Tuesday, February 19, 2013

கேலிபரில் வந்த கடவுள்...

காலை அலுவலகம் வரும் வழியில் சோழிங்கநல்லூர் சிக்னலின் மஞ்சளை வேகமாய் கடக்க முயலும் பொழுதிலேயே சிக்னல் சிவப்பாக மாறிவிட, எதிர்ப்புற வண்டிகளும் வேகமெடுக்க நிற்க வேண்டியதாகி விட்டது. வெயில் வேறு கொடுமைப்படுத்த இன்னும் ஐந்து நிமிடங்கள் நிற்க வேண்டும் என்று நினைக்கையிலேயே ஆயாசமாக இருந்தது. அலுவலகக் கடுப்புகள் ஒன்றிரண்டை யோசிக்க யோசிக்க வெளியெறிச்சல் வேறு உள்ளெரிச்சலாய் மாறிக் கொண்டிருந்தது. த்ச் த்ச் என எரிச்சலில் உச்சுக் கொட்டிக் கொண்டிருந்த பொழுது Barricadeன் அந்தப்பக்கத்தில் இருந்து அதாவது Wrong Sideலிருந்து வந்த ஒரு பழைய பஜாஜ் கேலிபர் வண்டிக்காரர் நேராக வந்து அவரது முன் சக்கரத்தால் எனது முன்சக்கரத்தில் முட்டு முட்டி தள்ளாடி நிறுத்தினார்.. நானும் சற்றே தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டேன். இருந்த எரிச்சலில் ஹெல்மெட்டைக் கழற்றி விட்டு முறைத்தேன். அவர் பற்கள் பலவற்றையும் காட்டியவராய் "ஜ்ஜாரி சார்" என்றார். இருந்த எரிச்சலுக்கு தீனியாய் ஒருத்தன் சிக்கினால்.. அதுவும் சிக்கிவிட்டு சிரித்தால்..."ஹலோ பாஸ்.. இடிச்சுட்டு சாரி சொன்னா ஆச்சா? கண்ணு என்ன பொடனிலயா இருக்கு?"


"இல்ல சார்.. ப்ரேக் சரியா...."


"ப்ரேக் புடிக்கலேன்னா... உங்க வண்டிதான? எதிர்ல பஸ் வந்தா நேராப் போய் வுடுவீங்களா...?"

"-----"


"நீங்க பாட்டுக்கு தட்டிட்டு போயிருவீங்க... கீழ வுழுந்தா யாரு பாக்குறது... " இத்யாதி இத்யாதி எனக் கத்திக் கொண்டிருந்த பொழுதே உச்ச வேகத்தில் சைரன் ஒலியோடு ஒரு ஆம்புலன்ஸ் எங்களைக் கடந்து திரும்பியது. ஆம்புலன்ஸைக் கண்ட மாத்திரத்தில் அந்தக் கேலிபர்காரர் கால்களை ஊன்றி நின்று, உதட்டருகே விரலை மடித்து முனுமுனுத்தவாறே பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டார். 'பிதா சுதன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே... ஆமென்.." எனச் சிலுவை போட்டவராய் கண்கள் திறந்து என்னைப் பார்த்து...


"ஆம்புலன்ஸ்ல... யாரோ என்னமோ பாவம்.." என்றார்...


பளார் பளார் பளார்...

இம்முறை அதிகதிக சங்கடத்தோடு நான் சொன்னேன்...


"சாரி பாஸ்..."
 
அவருடைய சிரிப்பும் சிக்னலின் பச்சையும் ஒன்றாய் விழ வண்டியைக் கிளப்பிக் கொண்டு வந்து விட்டேன். OMRன் வானம் முழுக்க கமலின் தடுமாற்றக் குரல் அசீரிரியாய் ஒலித்துக் கொண்டேயிருந்தது.. "யாருன்னே தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் வுடுற மனசு இருக்கு பாருங்க.. அதான் சார் கடவுள்...."


ம்ம்... கடவுள்கள் சென்னை தெருக்களிலும் ப்ரேக் பிடிக்காத கேலிபர்களிலும் சுற்றிக் கொண்டும் – அவ்வப்பொழுதில் நம்மை இடித்துக் கொண்டும்தானிருக்கிறார்கள். . பிதா சுதன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே... ஆமென்..

7 பேர் சொன்னது என்னான்னா..:

Achilles/அக்கிலீஸ் said...

Nice one :)

அமுதா கிருஷ்ணா said...

எழுத்துக்கள் இவ்ளோ சின்னதா இருந்தா என்னன்னு சொல்றது???

Indian said...

Praying for others is very good, but obeying the law of the land is far more important, otherwise, one day some one else might be praying for HIM.

ராம்குமார் - அமுதன் said...

@அமுதா... ஆபிஸ்ல IE மட்டும்தான் உண்டு சகோ.... அதுல இருந்து பதிவு போடுறதே கஷ்டம்.. எழுத்து இன்னும் கஷ்டம்... இப்போ சரி பண்ணியாச்சு :)

@அக்கிலீஸ்/இந்தியன் : நன்றி நண்பர்களே... தப்பு செஞ்சாலும் சில கடவுள் கடவுள்தான் :)

Philosophy Prabhakaran said...

ஹி ஹி... செம மேட்டர் மா...

தலைப்பு அட்டகாசம்...

அமுதா கிருஷ்ணா said...

”கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்”

ராம்குமார் - அமுதன் said...

நன்றி பிரபா :)

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.