Saturday, January 12, 2013

உஸ்தாத் ஓட்டல் - ஒரு திரைப்பார்வை


உஸ்தாத் ஓட்டல்...

மலையாள சினிமாவின் "மீண்டுமொரு பொற்காலம்" என கடந்த ஆண்டைச் சொல்லலாம் போலும்.... எத்தனை எத்தனை அருமையான திரைப்படங்கள். சென்ற ஆண்டின் மிகச் சிறந்த மலையாளப் படம் என்று நண்பர்கள் பலராலும் பரிந்துரைக்கப்பட்டதாலும்,  திலகன் என்னும் மாபெரும் நடிகனின் வாழ்நாளையக் கடைசி சில படங்களுல் இதுவும் முக்கியமான ஒன்று இப்படத்தைப் பார்த்தே தீர வேண்டும் என மனதளவில் ''ஒரு உறுதி ஏற்போம். உஸ்தாத் ஹோட்டலைக் கண்டு கழிப்போம் என்று உறுதி ஏற்போம்" செய்திருந்தேன். ஆனால் பார்க்கும் வாய்ப்பும் வகையும் கிட்டியதென்னவோ இன்றுதான். இப்படத்தைப் பற்றி விமர்சனம் செய்வதென்பதெல்லாம் சாத்தியமே இல்லை என உள்மனது உரைப்பதால், ஒரு அனுபவப் பகிர்வாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இந்தப் பதிவு.

நீ யாராக வேண்டுமானாலும் இருந்து கொள். உன்னுடைய நிலை\தகுதி\அந்தஸ்து மற்றும் இன்னபிற- எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. ஆனால் உன்னுடைய எல்லாத் தேவைகளிலும் முதன்மையானது உணவுதான். இது எவ்வப்பொழுதிலும் மறுக்கப்படவே இயலாத கூற்று. "என்ன வேணா சொல்லு... கடைசில வாழ்றதென்னவோ இந்த ஒரு சாண் வாய்க்கும் வயித்துக்காகவும்தான சார்" என்ற சொல்லாடல்களின் பின்னாலிருக்கும் உணர்வுகளை ணர வைத்தது இத்திரைப்படம்...படத்தின் ஆரம்பகாட்சியிலிருந்தே சுவாரஸ்யத்திற்கு உத்தரவாதம் அளிக்கத் தொடங்கி விடுகிறார் இயக்குநர். ஒரு தந்தையின் "ஆண் குழந்தை ஆசை"யை நிறைவேற்றி 4 பெண்களுக்குப் பின்னால் ஐந்தாவதாக பிறக்கிறார் கதையின் நாயகன் பைசி என்றழைக்கப்படும் பைசல். கைக்குழந்தையைக் கையில் கொடுத்துவிட்டு உயிர் துறக்கிறார் அந்தத் தாய். தந்தையோடு அரபு தேசத்திற்கு குழந்தைகளும் பயணித்து செல்ல அங்கிருந்து ஆரம்பிக்கிறது கதை. படம் நெடுகிலுமே ஒரு இஸ்லாமிய மணம் கலந்த  இசை இழைந்தோடியபடியே இருப்பது கதைக்கேற்ற ரம்மியம். இசை கோபி சுந்தர.

கதையின் நாயகனாக மம்மூட்டியின் மகன் தல்கூர் சல்மான் நடித்திருக்கிறார். அவருடைய முகமொழிக்கும், உடல் மொழிக்கும் ஏற்றதொரு கதாப்பாத்திரம். வீடு முழுவதும் நிறைந்திருக்கும் அக்காக்களோடு வளருவதால் சமையலில் ஆர்வம் கொண்டு அதையே தன்னுடைய பாதையாக தேர்ந்தெடுக்கிறான் பைசி. ஆனால் அவனுடைய அப்பாவோ உலகின் இன்னபிற அப்பாக்களைப் போலவே தன் விருப்பமாக சொந்த ஊரில் ஒரு நட்சத்திர ஓட்டல் கட்ட வேண்டுமென்றும் அதற்கு பைசி முதலாளியாக வேண்டுமென்றும் ஆசை. சில உணர்வுப் போராட்டங்களின் முடிவில் அவனது அப்பா கடுஞ்சொற்கள் பேசி அவனுடைய பாஸ்போர்ட்டை புடுங்கிக் கொள்ள தன்னுடைய தாத்தாவின் கடற்கரையோர உஸ்தாத் ஹோட்டலுக்கு தற்காலிகமாக வந்து சேருகிறான். "உஸ்தாத்தின்ட பேரக்குட்டியா" என்று ஊரெல்லாம் கொண்டாடித் திரிகிறார்கள் அவனை. முந்தைய காட்சியில் அவனது சமையல்காரனாகும் ஆசையைக் காரணம் காட்டி அவனை திருமணம் செய்ய முடியாது என நிராகரிக்கிறார் சஹானா(நித்யா மேனன்). ம்ம்ம்ம். கட்டுப்பாடு இழக்கும் தருணமிது... ஷ்ஷப்பா.... என்னா கண்ணுடா.. என்னா பொண்ணுடா. :)

உஸ்தாத் ஹோட்டல் வைத்திருக்கும் தாத்தாவாகத் திலகன். கடைசி வரையிலும் நடித்துவிட்டுத்தான் போவேன் என்று நடிப்பை குருதியிலும் திசுக்களிலும் கலந்து கொண்ட இந்த நடிகனின் நடிப்பைப் பற்றி சொல்ல சங்க இலக்கியங்கள் தொடங்கி சமகால இலக்கியங்கள் வரை எங்கெங்கு தேடினும் வார்த்தைகள் கிடைக்கப் பெறுவதற்கில்லை. இவர் வரும் எல்லாக்காட்சிகளிலுமே அன்பும் கருணையும் காட்டாற்று வெள்ளெமெனக் கரைபுரண்டோடுகிறது. தாத்தாவுக்கும் பேரனுக்குமான காட்சிகள் பலவற்றிலும் நம்மை மிகச்சரியாக பொருத்திப்பார்க்க முடிகிறது.


"வயிறு நிறைவதற்கு பண்ணுவது சமையலே அல்ல, மனசு நிறையணும்... அதுதான் முக்கியம்" இதைப் பல காட்சிகளிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறார் திலகன். இதற்கிடையில் அவர் சிபாரிசின் பேரில் அருகில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் செஃப் ஆக பணிக்குச் சேர்கிறான் பைசி. மீண்டும் நித்யா மேனன் வருகை, காதல், பிரிவு, சேர்வு என நம் யூகிப்புக்குள்ளான விஷயங்கள் சில சில வந்து போகிறது... இந்நேரத்தில் கடையின் பேரில் இருக்கும் வங்கிக்கடனை அடைக்க முடியாததால் கடையை விற்று விடலாமா? என்ற வங்கி அதிகாரியின் கருத்தை தன் தாத்தாவிடம் பரிசீலிக்கச் சொல்கிறான் பைசி. அதற்குப் பிறகு தாத்தாவும் பேரனும் கடற்கரையில் தேநீர் அருந்தும் ஒரு நீளமான  காட்சித்தொகுதி இருக்கிறது. விவரிக்க இயலா அற்புதக் காட்சிகள் அவை.


ஒரு சில காரணங்களாலும் சூழ்ச்சிகளாலும் கடை மூடப்பட - உழைப்பால் ஒரு பாடலின் montage sequenceல் மீண்டும் திறக்கப்பட - துன்பம் - மகிழ்ச்சி மற்றும் சிலபல சுலைமானி தருணங்கள்.

இம்மாதிரி ஒரு நிலையில்தான் தனக்கு வெளிநாட்டில் chief executive chef ஆக வேலை கிடைத்திருக்கிறது எனவும் தான் போக எத்தனிப்பதாகவும் தனது தாத்தாவிடம் சொல்கிறான் பைசி. தாத்தாவுக்கு சட்டென்று உடல் நிலை மட்டுப்பட பேரனிடம் "நீ ஒருவரை சந்திக்க வேண்டுமென" உதவி கேட்கிறார்."இவனுக்கு எப்படி சமைக்கிறதுன்னு கத்துக் குடுத்துட்டேன். ஆனால் எதுக்காக சமைக்கிறதுன்னு நீங்கதான் கத்துக் குடுக்கனும்" என்ற ஒரு கடுதாசியோடு பைசியை தன் நண்பர் ஒருவரிடம் அனுப்புகிறார் திலகன். எதையுமே எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் வேணும்னுதான் நினைக்கக்கூடியது மனித மனம். ஆனால் உணவு விஷயத்தில் மட்டும் தன்னிலை வந்தவுடன் போதுமென்று சொல்லித்தான் ஆக வேண்டும்.. கட்டாயமும் கூட... என்ற வசனம் முதல் அக்காட்சித் தொகுதிகள் ஒவ்வொன்றுமே மனதில் அறைகிறது...
அதற்குப் பிறகான சில உண்மை மனிதர்களின் வாழ்வையும் சேர்த்து அமைத்ததில் இருக்கிறது கதாசிரியரின் திறன்... ஹேட்ஸ் ஆப் அஞ்சலி மேனன்.  படத்தின் இயக்குநர் அன்வர் ரஷீத்துக்கும் ஒரு பூங்கொத்தோ இல்லை பூங்காவோ பரிசளிக்கலாம்.

புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்ததன் பெயர் ஞானமா என்று தெரிவதற்கில்லை... ஆனால் மதுரையில் இருந்து ஊர் திரும்பும் பைசியோடு சேர்த்து நமக்கும் கிடைத்திருப்பதன் பெயர் கண்டிப்பாக ஞானம்தான். இதன் பிறகாக  ஒரு சில இறுதிக் காட்சிகளோடு மகிழ்ச்சியாகவே முடிந்தது படம். ஆனால் படம் பார்த்து முடித்த என் அறையெங்கிலும் அன்பும் கருணையும் இன்னும் நிரம்பி வழிந்து கொண்டேதான் இருக்கிறது.

3 பேர் சொன்னது என்னான்னா..:

Sowmitha Suresh said...

Very nice review. A wonderful movie indeed :)

Indian said...

It is a very nice film indeed. We enjoyed it thoroughly.

Shankar Np said...

another best movie after adaminte mahan abu,in malayalam... and a good review...

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.