Sunday, January 13, 2013

அலெக்ஸ் பாண்டியன் - உலக சினிமாவின் உச்சம்.


அலெக்ஸ் பாண்டியன் - பயங்கர போண்டியான் - அய்யய்யோ பூண்டியான்... கேவலம், மட்டம், மகா மோசம்... யாரையும் படம் பார்க்க விடாமல் செய்ய வேண்டி இன்னும் என்னென்ன வார்த்தைகளையெல்லாம் உபயோகித்தீர்கள். ட்விட்டர், பேஸ்புக், சயின்ஸ் புக் என எங்கெங்கிலும் "அய்யய்யோ... அம்மம்மா... கொல்றாங்க..." என்றெல்லாம் என்னென்னவோ கிறுக்கி வைத்தீர்கள்..

உங்களையெல்லாம் பார்த்து ஒன்றே ஒன்றுதான் கேட்க ஆசைப்படுகிறேன்... "அட அற்ப மானிட ஜென்மங்களே...இதை விட ஒரு திரைப்படத்தை எப்படி அதி அற்புதமாக எடுக்க முடியும்?" இந்தப் படத்தையெல்லாம் உங்களால் ரசிக்க முடியவில்லையென்றால்  உங்களுக்கெல்லாம் ஏதோ ஒரு ரசனைக்குறைபாடு உள்ளதனெவே எண்ணத் தோன்றுகிறது. இது போன்ற படங்களையெல்லாம் பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஒரு கொண்டாட்ட மனநிலை என்பது அவசியாமாகிறது...


இந்நிலையில் உங்களிடம் ஒரு சில கேள்விகள் கேட்பதென்பது எனக்கு அவசியமாகிறது...

நீங்க எப்பொழுதாவது உங்கள் தாய்மாமாவோடு தாய்லாந்துக்கு போய் தாய் உணவை ருசித்திருக்கிறீர்களா?

அட அவ்வளவு ஏன்... உங்கள் ஏரியா கூர்க்கவை கூட்டிக் கொண்டு அம்பத்தூருக்குப் போய் அல்வா வாங்கிக் குடுத்திருக்கிறீர்களா?

அது கூட வேண்டாம்.. குற்றாலத்தில் போய் ஒரே ஒரு முறையாவது உங்கள் குடையை ரிப்பேர் செய்திருக்கிறீர்களா?

இதில் எதையுமே செய்ததில்லை என்பவர்களுக்கு இந்தப்படத்தைப் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை... இப்படி வாழ்க்கையில் கொண்டாட்டமான விஷயங்கள் எதுவுமே செய்யாமல் கொண்டாட்ட மனநிலை அற்றுப்போய் இருக்கும் உங்களிடத்தில் இப்படத்தை ரசிக்கும் தன்மையை எதிர்பார்ப்பதென்பது மடத்தனமன்றி வேறென்ன?

என்ன குறை கண்டீர்கள்? எதிலே குறையைக் கண்டீர்கள் இந்தக் காவியத்திலே? நடிப்பிலா? கதையிலா? திரைக்கதையிலா? இசையிலா? எதிலே குறையைக் கண்டீர்கள்?

கார்த்தி என்னும் கலைஞனின் திரைவாழ்க்கையின் உச்சமென இப்படத்தை கொண்டாட வேண்டிய தருணமிது... இதை விட்டால் அம்மாதிரியான வேறு தருணங்கள் கிடைக்காமல் போய் விட்டால் என்ன செய்வீர்கள் என் தமிழ் மானிடப் பதர்களே...? ம்ம் அதேதான்.. கொண்டாட்ட மனநிலை... கொண்டாட்ட மனநிலை...

கார்த்தி அரிவாளால் வெட்டி சுமோவின் டயர் கிழிந்து பனைமரத்தில் போய் வெடிக்கக் கூடாதா? ரயிலை விட வேகமாக ஓடிப்போய் அதிரிபுதிரியென ஆற்றிலே குதிக்க முடியாதா? ஏன் முடியாது? சோமாலியா நாட்டு விண்வெளி வீரர் மைக்கேல் சூசை சொல்வதை ஒரு நிமிடம் கேளுங்கள் "ஒன்பது கிரகங்களிலும் உச்சம் பெற்று காஸ்மோஸில் இருந்து பவர் கிடைக்கப் பெற்ற ஒருவனால் ஒளியையும் ஒலியையும் விட வேகமாகச் செயல்பட்டு பாண்டியன் எக்ஸ்பிரசின் மேல் பயணிக்க முடியும். சர்வ நிச்சயமாக..." போதுமா? உங்களுக்கு கொண்டாட்ட மனநிலை மட்டுமில்லாமல் அறிவியல் அறிவும் கம்மியென்பதை ஒத்துக் கொள்ளுங்கள். அதை விடுத்து....

இன்னும் ஒரு கேள்வி கேட்கிறீர்களே... அது ஏன் அந்த எர்வா மார்ட்டின் வில்லன் அவ்வளவு நீளமான கோட் போட்டிருக்கிறார் என்று... அதைப் பற்றிச் சொன்னால் மட்டும் உங்களுக்கு புரிந்து விடப் போகிறதா... நீங்களெல்லாம்தான் கொண்டாட்ட மனநிலையில் இல்லாத கொடுங்கோலர்களே...

"படத்தில் புதுமையாக ஒன்றுமே இல்லையே...." எப்படி ஐயா வாய் கூசாமல் இதைச் சொன்னீர்கள்...அனுஷ்கா போன்ற ஒரு நடிகையை கதாநாயகியாகப் போட்டு படத்தில் 7 நிமிடம் மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்களே அது புதுமை இல்லையா? அவர் வந்த 7 நிமிடத்தில் காதலும் டூயட்டும் ஒரு குத்துப்பாட்டும் வந்ததே... அது புதுமை இல்லையா?

வில்லன் குரூப் ஊர் ஊராகப் போய் மக்களிடம் போட்டோவைக் காட்டி "இவனை எங்கயாவது பாத்துருக்கீங்களாஆஆஆஆஅடாஆஆஆ?" என்று கத்திக் கத்திக் கேட்கிறார்களே - இது புதுமை இல்லையா...

மொத்ததில் எதுதான் புதுமை இல்லை சொல்லுங்கள் கொண்டாட்ட மனநிலை இல்லாதவர்களே...

"புத்தன் + காந்தி + ஏசு = பிரதாப் போத்தன்" என்றளவில் நம்மிடத்தில் impact ஏற்படுத்தி விட்டு ""''நோ கய்ஸ் நோ.. திஸ் இஸ் தி ராதாகிருஷ்ணன் ஆப் தி கொடூர வில்லன்..." என்று கிளைமேக்ஸில் ட்விஸ்ட் வைத்தார்களே - அது இல்லையா?

"ஆம்பிளையா இருந்தா அவனோட கட்ட அவுத்து விட்டு அடிங்கடா" என்று கோபம் கொப்பளிக்க அனுஷ்கா பேசிய வசனம் - தமிழ் சினிமாவின் 50 ஆண்டு கால வரலாற்றில் ஆகச்சிறந்த புதுமை இல்லையா.

படத்தின் காமெடியன் சந்தானம் இரட்டை அர்த்த வசனம் மட்டுமே பேசி எவ்வப் பொழுதிலும் "பின்புறம்" அடிவாங்கியபடியே இருக்கிறாரே - அது இல்லையா...


 இதெல்லாம் கூட விட்டுத்தள்ளுங்கள்... கவுட்டாப்புள்ளில்  கல்லை வைத்து சொம்பை அடிக்கும் பொழுதும், தேன்கூட்டில் இருந்து வரும் தேனீக்களிடமிருந்து காப்பாற்றும் அந்தத் தருணத்திலும் அனுஷ்காவிற்கு காதல் வருகிறதே.. இதைக் கூட புதுமை என்று ஒத்து கொள்ள முடியாதா உங்களால்...?

"இசையும் பாடல்களும் சரி இல்லையா?" எப்பொழுதேனும் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் அரைஞான்கயிறு என்ற இசைக்கருவியை வாசித்திருக்கிறீர்களா...? இல்லைதானே... ம்ம் பேசக்கூடாது.. மூச்.

விசு, மனோபாலா, சுமன், எர்வா மார்ட்டின்... அட அட !! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என் இறைவா... 

"இன்னும் ஒரு மணி நேரத்தில CM sign பன்றேன்னு சொல்லிருக்காரு ... அது வரைக்கும் என்ன பண்றது?"  என்று அந்த எர்வா மார்ட்டின் வில்லன் கேட்கும் பொழுதில் உங்களுக்கு "ஏற்கனவே ஏழரை மணி நேரம் என்டெர்டெயின்மென்ட் கொடுத்தார்கள்... இன்னும் ஒரு மணிநேரம் நீடிக்கப் போகிறதே" என்ற சந்தோஷம் உங்களுக்கு வரவில்லையென்றால் - இதற்கும் மேலும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.. கொண்டாட்ட மனநிலையோடு கொண்டாட வேண்டிய தருணமிது.. இப்படத்தின் வெற்றியில் திளைத்து இது போல் ஒரு நான்கு படங்களேனும் கார்த்தி பண்ண வேண்டும்.. அதை நாம் கொண்டாட வேண்டும்..

என்ன... இன்னும் இன்னும் முடியாதா? கொண்டாட்ட மனநிலை கொள்ளத் தெரியாத உங்களையெல்லாம் பார்த்து பாவப்படுவதைத் தவிர என் செய்வதென்றே தெரியவில்லை... கர்த்தரே, உங்களை ரட்சிக்கக் கடவது. ஆமென். 

13 பேர் சொன்னது என்னான்னா..:

Anonymous said...

Very True. Realistic :-)) @SeSenthilkumar

Karuppiah Thangaraj said...

கொண்

Hari said...

வஞ்சப்புகழ்ச்சி

உண்மைத்தமிழன் said...

ஹா.. ஹா.. செம.. செம.. நல்ல ரைட் அப்.. கீப் இட் அப் நண்பரே..!

ஜியா said...

Excellent.. got to watch this movie ;)

இயற்கை said...

அலெக்ஸ் பாண்டியனை கழுவி ஊத்தியதுக்கு sorry.. கருத்து தெரிவித்ததற்கு நன்றி..

ராஜ் said...

இலக்கிய படைப்பு ஒன்றை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை...
நீங்க சாரு மாதிரியே ட்ரை பண்ணி இருக்கீங்க :):), சரியாய் பாஸ்..

ராம்குமார் - அமுதன் said...

மிக சமர்த்தாக விமர்சனத்தையும் இந்த இலக்கியப் படைப்பையும் பற்றி புரிந்து கொண்டு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி :))

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Philosophy Prabhakaran said...

சக பதிவர் ஜாக்கியை நக்கலடித்ததும் உனா தானா அண்ணாச்சிக்கு எவ்வளவு மகிழ்ச்சி... பாவம் அவரும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவராவே நடிக்கிறது...

RAM krish said...

hi ram,

nan oru 4 month s aa unga blog padikkiren, very interesting, keep it up. thodarnthu eluthavum

Selva said...

superappu....

Mythu said...

whoever saw the movie should read ur comments and should be satisfied about their ticket money...;-)

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.