Wednesday, April 24, 2013

பாட்டையா வந்திருந்தார்...


சில மாதங்களுக்கு முன்னதாக முகப்புத்தகத்தில் ஒரு நிலைத்தகவலைப் பகிர்ந்திருந்தார் பாரதி மணி பாட்டையா. பாரதி மணி - 2002ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேராதரவினாலும் அந்த ஏழாவது வரத்தினாலும் தமிழக முதல்வராக ஏகோபித்த வெற்றி பெற்று சுமார் 30 நிமிடங்கள் தமிழகத்தின் நிரந்தர ஆட்சியமைத்தவர் என்று சொன்னால் உங்கள் அனைவருக்கும் விளங்கும் என்று எண்ணுகிறேன்ம்ம்ம்... பழ சொரூபமாக இருந்த கந்தன் ஐயா... அவரேதான்... அவர் வெளியிட்டிருந்த நிலைத்தகவல் இதுதான்.. 

"சில நாட்களில் சென்னையில் சுஜாதாவின் 'கடவுள் வந்திருந்தார்' நாடகத்தை சென்னையில் மேடையேற்ற முடிவு செய்திருக்கிறோம்."


'க-ட-வு-ள்           வ-ந்-தி-ரு-ந்-தா-ர்' 

எனக்கு அவை மந்திரசொற்கள். வாத்தியார் நமக்காக விட்டுச் சென்றுள்ள வைரக்குவியலுக்குள் புதைந்திருக்கும் விலைமதிப்பில்லா வைரம் அது. ஒரு நாளின் சென்னை பெண்ங்களூரு பேருந்து பயணத்தில்தான் அந்த நாடகத்தை புத்தகமாக வாசிக்க நேர்ந்தது. வேளச்சேரியில் இருந்து கிளம்பிய பேருந்து அடையார், கிண்டி வழியாக கோயம்பேடு நெருங்கிய பொழுதில் அதை நான் வாசித்து முடித்திருந்தேன். அத்தனை சிறிய புத்தகமது. வாசிக்கும் பொழுதிலும் வாசித்து முடித்த பொழுதிலும் நடுநிசி என்பதையும் மறந்து நான் விழுந்து விழுந்து புரண்டு புரண்டு சிரித்துக் கொண்டிருந்ததை சக பயணிகள் ஒரு மாதிரிதான் பார்த்தார்கள். அதற்கான காரணம் சீனிவாசனையும் என்னையும் தவிர இவ்வுலகில் வேறு எவர் கண்ணுக்கும் ஜோ தெரிய மாட்டான் என்பதுதான். சுஜாதாவின் மீதான நேசிப்பு  மேலும் நான்கு மடங்கு அதிகரித்த இரவு அது. Science Fictionஐ இத்தனை ஜனரஞ்சகமாக சொல்ல வேறு ஒரு கொம்பனாலும்... ம்ஹூம். அதற்கு பின் இரண்டு மூன்று முறை வாசித்து கிட்டத்தட்ட தலைமனப்பாடமாகிப் போனதெல்லாம் தனிக்கதை.

இந்தக் கடவுளைத்தான் பாரதி மணி பாட்டையா கண்முன்னால் கொண்டு வரப் போவதாக அறிவித்திருந்தார் என்பதால் அதனைக் கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டும் என்ற முடிவை என்னளவில் எடுத்துக் கொண்டேன். அது முதல் அவர் எந்த நிலைத்தகவல் போட்டாலும் போய் "நாடகம் எப்பொழுது?" என்ற கேள்வியைத் தவறாமல் கேட்டு வந்தேன். சில மாதங்கள் கடந்து போன பிறகு சமீபத்தில் அவர் 23,24ம் தேதிகளில் நாடகம் அரங்கேற இருப்பதாய்ச் சொல்லி விளம்பரங்கள் வெளியிடத் தொடங்கினார். காத்திருந்து காத்திருந்து... ஜோவைப் போலவே நானும் 220 வோல்டில் சார்ஜேற்றி காத்திருந்து காத்திருந்து.... இன்று நாடகத்தை பார்க்க நேரிட்டது.... உள்ளே நுழைந்தவுடனேயே மேடையில் இருந்த ரேடியோ, குடை, சந்தன மாலை, ஜன்னல், சைடில் இருந்த மாடிப்படி... ஒவ்வொன்றாய்ப் பார்த்து உடன் வந்த நண்பன் கருப்புவிடம்  'இதுக்கு இது... அதுக்கு அது' என்று அந்தந்த காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தேன்.நாடகம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரையிலும் உள்மனது குத்திக் கொண்டே இருக்கிறது... 76 வயதில் அவர் கொட்டியிருக்கும் அசுர உழைப்பைக் கணக்கில் கொள்ளும் பொழுதில் நாமெல்லாம் இந்த 28 வயதில் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறோம். எப்படி இத்துனை வசனத்தையும் நினைவில் வைத்துப் பேசினார் என்று யோசிக்கவே முடியவில்லை. அதையும் தாண்டி... ஓடுகிறார்... ஈஸி சேரில் ஆடுகிறார்... கம்பெடுத்துத் துரத்துகிறார்... நாடகம் நடந்த ஒவ்வொரு மணித்துளியிலும் மொத்த அரங்கத்திற்கும் positive energyஐ pass செய்து கொண்டே இருக்கிறார் பாட்டையா. வாசித்த பொழுதில் எந்தெந்த வசனங்களுக்கெல்லாம் வாய்விட்டுச் சிரித்தேனோ அந்தந்த வசனங்களுக்கெல்லாம் அதைவிட நான்கு மடங்கு சிரிக்க வைத்தார் பாட்டையா.  Truth, Just truth. இது உண்மை... கொஞ்சமும் கொத்தமல்லி கருவேப்பிலை தூவப்படாத நிர்வாணமான உண்மை.

என்ன மாதிரியான எக்ஸ்பிரஷன்ஸ்... எவ்வளவு எதார்த்தமான நடிப்பு.... It was just awesome..

"கல்யாணம்... ப்ரஜாவிருத்தி இருக்கா பாரு"

"ப்ரஜாவிருத்தி காணோம்"

"பிள்ளைப்பேறு இருக்கானுட்டு பாரு"

"ஓ அதுவா.. மற்றொரு மனிதன் பிறப்பதற்கா... அது நானும் ஒரு பெண்ணும் கைகுலுக்கிக் கொள்வோம்.. அவள் பையிலிருந்து ஒரு குட்டி ஜோவை எடுத்துக் கொடுப்பாள்.. நீங்க?"

"இங்க கைகுலுக்கி ஒரு பத்து மாசம் ஆவும்.." "தேவலையே.. இடுப்பு வலி கிடுப்பு வலி ஒன்னும் கிடையாதா?"

பாட்டையாவின் மாடுலேஷன் ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசம். என்ன மாதிரியான குரல் அவருக்கு. கணீர் கணீரென்று அரங்கம் நிறைத்து மனதில் அறைந்த குரல். நான்கு மணி நேரம் கடந்த பின்னும்-இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. சினிமா விமர்சனங்களில் தத்ரூபம், இயல்பு, எதார்த்தம் என்றெல்லாம் எழுதினாலும் அது எப்படிப்பார்த்தாலும் டெக்னாலஜிக்குட்பட்ட எதார்த்தம். ஆனால் எந்த டெக்னாலஜியுமில்லாமல் ஒரு நவீன நாடகத்தின் மூலம் மனம் நிறைத்திருக்கிறார் பாட்டையா.

மிகவும் எதிர்பார்த்த அந்த பெண் பார்க்கும் காட்சி... இத்தனை கதாப்பாத்திரங்களை வைத்து... அதில் ஒரு கதாப்பாத்திரம் கண்ணுக்குத் தெரியாத கதாப்பாத்திரம்.... நிறைய parallel dialogue deliveries. Composingகிற்கு மிகவும் கஷ்டம் என நான் நினைத்த காட்சி அது. வேட்டியைக் கச்சம் கட்டிய ஜோ... அதைப்பார்த்து சிரிக்கும் சீனிவாசன்... 'நன்னிலத்துல எந்த சுந்தர்ராஜன்?' என்பதை பல்வேறு வகைகளில் கேட்கும் மாப்பிளையின் அப்பா... பஜ்ஜிக்காக பாடாய்ப்படும் சேஷகிரி ராவ்... சேஷ்டைக்கார அம்பி(அம்பிகாவாக மாற்றியிருக்கிறார்கள்)... பாட்டு பாடும் வசு... இத்தனையும் ஒரு காட்சிக்குள் வர வேண்டும். என்னளவில் நாடகத்தின் உச்ச காட்சி என நான் இதைத்தான் கொள்வேன். வாசிக்கும் பொழுதிலேயே கொஞ்சம் கற்பனை வளம் குறைந்தவர்களுக்கு காட்சிபடுத்தி யோசிப்பதற்கே கஷ்டமான காட்சி இது. ஆனால் உண்மையிலேயே இக்காட்சி தொகுதியை அட்டகாசப் படுத்தி விட்டார்கள். எத்தனை முறை ரிகர்சல் செய்தீர்கள் அய்யா? It was just unbelievable. 

அம்பியை அம்பிகாவாக மாற்றியது... சுந்தர் நடுவீட்டில் குளிக்காதது, சோப்பு கேட்காதது தவிர வேறெதுவும் மாற்றப்படவில்லை. மாற்றப்பட்டதாய்த் தெரியவில்லை.

பூசாரியாய் நடித்தவர் பட்டையைக் கிளப்பினார்.

"ஜாலக்காள்"

"அவ யாரோட அக்காளா இருந்தாலும் உன்னைய விடமாட்டேன்டா"

சுந்தர், கொல்ட்டி வசு, பத்மஜா மாமி, டாக்டர் எல்லோருமே பிரமாதமான நடிப்பு.... அசத்திட்டேள் போங்கோ.

"ஸ்வாமி... தெய்வமே... கல்யாணமாகி ஆறு வருஷமா எனக்கு கொழந்தை இல்ல...." என்று டாக்டரே சொல்லும் பொழுதில்...

"பரவாயில்லை அன்பனே.. அவளை அப்புறம் அழைத்து வா"

ROFL Maxxxxxல் அரங்கம் நிறைந்த கைதட்டல்.நாடகம் முடிந்த பிறகு அனைவரையும் அறிமுகப்படுத்தி பாட்டையா பேசியதுதான் மிக நெகிழ்வான விஷயங்கள்...  

6:15க்குன்னு சொல்லி 6:30க்கு போட்டதற்காக மன்னிப்புக் கேட்டார்.

 "என்னங்க... 6.30க்கு நாடகம்னு சொல்லிட்டு 6.30க்கே போடுறீங்க...." என்று கேட்டதாய்ச் சொன்னார். 

ஆனால் நாடகம் நடப்பது சென்னையில் என்னும் வகையில் - கேள்வியில் நியாயம் இருந்ததை ஒத்துக் கொள்ள மறுத்தார்.

சென்னை அரங்கம் ஒரு குடும்பம். ஒவ்வொருவரும் என்னை வைத்துத் தாங்குகிறார்கள் என்றார். "வயசு 76... வயசாயிடுச்சுல்ல" என்பதை அவர் மீண்டும் மீண்டும் சொன்னாலும் 20ன் இளமை இன்னும் கொப்பளிக்கிறது அவரிடம்.

'அட.. இன்னிக்கு நாந்தான ஹீரோ...' என்று புன்னகை பூக்கும் பாட்டையாவிடம்தான் எத்தனை குறும்பு... 

டைம் ஷிப் சம்பந்தமான காட்சிகளுக்கு சில டெக்னாலஜி ---- வஸ்துக்களை தயார் செய்து அது workout ஆகாமல் போனதைப் பற்றி சிறிது வருத்தப்பட்டார். ஆனால் அந்த ஸ்கிரீனைப் பிடித்துக் கொண்டு எட்டிப்பார்த்தபடியே கணிர்க்குரலில் நீங்கள் பேசிய வசனங்களின் மூலம் டெக்னாலஜியையெல்லாம் just like that மிஞ்சி விட்டீர்கள் பாட்டையா.

"நோ போட்டோகிராப்ஸ்.. நோ ஆட்டோகிராப்ஸ்" என்று சுண்டு சுள்ளானெல்லாம் பந்தா காட்டும் இந்தக் காலகட்டத்தில் மேடைக்கு வந்த ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கி சிரித்துப் பேசினார் பாட்டையா. You were very humble Sir..இது சென்னை அரங்கத்தின் முதல் நாடகத்தின் முதல் நிகழ்வு. ஒரு மிகச்சிறந்த விஷயத்தின் முதல் நிகழ்வில் பங்கெடுத்த ஆத்ம திருப்தியும் புல்லரிப்பும் இன்னும் மிச்சமிருக்கிறது.

இவை எல்லாம் தாண்டி 2088க்கும் 2188க்கும் நம்மை அழைத்து போக வல்ல வாத்தியாரும் அங்கிருந்த காலி இருக்கைகளில் ஏதோ ஒன்றில் அமர்ந்து நாடகத்தையும் எங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருந்திருப்பார் என்ற நினைவும் எழாமல் இல்லை. ச்ச.. சீக்கிரமாவே இல்லாமப்பூட்டியே வாத்யாரே... We miss you Sujatha. We miss you so much.

                                               ####################

இப்படி ஒரு அருமையான அனுபவத்தை நேற்று தவற விட்டவர்கள் இன்று(24ம் தேதி) கண்டிப்பாக சென்று பார்க்கவும்.

இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர், எக்மோர்.

நேரம் : மாலை 6:15

அனுமதி இலவசம். 

பைக் பார்க்கிங் மூன்று ரூபாய். 

கொஞ்சம் ஸ்வீட்டு காரமெல்லாம் வாங்கிக் கொண்டு போய் விடுங்கள்... உள்ளே கடைகள் ஏதுமில்லை.

ஆகவே நண்பர்களே இலவசமாக ஒரு ஈடு இணையில்லா பொழுதுபோக்கை தவற விட்டு விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு....

 ####################

டிஸ்கி : நாடக இன்டர்வலில் இன்றைய உலக புத்தக தினத்தை முன்னிட்டு "லியோ டால்ஸ்டாயின் - மனசாட்சியின் குரல்" புத்தகம் வாங்கி பரிசளித்தான் கருப்பு.. நன்றி மாப்பி :)
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.