Sunday, March 31, 2013

சென்னையில் ஒரு நாள் - A must watch...

சில படங்கள்தான் பார்த்துத் திரும்பிய பிறகு நெஞ்சை விட்டகலாமல் அதைப் பற்றியே நம்மை யோசிக்க வைக்கும். கணம் மாறாமல் நாமும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்போம். இது அப்படி ஒரு திரைப்படம். எனக்கு இன்னும் நானே ஒரு SUV genere Carஐ 140 - 150 கி.மீ வேகத்தில் சுமார் 2 மணி நேரம் ஆக்சிலரேட்டரில் இருந்து காலே எடுக்காமல் அழுத்து அழுத்தென்று அழுத்திய உணர்வு மேலிட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு நாள், ஒரு வாரம், ஒரு வருஷம் ஏன் பத்து வருஷம் கூட பஞ்சாகப் பறந்து விடுவதுதான் மனித வாழ்வின் இயல்பு. “நேத்துதான் ஜான்ஸ் ஸ்கூல்ல போய் 10th mark sheet வாங்குன மாதிரி இருக்கு...” இது நான் அடிக்கடி சொல்லும் வசனம். வசனமென்பதை விட வாயிலிருந்து வரும் தன்னிசையான உணர்வு. இப்படிப்பட்ட கரைந்தோடும் காலத்தில் சில நாட்கள், மணி நேரங்கள், மணித்துளிகள் ஆக மொத்தத்தில் தருணங்கள் வரலாறாக மாறிவிட வல்லவை. அப்படி வரலாறான ஒரு நாளைப் பற்றிய படம்தான் இது.உடலுறுப்பு தானம், இதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற வார்த்தைப் பிரயோகங்களை எல்லாம் தமிழகத்தின் கடைநிலை பாமரனுக்கும் கொண்டு சேர்த்த நிகழ்வு ஹிதேந்திரனின் மூளைச்சாவும் அது தொடர்ந்த சம்பவங்களும். அப்படியான ஒரு உண்மைக்கதையைச் சுற்றிலும் நகரும் கதைக்களம். காரில் இதயம் சென்னை முதல் வேலூர் வரை செல்வதுதான் திரைக்கதையின் முக்கிய அம்சம் என்றாலும் அதைச் சுற்றிலுமான சம்பவங்களை திறமாக கோர்த்திருப்பதில் இந்தப் படம் - பிரமாதம்ம்ம்ம். சிலருக்குத் தோன்றக் கூடும் இப்படியான படு அமர்க்களமான, வேகமான கதையில் குடும்ப நிகழ்வுகள், சோகம், கிளைமேக்ஸ் ஜிந்தா காலனி சீக்வன்ஸ் உட்பட unwanted emotions and clichés அவசியமா என்று.. ஆனால்.... என்னைப் போன்ற சராசரி சினிமா ரசிகர்களுக்கு, கதையோடு ஒன்றிப் போக வேண்டி இந்த சென்டிமென்ட்டும் க்ளிஷேக்களும் மிக மிக அவசியமாகிறது.  

ஏதோ வழக்கமாக ராதிகா - சரத்குமார் நடத்தும் கடல் கடந்த நட்சத்திரக் கலைவிழாவுக்கு வந்திருப்பது போல படம் முழுதுமாக நட்சத்திரப் பட்டாளம்.  சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் ஆனாலும் ஒவ்வொருவரும் தங்கள் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ், லஷ்மி ராமக்கிருஷ்ணன் to be defenitely mentioned kind of acting – awesome as usual. பிரசன்னா – absolutely an underplay acting and it is well done. சேரன் - இவர் இந்தப் படத்தில் அழவும் சிரிக்கவும் இல்லை என்ற காரணத்தால் – Kudos சேரன். கலக்கிட்டீங்க. பிரகாஷ்ராஜ் – A typical replica character from most of his previous movies. ஆனாலும்... 'கேமரா ரோலிங்... செளமியா டீச்சர்.. அவங்க ரொம்ப நல்ல டீச்சர்... She takes special care of her..." முதலான சீன்களில் class Prakash. இனியா, அந்தக் கதாப்.... பாத்... சரி வேணாம் விடுங்க. :) சரத், ராதிகா, மின்னலைப்பிடித்து பாட்டுல ஆடுன மேட்டர் மேன், எங்கேயும் எப்போதும்ல பஸ்ஸ தொரத்தி தொரத்தி மனைவி கூடவே வருவானே அந்தப் பையன் - இவங்க எல்லாருமே பாத்திரத்துக்கேற்ற திறமான  தேர்வு."We have to give him the best good bye Gift... அவங்கப்பாம்மாவ சம்மதிக்க வை "

“உங்களுக்கெல்லாம் என் பையன் சாகக் கெடக்குற ஒரு உயிரு.... ஆனா எனக்கு அவன் உயிரோட இருக்க என் பையன் சார்..”

என்பது மாதிரியாக வசனங்கள் பல இடங்களில் படு ஷார்ப்.

 பாடல்கள் ஒன்றும் நினைவில் நிற்கவில்லையெனினும் கதையோட்டத்துக்கு தடையென்று சொல்லும் வண்ணம் எதுவுமில்லை என்பது ஆறுதல்.டெக்னிக்கலா சிலாகிக்க வேறெதும் பெருசா இருந்துச்சான்னு யோசிக்க முடியல. கவனிக்கவும் இல்லை. கதையோட்டத்தின் வீரியம் அப்படி. .  “The mission is ON” என்று சரத் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கும் படம்.. எடுக்கும் வேகம்... செம செம  செம ஸ்பீடு.  Shot By Shotன்னு யோசிக்க முடியல. ஆனால் படம் குடுக்க வேண்டிய Impact ஐ குடுக்க வேண்டிய அளவில் மிகச்சரியாக கொடுக்கிறது என்ற வகையில்...

இது மாதிரியான படங்கள் வணிக ரீதியான வெற்றி அடையாத பட்சத்தில் சில பத்தாண்டுகள் கழித்து நமக்கு டெலெக்ஸ் பாண்டியன்களும், பாதி பகவன்களும்  மட்டுமே திரைப்படங்களாக கிடைக்கும் பேராபத்தும் பெருங்கஷ்டமும் இருப்பதால்.... Mind it and Must watch.

ஆக மொத்தத்தில் "சென்னையில் ஒரு நாள்" -  உணர்வுப்பூர்வமான ஒரு ரோலர் கோஸ்டர் ரைட்.

150/150.

Saturday, March 16, 2013

பரதேசி - A Film By Bala

பாலா... இவன் தான் பாலா... தமிழ் சினிமாவை மற்றொரு தளத்துக்கு எடுத்துச் செல்ல வந்த பிதாமகன் என்று எல்லாராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட கலைஞன். ஆனால் சில காலமாக, அதுவும் அதிகப்படியாக இந்த சமூக வலைதளக் காலகட்டத்தில் எதையும் குறை காணும் நோக்கோடு சுற்றும் சிலரின் நிலைத்தகவல்களிலும் பகிரும் வீடியோக்களிலும் "பாலா படமா... கொடூரமா இருக்கும்" என்ற பிம்பம் காட்டப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. அதுவும் அந்த "பரதேசி Reality teaser" என்ற படப்பிடிப்புத் தளத்தில் 'அடிக்கும் மாதிரியான' காட்சிகள் கொண்ட காணொளி வெளியான அன்று 'பாலா ஒரு சைக்கோ' என்று சில பொய்க்கோக்களும் 'அடுத்த படத்துல விஜயைப் போட்டு இதே மாதிரி அடிங்க, சிம்புவப் போட்டு இதே மாதிரி அடிங்க' என்று உள்வன்மம் கொண்ட சில மெய்யான சைக்கோக்களும் முகப்புத்தகத்திலும், ட்விட்டரிலும் மற்றும் இணையம் முழுதுமாகவும் குமுறித் தீர்த்தார்கள்.


பாலாவால் நல்ல கமர்சியல் சினிமாவெல்லாம் எடுக்கவே முடியாது என்பதாக ஒரு மாயையும் உலவவிடப் படுகிறது, சேதுவின் முதல் பாதியை விட ஒரு சிறந்த கமர்சியல் சினிமாவும் இருக்கிறதா என்ன? ஆட்டமும் பாட்டமுமான Entertainment Factorsஐ மட்டுமே  காமிப்பதற்கு நூறுக்கணக்கான் இயக்குநர்கள் இருக்கும் இந்தத் தமிழ் திரையுலகில் கடைநிலையின் கீழ் வாழும் மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும் பதிவு செய்வதற்கு இருக்கும் ஒரே இயக்குநர் பாலா மட்டுமே. "அப்படியானவர்களைக் கண்டாலே விலகி ஓடும் நம்மைப் போன்றவர்கள் பெரும்பாலராய் வாழும் சமூகத்தில், அப்படியானவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் வாழ்க்கையை 'நான் கடவுள்' ஆக்கினானே - அவன் தான் பாலா. தலைமுடியைக் கரண்டி விட்டாலும், சித்தனாய் பெருங்குரலெடுத்துக் கத்த விட்டாலும், நந்தாவாய் கத்தி கொண்டு அறுக்க விட்டாலும், ருத்ரனாக காஞ்சா அடித்து குருட்டுப் பெண்ணைக் கருணைக் கொலை செய்தாலும், சாளூர் ஊர்ப்பெருக்கி ராசாவாக நொண்டியடித்து திரிந்தாலும் - பாலா படங்களில் உலவ விடும் மனிதர்கள் நம்மளவில் இயல்பில் இல்லாதவர்கள். ஆனால் அவர்களவில் எதார்த்தத்துக்கு மிக நெருக்கமானவர்கள். அப்படியானவர்களும் இருந்தார்கள் அல்லது இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது உலக உண்மை.
                                          

பாலாவின் குருவான 'ஒளிகளின் கலைஞன்' பாலுமகேந்திரா, 'மூடுபனி', 'மூன்றாம் பிறை' என தமிழின் உலக/உன்னத சினிமாக்களை எடுத்துக் கொண்டிருந்த பொழுது அவரிடம் "உங்களுக்கெல்லாம் கமெர்சியல் ஹிட்டடிக்கும் commercial\entertainment genere திரைப்படங்கள் எடுக்கவே தெரியாது" என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அந்த விமர்சனத்தை மனதில் வைத்தே 'நீங்கதானடா கேட்டீங்க....' என்பதை முன்னிறுத்தும் விதமாக 'நீங்கள் கேட்டவை" என்ற பெயரில கமர்சியல் சினிமா எடுத்தார்.... 'அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி...' என்று சில்க்கை குத்தாட்டம் ஆட விட்டார். ஒப்பாமல் மீண்டும் வீடு, சந்தியா ராகம் என்று மனம் திரும்பினார். அதே நடந்தது பாலாவுக்கும். காமெடி எடுக்கிறேன், கமெர்சியல் எடுக்கிறேன் என்று வழிதவறிய ஆடாக அவர் எடுத்த 'அவன் இவன்' - ஒரு சிறிய பிழை. இன்று வெளியாகியிருக்கும் 'பரதேசி’ - அச்சிறிய பிழைக்கான மிகப்பெரிய திருத்தம்.

பி.ஹெச்.டேனியலின் 'எரியும் பனிக்காடு'தான் பரதேசியாகப் போகிறன் என்று அறிந்த பொழுதில் நண்பர்கள் உரைத்தார்கள் 'முடிவு பெரும்சோகம். பாலா கையில் கிடைத்திருக்கிறது. பாடாய்த்தான் படப் போகிறோம் நாம்.' படம் பார்த்த ஒவ்வொரு தருணத்திலும்  உணர்ந்து கொண்டிருந்தேன் நான். டீ, ஸ்டராங், லைட், Special tea, Iced Tea, லெமன் டீ, க்ரீன் டீ, கட்டாஞ்சாயா என்று வித விதமாக நாம் தினம் தினம் சுவைக்கும் தேநீருக்குப் பின்னால் எத்தகைய வலி மிகுந்த வரலாறு இருக்கிறதென்பதை எதார்த்தத்திலிருந்து எள்ளளவும் மீறாமல் எடுக்க நினைத்தானே. இவன் தான் பாலா. வாரத்துல அஞ்சு நாள் வேலை, பாதிநேரம் FB, Twitter... சனி ஞாயிறு லீவ், வீக்கெண்ட் மாயாஜால், AGS. போக வரக் காரு, பைக். இப்படி ஒரு வாழ்க்கையை எத்தனை குறை சொல்கிறோம் நாம். "Working environment" சரியில்ல, சம்பளம் பத்தல, இந்த வாழ்க்கை எனக்கு மட்டும் ஏன் சார் இப்படிப் பண்ணுது என்று மேம்போக்காய் சொல்லும் முன்னர் ஒவ்வொருவரும் இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம். கண்டிப்பாக பார்க்கனும். நோட்டீஸ் பீரியட் முனு மாசம் என்பதால் கடுப்பாக இருக்கிறது என்று சென்ற வாரத்தில் விசனப்பட்ட நண்பனுக்கு அனுப்பியிருக்கிறேன் - "பரதேசி படம் கண்டிப்பா பாரு மச்சி."


அதர்வா... அடுத்த 30, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கான மொத்த அடித்தளத்தையும் அழகாக அமைத்து கொள்ள வேண்டி இப்படத்தில் உழைத்திருக்கிறாஆஆஆஆஆர். அது சர்வ நிச்சயமாக வீணல்ல. க்ளைமேக்ஸ் காட்சி ஒன்று போதும்...  அது போலவே தன்ஷிகாவும், வேதிகாவும். அதர்வாவின் பாட்டியாக நடித்திருக்கும் கூன் மூதாட்டி, கங்காணியாக நடித்திருக்கும் நபர், கருத்தகன்னியாக நடித்திருக்கும் அழகி ஆகியோரும் குறிப்பிடப் பட வேண்டியவர்கள்.  எனக்கு மொத்த படத்திலும் விளங்காத ஒரே ஒரு விஷயம் யாதெனில் - அந்த கிறித்தவ டாக்டர் மற்றும் அவருடைய வெள்ளைக்கார மனைவி கதாப்பாத்திரங்களின் மூலம் சொல்ல விழையப்பட்ட விஷயம் என்ன..? புத்தகம் படித்தால் விளங்கலாம். விளங்கியவர்கள் யாரேனும் இருந்தால் விளக்கலாம்.

பாலாவுக்குள் போதையில் உழன்று கொண்டிருந்த ஒரு சராசரி வாழ்க்கையைத் தாண்டி ஏதோவொன்றுக்கான விதையை விதைத்தது என அவர் சொல்லுவது "தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்" என்ற நாஞ்சில் நாடனின் புத்தகத்தில் இருந்த 'எடலக்குடி ராசா' என்னும் சிறுகதையைத்தான். அத்தகைய நாஞ்சில் நாடனின் வசனங்கள் படத்தை வேறுதளத்துக்கு எடுத்துச் செல்ல தவறவில்லை. செழியன் படத்தின் ஒளிப்பதிவாளர். கதை நடக்கும் காலகட்டத்துக்கே நம்மை கூட்டிக் கொண்டு செல்வதில் இவருடைய பங்கும் அளப்பரியது. உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கும் முகப்புத்தக நண்பர் லக்ஷ்மன் ராஜா கண்ணனுக்கும் வாழ்த்துகள். நல்லா வருவீங்க பாஸ். கலை இயக்குனர் பாலசந்தர்... அட்டகாசம். இம்மாதிரியான ஒரு கதைக்களத்தை கண்முன்னிறுத்த வேண்டி அசுர உழைப்பு உழைத்திருக்கிறார். இசைக்கடவுள் இளையராஜாவால் controversial ஆக 'So called genius' என்றழைக்கப்பட்ட - பட்டம் கொடுக்கப்பட்ட ஜி.வி.பிரகாஷ் தான் இந்தப்படத்தின் இசை. மிக மிக நேர்த்தியாகத்தான் இருக்கிறது பிண்ணனியிசையும், பாடல்களும். ஆனாலும் பல காட்சிகளில் தோன்றியது, 'பட்டம் வாங்கிய பாலகனுக்குப் பதிலாக பட்டம் கொடுத்த கடவுளே இருந்திருந்தால்....' இன்னுமொரு ஓம் சிவோகமோ, எளங்காத்து வீசுதேவோ, கானகருங்குயிலேவோ நமக்குக் கிடைத்திருக்கக் கூடும். பாடல் வரிகள் எல்லாம் கவிப்பேரரசு வைரமுத்து. ரத்தம் கலந்து எழுதியிருப்பதாகச் சொன்னதாய்ச் சொன்னார்கள். இவ்வரிகளில் மொத்தக் கதையையும் பஞ்சம் பிழைக்கப் போகிறவர்களின் ஆதியந்த வலியையும் உள்ளடக்கியிருப்பதில் அது மிகையில்லையெனவே படுகின்றது.

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா...
ஹோ... காடுகளே கள்ளிகளே போய் வரவா...
காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க...
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே...
கருவேலங் காடு கடந்து கல்லுதும் மேடும் கடந்து...
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே...
கங்காணி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே...
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக...
உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது...

மொத்தத்தில் நியாயம்மாரேஏஏஏ, வழமை போலவே ஒவ்வொரு காட்சியும்Reality எனப்படும் எதார்த்தத்திலிருந்து கொஞ்சமும் மீறாமல் எடுக்கபட்டிருப்பதிலும், அதற்காக வேண்டி மெனெக்கெட்டிருப்பதிலும், அதற்கான அசுர உழைப்பைக் கொட்டியிருப்பதிலும், ஐயந்திரிபற சொல்லலாம் பரதேசி - Itz A Film By Bala.

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.