கார்த்தி பண்ண வேண்டும்.. அதை நாம் கொண்டாட வேண்டும்..

என்ன... இன்னும் இன்னும் முடியாதா? கொண்டாட்ட மனநிலை கொள்ளத் தெரியாத உங்களையெல்லாம் பார்த்து பாவப்படுவதைத் தவிர என் செய்வதென்றே தெரியவில்லை... கர்த்தரே, உங்களை ரட்சிக்கக் கடவது. ஆமென். 

Saturday, January 12, 2013

உஸ்தாத் ஓட்டல் - ஒரு திரைப்பார்வை


உஸ்தாத் ஓட்டல்...

மலையாள சினிமாவின் "மீண்டுமொரு பொற்காலம்" என கடந்த ஆண்டைச் சொல்லலாம் போலும்.... எத்தனை எத்தனை அருமையான திரைப்படங்கள். சென்ற ஆண்டின் மிகச் சிறந்த மலையாளப் படம் என்று நண்பர்கள் பலராலும் பரிந்துரைக்கப்பட்டதாலும்,  திலகன் என்னும் மாபெரும் நடிகனின் வாழ்நாளையக் கடைசி சில படங்களுல் இதுவும் முக்கியமான ஒன்று இப்படத்தைப் பார்த்தே தீர வேண்டும் என மனதளவில் ''ஒரு உறுதி ஏற்போம். உஸ்தாத் ஹோட்டலைக் கண்டு கழிப்போம் என்று உறுதி ஏற்போம்" செய்திருந்தேன். ஆனால் பார்க்கும் வாய்ப்பும் வகையும் கிட்டியதென்னவோ இன்றுதான். இப்படத்தைப் பற்றி விமர்சனம் செய்வதென்பதெல்லாம் சாத்தியமே இல்லை என உள்மனது உரைப்பதால், ஒரு அனுபவப் பகிர்வாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இந்தப் பதிவு.

நீ யாராக வேண்டுமானாலும் இருந்து கொள். உன்னுடைய நிலை\தகுதி\அந்தஸ்து மற்றும் இன்னபிற- எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. ஆனால் உன்னுடைய எல்லாத் தேவைகளிலும் முதன்மையானது உணவுதான். இது எவ்வப்பொழுதிலும் மறுக்கப்படவே இயலாத கூற்று. "என்ன வேணா சொல்லு... கடைசில வாழ்றதென்னவோ இந்த ஒரு சாண் வாய்க்கும் வயித்துக்காகவும்தான சார்" என்ற சொல்லாடல்களின் பின்னாலிருக்கும் உணர்வுகளை ணர வைத்தது இத்திரைப்படம்...படத்தின் ஆரம்பகாட்சியிலிருந்தே சுவாரஸ்யத்திற்கு உத்தரவாதம் அளிக்கத் தொடங்கி விடுகிறார் இயக்குநர். ஒரு தந்தையின் "ஆண் குழந்தை ஆசை"யை நிறைவேற்றி 4 பெண்களுக்குப் பின்னால் ஐந்தாவதாக பிறக்கிறார் கதையின் நாயகன் பைசி என்றழைக்கப்படும் பைசல். கைக்குழந்தையைக் கையில் கொடுத்துவிட்டு உயிர் துறக்கிறார் அந்தத் தாய். தந்தையோடு அரபு தேசத்திற்கு குழந்தைகளும் பயணித்து செல்ல அங்கிருந்து ஆரம்பிக்கிறது கதை. படம் நெடுகிலுமே ஒரு இஸ்லாமிய மணம் கலந்த  இசை இழைந்தோடியபடியே இருப்பது கதைக்கேற்ற ரம்மியம். இசை கோபி சுந்தர.

கதையின் நாயகனாக மம்மூட்டியின் மகன் தல்கூர் சல்மான் நடித்திருக்கிறார். அவருடைய முகமொழிக்கும், உடல் மொழிக்கும் ஏற்றதொரு கதாப்பாத்திரம். வீடு முழுவதும் நிறைந்திருக்கும் அக்காக்களோடு வளருவதால் சமையலில் ஆர்வம் கொண்டு அதையே தன்னுடைய பாதையாக தேர்ந்தெடுக்கிறான் பைசி. ஆனால் அவனுடைய அப்பாவோ உலகின் இன்னபிற அப்பாக்களைப் போலவே தன் விருப்பமாக சொந்த ஊரில் ஒரு நட்சத்திர ஓட்டல் கட்ட வேண்டுமென்றும் அதற்கு பைசி முதலாளியாக வேண்டுமென்றும் ஆசை. சில உணர்வுப் போராட்டங்களின் முடிவில் அவனது அப்பா கடுஞ்சொற்கள் பேசி அவனுடைய பாஸ்போர்ட்டை புடுங்கிக் கொள்ள தன்னுடைய தாத்தாவின் கடற்கரையோர உஸ்தாத் ஹோட்டலுக்கு தற்காலிகமாக வந்து சேருகிறான். "உஸ்தாத்தின்ட பேரக்குட்டியா" என்று ஊரெல்லாம் கொண்டாடித் திரிகிறார்கள் அவனை. முந்தைய காட்சியில் அவனது சமையல்காரனாகும் ஆசையைக் காரணம் காட்டி அவனை திருமணம் செய்ய முடியாது என நிராகரிக்கிறார் சஹானா(நித்யா மேனன்). ம்ம்ம்ம். கட்டுப்பாடு இழக்கும் தருணமிது... ஷ்ஷப்பா.... என்னா கண்ணுடா.. என்னா பொண்ணுடா. :)

உஸ்தாத் ஹோட்டல் வைத்திருக்கும் தாத்தாவாகத் திலகன். கடைசி வரையிலும் நடித்துவிட்டுத்தான் போவேன் என்று நடிப்பை குருதியிலும் திசுக்களிலும் கலந்து கொண்ட இந்த நடிகனின் நடிப்பைப் பற்றி சொல்ல சங்க இலக்கியங்கள் தொடங்கி சமகால இலக்கியங்கள் வரை எங்கெங்கு தேடினும் வார்த்தைகள் கிடைக்கப் பெறுவதற்கில்லை. இவர் வரும் எல்லாக்காட்சிகளிலுமே அன்பும் கருணையும் காட்டாற்று வெள்ளெமெனக் கரைபுரண்டோடுகிறது. தாத்தாவுக்கும் பேரனுக்குமான காட்சிகள் பலவற்றிலும் நம்மை மிகச்சரியாக பொருத்திப்பார்க்க முடிகிறது.


"வயிறு நிறைவதற்கு பண்ணுவது சமையலே அல்ல, மனசு நிறையணும்... அதுதான் முக்கியம்" இதைப் பல காட்சிகளிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறார் திலகன். இதற்கிடையில் அவர் சிபாரிசின் பேரில் அருகில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் செஃப் ஆக பணிக்குச் சேர்கிறான் பைசி. மீண்டும் நித்யா மேனன் வருகை, காதல், பிரிவு, சேர்வு என நம் யூகிப்புக்குள்ளான விஷயங்கள் சில சில வந்து போகிறது... இந்நேரத்தில் கடையின் பேரில் இருக்கும் வங்கிக்கடனை அடைக்க முடியாததால் கடையை விற்று விடலாமா? என்ற வங்கி அதிகாரியின் கருத்தை தன் தாத்தாவிடம் பரிசீலிக்கச் சொல்கிறான் பைசி. அதற்குப் பிறகு தாத்தாவும் பேரனும் கடற்கரையில் தேநீர் அருந்தும் ஒரு நீளமான  காட்சித்தொகுதி இருக்கிறது. விவரிக்க இயலா அற்புதக் காட்சிகள் அவை.


ஒரு சில காரணங்களாலும் சூழ்ச்சிகளாலும் கடை மூடப்பட - உழைப்பால் ஒரு பாடலின் montage sequenceல் மீண்டும் திறக்கப்பட - துன்பம் - மகிழ்ச்சி மற்றும் சிலபல சுலைமானி தருணங்கள்.

இம்மாதிரி ஒரு நிலையில்தான் தனக்கு வெளிநாட்டில் chief executive chef ஆக வேலை கிடைத்திருக்கிறது எனவும் தான் போக எத்தனிப்பதாகவும் தனது தாத்தாவிடம் சொல்கிறான் பைசி. தாத்தாவுக்கு சட்டென்று உடல் நிலை மட்டுப்பட பேரனிடம் "நீ ஒருவரை சந்திக்க வேண்டுமென" உதவி கேட்கிறார்."இவனுக்கு எப்படி சமைக்கிறதுன்னு கத்துக் குடுத்துட்டேன். ஆனால் எதுக்காக சமைக்கிறதுன்னு நீங்கதான் கத்துக் குடுக்கனும்" என்ற ஒரு கடுதாசியோடு பைசியை தன் நண்பர் ஒருவரிடம் அனுப்புகிறார் திலகன். எதையுமே எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் வேணும்னுதான் நினைக்கக்கூடியது மனித மனம். ஆனால் உணவு விஷயத்தில் மட்டும் தன்னிலை வந்தவுடன் போதுமென்று சொல்லித்தான் ஆக வேண்டும்.. கட்டாயமும் கூட... என்ற வசனம் முதல் அக்காட்சித் தொகுதிகள் ஒவ்வொன்றுமே மனதில் அறைகிறது...
அதற்குப் பிறகான சில உண்மை மனிதர்களின் வாழ்வையும் சேர்த்து அமைத்ததில் இருக்கிறது கதாசிரியரின் திறன்... ஹேட்ஸ் ஆப் அஞ்சலி மேனன்.  படத்தின் இயக்குநர் அன்வர் ரஷீத்துக்கும் ஒரு பூங்கொத்தோ இல்லை பூங்காவோ பரிசளிக்கலாம்.

புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்ததன் பெயர் ஞானமா என்று தெரிவதற்கில்லை... ஆனால் மதுரையில் இருந்து ஊர் திரும்பும் பைசியோடு சேர்த்து நமக்கும் கிடைத்திருப்பதன் பெயர் கண்டிப்பாக ஞானம்தான். இதன் பிறகாக  ஒரு சில இறுதிக் காட்சிகளோடு மகிழ்ச்சியாகவே முடிந்தது படம். ஆனால் படம் பார்த்து முடித்த என் அறையெங்கிலும் அன்பும் கருணையும் இன்னும் நிரம்பி வழிந்து கொண்டேதான் இருக்கிறது.

Monday, January 7, 2013

கேள்விகளால் ஒரு வேள்வி

"ஹலோ தம்பி, நீங்க கணக்கம்பாளையம் பழனிச்சாமிதான?" 


வாரமலரின் குறுக்கெழுத்து போட்டுக் கொண்டிருந்த ஒரு பின்னிரவு நேரப் பேருந்து பயணத்தில் இப்படியாகத்தான் ஆரம்பித்தது அந்த உரையாடல். உரையாடல் என்பதை விட 'இல்லீங்களே' என்பதை மட்டுமே நான் பதிலாகக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி நேரம் என்பதே ஆகப் பொருத்தம். 

"ஏன் தம்பி, பொய் சொல்றீங்க.?"

"இல்லீங்க... பொய்யெல்லாம் இல்லீங்க..." 

"ரெண்டு வருஷம் முன்ன வரைக்கும், சின்னக்காம்பாளையம் பஸ்ஸ்டான்டு பக்கத்துல ஜூஸ் கடை போட்டிருந்தீங்கள்ல?"

"இல்லீங்களே.. அது நான் இல்லீங்க.. நான் சென்னைல இருக்... திருநேலில இருந்..." 

"இப்போ சென்னைல இருக்கீங்களா? முன்ன ஏதோ கடன் பிரச்சனைலதான ஊர விட்டு போய்ட்டீங்க?"

பக்கென்றது எனக்கு... "அய்யா, நிறுத்துங்க... உண்மைலயே அது நான் இல்லீங்க..." 

"ஊர்ல போய் உங்களப் பாத்தத சொல்லிருவேன்னு பயப்படுறீங்களா? என்ன மனுசங்களோ நீங்கல்லாம்?" இம்முறை கேள்வியை தனக்குத் தானே கேட்டுக் கொண்டவாறு அவருடைய சீட்டுக்கு எழுந்து போனார். 
வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட கேள்விகளுல் மிக வித்தியாசமான கேள்விகள் அந்தப் பெரியவருடையது... யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையில் எப்பொழுதுமே நம்மை எத்தனையோ கேள்விகள் சுற்றிக் கொண்டேதான் இருக்கின்றன... 

"பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேனுமா?" தொடங்கி 

"அப்புறம் தம்பி.. என்ன பண்றீங்க?" 

"எப்போ கல்யாண சாப்பாடு போடப் போறீங்க?" 

"அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?" 

"வீட்ல ஏதும் விஷேசம் உண்டா?" 

“சாப்ட்வேர் கம்பெனில என்ன வேலைதான் பாப்பீங்க? “ 

“நீங்க நடிக்க வரலேன்னா என்ன ஆகிருப்பிங்க? “ 

“ரஜினி அரசியலுக்கு வருவாரா? “ 

“கரண்ட் எப்போ வரும்?” 

“ஏன்... அதுல என்ன தப்பு?” 

"இதெல்லாம் ஒரு கேள்வியா?" 

ஏன்? எதுக்கு? எப்போ? எப்படி? எதனால? எங்க? என்பது வரைக்குமாய் லட்சோப லட்சம் கேள்விகள்...

அது ஒரு நாளின் பின்னிரவில் மணி 4:45.. Projectல் Productionல் ஏதோ ஒரு issueவை debugக்கிக் கொண்டிருந்தோம்... யுனிக்ஸ் சர்வர், லினக்ஸ் சர்வர், சரவண பவன் சர்வர் தொடங்கி வசந்த பவன் சர்வர் வரை நோண்டி நோண்டி கண்கள் களைத்துப் போயிருந்த நேரத்தில் டேமேஜர் தோளில் பையை மாட்டிக் கொண்டே உலகத்தின் மிகக் குரூரமான அந்தக் கேள்வியைக் கேட்டார்... 

"நாளைக்குக் காலைல சீக்கிரமா ஒரு 8 மணிக்கு வர முடியுமா?" 

அக்கேள்வி கேட்கப்பட்ட நொடியிலிருந்து சரியாக 96 மணி நேரத்தில் என்னுடைய பதில் கேள்வியை அவரிடம் கேட்டேன்... 

"Notice Periodல ஒரு மாசம் Buy out பண்ணிக்கலாமா? :))

அதிலிருந்து எப்பொழுதுமே "நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வர்றீங்களா?" "இன்னிக்கு ஏன் லேட்டு?" போன்ற கேள்விகள் சுத்தமாய் பிடிக்காமலே போய் விட்டன... வர்றப்பதான் வருவேன்... தர்றப்பதான் தருவேன்... 

என்னுடைய சக சாப்ட்வேர் சகோதர சகோதரிகளின் வாழ்வில் வட்டமிடும் மிகக் கொடூரமான கேள்வி ஒன்றே ஒன்று மட்டும் இன்னும் மிச்சமிருக்கிறது... அது மிக மிக பயங்கரமானதொரு ஒரு கேள்வி. QA, UAT, XAT எல்லாம் கடந்து code productionக்கு போய் நான்கு மாதங்கள் கழிந்தாலும் எந்தவொரு issueவின் பொருட்டும் கேட்கப்படும் அந்த பயங்கரமான கேள்வி யாதெனில்…

"Why this is not covered as part of unit testing?" 

என்ன கொடுமை சார் இது... :))

                                                                                                             
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.