Saturday, March 16, 2013

பரதேசி - A Film By Bala

பாலா... இவன் தான் பாலா... தமிழ் சினிமாவை மற்றொரு தளத்துக்கு எடுத்துச் செல்ல வந்த பிதாமகன் என்று எல்லாராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட கலைஞன். ஆனால் சில காலமாக, அதுவும் அதிகப்படியாக இந்த சமூக வலைதளக் காலகட்டத்தில் எதையும் குறை காணும் நோக்கோடு சுற்றும் சிலரின் நிலைத்தகவல்களிலும் பகிரும் வீடியோக்களிலும் "பாலா படமா... கொடூரமா இருக்கும்" என்ற பிம்பம் காட்டப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. அதுவும் அந்த "பரதேசி Reality teaser" என்ற படப்பிடிப்புத் தளத்தில் 'அடிக்கும் மாதிரியான' காட்சிகள் கொண்ட காணொளி வெளியான அன்று 'பாலா ஒரு சைக்கோ' என்று சில பொய்க்கோக்களும் 'அடுத்த படத்துல விஜயைப் போட்டு இதே மாதிரி அடிங்க, சிம்புவப் போட்டு இதே மாதிரி அடிங்க' என்று உள்வன்மம் கொண்ட சில மெய்யான சைக்கோக்களும் முகப்புத்தகத்திலும், ட்விட்டரிலும் மற்றும் இணையம் முழுதுமாகவும் குமுறித் தீர்த்தார்கள்.


பாலாவால் நல்ல கமர்சியல் சினிமாவெல்லாம் எடுக்கவே முடியாது என்பதாக ஒரு மாயையும் உலவவிடப் படுகிறது, சேதுவின் முதல் பாதியை விட ஒரு சிறந்த கமர்சியல் சினிமாவும் இருக்கிறதா என்ன? ஆட்டமும் பாட்டமுமான Entertainment Factorsஐ மட்டுமே  காமிப்பதற்கு நூறுக்கணக்கான் இயக்குநர்கள் இருக்கும் இந்தத் தமிழ் திரையுலகில் கடைநிலையின் கீழ் வாழும் மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும் பதிவு செய்வதற்கு இருக்கும் ஒரே இயக்குநர் பாலா மட்டுமே. "அப்படியானவர்களைக் கண்டாலே விலகி ஓடும் நம்மைப் போன்றவர்கள் பெரும்பாலராய் வாழும் சமூகத்தில், அப்படியானவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் வாழ்க்கையை 'நான் கடவுள்' ஆக்கினானே - அவன் தான் பாலா. தலைமுடியைக் கரண்டி விட்டாலும், சித்தனாய் பெருங்குரலெடுத்துக் கத்த விட்டாலும், நந்தாவாய் கத்தி கொண்டு அறுக்க விட்டாலும், ருத்ரனாக காஞ்சா அடித்து குருட்டுப் பெண்ணைக் கருணைக் கொலை செய்தாலும், சாளூர் ஊர்ப்பெருக்கி ராசாவாக நொண்டியடித்து திரிந்தாலும் - பாலா படங்களில் உலவ விடும் மனிதர்கள் நம்மளவில் இயல்பில் இல்லாதவர்கள். ஆனால் அவர்களவில் எதார்த்தத்துக்கு மிக நெருக்கமானவர்கள். அப்படியானவர்களும் இருந்தார்கள் அல்லது இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது உலக உண்மை.
                                          

பாலாவின் குருவான 'ஒளிகளின் கலைஞன்' பாலுமகேந்திரா, 'மூடுபனி', 'மூன்றாம் பிறை' என தமிழின் உலக/உன்னத சினிமாக்களை எடுத்துக் கொண்டிருந்த பொழுது அவரிடம் "உங்களுக்கெல்லாம் கமெர்சியல் ஹிட்டடிக்கும் commercial\entertainment genere திரைப்படங்கள் எடுக்கவே தெரியாது" என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அந்த விமர்சனத்தை மனதில் வைத்தே 'நீங்கதானடா கேட்டீங்க....' என்பதை முன்னிறுத்தும் விதமாக 'நீங்கள் கேட்டவை" என்ற பெயரில கமர்சியல் சினிமா எடுத்தார்.... 'அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி...' என்று சில்க்கை குத்தாட்டம் ஆட விட்டார். ஒப்பாமல் மீண்டும் வீடு, சந்தியா ராகம் என்று மனம் திரும்பினார். அதே நடந்தது பாலாவுக்கும். காமெடி எடுக்கிறேன், கமெர்சியல் எடுக்கிறேன் என்று வழிதவறிய ஆடாக அவர் எடுத்த 'அவன் இவன்' - ஒரு சிறிய பிழை. இன்று வெளியாகியிருக்கும் 'பரதேசி’ - அச்சிறிய பிழைக்கான மிகப்பெரிய திருத்தம்.

பி.ஹெச்.டேனியலின் 'எரியும் பனிக்காடு'தான் பரதேசியாகப் போகிறன் என்று அறிந்த பொழுதில் நண்பர்கள் உரைத்தார்கள் 'முடிவு பெரும்சோகம். பாலா கையில் கிடைத்திருக்கிறது. பாடாய்த்தான் படப் போகிறோம் நாம்.' படம் பார்த்த ஒவ்வொரு தருணத்திலும்  உணர்ந்து கொண்டிருந்தேன் நான். டீ, ஸ்டராங், லைட், Special tea, Iced Tea, லெமன் டீ, க்ரீன் டீ, கட்டாஞ்சாயா என்று வித விதமாக நாம் தினம் தினம் சுவைக்கும் தேநீருக்குப் பின்னால் எத்தகைய வலி மிகுந்த வரலாறு இருக்கிறதென்பதை எதார்த்தத்திலிருந்து எள்ளளவும் மீறாமல் எடுக்க நினைத்தானே. இவன் தான் பாலா. வாரத்துல அஞ்சு நாள் வேலை, பாதிநேரம் FB, Twitter... சனி ஞாயிறு லீவ், வீக்கெண்ட் மாயாஜால், AGS. போக வரக் காரு, பைக். இப்படி ஒரு வாழ்க்கையை எத்தனை குறை சொல்கிறோம் நாம். "Working environment" சரியில்ல, சம்பளம் பத்தல, இந்த வாழ்க்கை எனக்கு மட்டும் ஏன் சார் இப்படிப் பண்ணுது என்று மேம்போக்காய் சொல்லும் முன்னர் ஒவ்வொருவரும் இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம். கண்டிப்பாக பார்க்கனும். நோட்டீஸ் பீரியட் முனு மாசம் என்பதால் கடுப்பாக இருக்கிறது என்று சென்ற வாரத்தில் விசனப்பட்ட நண்பனுக்கு அனுப்பியிருக்கிறேன் - "பரதேசி படம் கண்டிப்பா பாரு மச்சி."


அதர்வா... அடுத்த 30, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கான மொத்த அடித்தளத்தையும் அழகாக அமைத்து கொள்ள வேண்டி இப்படத்தில் உழைத்திருக்கிறாஆஆஆஆஆர். அது சர்வ நிச்சயமாக வீணல்ல. க்ளைமேக்ஸ் காட்சி ஒன்று போதும்...  அது போலவே தன்ஷிகாவும், வேதிகாவும். அதர்வாவின் பாட்டியாக நடித்திருக்கும் கூன் மூதாட்டி, கங்காணியாக நடித்திருக்கும் நபர், கருத்தகன்னியாக நடித்திருக்கும் அழகி ஆகியோரும் குறிப்பிடப் பட வேண்டியவர்கள்.  எனக்கு மொத்த படத்திலும் விளங்காத ஒரே ஒரு விஷயம் யாதெனில் - அந்த கிறித்தவ டாக்டர் மற்றும் அவருடைய வெள்ளைக்கார மனைவி கதாப்பாத்திரங்களின் மூலம் சொல்ல விழையப்பட்ட விஷயம் என்ன..? புத்தகம் படித்தால் விளங்கலாம். விளங்கியவர்கள் யாரேனும் இருந்தால் விளக்கலாம்.

பாலாவுக்குள் போதையில் உழன்று கொண்டிருந்த ஒரு சராசரி வாழ்க்கையைத் தாண்டி ஏதோவொன்றுக்கான விதையை விதைத்தது என அவர் சொல்லுவது "தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்" என்ற நாஞ்சில் நாடனின் புத்தகத்தில் இருந்த 'எடலக்குடி ராசா' என்னும் சிறுகதையைத்தான். அத்தகைய நாஞ்சில் நாடனின் வசனங்கள் படத்தை வேறுதளத்துக்கு எடுத்துச் செல்ல தவறவில்லை. செழியன் படத்தின் ஒளிப்பதிவாளர். கதை நடக்கும் காலகட்டத்துக்கே நம்மை கூட்டிக் கொண்டு செல்வதில் இவருடைய பங்கும் அளப்பரியது. உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கும் முகப்புத்தக நண்பர் லக்ஷ்மன் ராஜா கண்ணனுக்கும் வாழ்த்துகள். நல்லா வருவீங்க பாஸ். கலை இயக்குனர் பாலசந்தர்... அட்டகாசம். இம்மாதிரியான ஒரு கதைக்களத்தை கண்முன்னிறுத்த வேண்டி அசுர உழைப்பு உழைத்திருக்கிறார். இசைக்கடவுள் இளையராஜாவால் controversial ஆக 'So called genius' என்றழைக்கப்பட்ட - பட்டம் கொடுக்கப்பட்ட ஜி.வி.பிரகாஷ் தான் இந்தப்படத்தின் இசை. மிக மிக நேர்த்தியாகத்தான் இருக்கிறது பிண்ணனியிசையும், பாடல்களும். ஆனாலும் பல காட்சிகளில் தோன்றியது, 'பட்டம் வாங்கிய பாலகனுக்குப் பதிலாக பட்டம் கொடுத்த கடவுளே இருந்திருந்தால்....' இன்னுமொரு ஓம் சிவோகமோ, எளங்காத்து வீசுதேவோ, கானகருங்குயிலேவோ நமக்குக் கிடைத்திருக்கக் கூடும். பாடல் வரிகள் எல்லாம் கவிப்பேரரசு வைரமுத்து. ரத்தம் கலந்து எழுதியிருப்பதாகச் சொன்னதாய்ச் சொன்னார்கள். இவ்வரிகளில் மொத்தக் கதையையும் பஞ்சம் பிழைக்கப் போகிறவர்களின் ஆதியந்த வலியையும் உள்ளடக்கியிருப்பதில் அது மிகையில்லையெனவே படுகின்றது.

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா...
ஹோ... காடுகளே கள்ளிகளே போய் வரவா...
காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க...
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே...
கருவேலங் காடு கடந்து கல்லுதும் மேடும் கடந்து...
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே...
கங்காணி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே...
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக...
உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது...

மொத்தத்தில் நியாயம்மாரேஏஏஏ, வழமை போலவே ஒவ்வொரு காட்சியும்Reality எனப்படும் எதார்த்தத்திலிருந்து கொஞ்சமும் மீறாமல் எடுக்கபட்டிருப்பதிலும், அதற்காக வேண்டி மெனெக்கெட்டிருப்பதிலும், அதற்கான அசுர உழைப்பைக் கொட்டியிருப்பதிலும், ஐயந்திரிபற சொல்லலாம் பரதேசி - Itz A Film By Bala.

13 பேர் சொன்னது என்னான்னா..:

Karuppiah Thangaraj said...

என்னளவில் இது பரதேசி படத்தின் விமர்சனம் மட்டுமல்ல. பாலாவுக்கு எதிரான முந்தைய & தற்போதைய விமர்சனங்களுக்கும் பதில் சொல்கிற பதிவு. இந்தப்படமே அவர்களுக்கான பதில்தான். நல்ல விமர்சனம் மாம்ஸ்.

அந்த பரிசுத்த டாக்டரின் கதாபாத்திரம் அக்காலத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல சேவை செய்து நிகழ்த்திய மதமாற்றத்தை சொல்ல வந்து சற்றே சொதப்பிவிட்டது. அந்த ஆங்கிலேயன் சொல்வதுபோல கங்கானியைவிட மோசமானவன் இவன். :-)

ராம்குமார் - அமுதன் said...

நன்றி கருப்பு.. அந்த வசனத்தை நானும் கவனித்தேன்... 'இவன் ஒர் ஆன்மிக கங்காணி'... நீ சொல்வதைப் போலவே அந்தப் பகுதி கொஞ்சம் சொதப்பல்தான்... நாவலைப் படமாக்கும் வித்தையில் அரவானை ஒரு எட்டு தாண்டி விட்டான் இந்த பரதேசி...

Badshah said...

Doctor is also a kangani, he has target to convert people for which he might have got money, which need to used for the betterment of the converted people. He used their situation & gave hope for salvation and converted them without spending any money... again a looter like others. He may not be a real doctor...

ROBOT said...

//காமெடி எடுக்கிறேன், கமெர்சியல் எடுக்கிறேன் என்று வழிதவறிய ஆடாக அவர் எடுத்த 'அவன் இவன்' - ஒரு சிறிய பிழை. இன்று வெளியாகியிருக்கும் 'பரதேசி’ - அச்சிறிய பிழைக்கான மிகப்பெரிய திருத்தம்.//

இந்த பாலாவை தான் எதிர்பார்த்தேன் . அவன் இவன் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். பாலா இப்படி ஏமாற்றி விட்டாரே என்று. அந்த வருத்தம் இந்த படத்தால் நீங்கி விடும் என்று நினைக்கிறேன் நீங்கள் சொல்வதை பார்த்தால். குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள் . யார் என்ன சொன்னாலும் உலக படங்களை அப்படியே சுட்டு நம்மை ஏமாற்றி படம் எடுக்கும் மேதாவிகள் மத்தியில் உலக தரம் வாய்ந்த நேர்மையான படங்களை கொடுக்கும் பாலா என்றுமே உயர்ந்தவர் தான் என்று தமிழ் சினிமா பெருமை பட்டு கொள்ளலாம்.

இன்று பாலாவின் பரதேசியை பார்க்க போகிறேன் . பார்த்து விட்டு என் கருத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

Anonymous said...

ஆன்மீக கங்காணி மேட்டர் கொஞ்சம் 'சீப்'பாக போய்விட்டது படத்தில். மதத்தில் சேர்ந்தால் வேலை உண்டு என்று விஷயமெல்லாம் அக்காலத்தில் சகஜம்.அந்த வேலையால் நிறைய குடும்பங்கள் முன்னேறவும் செய்திருக்கிறது. உள்ள கடவுள் கைவிட்டார். இந்த கடவுள் வேலைதருகிறாரே...இதை நாசூக்காகத்தான் கிண்டல் செய்யமுடியும். ஆனால் ஒருகுத்துப்பாட்டு மலிவான விமர்சனமாகிவிட்டது.

இந்து-முஸ்லிம்-கிறித்துவர் என்று எவரையும் விடவில்லை படத்தில். பொறுமை வேணும் படத்தை பார்க்க...

Doha Talkies said...

நான் படித்ததிலேயே மிகச்சிறந்த விமர்சனம் இது தான் நண்பரே..
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.

எனது விமர்சனம் கீழே
சமயம் இருந்தால் ஒரு முறை வந்து தங்கள் கருத்தை பதிவுசெய்யவும்.
http://dohatalkies.blogspot.com/2013/03/blog-post.html

ராம்குமார் - அமுதன் said...

வந்தமைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... :)

Anonymous said...

நல்லா எழுதியிருக்கீங்க.ஒரு சின்ன திருத்தம்.நாஞ்சில் நாடனின் புத்தகமா பாலா குறிப்பிடுறது தெய்வங்கள்,ஓநாய்கள்,நாய்கள் அல்ல."தெய்வங்கள்,ஓநாய்கள்,ஆடுகள்" . :)

ராம்குமார் - அமுதன் said...

திருத்திட்டேன்... நன்றி சகா :)

Achilles/அக்கிலீஸ் said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள் :)

ஞானசேகர் ராஜேந்திரன் said...

சிறப்பான விமர்சனம் நண்பரே..
எல்லா விதத்திலும் அலசி அதற்கேற்ப எடுத்துக்காட்டுகளும் சொல்லி இருக்கீங்க..
தொடரட்டும் உங்கள் எழுத்து..
வாழ்த்துக்களும் மனமார்ந்த பாராட்டுகளும்.:-)))

@Gnanasekar89

ரெ வெரி said...

Were u in Neeya Naanaa today? Just checking...

ராம்குமார் - அமுதன் said...

ஆமாங்க அது நான் தான் :)

Post a Comment

வாழ்த்தோ வசவோ... இங்கேயே சொல்லுங்கள்...

 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.